கர்ணன் மாவீரனா?
மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் வித்தைகளை வெளிப்படுத்துவது அல்லது வீரம் காட்டுவது என்று பொருளல்ல. ஒருவன் மாவீரன் என்பதற்கு அளவுகோல் அவனது நிலைத்தன்மை (ஆங்கிலத்தில் Consistency).
சினிமாக்களில் ஆரம்பத்தில் வலிமையாக வில்லன் இருந்தாலும், கதாநாயகன் எப்படி மன உறுதியும் உடலுறுதியுமாக எதிர்கொண்டு வெல்கிறானோ, அப்போதுதான் அவனை வீரன் என்று ஏற்கிறோம் இல்லையா?
கர்ணன் சிறந்த வீரன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவன் தன் வீரத்தை வெளிப்படுத்திய சில முக்கியத் தருணங்களை முதலில் பார்ப்போம். அஸ்தினாபுரத்தின் பயிற்சி அரங்கத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் வித்தைகளை அரங்கேற்றிய போது, அர்ஜுனன் செய்த அத்தனை வித்தைகளையும் செய்து காட்டி அனைவரையும் திகைக்க வைத்தவன் கர்ணன். பின்னாளில் துரியோதனனுக்காகத் திக்விஜயம் சென்று பல தேசத்து மன்னர்களையும் வென்று கப்பம் கட்டச் செய்தான். அதன் மூலமே துரியோதனன் வைணவ யாகம் செய்ய முடிந்தது.
மேலும், கர்ணனின் வீரத்திற்கு இன்னொரு சான்றாக அமைவது மகத நாட்டு மாமன்னன் ஜராசந்தனோடு அவன் செய்த மல்யுத்தம். வியாச பாரதத்தில் இது பெரும்பாலும் அதிகம் கவனிக்கப்படாத பகுதி. கலிங்க நாட்டு இளவரசியின் சுயம்வரத்தில் துரியோதனனுக்காக மற்ற மன்னர்களை எதிர்த்துப் போரிட்ட கர்ணன், ஜராசந்தனைத் தனித்துப் போருக்கு அழைத்தான். பின்னாளில் பீமனால் மட்டுமே வெல்லக்கூடியவனாக இருந்தவன் ஜராசந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தி பர்வத்தில் நாரதர் தருமனுக்கு இந்த நிகழ்வை விவரிக்கிறார். இருவருக்கும் நடந்த கடுமையான மல்யுத்தத்தில் கர்ணன் ஜராசந்தனைத் தோற்கடித்து, அவனை இரண்டாகப் பிளக்க முற்பட்டான். தோல்வியை ஒப்புக்கொண்ட ஜராசந்தன், கர்ணனின் வீரத்தை மெச்சி ‘மாலினி’ என்ற நகரத்தை அவனுக்குப் பரிசளித்து நட்பாக்கிக் கொண்டான். குருக்ஷேத்திரப் போரில், குந்திக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டி, தருமன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரையும் போர்க்களத்தில் தனித்தனியே வென்றபோதும் அவர்களைக் கொல்லாமல் விட்டான்.
அதே போரில் தனது பார்கவாஸ்திரத்தின் மூலம் அர்ஜுனனையே ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்தான். இவையெல்லாம் கர்ணனின் ஆற்றலைச் சந்தேகமின்றி நிறுவுகின்றன.
அப்படியானால் கர்ணன் வீரன் என்பதில் என்ன சந்தேகம் என்கிறீர்களா? கர்ணன் உண்மையில் வீரன் தான்.
ஆனால்…
அர்ஜுனனைப் போல, அபிமன்யுவைப் போல ஒரு மாவீரனுக்குரிய அசைக்க முடியாத நிலைத்தன்மை அவனிடம் இருந்ததா? இதற்கான பதிலை அவன் சந்தித்த தொடர் தோல்விகளைப் பார்த்தால் உண்மை புரியும்.
பெரும்பாலோர் கூறுவது, கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்றபோது அவனது குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. இது உண்மையல்ல. ஆதி பர்வத்தின்படி கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். இதை விரிவாகப் பின்னர் பார்ப்போம். இங்கே மாணாக்கர்களிடம் துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, கௌரவர்களின் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் புறமுதுகிட்டு வருகிறான். ஆனால் பாண்டவர்கள் ஐவராகச் சென்று துருபதனைச் சிறையெடுத்து வருகிறார்கள்.
ஆதி பர்வத்தில் இது பின்வருமாறு தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது: “…விருஷ்ணிகள், அந்தகர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளவரசர்கள் மற்றும் சூத குலத்தைச் சேர்ந்த ராதையின் மகனான கர்ணன் என அனைவரும் துரோணரின் சீடர்கள் ஆயினர். ஆனால் அவர்கள் அனைவரிலும், சூதனின் மகனான கர்ணன், பொறாமையின் காரணமாக அடிக்கடி அர்ஜுனனுக்குச் சவால் விட்டான்; துரியோதனனின் ஆதரவுடன் பாண்டவர்களை அவமதிக்கவும் செய்தான். இருப்பினும், அர்ஜுனன் ஆயுதக் கலையின் மீதான பக்தியால் எப்போதும் தனது குருவின் பக்கத்திலேயே இருந்தான்…”
அடுத்ததாகப் பாஞ்சாலி சுயம்வரத்தின் போது, வில்லை வளைத்து, திரௌபதியை வென்ற அர்ஜுனனை (அரக்கு மாளிகை எரிப்புக்கு அப்புறம் பிராமணனாக உருமாறி இருக்கும் அர்ஜுனனை) போருக்கு அழைத்து, அங்கேயும் தோற்றுத் திரும்புகிறான்.
(இங்கே முதலில் வில்லை கர்ணன் வளைக்க முயல, திரௌபதி சூதன் மகனை மணக்க மாட்டேன் எனச் சொன்னது தனிக்கதை, இதைப் பின்வரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம்.)
பாண்டவர்கள் வனத்தில் இருக்கும்போது, அவர்கள் படும் துயரைப் பார்த்துச் சந்தோஷப்பட, துரியோதனன் படை பரிவாரத்தோடு வந்து காட்டில் தங்குகிறான் (கோஷ யாத்திரை). அப்போது சித்திரசேனன் எனும் கந்தர்வன் துரியோதனனைச் சிறையெடுத்துச் செல்கிறான். கர்ணன் கந்தர்வனிடம் போரிட்டுத் தோற்று, தன் உயிரைக் காத்துக் கொள்ளக் களத்தை விட்டு ஓடிவிடுகிறான். பின்னர் துரியோதனனைக் காப்பாற்றுவது பாண்டவர்களே.
அத்தோடு போயிற்றா? விராட பர்வத்தில், ஆநிரை கவர்ந்து வந்தபோது அர்ஜுனன் ஒருவனாக அத்தனை மகாரதர்களையும் வென்று ஆநிரைகளை மீட்டுச் செல்கிறான். அங்கேயும் கர்ணன் அர்ஜுனனிடம் தோற்றுப் போகிறான். குருக்ஷேத்திரப் போரிலும் நிலைமை வேறல்ல. பதின்மூன்றாம் நாள் போரில் இளம் பாலகன் அபிமன்யுவின் அம்புகளில் தோற்று, தற்காத்துக் கொள்ளக் களம் விட்டு ஓடுகிறான்.
அந்தச் சிறுவனை நேருக்கு நேர் நின்று வெல்ல இயலாமல், பின்னின்று அம்பெய்து வில்லின் நாணை அறுத்து, வீரர்கள் செய்ய நாணும் செயலைச் செய்கிறான். இந்த நிகழ்வு ஒன்றே போதும் அவனின் அத்தனை வீரப் பிரதாபங்களையும் ஒரே நொடியில் மண்ணிலிட்டுப் புதைத்து விட.
பதினான்காம் நாள் போரில் சாத்யகியிடம் தோற்றுப் போகிறான். அதே நாளில் பீமனிடம் விற்போரில் பல முறை தோற்கிறான். பீமன் இவனுடன் போரிடும் அதே நேரத்தில் துரியோதனன் தம்பியர்களில் கால்வாசிப் பேரைக் கொன்று முடிக்கிறான். பீமனால் அன்றே கர்ணனைக் கொன்றிருக்க முடியும், அர்ஜுனனின் சபதம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால். வீழ்ந்த வீரனும், களங்கப்பட்ட தர்மமும் துரோண பர்வத்தில் இந்த நிகழ்வு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது
“…கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளால் தாக்கப்பட்டவனும் வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் இதயத்தை வேதனையால் நிறைக்கும்படி வானத்தில் எம்பி கர்ணனின் தேரின் மேல் குதித்தான். போரில் வெற்றியை விரும்பிய பீமனின் நடத்தையைக் கண்ட ராதையின் மகன் கர்ணன், தேருக்குள் ஒளிந்து கொண்டு அவனை ஏமாற்றினான்…”
நன்றாகக் கவனியுங்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தேரில் ஒளிந்துகொண்டான். அது மட்டுமா? கர்ண பர்வத்திலும் பீமனுடனான கர்ணனின் தோல்வி தொடர்கிறது.
“…பீமசேனனால் தாக்கப்பட்டவனும், உமது படைகளின் தலைவனுமான அந்தச் சூதன் மகன் கர்ணன், உணர்வற்றவனாகக் கீழே தன் தேர்தட்டில் அமர்ந்தான். அப்போது தன் உணர்வுகளை இழந்து விட்ட சூதன் மகனைக் கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன், அந்த வீரனைப் போரில் இருந்து தன் தேரில் வெளியே கொண்டு சென்றான்…”
பின்பு போரில் மறுபடி பீமனால் தோற்கடிக்கப்பட்டு மயங்கி விழுந்த கர்ணனின் நாவைக் கத்தரிக்கப் பீமன் செல்லும்போது, சல்லியனின் வேண்டுகோளால் பீமன் கர்ணனை விட்டுச் செல்கிறான்.
கலங்கிய இதயத்துடன் கர்ணன் தேர்த்தட்டில் தன்னை மறைத்துக் கொண்டதைக் கண்ட பீமன், கர்ணனின் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பூமியில் அவனுக்காகக் காத்திருந்தான். கருடன் ஒரு பாம்பைக் கவர்ந்து செல்வதைப் போலவே கர்ணனை அவனது தேரில் இருந்து கவரச் சென்ற பீமனின் அந்த முயற்சியைக் குருக்கள் (கௌரவர்கள்) மற்றும் சாரணர்கள் அனைவரும் பாராட்டினர்.
பீமன் தன் தேரை இழந்து, தன் வில்லும் வெட்டப்பட்டிருந்தாலும் ஆண்மையுடன் களத்தில் இருந்தான்.
கர்ணனைக் கொல்லாது திரும்பிய பின், தொடர்ந்து நடந்த போரில் துரியோதனனின் தம்பிகள் பலரை பீமன் கொன்று குவிக்கிறான். அந்த உக்கிரமான போரின் முடிவில், மாலை வேளையில், தொடர்ந்து போரிட்டதால் பீமன் கடுமையான சோர்வுக்குள்ளாகிறான். அவனது அம்புகளும் தீர்ந்து போகின்றன, வில்லும் முறிந்து விடுகிறது. கையில் எந்த ஆயுதமும் இன்றி, களைப்பினால் தள்ளாடியபடி பீமன் தன் தேரை நோக்கித் திரும்பிச் செல்கிறான்.
ஒரு மாவீரன் என்று தன்னைத்தானே பறைசாற்றிக் கொள்ளும் ஒருவன், போர்க்களத்தில் சாதாரண வீரனும் செய்யவே கூடாத ஒரு தரம் தாழ்ந்த செயலை கர்ணன் அங்கே செய்தான்.
நேருக்கு நேர் நின்று போர் செய்ய வேண்டிய க்ஷத்திரிய தர்மத்தை முழுமையாக மறந்து, ஆயுதமற்று, களைப்பால் திரும்பிச் செல்லும் பீமனைப் பின்தொடர்ந்து சென்று தன் தேரால் இடிக்கிறான். அதுமட்டுமன்றி, தனது வில்லின் நுனியால் பீமனின் உடலைத் தீண்டி, மிகவும் கேவலமாக அவமதிக்கிறான்.
அத்தோடு அவனது அநாகரிகம் நிற்கவில்லை. பீமனைப் பார்த்து விஷமத்தனமாகச் சிரிக்கிறான்.
“ஏய்… சாப்பாட்டு ராமனே (பெருந்தீனிக்காரனே)! நீயெல்லாம் வில் வித்தை பழக வந்துவிட்டாயா? போர்க்களத்திற்கு நீ தகுதியானவன் இல்லை. உனக்குத் தெரிந்ததெல்லாம் சமையல் செய்வதும், மாடுகளை மேய்ப்பதும், வயிற்றுக்கு நிறைய உண்பதும்தான். போய்க் காட்டில் பழங்களையும் கிழங்குகளையும் தின்று பிழைத்துக் கொள். உனக்கேன் இந்த ஆயுதம்? ஓடிவிடு!” என்று தரம்தாழ்ந்த சொற்களால் வசைபாடுகிறான். ஆயுதமில்லாத ஒரு வீரனை அவமதிப்பதும், வசைபாடுவதும் போர்க்களத்தில் பெரும் பாவம், அசிங்கமான செயல். அதையும் சற்றுகூட மனம் கூசாமல் செய்யும் வீரம் கர்ணனுக்கு மட்டுமே இருந்தது.
எல்லாவற்றையும் விட தனக்குச் சமமான எதிரி என்று அவன் கருதும் அர்ஜுனனைக் கூட களத்தில் ஒரே ஒரு முறை ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததே தவிர, கர்ணனால் அர்ஜுனனை ஒருபோதும் வெல்ல முடியவில்லை. அதனால்தான் அர்ஜுனன் விஜயன், தோல்வியை அறியாதவன். கர்ணன் நிச்சயமாக ஒரு சிறந்த வீரன் தான்; அவனது வில்லாண்மை பல நேரங்களில் உயர்ந்து நின்றது. ஆனால், ஒரு மாவீரனுக்குரிய தொடர் வெற்றிகளோ, தோல்வியறியாத தன்மையோ அவனிடம் இல்லை. மீண்டும் மீண்டும் பலரிடமும் தோற்றுப் புறமுதுகிட்ட ஒருவனை இதிகாசத்தின் அளவுகோல்படி ‘மாவீரன்’ என்று வரையறுக்க ஏதும் காரணம் இருந்தால் சொல்லுங்கள், கர்ணப்ரேமியாக மாறி நான் கேட்கத் தயார்.
(தொடரும்)