அச்சமற்றவன்..

எரிமலைச்சீற்றத்திலிருந்து அதிசயமாய்த் தப்பியவன்
தன் காலணிகளிலிருந்து
சாம்பலைத் தட்டிய அக்கணத்தில்
வானம் உடைந்து
காலம் இரத்தத் துளியைப் போல் விழுகிறது
காலில் தைத்த முட்களையெல்லாம்
பூக்களாய் மாற்றுகிறான் புன்னகையுடன்

மரணத்தின் குரலில் கோபமாய் உறுமிய மிருகம்
அவனது சமையலறையில் அடங்கி
மியாவ் என்கிறது
ரசித்தவாறே
பகடியின் கூர்மையான கத்திகளால்
தனது பயத்தைக் கிழிக்கிறான் அவன்
பறவைகளாய் மாறிய அத்துண்டுகள்
மேகங்களுக்குள்
சிரித்தவாறு சிறகு விரிக்கின்றன

நாளைக்குரிய விபத்தின் தொப்பியைச்
சூட்டிக்கொண்டு
பூமி சுழலும் வேகத்தைக் குறைத்து
தன் மடியின் மீது வைத்து
ஒரு குழந்தையைப் போல் சீராட்டியவன்
காலணிகள் இல்லாமல் வெறும் கால்களால்
கலவரத்தின் இடிந்த சுவர்களுக்கிடையே
மரணத்தின் முகத்தில் சாயம் பூசிவிட்டு
மலர்ந்த முகத்தோடு
இந்த நொடியைக் கடந்து செல்கிறான்.

Author

Related posts

அசுரவதம் – பாகம் 4: அத்தியாயம் 2: மயில் இராவணன்

மருத்துவர் பக்கம் – 49: காணொளி விளையாட்டுகளின் ஆபத்தான பக்கம்.

கிறித்துவம் – புதியன புகுதலும் பழையன கழிதலும் பகுதி 1: அத்தியாயம் 7 & 8