Home இலக்கியம்சாக்பீஸ் சூரியன் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

சாக்பீஸ் சூரியன் – (ஒன்பது குறுங்கவிதைகள்)

by Ramalakshmi Rajan
0 comments

1.
மிதக்கும் சோப்புக் குமிழிகள்
அருகில் வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் மகிழ்ச்சி.

2.
பாதி கடித்த ஆப்பிள்
விரியத் திறந்த கதைப்புத்தகம்
வியப்புக்கு முடிவில்லை.

3.
குழந்தை பென்சிலால் தட்டும் ஒலி
ஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவி
கற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக.

4.
மரத்தில் சிக்கிய காற்றாடி
அந்தியில் உயர ஏறும் நிலா
விழ மறுக்கின்றன இரண்டும்.

5.
மேகங்களுக்குப் பின்னால் நிஜ சூரியன்
சுவரில் குழந்தையின் சாக்பீஸ் சூரியன்
நம்பிக்கை வரைகிறது தனது ஒளியை.

6.
மின்னும் நட்சத்திரங்கள்
விரல் நீட்டி எண்ணும் குழந்தை
கனவு காண்கிறது இரவு.

7.
சேற்றில் காலடித் தடங்கள்
சூரிய ஒளியை ஏந்தும் சிறு கைகள்
புன்னகைக்கும் பூமி.

8.
காலை ஒளியில் புல்வெளி
தன் நிழலைத் துரத்துகிறது குழந்தை
வளரக் கற்கின்றனர் இருவரும்.

9.
பெரிய கையைப் பற்றும் சிறிய கை
சேர்ந்து கடக்கிறார்கள் தெருவை
நம்பிக்கை எடையற்றது, அர்த்தமுள்ளது.


Author

  • Ramalakshmi Rajan

    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார். இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

You may also like

Leave a Comment