Home தொடர்வரலாற்றில் பொருளாதாரம் – 28

வரலாற்றில் பொருளாதாரம் – 28

by Viswanaath Thyagaraajan
0 comments

கடந்த அத்தியாயத்தில், மத மாற்றங்களும் போர்களும் வெறும் ஆன்மீகத் தளத்தில் மட்டும் நிகழவில்லை, அதன் பின்னணியில் மிக வலிமையான பொருளாதார மற்றும் வணிகக் காரணிகள் இருந்தன என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் இடையே தலக்காட்டில் நடந்த போர், தென்னிந்தியாவின் வணிகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோன்ற போர்கள் எப்படி ஒரு ராஜ்ஜியத்தின் வணிகத்தை வளப்படுத்தியதோ, அதேபோல் அந்தப் படையெடுப்புகள் அரசர்களது கடன் சுமையை அதிகப்படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மை.

தொடர்ச்சியான போர்கள், அது தக்கோலப் போராக இருந்தாலும் அல்லது தலக்காட்டுப் போராக இருந்தாலும், அவை அரசர்களின் கருவூலத்தை முற்றிலுமாகக் காலி செய்தன. சோழர்கள் தக்கோலப் போரின் இழப்பிலிருந்து மீளவே அரை நூற்றாண்டு காலம் தேவைப்பட்டது என்றால், போருக்கான செலவு எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்பதை உணரலாம்.

இப்படிப் போரினால் பொருளாதாரம் நலிவடையும்போது, அரசர்கள் உள்நாட்டு வணிகர்களிடமோ அல்லது வெளிநாட்டுச் சக்திகளிடமோ கையேந்த வேண்டிய சூழல் உருவானது. இதனை எல்லாம் வைத்துச் சோழர்கள் போர்களின் மூலம் கடனாளி ஆனார்கள் எனச் சொல்ல நம்மிடத்தில் ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் போர்களின் மூலம் பல அரசர்கள் கடனாளி ஆனார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.

பதினாறாம் நூற்றாண்டில் தனது கட்டுப்பாட்டில் பல அமெரிக்கத் தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்களை வைத்திருந்த ஸ்பானிய மன்னரான இரண்டாம் பிலிப், படையெடுத்துச் சென்று போர் புரிந்ததினால் கிட்டதட்ட பத்துமுறை, நாட்டின் வருமானத்தை விடச் செலவுகள் அதிகமாகி, ஸ்பானிய நாட்டின் பொருளாதாரம் நிதிப் பற்றாக்குறை நிலையை அடைந்தது.

இந்த நிதிப் பற்றாக்குறைக்குக் காரணமான போர்கள் எவை எனப் பார்த்தால், அது நெதர்லாந்துடனான முப்பது ஆண்டுகள் வரை நீடித்த போர், இங்கிலாந்து மீதான ஸ்பானிய ஆர்மடா போர் மற்றும் ஓட்டோமான் பேரரசுடனான முடிவில்லாத போர்கள். இந்தப் போர்களினால் அமெரிக்கச் சுரங்கங்களிலிருந்து வந்த வருமானத்தை விடச் செலவு அதிகமானதால், அந்நாட்டுப் பாரம்பரிய வங்கியாளர்களிடமிருந்து வாங்கிய கடனைத் திரும்பக் கொடுக்க முடியாத அளவு பொருளாதாரம் சீர்குலைந்தது.

அடுத்துச் சொல்லப் போகிற உதாரணம் நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், பிரெஞ்சுப் புரட்சி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பதினாறாம் லூயி தனது எதிரிநாடான இங்கிலாந்தை வீழ்த்த, அமெரிக்காவில் நடந்த புரட்சிப் போருக்கு அதிகளவில் நிதி தந்தார். ஏற்கனவே முந்தைய போர்களால் அதிகக் கடன் நிலையில் இருந்ததினால், இந்த நிதியுதவியின் மூலம் அது இன்னும் அதிகமானது. இந்தக் கடன்களைச் சமாளிக்க வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல் மக்கள் மீதான வரியை இன்னும் அதிகப்படுத்தினார்.

ஏற்கனவே அதிக வரிச் சுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மக்கள், மன்னர் அந்த வரித் தொகையை அதிகப்படுத்தியிருந்தார் என்பதைக் கேள்விப்பட்ட உடன் மக்களிடத்தில் கோபம் அதிகமானது; அந்தக் கோபத்தில் மக்கள் ஒன்று திரண்டனர். அந்த ஒன்று திரளல்தான் பிரெஞ்சுப் புரட்சியாக வளர்ந்தது.

இப்படி மேற்கத்திய நாடுகள் பலதரப்பட்ட கடன் சுமைகளில் தவித்துக் கொண்டிருந்த பொழுது, இந்தியாவின் வணிக வளமும், மேலும் அரபிய வணிகர்கள் இந்தியாவைப் பற்றிப் பரப்பிவிட்டு இருந்த கட்டுக்கதைகளும் சேர்ந்து, இந்தியாவை ஈசாப் கதைகளில் வரும் பொன் முட்டையிடும் வாத்து என மேற்கத்திய நாட்டு அரசர்களை நினைக்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை.

இப்படி மேற்கத்திய நாடுகள் நமது நிலப்பரப்பைத் தேடி வந்த பொழுது, இங்கு பெரும் ராஜ்ஜியங்கள் வீழ்ந்து நிலப்பிரபுத்துவம் தொடங்கி இருந்தது. நிலப்பிரபுத்துவம் எல்லாம் ஆங்கிலேயப் படையெடுப்புகளுக்கு முன் சிறு தடைக்கற்களாகத்தான் இருந்தன. பேரரசுகள் போன்ற பெரிய படைகள் இல்லாவிட்டாலும் சமாளிக்கக் கூடிய அளவில் நமது சிற்றரசர்களிடம் படைகள் இருந்தன. இருந்தும் அவர்கள் வீழ்த்தப்பட்டார்கள்; அப்படி வீழ்த்தப்பட்டதற்கான காரணம் ஒற்றுமையின்மை.

ஒற்றுமையின்மை வர முக்கிய காரணமாக இருந்தது என்னவென்றால், அது சமயச் சண்டைகள்தான். சமயச் சண்டைகள் என்பவை நமது தமிழ் நிலப்பரப்பில் சமணம், வைணவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்களுக்கிடையே நிகழ்ந்தவைதான். மேல் சொன்ன உதாரணங்களை வைத்து வைணவம் மற்றும் சைவம் இடையே நடந்த சமயப் போர்களை நாம் புரிந்து கொள்ளலாம்.

இராமானுஜர் குலோத்துங்க சோழனின் சமய ரீதியான அடக்குமுறைகளுக்குப் பயந்து ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறி ஹோய்சாள ராஜ்யத்திற்குச் சென்றார். அங்கு அவர் சுமார் இருபது ஆண்டுகாலம் இருந்தார். இதற்கிடையில் சோழ நாட்டில் இராமானுஜரின் வெளியேற்றம் பொருளாதாரத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை.

விவசாய நில வருவாயை அடிப்படையாகக் கொண்ட சோழ நாட்டில், இராமானுஜர் வெளியேறியபோது அவரது தலைமையில் இயங்கி வந்த கோயில்கள், மடங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளும் நிலைதடுமாறின. கடந்த அத்தியாயங்களில் வழிபாட்டு மையங்களான கோயில்கள் எப்படிப் பொருளாதார மையங்களாகச் செயல்பட்டன என்பதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். இராமானுஜரின் வெளியேற்றம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் போன்ற பகுதிகளில் இருந்த கோயில் சார்ந்த நில நிர்வாகத்தில் சிறிய தொய்வை ஏற்படுத்தியது.

அதே காலகட்டத்தில் ஹோய்சாள நாட்டில் இராமானுஜரின் வருகையால் பல பிரம்மாண்ட ஏரிகள் உருவாயின. அவை புதிய விவசாய நிலங்களை உருவாக்கப் பயன்பட்டன. புதிய விவசாய நிலங்கள் உருவாயின என்றால் புது வருமான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்று புரிந்து கொள்ளலாம்.

பண்டைய காலங்களில் வழிபாட்டு மையங்கள் பொருளாதார மையங்களாகச் செயல்பட்டன. அதுபோன்ற பொருளாதார மையமான ஸ்ரீரங்கம் கோயிலில், இராமானுஜரின் வெளியேற்றத்தால் கோயிலுக்கு வரும் நன்கொடைகள் நின்றுபோயின. மேலும் ஸ்ரீரங்கம் கோயிலைச் சார்ந்து நடந்துகொண்டிருந்த வணிகப் பரிவர்த்தனைகள் நின்றுபோயின.

அக்காலச் சோழ நாட்டில் பல வணிகக் குழுக்கள் இருந்தன. உதாரணமாகச் சைவ மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழுக்கள். இவர்கள் முக்கியமாக நில வழி வணிகம் மற்றும் கடல் வழி வணிகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். இவர்களைப் போலவே வைணவச் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய வணிகக் குழுக்களும் வைணவ-சைவச் சண்டையினால் சோழ நாட்டை விட்டு வெளியேறிப் பக்கத்து நாடுகளுக்குக் குடியேறினர். பெரும்பாலும் அது ஹோய்சாள தேசமாக இருந்தது. இவர்கள் கோயில்களுக்குப் பெரும் நிதியுதவி அளித்து வந்தனர்.

இராமானுஜர் வெளியேறிய காலம் சோழப் பேரரசின் பிற்காலமாகும். பிற்காலச் சோழர்கள் பாண்டியர்களுடனும், மேலைச் சாளுக்கியர்களுடனும் தொடர்ந்து போரிட்டு வந்தனர். போருக்கான செலவுகளைச் சமாளிக்க மக்கள் மீதும், வணிகர்கள் மீதும் அதிக வரி சோழர்கள் விதித்தனர். வணிகர்கள் என்றால் அவர்கள் மட்டும் இல்லை, அவர்களைச் சார்ந்த ஒரு பெரும் கூட்டமும் அவர்களோடு அவர்கள் மூலம் புலம்பெயர்ந்தனர். ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்தனர் என்றால், ராஜ்ஜியத்திற்கு அவர்கள் மூலம் கிடைத்த வணிக வாய்ப்புகள், அதன் மூலம் கிடைத்த வரிகளும் இல்லாமல் போகும். இதுவும் சோழ ராஜ்ஜியத்தைப் பொருளாதார ரீதியாகப் பின்னடையச் செய்தது.

சோழ நாட்டில் இருந்து வெளியேறிய கலை மற்றும் கட்டுமானத் திறன்கள் கொண்ட மக்களுக்கு, ஹோய்சாள நாட்டில் கட்டப்பட்ட பேலூர், ஹளபீடு கோயில்கள் மூலம் வேலைவாய்ப்பு உருவாகத் தொடங்கியது. இப்படியான நிலை இருந்த பொழுதிலும் சைவக் கோயில்களுக்குப் பொருளாதார ரீதியாக இரண்டாம் குலோத்துங்க சோழன் பல நன்கொடைகள் செய்தார். இந்த நன்கொடைகள் வைணவக் கோயில்களில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம்.

தொடரும்…

Author

You may also like

Leave a Comment