மண்பட்ட பாவாடையோடு மண்ணிலே விளையாடினாய்
விறகடுப்பில் பூத்த புகையில் கண் சிவந்து சிரித்தாய்
இந்தக் கிராமம்தான் என் உலகம்
என் குடும்பம்தான் என் சந்தோஷம்
இந்தச் சிறு வட்டமே என் வானம்
உனக்கும் இங்குதான் இடமென்று
இத்தனை வருடங்களாய் நான் வாழ்ந்தேன்
வெளியிடம் வேறு தேசம் தெரியாமலே
என் வாசல் தாண்டிப் போகாதே என்று உள்ளம் சொல்லும்
உன்னைத் தனியாய் அனுப்ப
ஐம்பது வயதுத் தாயின் மனசு நடுங்கும்
இந்தச் சின்னக் கூண்டிலே சிறகடித்துப் பழகிவிட்டேன் நான்
நீயோ விண்ணை வெற்றிப்பெற பிறந்தவளாயிற்றே!
சட்டியோடும் பானையோடும்
அடுப்பங்கரைச் சுழற்சியில்தான் என் வாழ்க்கை போனது
பள்ளிக்குப் போனாலும் பட்டம் பெற்ற பிறகும்
அடுப்பங்கரைதான் எனக்கோர் எல்லை
நீயோ கணினி கேட்கிறாய் விண்வெளியின் கனவு சொல்கிறாய்
உன் ஆசைகளின் உயரம்தான்
என் பயத்தை ஒவ்வொரு நாளும் விழுங்குகிறது மகளே!
‘வேண்டாம்’ என்று சொல்ல என் வாய் கூசுகிறது
நான் வாழ்ந்த பழைய வேலிகள்
கண் முன்னே உடைவதுபோல் மனசு உடைகிறது
அந்த உடைவின் வலியிலும்
உனக்காக ஓர் ஆசீர்வாதம் பிறக்கிறது!
வெளியே சிறகடித்துச் செல் பட்டணம் போ
உலகம் உன்னுடையதுதான்!
நீ எடுக்கும் ஒவ்வோர் அடியும்தான் என் புதிய உலகம்
உன் பட்டமும் பதவியும்தான் இனிமேல் இந்தத் தாயின் உயிர் மூச்சு!
என் பயத்தை மூட்டைகட்டிப் பையில் போட்டு அனுப்பியிருக்கிறேன்
அது உன்னைப் பயமுறுத்த அல்ல மகளே!
உன் தாயின் இதயத் துடிப்பை அன்பின் ஆழத்தை உனக்கு உணர்த்த!
போய் வா என் மகளே!
என் கண்ணீர்த் துளிகளால் சீரமைத்த பையில்
நான் அனுப்பியிருக்கும் என் பயத்தைப் பார்
நீ உன் வெற்றிக் கதிரோடு திரும்ப வரும்போது
உன் முன்னே உன் வெற்றியைக் கண்டு
என் பயமே வெட்கிச் சிரிக்கட்டும்!
1 comment
என்னுடைய கவிதை வெளியிட்டதற்கு பண்புடன் குழுவிற்கு நன்றி.