பனிவிழும் வனங்களிடை நிதானித்தபோது – ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை

தமிழாக்கம்: பவளமணி பிரகாசம்

இராபர்ட் புரொஸ்ட் (Robert Frost, 1874 – 1963) அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார்.  ஆங்கிலக்கவிஞரான இவர், இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். முதல் நூலான ஒரு சிறுவனின் தீர்மானம் 1913 இல் வெளிவந்தது. 'பொஸ்ரனின் வடபுறம்' (1914), மலை இடைவெளி (1916) முதலிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். 

யாருடைய வனங்களிவையென நானறிவேன்
அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலே
அவன் வனங்கள் பனியால் நிரம்புவதை
நான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான்

ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்
வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்
பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்
என்றெனது சின்னக்குதிரை வியக்குது

சுகமாய் உலாவும் காற்றும் பனித்துகளும் மட்டும்
எழுப்புகிற ஒலியோடு இணைந்த சப்தமாய்
தன் கழுத்து மணிகளை அசைத்தொலித்து
தவறேதும் நிகழ்ந்ததோ என கேட்கிறது

வனங்களோ அழகு இருண்டிருக்கு நீண்டிருக்கு
ஆயின் கடமைகள் என்னை அழைக்குது
காதங்கள் கடக்கவேண்டும் கண்மூடும் முன்
காதங்கள் கடக்கவேண்டும் கண்மூடும் முன்.

Author

Related posts

மொழிபெயர்ப்புக்கவிதைகள் – சந்திரா மனோகரன்

பானு முஷ்டாக்கின் ”ஹார்ட் லேம்ப் – தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்” – நூல் விமர்சனம்

துண்டுக் கயிறு – கீ டு மோப்பஸான்