கொரோனா

நள்ளிரவின் கனத்த நிசப்தம். இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து உறக்கம் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. காற்றில் பரவிய அந்தக் கொடும் நோய்த்தொற்று தொண்டையை இறுக்கி, பிராணவாயுவிற்காக உடல் பதைபதைத்துத் துடித்த அந்த நாட்களின் தொடர்ச்சி இது. மூச்சுக்காகத் திணறியபோது, அதை மீட்க மருத்துவர்களால் நரம்புகளுக்குள் செலுத்தப்பட்ட அந்த ஊசியின் திரவம், இப்போது மனதிற்குள் என்னென்னவோ வித்தைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

உடலைக் காப்பாற்ற வந்தது வேறொன்றைத் திறந்துவிட்டது போலிருந்தது. உடைந்த சிதறல்களிலிருந்து ஒரு குரல் எழுந்தது.

“அவன் எவ்வளவு அமைதியாகத் தூங்குகிறான், பார்.”

அது வெளியிலிருந்து வந்ததா, உள்ளிருந்தா எனப் பகுக்க முடியாத ஒரு வெறுமை.

“உனக்கெப்படித் தெரியும்? அவன் தூங்குவதோ, அமைதியாக இருப்பதோ நிஜமா என்ன?”

என்று இருளிலிருந்து கசிந்தது இன்னொரு குரல்.

“நீங்கள் யார்?” என்ற மூன்றாவது கேள்வியும் என்னிலிருந்தே தான் முளைத்தது.

“நாங்களா… நாங்கள்தான் அவன். இதோ, நீங்களும்தான்…” ஒன்றான இருப்பு இப்படித் தனித்தனியாகப் பிரிந்து வேடிக்கை பார்க்கிறது. முகத்தின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் இந்தச் செயற்கையான சுவாச முகமூடி அவனுக்கு எதற்கு, அதைக் கழற்றிவிடலாமே என்ற வாதம் அவர்களுக்குள் எழுந்தது.

மூக்கின் மேல் அது கனமாக அமர்ந்திருந்தது. ஏற்கனவே என் மூக்கு பெரியது. இப்போது எது முகமூடி, எது மூக்கு என்று கூடப் பிரித்தறிய முடியவில்லை.

மூக்கின் மீது கனக்கும் அந்த நெகிழிச் சிறை யாருக்குத்தான் பிடிக்கும்?

சட்டென்று விழிப்புத் தட்டி, நெஞ்சுக்குழிக்குள் ஏதோவொரு பயம் சுருண்டது. என்னருகில் அமர்ந்து கொண்டு எனக்குள்ளேயே யார் பேசிக் கொள்வது? யாருடைய கட்டளை இது? கண்ணிமைகளைச் சிரமப்பட்டுத் திறந்தேன்.

அந்த அகால வேளையில், அறையின் சூனியத்தில் நான் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தேன்.

“சத்தமாகப் பேசிவிட்டாய், அவன் எழுந்துவிட்டான்,” என்ற முணுமுணுப்பு மீண்டும் கேட்டது.

“யார் நீ?” என்று நான் என்னை நோக்கியே கேட்டுக்கொண்டேன்.

“நான்தான் நீ,” என்றது அந்த நிழல் குரல். நானே நீயென்றால், அந்த ‘என்றது’ யார்? ஒருவித மயக்க நிலை. இருப்பிற்கும் இல்லாமைக்கும் இடையிலான தவிப்பு. யாராகவோ இருந்துவிட்டுப் போங்கள், இந்த இருளில் உங்களுக்கு என்ன வேலை? என்று இருளோடு மல்லுக்கட்டினேன்.

அவர்கள் என்னைக் கேலி செய்வது போல் உணர்ந்தேன். உன் உடம்பை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், முகமூடியைக் கழற்றவா? என்றார்கள்.

‘வேண்டாம், என் இருப்பை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் விலகுங்கள்’ என்று நான் என்னிடமே மன்றாடிக்கொண்டிருந்தேன்.

மீண்டும் அதே வாதம். நானே நீ. நீயே நான். அந்தச் சுற்றலே சலிப்பாக இருந்தது.

இது என் உடல். இதன் மீதான அதிகாரம் எனக்கு மட்டுமே என்ற பிடிவாதம் எழ எழ, அந்த மாயக் குரல்களின் அடர்த்தி குறையத் தொடங்கியது. இந்தச் சூனியத்திலிருந்து தப்பிக்க, ஆழத்திலிருந்து ‘ஓம்’ என்னும் ஒலியை ஒரு நங்கூரம்போல் பற்றிக்கொண்டேன். அந்த நாதம் உள்மனதின் இருண்ட குகைக்குள் ஒலிக்க ஒலிக்க, அலைபாய்ந்த மனதின் சிதறல்கள் மெல்ல ஒன்றுகூடி அடங்கின.

அந்த அரூப நோயும், மூச்சைக் காக்க ஏறிய ஊசிகளும் உருவாக்கிய மாயை மெல்ல விலகிக் கொண்டிருந்தது. இருப்பு மீண்டும் தன் பழைய எல்லைக்குள் சுருங்கி, முகமூடிக்குள் ஒடுங்கிய தன் மூச்சுக்காற்றின் கதகதப்பில் உறக்கத்தின் மடியில் அமைதியாக வீழ்ந்தது.

ஆனால் உறங்கிக் கொண்டிருப்பது நான் மட்டும்தானா? அது மட்டும் தெரியாமலிருக்கிறது.

Author

Related posts

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை

மருத்துவர் பக்கம் – 28: எபோலாவும் சிகிச்சையும்

சிரிக்கும் இதயம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி