மரபுக் கவிதைகளின் ஆசுகவி என்றும், குறுநாவல்கள் எழுதுவதில் வல்லவர் என்றும் புகழப்படும் சின்னக்கண்ணன் அவர்கள், உலகப்புகழ் பெற்ற சிட்னி ஷெல்டனின் ‘Nothing Lasts Forever’ நாவலை “எதுவும் கடந்து போகும்” என்ற பெயரில் தமிழுக்குத் தந்துள்ளார். ஒரு மொழிபெயர்ப்பு என்பதோடு ஒரு கதையின் சுருக்கமான வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நாவல் ஒரு சான்று.
பொதுவாக மொழிபெயர்ப்பு என்பது மூல நூலை அப்படியே வரிக்கு வரி மாற்றுவது எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், சின்னக்கண்ணன் அவர்கள் இதில் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். மூலக் கதையின் ஆன்மா சிதையாமல், அதன் விறுவிறுப்பைக் கூட்டக் கதையைச் சுருக்கி வடிவமைத்திருப்பது இவருடைய தனிச்சிறப்பு.
ஆங்கில நாவல்களைத் தமிழில் படிக்கும்போது பல நேரங்களில் மொழி நடை தட்டையாக இருக்கும். ஆனால், ஒரு கவிஞராகவும் கதை சொல்லியாகவும் இருப்பதால், சின்னக்கண்ணன் அவர்களின் நடை தமிழில் மிக இயல்பாக, ஒரு நேரடித் தமிழ் நாவலைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.
சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் பணிபுரியும் மூன்று பெண் மருத்துவர்களின் (பேஜ் டெய்லர், கேட் ஹண்டர், ஹனி டாஃப்ட்) வாழ்க்கைப் போராட்டமே இக்கதை.
ஒருவர் கொலையாளி என முத்திரை குத்தப்படுகிறார்.
இன்னொருவர் ஒரு வன்முறைக்கு ஆளாகிறார்.
மூன்றாமவர் தனது திறமையால் உயர நினைக்கிறார்.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மருத்துவ உலகில் இந்தப் பெண்கள் சந்திக்கும் சவால்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் கதை விறுவிறுப்பாக விளக்குகிறது.
இந்த நாவலில் கதையை நகர்த்திச் செல்லும் மிக முக்கியமான மற்றும் சிக்கலான கதாபாத்திரம் கென் மல்லாரி. ஒரு திறமையான மருத்துவர் என்பதைத் தாண்டி, கதையில் அவர் உருவாக்கும் தாக்கங்கள் அதிகம்.
கென் மல்லாரி ஒரு வசீகரமான, அதே சமயம் தந்திரமான மனிதராகச் சித்தரிக்கப்படுகிறார். அவரது வருகை கதையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பெண் மருத்துவர்களின் வாழ்வில் அவர் ஏற்படுத்தும் பாதிப்புகள் கதையின் பரபரப்பை உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றன
சிட்னி ஷெல்டனின் நாவல்களில் பொதுவாகவே பாலியல் சார்ந்த (Erotic) வர்ணனைகள் சற்று தூக்கலாக இருக்கும். ஆனால், அவற்றை அப்படியே மொழிபெயர்ப்பது தமிழ் கலாச்சார சூழலுக்கோ அல்லது ஒரு பொதுவான வாசகருக்கோ சில நேரங்களில் நெருடலை ஏற்படுத்தலாம். ஆகவே உணர்வுகளை வர்ணிப்பதை விட, அந்தச் சூழலின் தீவிரத்தை வாசகர்களுக்குப் புரிய வைப்பதில் அவர் கவனம் செலுத்தியுள்ளார். இது கதையின் தரத்தைக் குறைந்துவிடாமல் பாதுகாப்பதோடு, அனைத்துத் தரப்பு வாசகர்களும் சங்கடமின்றி வாசிக்க வழிவகை செய்கிறது.
ஆனாலும் அவரிண்ட் டிரேட் மார்க்கான “ஹச்சோ” ஆங்காங்கே வருவது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். “ஹச்சோ”விற்கு மாற்று கட்டாயம் தேவை. அதுவும் அது மொழிபெயர்ப்பு கதைகளில் பொருந்தாமல். இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.
மற்றபடி “எதுவும் கடந்து போகும்” நாவல், மூலக் கதையின் வேகத்தையும் தமிழின் அழகையும் ஒருசேரக் கொண்ட ஒரு சிறந்த படைப்பு.