Home நாவல்அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்

அசுரவதம்: 15 – உருமாறும் இரு மான்கள்

by Iyappan Krishnan
0 comments
This entry is part 15 of 15 in the series அசுரவதம்

கர-தூஷணர்களின் தாயான இராகா, இலக்குவனைச் சுட்டிக்காட்டி “உனக்கான மிகப்பெரிய தடையைப் பார்” என்றாள். விச்ரவஸ் முனிவருக்கும் அவளுக்கும் பிறந்தவர்களே கரனும் தூஷணனும். மகன்களின் அழிவுக்குப் பழிவாங்க, அவள் இப்போது இராவணனின் வருகையைச் சாதகமாக்கிக் கொண்டாள். கைகேசியின் தங்கையும் இராவணனின் சிற்றன்னையுமான இராகா.

​இராவணன் இராகா சுட்டிக் காட்சிய திசையில் மீண்டும் பார்த்தான்.

அவன் கண்களை, அங்கே காவலுக்கு  நின்றிருந்த இலக்குவனையும் மீறி சீதையின் அழகு வெகுவாகக் கவர்ந்தது.

அந்த அடர்ந்த தண்டகாரண்யத்தின் மரங்கள், கரும் பச்சை நிறத்தில் எழுந்து வானைத் தொடும் வகையில் நின்றது, முனிவர்களின் ஓமகுண்டத்தில் இருந்து எழும்பிய   யாகப் புகை போல இருக்க, இவள் இருந்த இடம் அதிலிருந்து சற்று   விலகி சமதளத்தில் வடிவமைக்கப்பட்ட குடில்கள் நடுவே இருந்தது.   அவள் மீது மெல்லிய சூரிய ஒளி பொன்னாடை போர்த்தியது போல நின்றிருந்தாள். 

தூரத்தில் இருந்து பார்க்கும் அவனுக்கு, அவள்  யாராலும் எழுத முடியாத அற்புத  ஓவியம் போலவும், எந்த முனிவனாலும் செய்துவிட முடியாத  ஒரு தவத்தின் பலன்  போலவும் காட்சி அளித்தாள்.

​அந்தப் பின்னணியில் ஒரு மங்காத ஒளிப்புள்ளியாகத் தெரிந்தாள் சீதை.  எப்போதும் அடர்ந்த இருளைக் கொண்டிருக்கும் அந்தக் காட்டில் , அவள் நின்ற இடம் மட்டும், விவரிக்க முடியாத ஒரு பொன்னொளியை மெல்லியதாகப் பரப்பியது. அது ஒரு பளிங்குக் கூண்டுக்குள் அவள் இருப்பதைப்போல ஓர் உணர்வை ஏற்படுத்தியது.

​அவள் அணிந்திருந்தது மரவுரிதான் என்றாலும், அந்த ஆடை சலசலக்கும்போதும், காற்றின் அசைவில் மிதக்கும் போதும், அது அரசப் பட்டுக்குச் சற்றும் குறையாத ஒரு தேவ ஆடைப் பொலிவுடன் மின்னியது. அந்த எளிமையான உடை, அவள் மேனியின் தங்க நிறத்தை மறைக்காமல், மேலும் மெருகூட்டிக் காட்டியது. தூரத்தில் இருந்து பார்க்கையில், அந்தச் சலனமற்ற காட்சியின் நடுவே, மெல்லியதாய் அசைந்தாடும் கன்னற் கரும்புப் போல அவள் உடல் மெலிந்து, இளமையின் வனப்புடன் நின்றது.

​அவளுடைய கூந்தல், பின்னல்களற்று, காற்றின் வேகத்திற்குக் கட்டுப்பட்டு, தோள்கள் மீது சற்றே விலகி, அடர்ந்த கார்மேகம்  இளமதியை மூடி இருப்பது  போல இருந்தது. அந்தச் செறிவான கருமை, அவளுடைய முகத்தின் தெளிந்த தாமரையின் வனப்பை  மேலும் உயர்த்திக் காட்டியது.

​அவள் முகத்தில் துயரத்தின் ரேகைகளோ, சஞ்சலத்தின் சாயல்களோ இருக்கவில்லை. இராமன் சென்ற திசையை நோக்கி ஆவலுடன் பார்த்திருந்தாள்.   அவள் முகத்தில் குழந்தைத் தனமும், நிலவு வந்து  உறைந்த அமைதியும், கடல் கொண்ட பொறுமையும் குடியிருந்தன.

இராவணனுக்கு, அவள் அசைவற்ற ஒரு தவச் சிலையின் வடிவமாகக் காட்சியளித்தாள். யாரும் சட்டென அருகில் சென்று பேசத் தயங்கும் ஒரு தெய்வீகப் பயம், அவள் ஒளியிலிருந்து எழுந்து, பார்ப்பவர் மனதிலும் தொற்றிக்கொள்ளும்.

அவள் இந்த மண்ணைச் சேராதவளாக இருந்தாலும், இந்த வனத்தின் அழகையெல்லாம் தன்னுள்ளே ஈர்த்து, அதற்கும் மேலான ஒரு பரிபூரண அழகை வெளிப்படுத்துபவள் என்பது  இராவணனுக்குப் புலப்பட்டது.

 அந்தக் காட்டிற்குள் புகுந்த ஒவ்வொரு விலங்கும், பறவையும், ஏன்… அங்கு ஓடிய ஆற்றின் நீர்கூட, அவளைக் கடந்து செல்லும்போது, ஒரு கணம் ஸ்தம்பித்து, வணங்கிச் செல்வது போலத் தெரிந்தது அவனுக்கு.

​அவள், தனிமையில் நின்றாலும், அண்டத்தின் மொத்த சக்தியையும், அழகையும் தன்னுடன் தாங்கி நின்றாள். அவள் தண்டகாரண்யத்தின் ராணி அல்ல, அவள் தருமத்தின் உயிர்ப்பாக அங்கே உறைந்து நின்றாள். அவள் அங்கிருந்து விலகிச் சென்றால், அந்த இடம் மீண்டும் வெறும் நிழலும் மரமுமாய் மாறிவிடும். அதுவரை, அந்த அடர்ந்த சோலையின் ஒரே விளக்காகவும், விடியலாகவும் அவள் மட்டுமே இருந்தாள்.

இராவணை இராகாவைப் பார்த்து  “இவளைப் போன்ற பேரழகி இந்த மண்ணில் இனிப் பிறக்கப்போவதில்லை.  இவள் இலங்கைக்கு அரசியானால்தான் நமக்குப் பெருமை” என்றான் இராவணன். அவன் கண்களில் காமம் பொங்கி வழிந்தது.

” சூர்ப்பனகை சொன்னபோதும் கூட இவளின் அழகு இத்தகையது என்று என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.  நீங்களே சொல்லுங்கள், இவளின் அழகை முழுமையாகச் சொல்லிவிட யாரால் முடியும்!” என்றான், தன் இரு கைகளையும் அழுந்தப் பிடித்துக் கொண்டும் அடிக்கடி உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டும்  தன்வசமிழந்த நிலையில் இருந்த இராவணன்.

இராகாவிற்கு இராவணன் நிலை துல்லியமாகப் புரிந்துவிட்டது. இனி அவன் வழியிலேயே சென்று தன் காரியத்தை முடிக்க நினைத்தாள்.  தன் இரு மகன்களையும் கொன்ற இராமனைப் பழிவாங்க, இவனைத் தவிர யாராலும் முடியாது என நம்பினாள்.  

“நீ சொல்வது முற்றிலும் உண்மை மகனே இராவணா.  ஆனால், உனக்கான தடையாக அந்த இலக்குவன் நிற்கிறான் பார்.  அவனிருக்கும்போது சீதையைக் கவர்வதும் எளிதல்ல.  இராமனின் வீரமும் இலக்குவனின் வீரமும் இணையானது.  அதை நான் நன்கு அறிவேன்” என்றாள்.

“மேலும், நீ கவனித்தாயா தெரியவில்லை. மாரீசனின் உடல்மொழியை.  அவனால் இராமனுக்கு உண்மை வெளிப்பட்டால், நீ சீதையை அடைய கடும் போர் புரிய வேண்டி இருக்கும்.. அது பல ஆண்டுகளும் நடக்கக்கூடும்.  ம்ம்ம்.. அது வரைக்கும் சீதை….”

இராவணன் ராகாவின் பேச்சைக் கேட்டு, சற்று சுயநிலைக்குத் திரும்பத் தொடங்கினான்.  

” அதுவரைக்கும்.. சீதை என்ன செய்வாள்… “. 

” அவள் ஒன்றும் செய்யமாட்டாள் இராவணா, ஆனால் நீதான் அவளைப் பார்த்த மோகத்தில் அவள் நினைவோடு சண்டை இடுவாய்.  அதுவே உன்னை பலவீனமாக்கும். அவளை அடைவதை மேலும் மேலும் தாமதமாக்கும்” என்றாள்  விஷமமாய் சிரித்தபடி.

இராவணனுக்குத் தன் நிலை புரிந்தது.  தன் சிற்றன்னை தன்னைப் பார்த்து, கேலி செய்து நகைக்கிறாள் என்பதை உணர்ந்து சற்று நாணமடைந்தான்.  

அந்த நேரத்தில் பரபரப்பாக காட்டின் வேறோர் திசையைச் சுட்டிக் காட்டினாள்.  அந்த மலையின் உச்சி தண்டகாரண்யத்தின் அனைத்துப் பகுதிகளையும் காணும் வகையில் உயர்ந்திருந்தது மிகவும் உதவியது அவர்களுக்கு

“அங்கே பார் இராவணா, மாரீசன் தன் மாய மான் உருவத்தில் இருந்து விடுபடுகிறான்.. அவன் முழு வடிவம் அடைந்து உண்மையைச் சொல்லிவிட்டால்… “

என்று நிறுத்தினாள் ராகா.

இராவணன் அங்கே உற்றுப்பார்த்தான்.  மாரீசன் தன் சுய உருவை அடைய முயல்வதைக் கண்டான்.  அவன் உடல் இன்னும் மானின் உடலாக இருந்தாலும், அவன் முகமும் தோள்களும்  அரக்கர்களின் உருப்பெற ஆரம்பித்திருந்தது.

“ஆம் அன்னையே, இது ஆபத்து. அவன் துரோகியாக மாறுவான் என எதிர்பார்க்கவில்லை.. இதோ அவன் அழிவு என் கையால் உறுதி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இராகா விருட்டென்று அந்த வனாந்திரத்தைக் நோக்கி அதிவிரைவில் செல்வதைக் கவனித்தான்.  அவள் கைகள், குளம்புகள் கொண்ட மான் கால்கள் போல மாறி பளபளக்க,   அவள் உடல் மெல்ல மெல்ல  மாரீசன் கொண்ட மாய மான் வடிவத்தைப் போல மாறிக் கொண்டிருந்தது.

அங்கே தன் மாய உருவத்தில் இருந்து விடுபட்டுக் கொண்டிருந்த மாரீசனை இராமன் பார்த்தான். 

அவன் விழிகள் சினத்தின் தீயைப் பொழிந்தன.

“இருமுறை உன் பிழை பொறுத்தேன், இனி பொறுப்பதற்கில்லை” என இராமன் தன் வில்லெடுத்து அம்பை எய்தான்.  முழுவதும் உருமாறாத நிலையில் தான் சொல்ல வந்ததையும் சொல்ல இயலாமல் மாரீசன் மெல்ல மெல்ல தன் உடல் அடங்கக் கீழே வீழ்ந்தான்.  “இராமா… இராமா..”  என்று ஏதோ சொல்ல வந்து முடிக்காமல்  உண்மையைச் சுமந்துக் கொண்டு அவன்  உயிர் பிரிந்தது.  

இராமன் பஞ்சவடியை நோக்கித் திரும்பி நடக்கும் போது  பின்னால் எழுந்த சலசலப்பினால்  திரும்பிப் பார்த்தான்.  அங்கே மீண்டும் அந்த  மாயமான் நின்று கொண்டு இருந்தது, மாரீசனின் உடல் இருந்த இடத்தை விட்டு சற்று தூரத்தில். 

இராமன்  குழப்பத்துடன் நின்றான். 

Series Navigation<< அசுரவதம்: 14 – மாயமான், மா எமன்!

Author

You may also like

Leave a Comment