மூன்று ஆண்டுகள் உறங்கியவன் ( 三年寝太郎 – நெதாரோ)
முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் வயதான அப்பாவும் அம்மாவும் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வளர்ந்து தன்னுடைய அப்பாவுக்கு உதவியாக விவசாயத்தில் உதவி செய்யாமல், எப்போதும் தூங்கினான். அதனால் அவனை நெதாரோ என அழைத்தனர். ஜப்பானிய மொழியில் நெரூ என்றால் தூக்கம், தாரோ என்பது ஆண்குழந்தைகளுக்கான பொதுப்பெயர். நெ(ரூ)+தாரோ = நெதாரோ, நெதாரோ என்றால் தூங்கிக்கொண்டே இருப்பவன் என்பது பொருள்.
தூங்கிக்கொண்டிருக்கும் அவனை அம்மா எழுப்பினார்.
“அடேய், எழுந்திரு! எழுந்திரு! போய் அப்பாவுக்கு விவசாயத்தில் உதவி செய். இப்படித் தூங்கிக்கொண்டிருந்தால் உன்னை யாருக்கும் பிடிக்காது” என்று உசுப்பினார்.
அம்மாவின் உசுப்பலுக்கு ‘ம்ம்ம்’ என்று மறுமொழி சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினான்.
அப்பாவுக்குக் கோபம் வந்தது. அவர் கோபமாகச் சத்தம் போட்டார்.
“அடேய், எழுந்திரு! மழை பெய்திருக்கிறது, ஆற்றுநீரை நம்முடைய வயலில் பாய்ச்ச உதவி செய். நீ இப்போது உதவாவிட்டால் விளைச்சல் நன்றாக இருக்காது. பிறகு நம்மிடம் சோறாக்க அரிசி இருக்காது. எழுந்திரு” எனச் சத்தமிட்டார்.
அப்பாவின் சத்தத்துக்கும் ‘ம்ம்ம்’ என்று மறுமொழி சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினான்.
திடீரென்று ஒருநாள் நெதாரோ விழித்தான். ‘நான் காட்டுக்குள் சென்றுவருகிறேன்.’ எனச் சொல்லிவிட்டுக் காட்டுக்குள் சென்றான்.
காட்டிலிருந்து திரும்பும்போது பெரிய பருந்து ஒன்றைப் பிடித்துவந்தான். அவ்வளவு பெரிய பருந்தை அவன் எப்படிப் பிடித்தான் என யாருக்கும் தெரியவில்லை. வீட்டிலிருந்த கூண்டில் அதை அடைத்தான். ‘கூண்டைத் திறந்து இதை வெளியேவிடக்கூடாது’ என அப்பாவிடமும் அம்மாவிடமும் சொன்னான்.
அதன் பிறகு, ‘நான் நகரத்துக்குச் சென்றுவருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு நகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.
மாலையில் நகரத்திலிருந்து திரும்பும்போது ஒரு விளக்கைக் கொண்டு வந்தான். அந்த ஜப்பானிய விளக்கில் நடுவில் தீபம் எரியும், காற்றில் தீபம் அணையாதபடி அதைச் சுற்றிலும் துணியால் அல்லது காகிதத்தால் கூண்டு கட்டியிருப்பார்கள்.காகிதக்கூண்டுக்குள் விளக்கு அணையாமல் எரியும்.
‘என்ன இது பருந்து, என்ன இது விளக்கு’ என அம்மாவும் அப்பாவும் கேள்வி கேட்டதற்கு நெதாரோ ‘ம்ம்ம்’ என்னும் வழக்கமான பதிலைச் சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினான்.
ஒருநாள் இரவு எல்லாரும் உறங்குகையில், நெதாரோ விழித்தான். அந்தக் கிராமத்தில் இருந்த பணக்காரரின் வீட்டுக்குப் பருந்தையும் விளக்கையும் எடுத்துச் சென்றான். அவருடைய வீட்டுத் தோட்டத்திலிருந்த மரத்தின் மீது ஏறினான். மரத்தில் இருந்தபடியே குரல் கொடுத்தான்.
“பணக்காரரே வெளியே வா! நான் பக்கத்து மலையிலிருந்து டெங்கு வந்திருக்கிறேன்”
ஜப்பானிய மொழியில் டெங்கு (tengu) என்றால் நீண்ட மூக்கு உடைய வேதாளம். அந்தக்காலத்தில் யாரும் வேதாளங்களைப் பகைத்துக்கொள்ள விரும்பியதில்லை. வேதாளம் வந்து சத்தம் போடுவதாக நினைத்த பணக்காரர் பயந்துகொண்டே பலகணிக்கு வந்து மரத்தைப் பார்த்தார். இருட்டில் எதுவும் சரியாகத் தெரியவில்லை. தன்னுடைய அச்சத்தை வெளியில் காட்டாமல் வேதாளம் எனச் சொல்லிக்கொண்ட நெதாரோவிடம் பேசினார்.
“வேதாளமே, வருக! உனக்கு என்னவேண்டும்” என்றார்.
அதற்கு நெதாரோ, ‘உன்னுடைய மகளை இந்தக் கிராமத்தில் இருக்கும் நெதாரோவுக்குத் திருமணம் செய்து வை’ என்றான்.
பணக்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. ஏழை நெதாரோவுக்கு எப்படித் தன் மகளைத் திருமணம் செய்துவைக்க முடியும் என வேதாளத்துடன் பேசுவதாக நினைத்து நெதாரோவிடம் பேசினார்.
“அப்படியா? இதோ உனக்கு சாபம் இடுகிறேன். நாளை நீயும் ஏழையாகிவிடுவாய். அப்போது சரியாகுமா?” என நெதாரோ கேட்டதும், பணக்காரர் அஞ்சினார்.
“வேண்டாம் வேண்டாம். நான் என் மகளுக்கும் நெதாரோவுக்கும் திருமணம் செய்துவைக்கிறேன்” என்றார்.
அப்போது நெதாரோ விளக்கை ஏற்றினான், அதைக் கழுகின் காலில் கட்டினான், கழுகைப் பறக்கவிட்டான்.
“சரி, நான் மலைக்குச் செல்கிறேன்” என்று சத்தமிட்டான்.
இருட்டில் விளக்கு பறப்பதைப் பார்த்த பணக்காரர் வேதாளம் பறந்துபோவதாக நினைத்தார்.
அடுத்த நாள் பணக்காரரின் வீட்டுக்குச் சென்று நெதாரோ அவருடைய மகளைத் திருமணம் செய்துகொண்டான். அந்தப் பெண் மனைவியாகத் தன் வீட்டுக்கு வந்த பின் நெதாரோ சுறுசுறுப்பானான். வயலில் ஒழுங்காக அப்பாவுக்கு உதவியாக இருந்தான். அவனுடைய மனைவியும் அவனுக்கு உதவியாக வயலில் வேலை செய்தாள். நெதாரோவின் அப்பாவும் அம்மாவும் மகிழ்ந்தனர்.
நெதாரோவும் அவன் மனைவியும் வயலில் நன்றாக உழைத்ததால் விளைச்சல் நன்றாக இருந்தது. அனைவரும் மகிழ்ந்தனர். அவர்களுடைய உழைப்பைப் பார்த்த பணக்காரர் தன்னுடைய வயலையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
அவர்கள் மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்தனர்.