Home நாவல்அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.

அசுரவதம்: 21 – நீண்ட கரங்கள்.

by Iyappan Krishnan
2 comments
This entry is part 21 of 21 in the series அசுரவதம்

​​சடாயுவின் உடல் தகனமான அந்தப் பாறையை விட்டு இராமனும் இலக்குவனும் நகர மறுத்தனர். எரியும் நெருப்பு அணைந்து புகையத் தொடங்கியிருந்தது. அந்தப் புகையில் இராமனுக்குத் தன் தந்தை தசரதனின் முகமும், தியாகத்தின் வடிவமான சடாயுவின் முகமும் மாறி மாறித் தெரிந்தன.

சடாயுவின் சிதை நெருப்பு மெல்ல அணைந்து கரியாகிக் கொண்டிருந்தது. தந்தை தசரதனுக்குச் செய்ய முடியாத கடமையை, தந்தைக்கே நிகரான சடாயுவுக்குச் செய்து முடித்த இராமனின் கண்கள், அந்தி நேரத்து ஆகாயத்தைப் போலச் சிவந்து காணப்பட்டன. தசரதனின் தியாகமும், சடாயுவின் அர்ப்பணிப்பும் ஒன்றே என அவன் மனம் தர்க்கம் செய்தது.

“இலக்குவா, சாவு என்பது வெறும் உடல் மறைவா? இல்லை, அது ஒரு கடமையின் முற்றுப்புள்ளியா?” என்று கேட்ட இராமனின் குரலில் அதீத கசப்பு கலந்திருந்தது.

“கிளம்புவோம் இலக்குவா… சடாயு காட்டிய வழியே தென் திசையில் நம் தேடலைத் தொடரலாம்” என்று இராமன் கனத்த இதயத்தோடு எழுந்தான். அவன் கைகளில் இருந்த அந்த வில் இப்போது பாரமாகத் தெரிந்தது. அவன் கண்கள் காணும் திசை எல்லாம் சீதையைத் தேடினான். அவர்கள் ‘கிரவுஞ்சாரண்யம்‘ எனும் அடர்ந்த காட்டை நோக்கித் தங்கள் அடிகளை எடுத்து வைத்தனர்.

இராமன் அந்த வனத்தைப் பற்றி தான் அறிந்ததை எடுத்துரைத்தான்.

“இலக்குவா.. கிரவுஞ்சாரண்யம், சூரியக் கதிர்களே நுழைய அஞ்சும் அளவிற்கு அடர்த்தியான மரங்களைக் கொண்ட பெரும் காடு. ஓங்கி உயர்ந்த சால் மரங்களும், தேக்கு மரங்களும், நறுமணம் வீசும் சந்தன மரங்களும் இக்காட்டின் முதுகெலும்பாக நிற்கும் இடம். மரங்களின் கிளைகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, பூமிக்கு ஒரு பச்சை நிறக் குடையைப் பிடித்தது போல் தோற்றமளிக்கும் காடு அது.

​’க்ரௌஞ்ச’ என்பது ஒரு வகை பறவையின் பெயர் (அன்றில் பறவை). இப்பறவைகள் இக்காட்டில் அதிகளவில் வாழ்வதால் இதற்கு இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. விடியற்காலையில் ஆயிரக்கணக்கான பறவைகளின் கீதங்கள் ஒலிக்க, காடே ஒரு பெரிய இசையரங்கம் போல இருக்குமாம். மயில்களின் நடனமும், குயில்களின் கூவலும் இக்காட்டில் நாம் அடிக்கடி கேட்கலாம். இது அமைதியின் இருப்பிடமாகவும், சாகசங்களின் களமாகவும், பறவைகளின் சொர்க்கமாகவும் திகழ்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கிரௌவுஞ்சாரண்யம் என்பது இயற்கையின் ஆதிவடிவம். இது அமைதியின் இருப்பிடமாகவும், சாகசங்களின் களமாகவும், பறவைகளின் சொர்க்கமாகவும் திகழ்கிறது” என்றான் இராமன்.

“அண்ணா, எனக்கு ஏதோ தவறாகப் படுகிறது. என் உள்ளுணர்வு இந்த இடம் பேராபத்தான இடம் என்று சொல்கிறது. அதிக எச்சரிக்கை தேவை. இந்த நேரத்தில் நாம் வனத்தின் உள்ளே போகாமல் இருப்பதே நல்லது ” என்றான் இலக்குவன்.

இருள் கவிந்த நேரத்தில் அங்கே ஒரு பாறைகளால் உருவான குகை போன்ற இடத்தில் அவர்கள் தங்கி மறுநாள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அந்த ஆரணியம் ஆரம்பத்தில் இராமன் சொன்னது போல மிக இரம்மியமாகவும், மர்மம் கலந்த அழகோடும் இருந்தது. ஒரு விசித்திரமான கோட்டை போல நூறு யானைகள் வரிசையாக நின்று தடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஓங்கி வளர்ந்திருந்தன சால் மரங்கள். மரங்களின் பட்டைகளில் இருந்து கசிந்த பிசின், காயமடைந்த வீரனின் உடலில் இருந்து வழியும் குருதியைப் போல உறைந்து கிடந்தது. சூரியக் கதிர்கள் அந்த இலைகளின் அடர்த்தியில் சிக்கித் தவித்தன; ஏதோ ஒரு மாயாஜாலக் கோட்டையின் நிலவறையில் நுழையத் துடிக்கும் ஒற்றனைப் போல, மெல்லிய ஒளிக்கீற்றுகள் அங்கும் இங்குமாகத் தெரிந்தன. அந்த வனத்தின் அமைதி ஒரு பெரும் போருக்கு முந்தைய நிசப்தத்தைப் போல அச்சமூட்டியது

இருவரும் அந்தச் சூழலைக் கண்டு சற்றுத் தயங்கினாலும், தம்மைச் சுற்றி அபாயங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு காட்டின் நடுப்பகுதியை நெருங்கும் போதுதான் அந்த மாற்றத்தைக் கண்டனர்.

காடு அதன் செழிப்பை இழந்து, ஏதோ ஒரு பைசாசத்தின் வயிற்றில் அகப்பட்டிருப்பது போன்ற அசாத்திய மௌனம் நிலவியது.

சற்று முன் வரை சிலிர்ப்பூட்டிய தென்றல், இப்போது அந்தப் பகுதிக்குள் நுழைய அஞ்சித் திகைத்து நின்றது போல இருந்தது. வான் முட்டும் மரங்கள் இலைகளை அசைக்க மறந்து, ஏதோ பெரும் பேய்களின் அணிவகுப்பு போல நின்றன.

அந்த வனப்பகுதியில் பகலிலும் அங்கே படர்ந்திருந்த இருள், வெறும் ஒளியின்மை மட்டுமல்ல.. கரிய திரவம் என அந்த வனத்தின் மீது படிந்திருந்தது.

இருளா! இல்லை நிழலா! எனப் பிரித்துப் பார்க்க இயலாத வகையில் மரங்களிடையே பயந்து பயந்து உள் நுழைந்த சூரியனின் கதிர்கள், அங்கும் இங்குமென மென்மையாக வீழ்ந்ததால் உண்டாகிப் பரவிக் கிடந்த நிழலும் கூட அச்சத்தை ஊட்டியது.

அங்கிருந்த கொடிகள் மரங்களைத் தழுவவில்லை; மாறாக, ஒரு கொடிய நாகம் தன் இரையை இறுக்குவது போல மரங்களை நெரித்துக் கொண்டிருந்தன.

பாதங்களில் மிதிபடும் காய்ந்த சருகுகள் எழுப்பும் ‘மடமட’ என்ற சத்தம், அந்த மயான அமைதியில் ஒரு பெரும் வெடிச்சத்தத்தைப் போல எதிரொலித்து, காட்டின் அந்தக் கணம், பார்ப்பவரின் மனதிடத்தைத் தளர்ச்சியடையச் செய்வது போல் இருந்தது.

பறவைகளின் ஓசைகூட கேட்கவில்லை. வழி நெடுகிலும் முறிந்து கிடந்த மரங்களும், காய்ந்து போன புதர்களும், யானை, சிங்கம், புலி, மான்கள் என பலவிதமான விலங்குகளின் எலும்புகளும் உடலின் மிச்சங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது, ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத காலன் அந்த வனம் முழுவதையும் உண்டு முடித்துவிட்டு, அதன் மிச்சங்களை உமிழ்ந்து வைத்திருப்பது போன்ற அந்தக் காட்சி, ஏதோ ஒரு பேரபாயம் அவர்களை நோக்கி வருவதைச் சுட்டிக்காட்டின

அதுவரை நீண்டு விழுந்திருந்தது ‘நிழல்’ என்று இராமனும் இலக்குவனும் நினைத்திருந்த வேளையில், அந்த நிழல் மெல்ல மெல்ல மலைப்பாம்பு தன் இரையைச் சுற்றிப் பற்றுவது போல இருவரையும் பற்றிக் கொண்டது.

இதுவரை கண்டது நிழல் அல்ல, ஏதோ சர்ப்பம் என நினைத்த போதுதான் திடீரென்று, ஒரு மாபெரும் மலை அசைவது போன்ற அதிர்வு ஏற்பட்டது. பூமி பிளப்பது போன்ற ஓசையுடன், காட்டில் ஒரு பெரும் பகுதி இரண்டாகப் பிரிந்தது. அந்தப் பிளவின் நடுவே அவர்கள் கண்ட உருவம், எந்த ஒரு மனித கற்பனைக்கும் எட்டாத கொடூரம்!.

அவர்கள் கண்டது ஒரு விசித்திர உருவம். மலை முகடு போன்ற அந்த உடலின் மார்புப் பகுதியில், ஒரு பிரம்மாண்டமான வாய் கோரமாகத் திறந்திருந்தது. அதன் நடுவே இருந்த அந்த ஒற்றைக் கண் இராம, இலக்குவர்களைக் கண்டவுடன் பசியின் வெறியால் ஜொலித்தது. அது வெறும் கண்ணல்ல; ஒரு எரிமலையின் குழம்பு கொதிப்பது போல, இரத்தச் சிவப்பாகச் சுழன்றது.

​”எத்தனை காலம்… எத்தனை காலம் காத்திருந்தேன் இந்த மானிட ஊனுக்காக!” என்பது போல அந்த ஒற்றை விழி ஆவேசமாக மின்னியது. இதுவரை அந்த வனம் கண்டிராத ஒரு கொடூரமான பசி வேட்கையோடு அது அவர்களை அளவிட்டது.

இதுவரை நிழல் எனவும் மலைப்பாம்பு எனவும் நினைத்தது அந்த உருவத்தில் இணைந்திருந்த கைகள் என்பதை உணர்ந்தனர். அடுத்த நொடி, யானையைப் பிடிக்கும் பாசக் கயிறு போல அவை அவர்களை வளைத்தன. அதன் பிடி ஒரு மலைப்பாம்பின் இறுக்கத்தை விடவும், இரும்புச் சங்கிலியின் வலிமையை விடவும் பயங்கரமாக இருந்தது. அந்தக் கைகளின் ஒவ்வொரு நரம்பும் இராம இலக்குவர்களின் எலும்புகளை நொறுக்கத் துடித்தன. அந்த இறுக்கத்தில் மூச்சுத் திணறிய வேளையில்தான் இராமன் விரக்தியின் விளிம்பிற்குச் சென்றான். அந்தக் கைகள் அவர்கள் இருவரையும் இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன.

அரைக் காதம் வரைக்கும் நீண்டு வளைக்கும் திறன் கொண்ட அந்த இரு கரங்கள், இராம இலக்குவர்களை வளைத்துப் பிடித்துத் தன் வயிற்றில் இருக்கும் வாயை நோக்கி இழுக்கத் தொடங்கின. மொத்தத்தில் யானையைப் பிடிக்கும் பாசக் கயிறு போல அந்த உருவத்தின் கைகள் இருந்தன. அந்த உருவம்.. கவந்தன் என்னும் அரக்கன்.

இராமன் தாம் இருவரும் மாபெரும் அபாயத்தில் சிக்கிக் கொண்டதை உணந்தான். சீதையைப் பிரிந்த துயரம், தந்தையைப் போன்ற சடாயுவின் மரணம் என இரண்டும் இராமனின் மனதை ஏற்கனவே தளர்ச்சியுறச் செய்திருந்ததால், கவந்தனின் அந்தப் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எந்த ஒரு பிரயத்தனமும் செய்யவில்லை அவன்.

சீதையைப் பிரிந்து வாழ்வது கடினம் என்பது மட்டுமல்ல, அவமானத்தின் உச்சம் என்று அவன் நினைத்துக் கொண்டு, “இலக்குவா, நம் விதி.. இப்படி சிக்கிக் கொண்டோம். சீதையை இனி நான் காணப்போவதில்லை. எனவே நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? இந்த அரக்கன் என்னை விழுங்கட்டும். நீயாவது தப்பித்துச் செல், என்னை இந்த அரக்கன் தின்னட்டும், நீ அயோத்தி சென்று அங்குள்ளவர்களிடம் நான் காட்டில் மறைந்துவிட்டதாகச் சொல்” என்றான் இராமன் விரக்தியான குரலில்.

“அண்ணா, என்ன பேசுகிறீர்கள்” என்றான் இலக்குவன், தான் கேட்ட சொற்களை நம்ப இயலாமல்.

“பார் இலக்குவா,” என்றான் இராமன். அவன் குரல் ஆழமான கிணற்றிலிருந்து வருவது போலிருந்தது. “இந்த அரக்கன் யார்? இவன் பசியின் உருவம். பிரபஞ்சத்தின் ஆதிப் பசி இவன். நாம் அறம் என்கிறோம், தர்மம் என்கிறோம், ஆனால் அந்தப் பசிக்கு முன்னால் எல்லாம் வெறும் சருகுகள்தான். சீதையை இழந்தபோது என் அறம் தோற்றது. இப்போது என் உடல் அழியும்போது என் தர்மம் அழிகிறது. ஒரு மானுடனாக நான் எதைச் சாதித்தேன்? ஒரு பெண்ணைக் காக்க முடியாதவன், ஒரு தந்தைக்குக் கொள்ளி போட முடியாதவன்… நான் எதற்கு மீள வேண்டும்?” ​இராமன் தன் கைகளைத் தளர்த்தினான். அவன் உள்ளம் ஒரு சூனியத்தில் ஊசலாடியது. “இந்தக் கவந்தன் என்னை விழுங்கட்டும். இது ஒரு முடிவல்ல, இது ஒரு கரைதல். காலத்தின் வயிற்றில் ஜீரணமாகும் கோடிக்கணக்கான உயிர்களில் நானும் ஒருவன். சீதையைத் தேடித் தோற்பதை விட, இந்தப் பசிக்கு இரையாவது ஒரு முழுமை.”

இலக்குவன் இராமனின் பேச்சைக் கேட்டு மனம் வருந்தினான்.

“அண்ணா, நீங்கள் யார் என்பதை மறந்துவிட்டீர்களா? இக்ஷவாகு, இரகு போன்றோர் உதித்த குலத்தில் தோன்றிய நீங்கள் இப்படி பேசலாமா? நாம் போராடி உயிர் இழந்தாலும் உலகம் நம்மைப் போற்றும், வீணே நம்மை இரையாக்கினால்.. நமக்கு மட்டுமல்ல, நம் குலத்திற்கே இழுக்கு அண்ணா! இது தத்துவம் பேசும் நேரமல்ல, மேலும் இது உங்களின் மனச் சோர்வு! நீங்கள் இராமன். நீங்கள் வெறும் உடல் அல்ல, நீங்கள் ஒரு லட்சியம். லட்சியம் ஒருபோதும் ஜீரணிக்கப்படக் கூடாது” என்றான் இலக்குவன்.

“இலக்குவா, என்ன செய்யச் சொல்கிறாய் என்னை? சூர்ப்பனகை குறித்தும், மாயமான் குறித்தும் நீ பலமுறை எச்சரித்தாய், நான் அதைக் கேட்டிருக்க வேண்டும். என் அலட்சியத்தாலும், சீதையின் வார்த்தைத் தூண்டுதலாலும் மாயமானைப் பின் தொடர்ந்தேன். அறிவிலித் தனமான என் செயலால் சீதையைப் பறிகொடுத்தேன். இப்போது உன்னையும் இந்த பேரபாயத்தில் கொண்டு தள்ளியிருக்கிறேன். இனி நான் வாழ்ந்து என்ன பயன் சொல்” என்றான் இராமன். அவன் குரலில் சோகமும் விரக்தியும் மிகுந்திருந்தன.

“அண்ணா! இது உங்களுக்கே அடுக்காது! இராமன் என்றால் தர்மம், இராமன் என்றால் வெற்றி! தாடகையை ஓரம்பால் வீழ்த்திய என் அண்ணனா இப்படிப் பேசுவது? விராடனை விளையாட்டாகவே போரிட்டு வீழ்த்திய உங்கள் வீரம் எங்கே போனது ? பதினாறாயிரம் அரக்கர்களை ஒரு முகூர்த்தக் காலத்தில் தனியொருவனாக நின்றழித்த உங்களின் அந்த மன உறுதி எங்கே இப்போது? ஒரு அற்ப அரக்கனின் கைகளுக்குப் பயந்து வீரத்தைத் துறப்பதா? நீங்கள் கலங்குவது சரியா? நிமிர்ந்து என்னைப் பாருங்கள் அண்ணா. தரையைப் பார்க்கும் உங்கள் கண்கள் என் கண்களை நேரடியாகச் சந்திக்கட்டும்” என்றான் உறுதியான குரலில்.

இராமன் நிமிர்ந்தான். அவன் கண்கள் உயிரற்றது போல இருந்தன. இலக்குவன் அந்தக் கண்களை உற்று நோக்கினான்.

“அண்ணா, தங்கள் உடை வாளை உருவி எடுங்கள். இது என் மீது ஆணை. ‘மீட்க என் நாயகன் வருவான்’ எனத் தவிக்கும் என் அன்னை சீதாப்பிராட்டியார் மீது ஆணை. ‘மாற்றான் கவர்ந்து சென்றான், அதனால் இராமன் தன் உயிர் இழந்தான்’ என்ற பழிச் சொல்லுக்கு இடம் தராதீர்கள். தந்தைக்கு நிகரான சடாயுவைத் தகனம் செய்த போது, ‘அரக்கர் குலத்தை வேரறுப்பேன்’ என்று நீங்கள் செய்த சபதத்தின் மீது ஆணை. உங்கள் கரம் வாளைப் பற்றட்டும். இந்த அரக்கனின் தோள்களை வீழ்த்தட்டும்” என்று உரத்துக் கூச்சலிட்டான். தன் உடைவாளை உருவி, கவந்தனின் தோளின் மீது வேகமாகத் தட்டித் தட்டி ஓசை எழுப்பி வீர முழக்கமிட்டான்.

அந்த முழக்கம் இராமனின் ஆழ்மனதில் இருந்த வீரத்தைத் தட்டியெழுப்பியது. இலக்குவனின் கூச்சலால் ஏதோ மயக்கத்தில் இருந்து மீண்டது போல இராமன் தன் உணர்வு அடைந்தான். அவன் கண்களில் ஆவேசம் புகுந்தது.

“ஆம் இலக்குவா, ஆம். வீழ்ந்தாலும் போரிட்டு வீழ வேண்டும். இக்ஷ்வாகு குலத்தின் வீரர்கள் பெஅரக்கர்களை கணத்தில் சாய்க்க இருந்தேன். இந்திரனே வந்து அபயம் வேண்டி நின்ற தசரத சக்கரவர்த்தியின் மகன் என்ற பெருமையையும், ஒப்பில்லா தியாகத்தையும் வீரத்தையும் கொண்ட தம்பி உடனிருப்பதையும் மறந்தேன். என்னை மன்னித்துவிடு. இதோ என் வாள்.. ஒன்று இந்த அரக்கன் மாளவேண்டும் இல்லையேல்..” என்று சொல்ல வந்ததை முடிக்காமல் இராமன் தன் உடைவாளை இறுகப் பற்றினான். அவன் இறுகப் பற்றியது வாள் அல்ல, தன்னுள் இருந்து மீண்டெழிந்த வீரத்தையும் தன்னம்பிக்கையும்.

இலக்குவன் கண்கள் உற்சாகத்தில் மின்னின. இருவரும் ஒரே நேரத்தில் செயல்பட்டனர். மின்னல் வெட்டுவது போலக் கவந்தனின் அந்தப் பிரம்மாண்டமான இரு கரங்களையும் அடியோடு துண்டித்தனர். மலை சரிவது போலக் கவந்தன் மண்ணில் வீழ்ந்தான்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

“என் உடலை எரித்துவிடு” என்றது அந்த அகோர உருவம்.

“யார் நீ?” என்றான் இராமன்.

“இந்த உடல் எரிந்தால் உங்களுக்குப் பதில் கிடைக்கும்” என்றது அந்த உருவம்.

இலக்குவன் அருகில் இருந்த பள்ளத்தில், சருகுகள், உலர்ந்த மரக்கட்டைகள் சேர்த்து அந்த உடலைத் தள்ள, இராமன் நெருப்பை மூட்டினான்.

அந்த நெருப்பின் நடுவில் ஒளிமயமான ஒரு உருவம் தோன்றியது.

“இராமா! ஒரு காலத்தில் நான் பேரழகு கொண்ட கந்தர்வன். ஆனால் கர்வம் என் கண்களை மறைத்தது. கர்வம் என்பது ஒரு பெரும் போதை வஸ்து. அது நம்மைச் சேர்ந்த நம் புத்தியை மறைத்து நம்மை உருமாற்றிவிடும். ஒரு முனிவரைப் பயமுறுத்தி விளையாடப் போய், இந்த விகார உருவத்தை அடைந்தேன். ஆனால் என் அகந்தை அப்போதும் அடங்கவில்லை. என் அசுர பலத்தைக் கொண்டு தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்தேன்!”

​அவன் கண்கள் அந்தப் பழைய போர்க்களத்தை நினைவு கூர்ந்தன.

​”அந்தப் போர்க்களம் இடி முழக்கங்களால் அதிர்ந்தது. ஐராவதத்தின் மீது அமர்ந்து வந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தை ஓங்கினான். வானமே பிளப்பது போன்ற ஒரு மின்னல் கீற்று என் மீது பாய்ந்தது. வஜ்ராயுதம் என் உச்சந்தலையில் இடியாக இறங்கிய அந்தத் தருணத்தை என் ஆன்மா மறக்காது! அந்த அசாத்தியமான அழுத்தத்தில், என் தலை அப்படியே என் மார்புக்குள் அமிழ்ந்து போனது! அதே வேகத்தில் என் கால்களும் இடுப்புக்குள்ளே சொருகிக் கொண்டன. ஒரு பெரும் பாறையைச் சுத்தியலால் தட்டி உள்ளே இறக்குவது போல, என் தலையும் கால்களும் உடலுக்குள்ளேயே அமுங்கிப் போன அந்த வேதனையில் நான் அலறினேன்!”

​விஸ்வாவசு விம்மினான். “தலை போனதால் கண் இல்லாமல் போனது; கால்கள் போனதால் நகர முடியாமல் போனது. ‘இந்திரனே! வாயும் கண்ணும் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வேன்?’ என்று நான் கதறியபோதுதான், அவன் இரக்கப்பட்டு என் வயிற்றில் வாயையும், காதம் வரை நீளும் கைகளையும் கொடுத்தான். ‘உன் கையில் சிக்கும் உணவை உண்டு, இராமன் வரும் வரை காத்திரு’ என்றான்.

நான் கந்தர்வனாக இருந்தபோது என் அழகின் மீதான கர்வம் எனக்குச் சிறையானது. அசுரனாக மாறிய போது கிடைத்த அளவில்லா ஆற்றல் அந்தச் சிறையை வலுவாக்கியது. இன்று நீ என் உடலை எரித்தபோதுதான், என் ஆத்மா விடுதலை அடைந்தது. அல்ல அல்ல என் கர்வம் எரிந்து சாம்பலானது. இன்று அந்தப் பயங்கரமான சாபத்தால் வந்த கொடூரம் முடிந்தது இராமா!. உன்னால் நான் விமோசனம் அடைந்தேன். உனக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டவனானேன்”என்றான் அந்த கந்தர்வன்.

அந்தக் கந்தர்வனின் விவரிப்பில், அவனது தலை மார்புக்குள் அமிழ்ந்த அந்தப் பயங்கரமான ஒலியை இராமன் தன் செவிகளிலேயே கேட்டது போலவும் காட்சிகள் நேரடியாகத் தெரிவதைப் போலவும் உணர்ந்தான். அந்தக் கொடூரப் போரின் எண்ணங்களைத் தன் தலையை உலுக்கி விடுவித்துக் கொண்டான்.

“இராமா, நீ தேடிச் செல்லும் செயல் கை கூட உனக்குத் தேவையான உதவி ருசியமுக மலையில் உண்டு” என்றான் கந்தர்வன்.

“அது என்ன? கொஞ்சம் தெளிவாகச் சொல்ல முடியுமா” என்றான் இராமன்.

​”இராமா, கலங்காதே! உன் கண்கள் இப்போது கண்ணீரில் நனைந்திருக்கலாம், ஆனால் அவை விரைவில் வெற்றிக் களிப்பில் மின்னும். நீ இப்போது செல்ல வேண்டியது ருசியமுக மலை. அது வெறும் மலையல்ல; அது துன்புற்றவர்களின் தஞ்சம். அங்கேதான் உன்னைப் போலவே தன் மனைவியைப் பிரிந்து, தன் அண்ணனால் துரத்தப்பட்டு, அநாதையாய் ஒரு அரசன் அலைந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு உன் உதவியும், அவனால் உன் தேடலுக்கான வழியும் கிடைக்கும்” என்றான் கந்தர்வன்.

“நீங்களே அங்கு செல்லும் வழியை எடுத்துரைக்க வேண்டும்” என்ற இராமனின் கண்களில் நம்பிக்கையின் ஒளி துளிர்த்தது.

“இங்கிருந்து ஒரு காத தூரத்தில் பம்பா நதிக்கரையில் இருக்கும் சபரியின் மூலம் உனக்கு வழி காட்டப்படும். இராமா! என் அசுர உடலை வதைத்து, எரித்து எனக்கு ஒளி தந்தாய். உனக்கும் உன் தம்பிக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இனி உன் வில்லில் இருந்து எழுப்பும் நாண் ஒலி, இந்தப் பிரபஞ்சத்தின் அநீதிகளை எல்லாம் வேரறுக்கட்டும். உனது வெற்றி யுக யுகங்களாக இம்மண்ணில் பேசப்படும்” எனச் சொல்லி வணங்கி அவர்களிடம் விடைபெற்று அந்த இடம் விட்டு நீங்கினான். வானிலிருந்து மலர் மாரி பொழிவது போல, ஒரு மெல்லிய நறுமணம் அந்த வனத்தில் பரவியது. விஸ்வாவசு ஒரு நட்சத்திரமாக மாறி விண்ணில் மறைந்தான்.

அவன் மறைந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்த இராமனின் தோள்களில் ஒரு புதிய உறுதி ஏறியிருந்தது. இராமனின் கண்களில் இதுவரை இல்லாத ஒரு புதிய ஒளி தெரிந்தது. தொலைந்து போன சீதையை மீட்க, காடு ஒரு வழிகாட்டியைக் காட்டியிருக்கிறது. ‘சபரி’ எனும் பெயர் இராமனின் இதயத்தில் ஒரு தாயின் நிழலாகப் படர்ந்தது. சூரியக் குலத் தோன்றல்கள் இருவரும் பம்பா நதி நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அசுரவதத்தின் முதல் அத்தியாயம் இங்கே முடிகிறது, ஆனால் மகா யுத்தத்திற்கான விதை இங்கிருந்துதான் முளைவிடத் தொடங்குகிறது. இராவணனின் அழிவிற்கு வித்திடும் செய்கையைச் செய்த சூர்ப்பனகையின் அடுத்த செய்கை என்ன? அசுரகுலத்தையே அழிக்க முடிவு செய்த இராமன் அடுத்து என்ன செய்தான்? அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

Series Navigation<< அசுரவதம்: 20 – வீழ்ந்த சிறகுகள்

Author

You may also like

2 comments

முத்துசுப்ரமண்யம் January 11, 2026 - 1:02 am

கிரௌஞ்சாரணயம் வரணனை மிகச் சிறப்பாக இருக்கிறது. கவந்தன் வதம்/சாப விமோசனம் இவ்வளவு விரிவாகக் கேட்டதில்லை. அபாரம். நன்றி!

Reply
admin January 13, 2026 - 12:17 am

மிக்க நன்றி சார். this means lot to me

thanks
Iyappan Krishnan

Reply

Leave a Comment