இன்று நவம்பர் 14ஆம் தேதி.
இந்தியா முழுமையும் ‘பண்டிட்’ ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, எல்லா ஆண்டுகளையும் போலவே இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக, குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மீது காட்டிய பேரன்பு நாம் நன்கு அறிந்தது.
குழந்தைகள் சாதி,மத, மொழி பேதங்கள் இன்றி, சமத்துவ இந்தியாவை வருங்காலத்தில் கட்டி எழுப்புவார்கள் என்ற நம்பிக்கையோடு தான் குழந்தைகளோடு குழந்தைகளாகக் கலந்து பழகினார் அவர். அந்தப் பேரன்பினால்தான், குழந்தைகளால் ‘சாச்சா நேரு’ என்று மிகுந்த நேசத்துடனும் அன்புடனும் அழைக்கப்பட்டார். குழந்தைகள் மீதான களங்கம் இல்லாத அந்த அன்பு தான் இன்றும் அவரது பிறந்த தினத்தைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவதற்குக் காரணியாக இருக்கிறது
தான் பிரதமராக இருந்த காலத்தில், நவீன இந்தியாவைக் கட்டமைப்பதற்காக அவர் மேற்கொண்ட பணிகள்தான் இன்றைக்கு இந்தியா உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருக்கிறது என்பதை ஒருவராலும் மறுக்க இயலாது.
நேரு கனவு கண்ட இந்தியா என்பது, சமூக நல்லிணக்கத்தையும், மத நல்லிணக்கத்தையும், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சோசலிஸ சமுதாயத்தையும், சக மனிதர்களிடம் வெறுப்பை உமிழாத அன்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.
இந்தக் குழந்தைகள் தின விழாவில் மேன்மை மிக்க மனிதரான நேரு அவர்களின் கனவுகள் நனவாக வேண்டும் என்று உறுதி கொள்வோம். அதற்காக உழைப்போம்.
இந்த நாளை, குழந்தைகள் தினச் சிறப்பிதழோடு கொண்டாடுவதில் பண்புடன் ஆசிரியர் குழுவும் மனம் மகிழ்கிறது. படைப்புகளைத் தந்த அனைவருக்கும், வாசித்து கருத்துக்களைப் பகிரவிருக்கும் உங்களுக்கும் அன்பில் நிறைந்த நன்றி!
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் எல்லா குழந்தைகளுக்கும் பண்புடன் மின்னிதழ் சார்பில் அன்பும் வாழ்த்துக்களும்!!
அன்புடன்
பண்புடன் ஆசிரியர் குழு