Home தொடர்சமன்பாடில்லா சமவெளிப் பயணம் – 11

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் – 11

by Padma Arvind
0 comments
This entry is part 11 of 11 in the series பயணக்கட்டுரைத் தொடர்

பாருக்குள்ளே நல்ல நாடு

புடாபெஸ்ட் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது; குறிப்பாக மனிதர்களிடம் பழகும் முறைகள், பொது இடங்களில் பேச வேண்டிய நேரம், மௌனமாக இருக்க வேண்டிய நேரம் எல்லாமே.

தவறு என்று சொல்வார்கள். ஆனால் அது தவறு அல்ல — அது அறியாமை. ஓர் அறியாமை என்னை மிகப்பெரிய ஆபத்தில் நிறுத்தியது. அந்த வித்தியாசம் புரியப் பல ஆண்டுகள் ஆயின.

பட்டறை முடிந்த மாலை வேளை. தனியாகத்தான் வாடகை வாகனம் எடுத்து ஒரு சரித்திரப் புகழ் பெற்ற இடத்திற்குச் செல்லலாமே என நினைத்தேன். ஓட்டுநர் மட்டுமே இருந்தார். மொழிபெயர்ப்பாளர் வழியாக நானே நகரைச் சுற்றிக் காட்டுகிறேன் எனச் சொன்னார்; வேறு பயணிகளை ஏற்றிக்கொண்டால் கட்டணம் குறையும் என்று. முன் இருக்கையில் அமருமாறு சைகை செய்தார்.

அப்போதே மறுத்திருக்க வேண்டும். ஆனால் அன்று அந்த அறிவு இல்லை. கிழக்கு ஐரோப்பாவில் முதல் முறை. மொழி தெரியாத நாடு. ‘மற்றவர்களை ஏற்றிக்கொண்டால் எனக்கும் சகாயமாக இருக்கும்’ என்று ஒரு நியாயமான காரணம் தோன்றியது. ஏறிக்கொண்டேன்.

கார் கிளம்பியது. முதல் சில நிமிடங்கள் பரவாயில்லை. பிறகு ஓட்டுநர் திரும்பிப் பார்த்தார். ஆங்கிலத்தில் சொன்னார் — ‘இந்தியப் பெண்களின் நீளமான கருப்பு கூந்தல் பிடிக்கும்’ என்று. அந்த குரலில் புரிந்துகொள்ள முடியாத ஒரு தொனி இருந்தது.

ஓட்டுநர் கையை நீட்டினார். என் கூந்தலை ‘தொட்டுப் பார்க்கிறேன்’ என்பது போல் தடவினார். அருவருப்பு என்ற வார்த்தை சரியானது. ஆனால் அருவருப்பை விட ஆழமான ஒன்று — என் உடல் என்னுடையது என்ற உணர்வு திடீரென்று கேள்விக்குள்ளானது போல் தோன்றியது.

பிறகு ‘ஜப்பானிய கேமரா இருக்கிறதா?’ என்று கேட்டது புரிந்தது. என்னிடம் என்ன இருக்கிறது என்று கணக்கிடுகிறான். ஹோட்டல் மேலாளருக்கும் டாக்ஸி ஓட்டுநருக்கும் ஓர் ஒப்பந்தம் உண்டு போல.

பிறகு அவன் யாரிடமோ பேசினான். தொலைபேசியில் அல்ல; மெல்லிய குரலில். யாருக்காக, என்ன சொன்னான் என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் குரலில் ஒரு திட்டம் இருந்தது என்று உணர்ந்தேன்.

காருடைய வேகம் குறைந்தது. ஒரு சிவப்பு விளக்கு. ஓட்டுநர் மெல்ல நிறுத்த வந்தான். நான் சட்டென்று கதவைத் திறந்தேன். இறங்கினேன். ஓடினேன். திரும்பிப் பார்க்கவில்லை. எங்கே ஓடுகிறேன் என்று தெரியவில்லை. அந்த நகரம் புரியாது, மொழி புரியாது, திசை புரியாது. ஆனால் நிற்கக்கூடாது என்பது மட்டும் தெரிந்தது. வந்த வழி மட்டும் நினைவில் இருந்தது.

சிறிது நேரம் கழித்துப் பட்டறையின் அருகே வந்துவிட்டேன். சக ஆய்வாளர்கள் கண்டார்கள். ‘என்ன ஆயிற்று?’ என்று கேட்டார்கள். ‘ஒன்றுமில்லை, வழி தெரியவில்லை’ என்றேன்.

அன்று இரவு நிறைய யோசித்தேன். பாஸ்போர்ட், அலுவலகத்திடம் இருக்கிறது. மொழி தெரியாது. நான் இந்த நாட்டில் யாருக்கும் தெரியாத ஒருத்தி. இந்தத் தனிமையை அந்த ஓட்டுநர் அறிந்திருந்தான்; அதைப் பயன்படுத்திக்கொள்ள யோசித்திருந்தான்.

அவன் மீது கோபமாக இருந்தது. ஆனால் அதை விட அந்த அமைப்பின் மீது கோபமாக இருந்தது. பாஸ்போர்ட் பறித்துக்கொண்ட அமைப்பு, மொழி புரியாத சூழல், தாய்மொழியைத் தவிர வேறெதையும் பேசாத மக்கள். ‘முன் இருக்கையில் அமருவது நல்லதில்லை’ என்று யாருமே என்னை எச்சரிக்கவில்லை. இந்த மூன்றும் சேர்ந்து அன்று ஓர் ஆபத்தைக் கட்டமைத்தன.

அந்தப் பயணத்திற்குப் பிறகு ஒரு விஷயம் நிரந்தரமாக மனதில் பதிந்தது. தனியாகப் பயணிக்கும்போது, அந்நியன் ஓட்டும் வாகனத்தில் பின் இருக்கையில் மட்டுமே அமர வேண்டும். கதவுக்கு அருகில். செல்லும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்; கூடிய வரையில் பொதுப் போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இது ஒரு சிறிய விஷயமாகத் தெரியலாம். இது ஒரு பெண்ணுக்குத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டிய நுண்ணிய நுணுக்கம். யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை; அனுபவம் மட்டுமே சொல்லிக் கொடுக்கிறது. அனுபவம் சொல்லிக் கொடுக்கும்போது சில நேரம் விலை அதிகமாக இருக்கும். அன்று அதிர்ஷ்டவசமாக விலை குறைவாக இருந்தது; ஓடி வர முடிந்தது.

அது ஒரு கம்யூனிச நாடு. அவன் நாட்டின் அரசமைப்பு சமத்துவம் பேசியது. ஆனால் பெண்களைப் போகப் பொருளாக நடத்தியது. சித்தாந்தம் ஒன்று; உடல் மீதான உரிமை என்ற உணர்வு வேறொன்று. இந்த இரண்டும் ஒருபோதும் ஒன்றாகப் போவதில்லை.

கம்யூனிசம் வந்தாலும், ஜனநாயகம் வந்தாலும், புரட்சி வந்தாலும் — ஒரு பெண்ணைப் ‘போகப் பொருளாகப்’ பார்க்கும் பார்வை மாறப்போவதில்லை. அந்தப் பார்வைக்கு அரசியல் இல்லை; அது பழகிப்போன ஒன்று.

புடாபெஸ்டில் அந்த மாலை எனக்கு ஒரு விஷயம் கற்றுக்கொடுத்தது — தனியாகப் பயணம் செய்யும் பெண்ணுக்கு எதிரி ஒரு குறிப்பிட்ட அரசியல் அமைப்பு அல்ல; தனிப்பட்ட ஆண்களின் பார்வை. அரசியல் சித்தாந்தம் எப்படி இருந்தாலும் பாதுகாப்பு இல்லை.

அதற்கு மறுநாளும் நல்ல நாளாக விடியவில்லை. இன்னும் இரண்டு மூன்று தினங்கள் இருந்தன பட்டறை முடிவதற்கு.

நள்ளிரவு. ஹோட்டல் அறையில் படுத்திருந்தேன். திடீரென்று கதவில் சாவி நுழைவதன் சத்தம். நான் உறங்கவில்லை; உறங்க முடியவில்லை. பட்டறை முடிந்த நாளிலிருந்தே ஒரு சங்கடம் இருந்தது. விடுதி மேலாளருக்கு என்னிடம் அமெரிக்க டாலர் இருப்பது தெரிந்திருந்தது. புடாபெஸ்ட்டில் அமெரிக்க டாலருக்கு நிறையக் கருப்புச் சந்தை இருந்தது அறியாமல், நானே மாற்ற வேண்டும் என மேலாளரிடம் சொல்லியிருந்தேன்.

அப்போது நான் செய்தது இதுதான் — அறையில் இருந்த நாற்காலிகளை, மேஜையை, கனமான எதையெல்லாம் கண்டேனோ அவற்றை இழுத்துக் கதவின் முன்னே அடுக்கினேன். ஒரு கோட்டை கட்டினேன். தூங்கும்போது கூட அந்தக் கோட்டையின் நடுவே படுத்தேன்.

யாரும் உள்ளே வரவில்லை. ஆனால் அந்த இரவு மிக நீண்டதாகத் தோன்றியது. கிழக்கு ஐரோப்பாவின் குளிர் ஜன்னல் வழியே வந்தது. தூக்கம் வரவில்லை. மனம் ஒரே ஒரு விஷயத்தை நினைத்தது — நாளை கிளம்ப வேண்டும்; இந்த நாட்டை விட்டுப் போக வேண்டும்.

விடிந்தவுடன் ஏர் இந்தியா அலுவலகம் சென்றேன். பட்டறை முடிவதற்கு இரண்டு நாள் முன்பே கிளம்புவதற்குச் சீட்டை மாற்றிக்கொண்டேன். அலுவலகத்தில் ஒரு சிறிய வெற்றி கிடைத்தது; விமானத்தில் இடம் கிடைத்தது. அக்கா, அண்ணன் எல்லாரும் ஐரோப்பா முழுவதும் சுற்றிப்பார்க்கக் கொடுத்த டாலர்களும் சொன்ன அறிவுரைகளும் அப்படியே இருந்தன. நல்ல உணவு இல்லாமல் பசி ஒருபக்கம், கிடைத்த அனுபவங்கள் மறுபுறம் — ஊருக்குப் போனால் போதும் எனத் தோன்றியது.

ஆனால் சின்னதொரு சிக்கல் இருந்தது. சிங்கப்பூர் பயணத்தின்போது அவசரமாகப் புதிய பாஸ்போர்ட் வாங்கியிருந்தேன். அந்த அவசரத்தில் இந்திய அலுவலகம் என் கடவுச்சீட்டைப் பதியவைக்கவில்லை. என் போட்டோ வேறு சரியாக இல்லை; முடி வேறு மாதிரி இருந்தது. அலுவலகத்தில் சரியாகச் சரிபார்க்கவில்லை. அந்தச் சிறிய தவறு இப்போது விமான நிலையத்தில் பெரிய சுவராக நின்றது.

புடாபெஸ்ட் விமான நிலையம். காவலாளி கவுண்டரில் கடவுச்சீட்டு கொடுத்தேன். அலுவலர் படத்தையும் என் முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். இன்னொருவரைக் கூப்பிட்டார்; அவரும் பார்த்தார். பிறகு என்னை ஒரு பக்கம் அழைத்துச் சென்றார்கள்.

இரண்டு ஆயுதம் ஏந்திய காவலர்கள் என் இருபுறமும் நின்றார்கள். ஹங்கேரியனில் பேசினார்கள். நான் ஆங்கிலத்தில் பேசினேன். யாரும் யாரையும் புரிந்துகொள்ளவில்லை. பட்டறையின் காகிதங்களைக் காட்டினேன்; ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. இந்தியத் தூதரகத்தின் தொலைபேசி எண்ணைக் காட்டினேன்; அவர்கள் அழைத்தார்கள். ஆனால் அது காலை 9 மணிக்குத்தான் திறக்கும். அப்போது காலை 7 மணி கூட ஆகியிருக்கவில்லை.

இரண்டு மணி நேரம். ஆயுதம் ஏந்திய இரண்டு காவலர்களுக்கு நடுவே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். தனிமை என்றால் என்ன என்று அந்த இரண்டு மணி நேரம் புரிந்தது. கடவுச்சீட்டு கையில் இல்லை — வேறொரு அலுவலரிடம் இருந்தது. சற்றே எழுந்தாலும் அழுத்திப் பிடித்து அமர்த்தி வைத்தனர்.

9 மணியாயிற்று. ஓர் அதிகாரி வந்தார். என்னைப் பார்த்தார். ஏதோ ஆச்சரியப்பட்டவர் போல் நின்றார். ஹிந்தியில் என்ன ஆயிற்று எனக் கேட்டார். நான் மெடிக்கலில் இருந்து வந்த கதையைச் சொன்னேன். அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (AIIMS) அப்போதெல்லாம் நல்ல மதிப்பு உண்டு. AIIMS என்ற மந்திரம் அவரிடம் வேலை செய்தது.

அவர் ஹங்கேரியிலும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பேசத் தெரிந்தவர். நிலைமையை விளக்கினேன். புகைப்பட வித்தியாசம், கடவுச்சீட்டு மாற்றம், பட்டறை — எல்லாவற்றையும் சொன்னேன். அவர் காவலர்களிடம் மொழிபெயர்த்தார். காகிதங்களைச் சரிபார்த்தார்கள். மெல்ல, மிகவும் மெல்ல, காவலர்கள் விலகினார்கள். என் கடவுச்சீட்டு திரும்பிக் கிடைத்தது.

அந்த அதிகாரியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அப்போது தோன்றவில்லை. ஒரு நாட்டில் நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார் என்பது எத்தனை பெரிய காப்பீடு என்று அன்று புரிந்தது.

இரண்டு மணி நேரம் தாமதமாகப் புடாபெஸ்டிலிருந்து விமானம் கிளம்பியது. வார்சா வழியாகப் புது தில்லி செல்ல வேண்டும்; நேரடி விமானம் இல்லை. வார்சாவில் விமானம் தரையிறங்கியது. அடுத்த விமானம் மறுநாள் விடிகாலை 7 மணிக்கு.

இடைப்பட்ட நேரம் நான் விமான நிலையத்திலேயே காத்திருக்கலாம் என்று நினைத்தேன். இந்திரா காந்தி விமான நிலையம் இரவு முழுக்கப் பரபரப்பாக இருக்கும்; வார்சாவும் அப்படி இருக்கும் என்று நினைத்தேன்.

நள்ளிரவில் காவலர்கள் வந்தார்கள். ஆங்கிலம் தெரியாது; ஆனால் சைகை புரிந்தது — விமான நிலையத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். கடைசி விமானமும் சென்றுவிட்டது. குளிர்காலம்; இரவின் குளிர் வேறுவிதமானது. நள்ளிரவைத் தாண்டியிருந்தது. கையில் பெட்டி — அரிஸ்டோக்ராட் என்ற வகையின் கனமான பயணப் பெட்டி.

குளிருக்கான ஆடைகளால் மேலும் கனமாக இருந்தது. சரியான காலணிகள் வேறு இல்லை. தூரத்தில் ஒரு விளக்கு தெரிந்தது. பெட்டியை எங்கையாவது தூக்கிப் போட்டுவிடலாம் போலத் தோன்றியது. ஆனால் எப்படிப் போட முடியும்? அதில் பல பொருள்கள் இருந்தன. அதை விட்டுவிட்டுப் போவது என்றால் அவற்றையும் விட வேண்டும்; மேலும் சந்தேகத்தின் பேரில் அதற்கும் காவலர்கள் தேடிக்கொண்டு வருவார்கள்.

சீரான நடைபாதை இல்லை. இரவு இருட்டில் பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தேன். நடக்க நடக்க அந்த விளக்கு அருகே வருவதாகத் தெரியவில்லை. தூரம் குறையவில்லை, கூடிக்கொண்டே செல்வது போலத் தோன்றியது. குளிர் குறையவில்லை, கூடியது.

ஒருவழியாக விளக்குகள் ஒளிர்விட்ட விடுதியை அடைந்தேன். வரவேற்பறையில் (Reception) அமர்ந்தேன். அறை வேண்டாம், பணம் செலவழிக்க வேண்டாம்; அமர்ந்திருக்க இடம் மட்டும் போதும். வரவேற்பறையில் அதை அனுமதித்தார்கள். 4 மணி நேரம் காத்திருந்தேன். விடிந்தது.

மீண்டும் பெட்டியோடு நடந்தேன். மீண்டும் பாதுகாப்புச் சோதனை (Security). மீண்டும் கடவுச்சீட்டு. இந்த முறை யாரும் நிறுத்தவில்லை. விமானம் ஏறினேன்.

புது தில்லி பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எப்போதும் இல்லாத மகிழ்ச்சி உள்ளத்தில் தோன்றியது. பன்னாட்டு விமானங்கள் தரையிறங்கும் இரவு. வீட்டுக்கு வந்தேன். யாரும் எதிர்பார்க்கவில்லை — பட்டறை சீக்கிரம் முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது.

எங்கள் வீட்டில் ஒரு ‘கோட்’ இருந்தது. கதவை மூன்று முறை தட்டுவது — அது நாம்தான் என்று சொல்லும் அடையாளம். அதன்படி கதவைத் தட்டினேன்.

உள்ளே அண்ணனின் ‘நமது கதவைத் திறக்கச் சொல்லும் சூட்சுமத்தை யாரோ தெரிந்துகொண்டுவிட்டார்கள் போல; கதவைத் திறக்காதே’ என்ற எச்சரிக்கும் குரல் கேட்டது.

நான் சத்தமாகக் குரல் கொடுத்தேன். கதவு திறந்தது.

அண்ணனைப் பார்த்தேன். ‘புடாபெஸ்டிலிருந்து ஏன் இத்தனை அவசரப்பட்டு வந்தாய், ஏன் ஐரோப்பா சுற்றுப்பயணம் செல்லவில்லை?’ என்ற கேள்விகளுக்குப் பிறகு பதில் சொல்கிறேன், ‘முதலில் சாப்பிட ஏதேனும் கொடு’ என்று அவசரப்படுத்தினேன்.

(தொடரும்)

Series Navigation<< சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 10

Author

You may also like

Leave a Comment