இராமன் குழப்பத்துடன் நின்றான்.
இப்போது தன் முன் நிற்கும் இந்த மான், தான் அழித்த மானேதானா? அல்லது மாரீசனின் மாய மான் வேட்டை முடிவுக்கு வந்த பின்பும், இந்த வனத்தில் வேறொரு தங்க மான் இருந்ததா? தான் எய்த அஸ்திரத்தின் வலிமைக்கு, இந்த மான் இப்படி உயிர் பிழைத்து வந்து மீண்டும் காட்சி தருவது சாத்தியமே இல்லை.
குழப்பத்தில் ஆழ்ந்த இராமன், மாரீசனை அழித்த இடத்தில் மெல்லிய புகை போன்ற ஒரு அரக்கனின் சாயல் தெரிவதைக் கண்டான். அங்கு சென்று அந்த உடலைக் காலால் எத்தினான். இராமனின் கால் பட்டு வெகுதூரம் கடலில் சென்று முத்துக்களாக அவன் உடல் மாறி வீழ்ந்தது. (மொரீசியஸ் தீவின் நாட்டுப்புறக் கதைப்படி, அந்த முத்துக்களே இன்றைய மொரீசியஸ் தீவாக உருவாகி உள்ளன)
மாரீசனின் உடல் இருந்த அந்த இடத்தையும், இப்போது புதிதாகத் தோன்றிய மானையும் மாறி மாறிப் பார்த்தான்.
”இதுவும் மாயைதானோ?. மாயைதான். வேறெப்படி இருக்க முடியும்” என்று யோசித்தவாறே, இராமன் தன் வில்லை மீண்டும் நாணேற்றினான். ஒருமுறை ஏமாந்தவன், மறுமுறை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
மாய மான் வடிவில் இருந்த இராகா, இராமனின் சினத்தைக் கண்டாள். தான் இங்கு அதிக நேரம் இருந்தால் இராமனால் நிச்சயம் கொல்லப்படுவோம் என்று உணர்ந்தாள். அவள் இங்கே வந்த நோக்கம், மாரீசனைப் போல ஒரு மாற்றுப் பிரதியாக நின்று, இராமனை மீண்டும் குடிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதுதான். அதன் மூலம் இராமன் குடிலுக்குத் திரும்புதல் தாமதமாக வேண்டும் என்பதே அவள் நோக்கம். ஆகவே அவள் இராமன் அம்பை எய்யும் முன், அதிவேகமாகத் தன் திசையை மாற்றினாள். இராமனுக்கு நேர் எதிர்த் திசையிலிருந்து, பஞ்சவடியின் குடிலுக்கு வெகுதூரம் செல்லும் வழியைத் தேர்வு செய்து காற்றின் வேகத்தில் ஓடினாள்.
”குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டும் என் வேலை அல்ல. இவனைக் குடிலுக்குப் போக விடாமல் தடுத்து, இவன் மனம் கலங்க வேண்டும்” என்று நினைத்தவாறே, இராகா அந்த அடர்ந்த வனத்தில் மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தாள், மீண்டும் அவன் கண் முன்னே தோன்றினாள்.
இராமன் இனி பொறுப்பதில்லை என்று மானின் காலைக் குறி பார்த்து எய்தான். இந்த மான் எந்த அரக்க மாயை என்று கண்டுகொள்ளவும், அதன் பின்னிருக்கும் உண்மையை அறிவதற்காகவும் அதைக் கொல்லாமல் காலை மட்டும் சேதப் படுத்தினான்.
இராமனின் அம்பு தாக்கியதாலும், நெடுந்தூரம் ஓடிய களைப்பாலும், வயோதிகத்தாலும், மாயை மெல்ல மெல்ல வலுவிழக்க, இராகா அந்தப் பொன்மானின் உருவிலேயே ஒரு தடாகத்தில் வீழ்ந்தாள்.
அவள் தன் இறுதி மூச்சை விடுவதற்கு முன், அவளின் மாய மான் உருவம் கலைந்து, அவளது அரக்க உருவம் வெளிப்பட்டது. கால்களில் ரத்தம் கொப்பளிக்க வீழ்ந்த அவளது கண்களும் இரத்தச் சிவப்பேற்றன சினத்தால்.
தன் கண் முன்னால் நடக்கும் இந்த விபரீத நாடகத்தைப் பார்த்து இராமன் திகைத்து நின்றான்.
“யார் நீ? எதற்காக இந்த நாடகம்? ஏன் இந்த மாயை?” என்று சினத்துடன் இராமன் வினவ ஆரம்பித்தான்.
இராகா தன் நாவிலிருந்து கொடிய விஷத்தைக் கக்குவது போலப் பேசினாள்.
“கோசல நாட்டின் இளவரசா! ஓ ராமா, என் மைந்தர்கள் கர-தூஷணர்களைக் கொன்ற நீ, இப்போதும் என்னையும் கொன்றுவிட்டாய்! நீ ஏற்கனவே தாடகை என்ற பெண்ணைக் கொன்றவன்தானே. பெண்களைக் கொல்வது உனக்குப் புதியதில்லை” என்றாள் இகழ்ச்சியாக.
“பெண்ணே, நான் உன்னைக் கொல்ல அம்பெய்யவில்லை. உன் காலை மட்டுமே சேதப்படுத்தினேன்.. அதுவும் நீ யார் என்பதை அறிவதற்காக.. மேலும்..” எனத்தொடர்ந்த இராமனை இடைமறித்தாள் இராகா.
“விளக்கம் எனக்குத் தேவையில்லை இராமா. இரு மகன்களை இழந்த ஒரு தாயின் பழி உன்னை விடாது! உன்னைப் பழிவாங்கும் சக்தி நான் மட்டுமல்ல .. மாபெரும் ஆபத்து உன்னைச் சூழ்ந்துவிட்டது. ஆம் .. அது உன்னை விடாது.. ஹஹஹா ஹஹஹா …”
என்று உரத்த குரலில் காடதிரச் சிரித்தாள். பின் மெல்ல மெல்ல அடங்கினாள். அவள் உடல் தடாகத்தின் ஆழத்தில் புதைந்தது.
இராமன் செய்வதறியாமலும், நடப்பதன் பின்னணி புரியாமலும் இருந்தான். மேலும் குடிலை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை உணர்ந்த இராமன், ஏதோ விபரீதம் சூழவிருக்கிறது என்பதை உணர்ந்து, விரைவாகக் குடிலுக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, பஞ்சவடியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினான்.
அதே நேரம், இலக்குவன் அகலாமல் காவலுக்கு நின்றதைக் கண்டு இராவணன் சற்றே சினமடைந்தான். அவனுடன் போரிடலாமா? என யோசித்தவன் இலக்குவனை ஆராய்ந்தான்.
இலக்குவனின் உடல், செதுக்கிய சிலையைப் போல உறுதியுடன் விளங்கியதைக் கண்டான். இலக்குவன் அங்கே எப்போதும் வில்லைத் தயார் நிலையில் வைத்து, பஞ்சவடியின் நிலையான காவலாளியாக நின்றான். அவனது தோள்கள் அஞ்சாமைக்கும் கடமைக்கும் சான்றாக விரிந்திருந்தன. கூர்மையும் தார்மீகச் சினமும் நிறைந்த அவனது கண்கள், எத்தகைய மாயையும் ஊடுருவிப் பார்க்கும் தீட்சண்யம் கொண்டிருந்தன. துறவாடையிலும் அவன் ஒரு போர்வீரனின் கம்பீரத்தை வெளிப்படுத்தினான். அவன் நின்றால், அந்த இடம் தருமத்தின் எல்லைக்கோடு போல இருந்தது. அவனது வீரம், அன்பின் ஆழத்தையும், அண்ணனின் மீதான பக்தியையும் அடித்தளமாகக் கொண்டிருந்தது. அவன் வெறும் வீரன் அல்லன், விசுவாசத்தின் அடையாளம் என்பதையும், அவனை எதிர்த்துப் போரிட்டால் வெற்றி தோல்வி தெரிய பல காலம் பிடிக்கும் என்பதையும், அதே நேரத்தில் இராமனும் திரும்பிவிட்டால், தன் எண்ணம் பலிக்காமல் போகக்கூடும் என்றும் இராவணன் பலமாக யோசித்தான்.
அப்போது திடீரென இராகாவின் பெருத்த சிரிப்பொலி கேட்டு அந்த மலை உச்சியில் நின்று இராகா சென்ற திசையில் கவனம் செலுத்தியவனுக்குப் பேரதிர்ச்சியாக இராகாவின் இறந்த உடல் தென்பட்டது. கூடவே இராமன் வேகமாகக் குடிலை நோக்கித் திரும்பி வருவதையும் கண்டான்.
குடிலில் இருந்த சீதைக்கும் இலக்குவனனுக்கும் கூட அந்தச் சிரிப்பொலி தெளிவாகக் கேட்டது. இலக்குவன் அந்தச் சிரிப்பைக் கூர்ந்து கவனித்தான். அதில் மரணத்தின் சாயல் இருப்பதை உணர்ந்தான்.
ஆனால் சீதை பயந்தாள்.
“மகனே இலக்குவா.. இது என்ன சிரிப்பு, என்னைப் பயத்துக்குள்ளாக்குகிறது. என் ஸ்வாமிக்கு ஏதும் பிரச்சினையா?” என்றாள்.
இலக்குவன் தெளிவாகவும் நிதானமாகவும் சொன்னான்.
“அன்னையே.. இது மரணத்தின் விளிம்பில் இருக்கும் அரக்கக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் சிரிப்பு. அண்ணனின் அம்பால் வதை செய்யப்பட்ட ஒருவரின் மாயச் சிரிப்பு. நம் கவனத்தைச் சிதறடிக்கும் நோக்கம் இது. கவலை வேண்டாம்” என்றான்.
சீதை அரை மனதாக இராமன் சென்ற திசையில் கவனத்தை வைத்துக் காத்திருந்தாள்.
இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அவள் சூர்ப்பனகை. இராவணன் இலங்கையை விட்டு வந்தது முதல் அவன் அறியாமல் அவனைப் பின் தொடர்ந்து வருகிறாள். மாரீசனின் மரணம், இராகாவின் மரணம் இரண்டுமே சீதையை இராவணன் கவர்வதற்கு உதவவில்லை என்பதைக் கண்ட அவள், தன் நோக்கம் பாழாவதைக் கண்டு சினந்தாள்.
இராகா இறந்த தடாகத்தின் பக்கத்தில் இருந்த வானுயர்ந்த மரத்தின் உச்சியில் யாரும் காணாத வகையில் மறைந்து அனைத்தையும் கண்ட அவள்.. இப்போது ஒரு புதிய உத்தியைக் கையாண்டாள்.
இராமன் குடிலுக்குச் செல்ல இன்னும் இரண்டு அல்லது மூன்று நாழிகையாவது ஆகும். அதே நேரம் இலக்குவன் அங்கிருந்தால் இராவணன் சீதையைக் கவர முடியாது.. ஆகவே, இலக்குவனையும் இந்த இடத்தை நோக்கி வர வைப்பதே சரியான செயல் என்று தீர்மானித்தாள்.
தன் குரலை மாற்றி அந்த மரத்தின் உச்சியில் நின்று பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.
“ஓ சீதா…. ஓ இலக்குவா…”
அது சாட்சாத் இராமனின் குரலைப் போலவே ஒலித்தது.