சிறார் இலக்கியம் – மொழிபெயர்ப்பு: கடைசி ஆசை (ஆப்பிரிக்க நாட்டுப்புறக்கதை)

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஞா.கலையரசி

முன்னொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலவர்களும், இசைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதும், பாடல்களை ரசிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. எல்லோரையும் விட மகமூத் என்பவரை அரசருக்கு மிகவும் பிடித்து இருந்தது.

மகமூத் நகைச்சுவை நிரம்பிய கதைகளைச் சொல்வார். நன்றாக நடனம் ஆடுவார். அவரால் அரசரைச் சிரிக்க வைக்க முடிந்தது. அதனால் அவரை எல்லோரும் அரசரின் விகடகவி என்று அழைத்தார்கள்.

அரசருக்கு அவரிடம் பிடிக்காத விஷயம் ஒன்று இருந்தது. மகமூத் எக்கச்சக்கமாகச் சாப்பிடுவார். காலையிலிருந்து இரவு வரைக்கும் எதையாவது தின்று கொண்டே இருப்பார். “அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் மகமூத் பாவம்; சீக்கிரம் இறந்துவிடுவார்” என்று அரசர் நினைத்தார்.

எனவே, ஒரு நாள் அரசர் மந்திரிகளையும், வேலைக்காரர்களையும் கூப்பிட்டார். “ஒரு நாள் முழுக்க மகமூத்துக்கு எதுவும் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. திராட்சை ரசமோ, பழமோ, கறியோ எதுவும் கொடுக்கக் கூடாது. ஒரே ஒரு ரொட்டித் துண்டு கூட கொடுக்கக் கூடாது. நாளைக்கு அவர் என்னுடன் உணவு மேசையில் உட்காரக் கூடாது” என்று உத்தரவிட்டார் அரசர்.

“அப்படியே செய்கிறோம் அரசே! நீங்கள் சொல்வது சரிதான். அவர் மிகவும் குண்டாகத்தான் இருக்கிறார்” என்றார் மந்திரி. எனவே மறுநாள் மகமூதுக்கு அரசரின் உணவு மேசையில் இடம் ஒதுக்கவில்லை.

அதைக் கவனித்த மகமூத், ‘நான் காத்திருப்பேன். எனக்கு வேலைக்காரர்கள் சாப்பாடு கொண்டு வருவார்கள்’ என்று நினைத்தார். ஆனால் அவர்கள் எதையும் கொண்டு வரவில்லை. அரசரிடம் பயம் இருந்ததால் அவர் யாரிடமும் சாப்பாடு கொண்டு வரச் சொல்லிக் கேட்கவில்லை. ‘எவனாவது அரசரைக் கோபப்படுத்தினால் அவன் சாக வேண்டியதுதான்’ என்று அவர் நினைத்தார்.

அவருக்குப் பசி தாங்க முடியவில்லை. அப்போது ஒரு வேலைக்காரர் வழியில் ஒரு ரொட்டித்துண்டைக் கீழே தவறவிட்டார். மகமூத் அந்த ரொட்டித்துண்டை உடனே எடுத்து வைத்துக் கொண்டார். ‘நல்லவேளை! ஒரு ரொட்டித் துண்டு கிடைத்தது. அரசர் என்னைப் பார்க்காத சமயம் இதைச் சாப்பிடலாம்’ என்று அவர் நினைத்தார்.

அரசர் சாப்பிட்டு முடிந்தவுடன் புலவர்கள் அவர்களுடைய கவிதைகளை வாசித்தார்கள். இசைக் கலைஞர்கள் பாடல்களைப் பாடினார்கள். பெண்கள் நடனம் ஆடினார்கள். ‘அரசர் இப்போது நடனத்தைத் தான் பார்க்கிறார். இந்தச் சமயத்தில் ரொட்டித் துண்டைச் சாப்பிடலாம்’ என்று மகமூத் நினைத்தார். ஆனால் அரசரோ ஒரு கணமும் விடாமல் அவரைக் கவனித்துக் கொண்டே இருந்தார்.

அரசர் பாட்டை நிறுத்தச் சொல்லிவிட்டு மகமூத்தைக் கூப்பிட்டார். “நீர் ஒரு கழுதை வைத்திருந்தீர் என்று கேள்விப்பட்டேன். எங்கே அதை வாங்கினீர்?” என்று கேட்டார். “திரிபோலி என்ற இடத்தில் வாங்கினேன் அரசே” என்றார் அவர். “ஓ! அப்படியா?” என்றார் அரசர்.

மீண்டும் பாடலும் நடனமும் ஆரம்பமானது. மகமூத் அந்த ரொட்டித்துண்டைச் சாப்பிட நினைத்தார். ஆனால் அரசரோ மீண்டும் அவரை அருகில் அழைத்து, “அந்தக் கழுதைக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்?” என்று கேட்டார்.

மகமூத் அவசரமாக ரொட்டித் துண்டைப் பையில் வைத்துவிட்டு “16 தங்க நாணயம் கொடுத்து வாங்கினேன் அரசே” என்றார். ஒவ்வொரு முறையும் அந்த ரொட்டித் துண்டை அவர் சாப்பிட நினைத்த போது அரசர் ஒரு கேள்வியைக் கேட்டார்.

ஒருவழியாக மாலை வந்து விட்டது. அவரால் நிற்கவே முடியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. மிகவும் களைப்படைந்துவிட்டார். அரசருக்கு இரவு உணவும் முடிந்தது. மகமூத் அடுப்பங்கரைக்கு ஓடினார். ஆனால் கதவு மூடப்பட்டிருந்தது. அவரிடம் ஒரே ஒரு சின்ன ரொட்டித் துண்டு மட்டுமே இருந்தது.

அதை மட்டும் தின்றுவிட்டு அறைக்குச் சென்றார். பசி தாங்கவில்லை. அவரால் தூங்க முடியவில்லை. அவர் அரசரின் அறைக்கு ஓடிச் சென்று கதவைத் தட்டினார். “யார் இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது?” அரசர் கோபமாகக் கேட்டார்.

“அரசே! மன்னிக்க வேண்டும். நான் என் கழுதையை டிரிபோலியில் வாங்கவில்லை. பெங்காழி என்ற இடத்தில் தான் வாங்கினேன்” என்றார் மகமூத். “சரி, நல்லது. நீர் போகலாம்” என்றார் அரசர்.

சில நிமிடம் கழித்து மகமூத் மீண்டும் அரசரின் அறைக் கதவைத் தட்டினார். “அரசே! இன்று மதியம் உங்களிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன். நான் கழுதைக்கு 16 தங்க நாணயம் கொடுக்கவில்லை. 20 கொடுத்து வாங்கினேன்” என்றார்.

“முட்டாளே! இந்த மாதிரி கழுதைக் கதை எல்லாம் இப்போது வந்து சொல்லிக் கொண்டு இருந்தால், உன் தலையை வெட்டி நரிக்குப் போட்டு விடுவேன்” என்றார் அரசர் கோபமாக.

அரசர் சொன்னதைக் கேட்ட மகமூத், “தெரியும் அரசே! ஆனால் நான் சாவதற்கு முன் என் கடைசி ஆசையைச் சொல்லலாமா? ஒரே ஒரு ஆசை தான்!”

“உன் கடைசி ஆசை என்ன?” என்றார் அரசர்.

“இன்று இரவு நன்றாகச் சாப்பிட வேண்டும்; அது தான் என் கடைசி ஆசை” என்றார் மகமூத்.

அரசருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவர் வேலை ஆட்களைக் கூப்பிட்டு அவருக்குச் சாப்பாடு கொண்டு வரச் சொன்னார். உணவு மேசையில் மகமூத் கூடவே உட்கார்ந்தார். விடியும் வரை அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர். அதற்குப் பிறகு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

Author

  • ஞா. கலையரசி: காரைக்காலில் பிறந்து, தற்போது புதுச்சேரியில் வசிக்கின்றார். பாரத ஸ்டேட் வங்கியில் சீனியர் எழுத்தராகப் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின் எழுத்தை ஆர்வத்துடன் தொடர்ந்துகொண்டிருப்பவர். 16க்கும் மேற்பட்ட நூல்களைஎ ழுதி உள்ளவர். சிறுவர்களின் வாசிப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், 'சுட்டி உலகம்' வலைத்தளத்தை 2021ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

Related posts

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)

வலைப்பூ – 4

ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்