அன்றைய மொழிபெயர்ப்புகளும், இன்றைய மொழிபெயர்ப்புகளும்

பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது.

அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும், மகளும் வந்திருந்தனர். அவர் எனக்கு அறிமுகம் இல்லை என்றாலும் அவரின் பெயர் சுவாமிநாதன், டெல்லி ஐ.ஐ.டியில் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர், அவர்தான் இந்த டி.எச்.டியின் தலைவர் என்பது எனக்குத் தெரியும்.

மறுநாள் காலை அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். என்னைப் பற்றி கேட்டதும், கொஞ்சம் தயக்கத்துடன் தமிழில் எழுதுகிறேன் என்றேன்.

“என் அண்ணாவும் எழுதுவார். நிறைய மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். வங்காளத்திலிருந்து தமிழுக்கு. ஆனால் அவர் தமிழிலிருந்து வங்காளத்தில் மொழிபெயர்த்த நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது” என்றார்.

சொல்லும்போதே, அவர் யார் என்று தெரிந்துவிட்டது. “சார்” என்று என் குரல் தளும்பியது. தன் தாய்மொழி அல்லாத வேறு ஒரு மொழியில் மொழிபெயர்த்ததற்குச் சாகித்ய அகாதமி விருது என்றால், இரு மொழிகளிலும் எவ்வளவு புலமை இருந்திருக்க வேண்டும்?

அவர்தான் வங்க மொழியிலிருந்து தமிழுக்குப் பல பொக்கிஷங்களைக் கொண்டு வந்த, மறைந்த திரு. சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். தமிழர்கள் கொண்டாடும் அதீன் பந்த்யோபாத்யாய எழுதிய ‘நீலகண்ட பறவையைத் தேடி’ என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் அல்லவா? அவர் வங்காளத்தில் மொழிபெயர்த்த தமிழ் நாவல், இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’. அதற்குத்தான் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

என்னுடைய பதினைந்து பதினாறு வயதில் தமிழில் மிகச் சிறந்த படைப்புகள் என்று சொல்லப்படும் அனைத்தையும் வாசித்து முடித்துவிட்டேன். எண்பதுகளின் ஆரம்பத்தில் சென்னை ஷெனாய் நகரில் புதியதாய்த் தொடங்கப்பட்ட மத்திய நூலகத்தின் கிளைப்பிரிவில் அத்தனையும் கிடைத்தன. யாருமே சொல்லாமல், எது சிறந்த எழுத்து என்பதை நானே தெரிந்து கொண்டேன். இப்படி கதைப் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்ததன் பலன், மிக அழகாய் என்னுடைய பிளஸ் டூ ரிசல்ட்டில் தெரிந்தது.

சரி, தமிழ்ப் புத்தகங்களை முடித்தாகிவிட்டது. அடுத்து மொழிபெயர்ப்பு நாவல்களில் இறங்கினேன். ஆரோக்கிய நிகேதனமும், நீலகண்ட பறவையைத் தேடியும், சிக்க வீர ராஜேந்திரனும், ஜெய் சோமநாத்தும், யயாதியும், செம்மீனும், வால்காவிலிருந்து கங்கை வரையும் என்னைப் பாடாய்ப்படுத்தினார்கள். நான் பாகாய் உருகினேன். அந்த நாவல்கள் தந்த வாசிப்பு அனுபவத்தை ஏன் இன்றைய மொழிபெயர்ப்பு நாவல்கள் பெரும்பாலும் தருவதில்லை என்ற கேள்வி என்றும் எனக்கு உண்டு.

சமீப காலத்தில் நான் வாங்கிய பல மொழிபெயர்ப்புகள் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரவில்லை. தொடர்ந்து வாசிக்க முடியாமல் போவதற்கு காரணம் மூலத்தின் மொழி அறியாதது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதைத் தமிழில் மொழிபெயர்க்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு வங்காள மொழிபெயர்ப்பை வாசிப்பிற்கு எடுத்தேன். நான்கு பக்கங்கள் கூட வாசிக்க முடியவில்லை. வார்த்தைகள் தேர்வு, வாக்கிய அமைப்பு எல்லாம் மிக மோசம். முன்னுரையில், மொழிபெயர்ப்பாளர், அந்த வங்க நாவலை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்த்ததாய்க் குறிப்பிட்டு இருந்தார்.

மேலே குறிப்பிட்ட திரு. சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இரு மொழியிலும் தேர்ந்தவர். ஒரு முறை, மறைந்த முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர் திரு. ஜோதி பாசு சொன்னாராம், “கிருஷ்ணமூர்த்தி பேசப் போகிறாரா? நான் எதற்கு? என்னை விட அருமையாய் கிருஷ்ணமூர்த்தி பெங்காலியில் பேசுவாரே!” என்றாராம் (திரு. சுவாமிநாதன் அவர்கள் தன் சகோதரர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழித் திறமையைப் பற்றிச் சொன்னது).

இன்று போதாக்குறைக்கு ஏ.ஐ, கூகுள் டிரான்ஸ்லேட்டர் போன்ற சாதனங்கள் மொழிபெயர்க்க உதவுகின்றன. மூலத்தின் அழகும் அருமையும் தெரியாமல் சகட்டுமேனிக்கு வந்து விழும் மொழிபெயர்ப்புகள் அலுப்பையே தருகின்றன.

சமீபத்தில் வாசித்த சில அருமையான மொழிபெயர்ப்புகள் லதா அருணாசலம் அவர்களின் மொழிபெயர்ப்பில் ‘தீக்கொன்றை மலரும் பருவம்’, கே. நல்லதம்பி மொழிபெயர்த்த ‘யாத்வஷேம்’ மற்றும் ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ ஆகியவை.

என் நினைவில் நான் வாசித்த சில மொழிபெயர்ப்புகள்:

  1. ஆரோக்கிய நிகேதனம் – வங்காளம் – தாராசங்கர் பந்த்யோபாத்யாய – தமிழில் த.நா. குமாரசாமி
  2. நீலகண்ட பறவையைத் தேடி – வங்காளம் – அதீன் பந்த்யோபாத்யாய – தமிழில் சு. கிருஷ்ணமூர்த்தி
  3. யயாதி – மராத்தி – வி.எஸ். காண்டேகர் – தமிழில் கா. ஸ்ரீ ஸ்ரீ
  4. சிக்க வீர ராஜேந்திரன் – கன்னடம் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் – தமிழில் ஹேமா ஆனந்த தீர்த்தன்
  5. வால்காவிலிருந்து கங்கை வரை – இந்தி – ராகுல சாங்கிருத்யாயன் – தமிழில் கண. முத்தையா
  6. ஜெய் சோமநாத் – இந்தி – கே.எம். முன்ஷி – தமிழில் கீழையூர் தி. சேஷாத்திரி
  7. வேர்கள்
  8. செம்மீன் – தகழி சிவசங்கரன் பிள்ளை
  9. மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர்
  10. அழிந்த பிறகு – சிவராம கரந்த்

இன்னும் பல இருக்கின்றன. “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வாக்குப்போல, பல வேற்று மொழி கலைப்படைப்புகளை நல்ல முறையில் தமிழில் அறிமுகம் செய்த அனைத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

Author

Related posts

துண்டுக் கயிறு – கீ டு மோப்பஸான்

சவத்துணி – ‘கஃபன்’ – முன்ஷி ப்ரேம்சந்த்

அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை