சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவின் டும்குரு மாவட்டத்தில் கணிசமான எண்ணிக்கையில் மயில்கள் மரணமடைந்து கிடந்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையின் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், கிழக்குக் கடற்கரைச் சாலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் காகங்களுக்கு மேல் இறந்து கிடந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இறந்த மயில்களிடமும் காகங்களிடமும் செய்யப்பட்ட பரிசோதனையில் அவற்றிற்கு “H5N1” எனும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
H5N1 எனும் இந்த வைரஸ் 1996-1997-ஆம் ஆண்டு தென்கிழக்குச் சீனப்பகுதியில் பண்ணையில் வளர்க்கப்படும் வாத்துகளில் இருந்து தோன்றி அங்கிருந்து 2005-ஆம் ஆண்டு வாக்கில் வனாந்திரப் பறவைகளுக்குப் பரவி 2022-இல் கடல்வாழ் பாலூட்டிகளுக்குப் பரவி தற்போது 2024 முதல் பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் பரவி வருகிறது. இன்புளுயன்சா வைரஸில் இரண்டு குடும்பங்கள் – ஏ வகை, பி வகை. மனிதர்களிடம் சீசனல் காய்ச்சலை ஏற்படுத்தி வரும் இன்புளுயன்சா வைரஸ்கள் (H1N1, H3N2) போன்று இது வனாந்திரப் பறவைகளிடமும் வளர்ப்புப் பறவைகள், கால்நடைகளிடமும் தொற்றை ஏற்படுத்தி வரும் இன்புளுயன்சா (H5N1) வைரஸாகும். இரண்டுமே ஏ வகை இன்புளுயன்சா வகை என்றாலும் மனிதர்களிடம் பரவும் வைரஸும் பறவைகளிடம் பரவும் வைரஸும் வெவ்வேறு வகை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த H5N1 உலகம் முழுவதும் வனாந்திரப் பறவைகளுக்குத் தொடர்ந்து பரவித் தொற்று நிலையை ஏற்படுத்தி வருகிறது. அவை மூலம் வளர்ப்புப் பறவைகளான கோழிகள், கால்நடைகளுக்கும் பரவுகிறது. H5N1 2.3.4.4b A எனும் வகையறா மிக எளிதாகப் பறவைகளிடமும் கால்நடைகளிடமும் பரவும் தன்மை கொண்டு விளங்குவதால் இந்தப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது அத்தனை எளிதன்று.
சரி.. பறவைகளுக்கு இடையே பரவும் இந்த வைரஸினால் மனிதர்களுக்கு என்ன ஆபத்து? H5N1 தொற்றுக்கு உள்ளான பறவைகள், இறந்த பறவைகள், கால்நடைகள் அவற்றின் எச்சங்கள், உடல் திரவங்கள் ஆகியவற்றுடன் பாதுகாப்பின்றி நேரடியாகத் தொடர்புகொள்ளும் மனிதர்களுக்குத் தொற்றுப் பரவல் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கறிக்கோழிகள் / முட்டையிடும் கோழிகள் வளர்க்கும் பண்ணைத் தொழிலாளர்கள், மாட்டுத் தொழுவத்தில் பணிபுரிவோர், வாத்துப் பண்ணை வைத்திருப்பவர்கள், பறவை நல ஆர்வலர்கள் என்று பலரும் நேரடியாகப் பறவைகளைத் தொடக்கூடிய இடத்தில் இருப்பவர்களுக்குத் தொற்றுப் பரவல் நடக்கும் ரிஸ்க் இருக்கிறது.
2024 முதல் தற்போது வரை அமெரிக்காவில் 71 H5N1 மனிதத் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே தொற்று கண்ட பறவைகள், கால்நடைகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இப்போது வரை இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் நிலையை அடையவில்லை என்பது நிம்மதி தரும் செய்தியாகும். எனினும், இன்புளுயன்சா வைரஸைப் பொறுத்தவரை அவை தன்னகத்தே பல சிறு மற்றும் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி உருமாறிய வைரஸாக மாற்றம் காணவல்லது.
மனிதர்களை வருடா வருடம் சீசனல் காய்ச்சல் தாக்குவதும், இந்த இன்புளுயன்சா வைரஸ் தொடர்ந்து தன்னை உருமாற்றி வருவதால்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியிருக்க பறவை இனத்தில் அதிகமாகப் பரவிக் கொண்டிருந்த இந்த வைரஸ் தன்னகத்தே பெரிய உருமாற்றத்தைக் கண்டு அங்கிருந்து பாலூட்டி இனங்கள், கால்நடைகள் என்று பரவி வருகிறது. இது இப்போது தன்னகத்தே அந்த முக்கியமான உருமாற்றத்தை அடைந்து மனிதர்களிடம் “பெருந்தொற்றாகப்” பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றே அறிவியலாளர்களின் ஒருமித்த கருத்தைத் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி 1, 2003 முதல் இன்றுவரை 25 நாடுகளைச் சேர்ந்த 1000+ மனிதர்கள் மட்டுமே தொற்று கண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே நேரடியாகத் தொற்று கண்ட பறவை/ கால்நடைகளிடம் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மனிதர்களுக்கு இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட 50% மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு H5N1-ஆல் இரண்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டன.
தொற்றுப் பரவும் முறை “தொற்று கண்ட” பறவை/ கால்நடையிடம் நேரடித் தொடர்பில் இருப்பது.
தொற்றின் அறிகுறிகள் சாதாரண காய்ச்சல் / இருமல் என்று ஆரம்பித்துத் தீவிர காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல், கண் சிவந்து போதல், வயிற்றுப்போக்கு, மூளைக்காய்ச்சல், பிதற்றல் நிலை, மூர்ச்சை நிலை வரை செல்லலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆபத்து அறிகுறிகள்
- மூச்சு விடுவதில் சிரமம்
- மூச்சுத் திணறல்
- பிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டரில் SpO2 95-க்கும் குறைவாக இருப்பது
- பிதற்றல் நிலை / மூர்ச்சை நிலை ஆகியவை இருப்பின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற வேண்டும்.
பரிசோதனை: கொரோனா வைரஸிற்குச் செய்த ஆர்டிபிசிஆர் (RTPCR) பரிசோதனை இந்த வைரஸுக்கும் உதவும். நாசிச் சளித் தடவல் / தொண்டைத் தடவல் பரிசோதனையில் ஆர்டிபிசிஆர் செய்யப்பட்டு வைரஸ் இருப்பது கண்டறியப்படும்.
சிகிச்சை & மருத்துவம் இன்புளுயன்சா ஏ வகை வைரஸுக்கு எதிராகச் செயல்படும் “ஒசல்டாமிவிர்” (OSELTAMIVIR) மற்றும் “சனாமிவிர்” (ZANAMIVIR) அறிகுறிகள் தோன்றிய 48 மணிநேரங்களுக்குள் மாத்திரை வழங்கப்பட வேண்டும். இந்த ஒசல்டாமிவிர் மாத்திரை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இருப்பு உள்ளது.
தடுப்பூசி இந்த H5N1 வைரஸ் மனிதர்களிடையே பரவும் ஆற்றலை இதுவரை பெறவில்லை என்பதால் இதற்கு எதிராக மனிதர்கள் செலுத்திக்கொள்ளும் தடுப்பூசி வழக்கத்தில் இல்லை. எனினும் H1N1, H3N2 மற்றும் பி வகை இன்புளுயன்சாவுக்கு எதிரான தடுப்பூசி வருடா வருடம் புதுப்பிக்கப்பட்டு மக்களின் உபயோகத்திற்குக் கிடைத்து வருகிறது. இந்தத் தடுப்பூசி H5N1-க்கு எதிராகச் சிறப்பாக வேலை செய்யாவிடினும் ஓரளவு பயன் தரும் என்று ஆய்வுகள் சான்றியம்புகின்றன.
நோய்ப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் எந்தெந்த விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்?
- இறந்த / இறக்கப்போகும் பறவைகளைத் தொடக்கூடாது. குறிப்பாக இறந்த காகம்/ கோழி/ நீர்க்காகம், கால்நடை உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பின்றி கையுறை அணியாமல் தொடக்கூடாது.
- உங்கள் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாகப் பறவைகள் இறந்து கிடந்தால் உடனே கால்நடைத் துறைக்குத் தெரியப்படுத்தவும்.
- பறவைகள் இறந்த இடத்தில் தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும். இறந்த சடலங்களை முறையாக எரிக்கவோ அல்லது ஆழமாகக் குழி வெட்டி அடக்கம் செய்யவோ வேண்டும்.
- கோழிப்பண்ணைகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து வனாந்திரப் பறவைகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
- பறவைகளைத் தொட்டுவிட்ட பிறகு ஏற்படும் காய்ச்சல் + சளி + இருமல் + மூச்சுத் திணறல் ஆகியவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும். உடனடியாகச் சிகிச்சை பெற வேண்டும்.
மூடநம்பிக்கை ஒழிப்பு முட்டைகள், கோழிக்கறி, கால்நடை மாமிசங்களை முறையாகச் சமைத்துச் சாப்பிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. முட்டைகளைப் பச்சையாகக் குடிக்கக் கூடாது. அரைகுறையாகச் சமைத்து முட்டைகளை உண்பதையும் தவிர்க்கலாம். பச்சைப் பால் பருகக் கூடாது. மற்றபடி கறி/ மீன் / முட்டை மாமிசம் சாப்பிடலாம். பிரச்சனை இல்லை.
முடிவுரை H5N1 என்பது பறவைகள் / கால்நடைகளிடையே மிக வேகமாகக் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பரவி வரும் வைரஸ் ஆகும். தற்போது வரை தொற்றுக்குள்ளான பறவை/ கால்நடை ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கு மட்டுமே தொற்றுப் பரவல் நிகழ்ந்துள்ளது. மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாகப் பரவவில்லை. நோய்க்கு எதிரான வைரஸ் கொல்லி மருந்து “ஒசல்டாமிவிர்” உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள், சுற்றுப்புறச் சூழல் நலனில் நமது நலனும் அடங்கியுள்ளது. இதுவே “ஒற்றை சுகாதாரம் (ONE HEALTH)” தத்துவமாகும். H5N1 குறித்து இப்போதைக்கு பீதி தேவையில்லை; விழிப்புணர்வு போதுமானது.