Home சினிமாதிரை விமர்சனம்

சுரேஷண்டயும் சுமலதயுடெயும் ஹ்ருதயஹாரியாய ப்ரணய கத.. சொல்லி முடிக்குறதுக்குள்ள மூச்சு முட்டுதுல்ல? ஆனால் இதுதான் படத்தின் தலைப்பே.. 

“ந்நா..தான் செந்நு கேஸ் கொடு” – திரைப்பட இயக்குநரான ரத்தீஸ் பாலகிருஷ்ணன் பொதுவாலின் கைவண்ணத்தில் அதே சமூக நையாண்டியும், அங்கதமும் நிறைந்த இன்னொரு திரைப்படம். ஆனால், அந்தப் படத்தில் பேசப்பட்ட விசயம் நேரடியாகப் பொதுமக்களைப் பாதித்தது போல இந்தப் படம் இல்லை. ஏனெனில், அந்தப்  படத்தில் சாட்சி சொல்ல ஆட்டோக்காரராக வந்த ‘சுரேஷண்டெ ப்ரேம’ கதையைத்தான் தனியாக உருவி கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். 

“இவனெல்லாம் நாயகனா?” என்று பிற திரையுலகினர் கேட்கும் உடலமைப்பைக் கொண்டவனை நாயகனாக்கி முழுப்படமும் செய்வது மலையாளத் திரையுலகுக்குப் புதிதில்லை. இந்தப் படத்திலும் வழக்கமான திரை நாயகனுக்குண்டான எந்தக் கவர்ச்சியுமற்ற ராஜேஷ் மாதவன் சுரேஷனாகக் கலக்கியிருக்கிறார். அவரது மனம் கவர்ந்த காதலி சுமலதாவாக சித்ரா நாயரும் தன் பங்கிற்குச் சிறப்பாகச் செய்திருக்கிறாரென்றாலும் படத்தில் தன் கதாபாத்திரத்தின் மூலம் அதிரடியாக வாழ்ந்திருப்பதென்னவோ சுதீஷ்தான். நாஹராக அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தானொரு பண்பட்ட ‘சீனியர்’ நடிகரென்பதை நிரூபித்திருக்கிறார்.

பாட்டும், கூத்தும் நாடகமும் அதனூடே ஓடும் சமூக நையாண்டியும் ( நாயர் என்று சொல்லாமல் நாகர் என்றழைப்பது. நாகர் குலப்பெருமை பேசுவதைக் கிண்டலடிப்பது) என்று இயக்குநர் சிற்சில அடுக்களாக விசயங்களைச் சொன்னாலுமே கூட உணர்வுபூர்வமாக ஒன்ற முடியாதபடி படம் ஆங்காங்கே வேலியில் பட்ட வேட்டியைப் போல தடங்கல் ஏற்படுத்துகிறது. அவல நகைச்சுவை சமயங்களில் அவலமாகவே முடிந்து விடும் சோகம் அது. 

படத்தில் ஒரே நேரத்தில் வெவ்வேறு வண்ணங்களில் வெவ்வேறு காலகட்டங்களைப் பிரதிபலித்திருக்கிறார்கள். சுரேஷனின் பால்ய காலக் காதல் தொட்டு, இக்காலக் காதல் வரை மாறுகின்ற கால கட்டங்களுக்கேற்ற வகையில் காட்சிகளின் வண்ணச்சேர்க்கை அழகென்றாலும் ‘சட்’டென்று வண்ணங்கள் மாறுகையில் எந்தக் கால கட்டத்தில் கதை இருக்கிறதென்பது கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. குறிப்பாகக் காதல் காட்சிகளில் , பாடல்களில் வண்ணங்கள் தொடர்ந்து மாறுவது, “காதல் ஒரு கால கட்டத்திற்குள் அடைபடாது” என்பதன் குறியீடோ என்னவோ? காட்சிகள் ‘சடசட’வென மாறும் நிலையிலும் அது கண்களுக்கு உறுத்தலாக இல்லாத விதத்தில் சிறப்பாகப் படத்தைத் தொகுத்திருக்கிறார் ஆகாஷ் தோமஸ்.

மிகச்சாதாரணமான காதல் படத்திற்கு அசாதாரணமான காட்சியமைப்புகளின் மூலம் சிக்கலை உருவாக்கியிருக்கும் திரைக்கதையை மறக்க வைக்கும்படி நேர்த்தியான ஒளியமைப்பாலும், காட்சிச் சட்டகங்களாலும், மாறுபட்ட கோணங்களாலும் மனதை அள்ளியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சபீன். 

கேரளத்தின் பிரபலமான நாடகப் பாடலின் பின்னணியிலேயே பல காட்சிகள். அது சண்டைக் காட்சியாகவே இருந்தாலும். சமயங்களில் சிரிப்பாகவும், சமயங்களில் சலிப்பாகவும் இருக்கிறது. என்றாலும் படத்தின் காட்சியமைப்புகளை உணர்ந்து இசையமைத்திருக்கிறார் டான் வின்செண்ட். 

சாமியார் வேடத்தில் அவசரமாகப் பேருந்தில் ஏறியவனைப் பார்த்து, “எங்கே பார்லிமெண்டுக்கா?” என்று கேட்கிறார் நடத்துநர். ஒரே வசனத்தில் ஒட்டுமொத்தமாக ஊமைக்குத்து விடும் கலையில் மல்லூஸ்கள் வல்லுநர்கள்தான். இதுபோல, பல இடங்களில் ஆரவாரச் சிரிப்பலைகளை உருவாக்கினாலும் படம் முழுமைக்கும் அதனைக் கொண்டு வரமுடியாமல் எங்கெங்கோ தள்ளாடுகிறது திரைக்கதை.

ஒரு எளிய காதல் கதையை லீனியராகவும், நான் லீனியராகவும் மனம் போன போக்கில் சொல்லித் தொலைத்து விட்டதைப் போல சில காட்சிகள் அமைந்திருப்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

தொழில் நுட்ப ரீதியாக பல படிகள் முன்னணியில் இருந்தாலும், படம் பார்ப்பவர்களைப் படத்தோடு முழுதாக ஒன்றுபட வைக்க முடியாததால் சலிப்பேற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

திரைப்படமென்பதே பல்வேறு விதமான கதை சொல்லும் உத்திகளின் தொகுப்புதான். பரிட்சார்த்தமான முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவைதான். ஆமாலும், இங்கே உத்தி நன்றாக இருந்தும் கதையில் ஆழமின்றிப் போனதால் உத்தி மட்டும் தொங்கிக் கொண்டு தனித்து நிற்கிறது.

“ந்நா. தான் செந்நு கேஸ் கொடு” படத்தில் இடம்பிடித்த சுரேஷன், சுமலதாவின் காதல் கதையே அவ்வளவு சிறப்பாக இருந்தது. அவர்களின் கதையை அப்படியே ரசித்து விட்டுப் போயிருந்திருக்கலாம்.

Author

  • ஆசிஃப் மீரான், வளைகுடா தமிழ்ச் சமூகம் நடத்தும் "பண்புடன்" பத்திரிகையின் ஆசிரியர்.  சமூக யதார்த்தங்கள் கொண்டு புனைவுகள் எழுதுபவர்.  'கானல் அமீரகம்' எனும் அமைப்பின் வழியே தமிழ் இலக்கியச் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துபவர்.

You may also like

Leave a Comment