ஒரு குழந்தையின் பிறப்பில் அந்தக் குழந்தையின் காதுகளில் ‘அல்லாஹு அக்பர்’ என்று ‘பாங்கு’ ஓதுவதில் தொடங்கி, ஒரு மனிதனின் ‘ஜனாஸா’ (மரணத்திற்காக நடத்தப்படும் இறுதித் தொழுகை) முதல், ‘கபரில்’ அடக்கம் நிகழும் மரணச் சடங்குகள் வரை அச்சு அசலாக ஓர் இஸ்லாமிய வாழ்வியலைத் தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை நான் கண்டதில்லை. அந்தப் பெருமுயற்சிக்காகவே, ‘ஜஸாக்கல்லாஹல் ஹைரன்’. ( இறைவன் உங்களுக்கு நன்மையை வழங்கட்டும் ) மீரா. கதிரவன்.
இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று சில ‘வெளங்கா வெட்டி’ இயக்குநர்களும், சில ‘அரைவேக்காடு’ திரை நாயகர்களும் தமிழ்த்திரை உலகில் காலம் காலமாகக் கொச்சைப்படுத்தி வைத்திருந்ததை, இசுலாமியச் சமூகத்தின் எளிய வாழ்க்கையைப் படமாகச் சொல்லியிருப்பதன் மூலம் பெரிய சம்மட்டி வைத்து அடித்துத் தகர்த்திருக்கிறார் மீரா கதிரவன்.
ரஷ்யாவின் உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்குத் தெரியாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. அதைப் போலவேதான் இஸ்லாமியர்கள் என்றால் தொப்பி அணிவார்கள், தொழுகைக்குச் செல்வார்கள் என்பது தவிர்த்து அவர்களுக்கென்று இருக்கக்கூடிய வாழ்க்கை முறைகள், அவர்கள் குடும்பங்களுக்குள் நிகழும் அன்றாடச் சம்பவங்கள் என்று எதுவுமே தமிழ்த்திரையில் இதுவரை பதியப்பட்டதே இல்லை. ஆனால் முதன் முறையாக நெசவுத்தொழில் செய்யும் ஒரு கூட்டுக் குடும்பத்தின் அன்றாடங்களை, அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்புகளை, உரசல்களை, அன்றாட வாழ்வாதாரச் சிக்கல்களை, வலிகளை, இன்ப துன்பங்களை, சடங்குகளை, குடும்ப நிகழ்வுகளை அவர்களுக்குள் இருக்கும் முரண்களை, உறவுகளுக்குள் இருக்கும் சிடுக்குகளை எல்லாம் கூடுமானவரை மிகைத் தன்மை இல்லாமல் யதார்த்தமாக திரையில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் இயக்குநர்.
அதிலும் கூடுதலாக மண் வாசனை மிக்க நெல்லைத் தமிழில் அந்த மனிதர்களின் இயல்பான வழக்கு மொழிகள் கிளர்த்தும் உணர்வுகள் மீண்டும் பழைய காலத்திற்குள் கால இயந்திரத்தில் பயணித்தது போன்ற உணர்வைத் தந்ததென்றால் மிகை இல்லை.
‘அல்லாஹ் இருக்கிறான்’, ‘அல்லாஹ் போதுமானவன்’ என்று சொல்லிக் கொண்டு, தறி நெய்து அதன் மூலம் வரும் வருமானத்தில் கால் வயிறு கஞ்சி குடித்துக் கொண்டு வாழ்க்கையை சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று நினைக்கும் யூசுப் ; ‘அப்படி ஒரு வாழ்க்கையை எவ்வளவு காலம் தான் வாழ முடியும்? காலத்திற்கேற்றார் போல் மாறிவிட வேண்டும் என்று தன் குடும்பம் செழிக்க வேண்டும் என்பதற்காக உறவுகளைப் பிரிந்து பாலை மண்ணில் சம்பாதிக்கப் புறப்படும் யூசுபின் தம்பி என்ற இரு கதாபாத்திரங்களும், அவர்களது இணையர்களும், சகோதர, சகோதரிகளும் இருக்கும் கூட்டுக் குடும்பத்தின் வளர்ச்சியும் தளர்ச்சியும். இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊரின் பின்புலத்தை மையமாக வைத்துச் சொல்லப்பட்ட கதைக்கு முழுநியாயம் செய்திருக்கிறார்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருமே.
ஒவ்வொரு தலைமுறைக்கும் வாழ்க்கை குறித்த அனுமானங்களும், எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த பார்வைகளும் மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
அதிலும் குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் சேலை அணிந்து, தலையில் முக்காடிட்டு வாழ்ந்த அந்த அழகிய காலத்தைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இஸ்லாமிய ஆண்கள் வளைகுடா நாடுகளுக்குப் பரவலாக வேலைக்குச் சென்றதற்கு பின்னரே ‘புர்கா’ என்ற ஆடைப் பண்பாடு தமிழ்நாட்டில் புகுந்தது என்பதை மிக நுணுக்கமாக உணர்த்தி இருக்கிறார்.
மனது ஓய்ந்த வேளையில் யூசுப்பின் குடும்பச் சிக்கல்களை அவர் மனம் திறந்து பேசுவதற்கு ஓர் இந்துதான் நண்பராக இருக்கிறார். அண்ணன் தம்பி என்று உறவு கொண்டாடும் அந்த நண்பர் யூசுப்பின் மறைவின் போது, ‘கபர்ஸ்தானுக்கு’ வந்து கைப்பிடி மண்ணள்ளிப் போட்டு விட்டு கதறும் போது, “இது போன்ற இணக்கமான சகோதரத்துவத்தை வெறுப்புணர்ச்சி மூலம் இல்லாமல் செய்து விட்டார்களே பாவிகள்” என்று இந்துத்துவர்கள் மீதும் வஹாபிகள் மீதும் பெரும் கோபம் வந்தது.
யூசுபிற்கு ஓர் இந்து நண்பன் இருப்பது போல அபுதாஹிருக்கும் ஒருவன் இருப்பது போல காட்டி இருக்கலாம். ஒருவேளை இன்றைய சூழல் அப்படியாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்த முனைந்திருக்கிறாரா இயக்குநர் என்று தெரியவில்லை. ஆனால், சகோதரத்துவம் நிறைந்த ஒரு சூழலுக்கு இன்றும் வாய்ப்பிருக்கிறது என்றே ஆழமாக நம்புகிறேன் நான்.
பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் வாழ்வியலைப் பேசும் போது, மிகை உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுத்து விடுவது தான் வாடிக்கை. ஆனால், மிக முக்கியமான சூழல்களில் கூட மிகுந்த யதார்த்தத்தோடு காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் மீரா கதிரவன் என்பதே பெரும் ஆறுதலாக இருக்கிறது. ஆனால், இதனையே, “ஏம்லே இப்படிப் படத்த மெதுவா ஓட்டுதானுவோ?” என்று படத்தின் ஓட்டத்திற்குத் தடையாக இருப்பதாக தமிழ் ரசிகர்கள் கருதக்கூடும் என்பதை நினைத்தால்தான் கலக்கமாக இருக்கிறது.
படத்தில் வரும் பெண்களின் கதாபாத்திரங்கள் அவ்வளவு அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன?! . நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு விடும் பெண்களின் வாழ்க்கை முறை இன்றைய கல்வி முறையால் மேம்பட்டிருப்பதை பர்வீன் பாத்திரத்தின் மூலம் சொல்ல முயன்றிருக்கிறார். ‘ஏன் பேசலை?’ என்று கேட்கும் அந்தக் கேள்வியே போதும் இன்றைக்குப் பெண்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல.
ஆனாலும், உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி விட்டு எல்லாவற்றையும் காலி செய்வதிலும் அவர்கள் இன்னமும் சளைக்காமல் முன்னணியில்தான் இருக்கிறார்கள் என்பதையும் காட்சிப்படித்தியிருப்பதன் மூலம் இரண்டையும் சமன்செய்திருக்கிறார்.
வளைகுடாப் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் மகனை, தாயார் கண்கலங்கிப் பிரார்த்தனையோடு வழியனுப்பும் காட்சியில் என் கண்கள் நிறைந்து விட்டன. ( என் உம்மா இருந்தவரை ஒவ்வொருமுறையும் இதைச் செய்துதான் என்னை வழியனுப்பி வைத்தார்கள் )
சாச்சியாக வருபவரும் , நிலோஃபரும் , பர்வீனும் நிறைந்து நிற்கிறார்கள். அதிலும் நிலோஃபர் தாவணியில் டாலர் வைத்த தங்கச் சங்கிலியைப் பெருமையாகத் தாவணிக்கு வெளியில் இட்டுக்கொண்டு நடக்கும் அந்த அழகே அழகு.
இயக்குநர் கஸ்தூரி ராஜா யூசுபாக வாழ்ந்திருக்கிறார். ‘என்னைக் ‘கபரில்’ அடக்கிட்டு கால் குழியை மூடுங்கோ’ என்று கோபப்படும்போதும், சகோதரன் ‘சபர்’ போய் விட்டு வந்ததும் உணர்வு பொங்க அணைத்துக் கொள்ளும்போதும், மகனுக்கு நேர்ந்த சிக்கலில் கையாலாகாமல் பொருமும்போதும் தேர்ந்த நடிகராக வெளிப்பட்டிருக்கிறார்.
‘வல்லோனே வல்லோனே’ பாடல் வரிகளில் இசுலாமியப் பாடல்களுக்கேயுரிய சொற்கள் மூலம் செதுக்கியிருக்கிறார் யுகபாரதி.
சாமின் இசையும், அபாரமான சட்டகங்கள் மூலம் வெளிப்படும் தேர்ந்த ஒளிப்பதிவும் இயக்குநருக்குக் கைகொடுத்திருக்கின்றன.
வளைகுடா வாழ்க்கையில் ‘ஆடியோ கேசட்டுகளில்’ நடந்த தாம்பத்தியம் இன்று தொழில் நுட்பம் காரணமாக ‘வீடியோ கால்’கள் வழியாக நடப்பதையும் துல்லியமாக உணர்த்தியிருக்கிறார்கள்.
விமானநிலையம் செல்லும் வழியில் சாலை அடைக்கப்பட்டு மாற்று வழியில் மலையும், ‘புழ’யும் கடந்து சாலைக்கு வருவது ‘சபராளி’களின் வாழ்க்கைக் குறித்த குறியீடு. அங்கே நிலோஃபரைச் சந்திப்பது போன்ற இளைப்பாறல்கள்தான் ‘சபராளி’களின் ஒரே ஆறுதலும் கூட.
வளைகுடா வாழ்க்கையின் மூலம் தங்கள் குடும்பங்களும் சமூகம் பொருளாதார உயர்ச்சி பெறுவதற்காகத் தங்கள் வாழ்க்கையையே அடகு வைக்கும் ‘ஹபீபி'(அன்புக்குரியவர்) களுக்குப் படத்தை அர்ப்பணித்திருக்கிறார் இயக்குநர்.
இது ஒரு மீரா கதிரவன் படைப்பு என்று நிச்சயம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். வாழ்த்துகள் இயக்குநரே – மனநிறைவான ஒரு படைப்பைத் தந்ததற்கு!!