தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, நடுப்பகலின் வெய்யில் தாக்கத்தில் பளீரென மின்னுவது போல ஒளிர்ந்திருந்தது. அந்த ஒளி இலக்குவனின் ஆணையை ஏற்று யாரும் அருகில் வர வேண்டாம் என்று எச்சரிப்பது போல பார்ப்பவரின் கண்கள் கூசும் வண்ணத்தில் இருந்தது. கோதாவரியின் அலைகளும் கூட , சூரிய ஒளியை மீண்டும் மீண்டும் உள்வாங்கி வெளிப்படுத்தி, இந்த இடம் பாதுகாப்புக்கு உட்பட்டது, எச்சரிக்கை என்பது போல அலையாடின. காட்டின் மரங்கள் அரணாக இருக்க, இலக்குவன் வரைந்த கோடுகள் கண்ணுக்குப் புலப்படாத அரணாக நின்றன.
யாரும் அறியாமல் நெருப்பு நாக்குகள், பாம்புகளைப் போலச் சீறி, குடிலைச் சுற்றி ஒரு மந்திர வட்டத்தை உருவாக்கின.
சீதை, குடிலின் உள்ளே தனிமையில் நின்றாள். அவள் கண்கள், இராமன் சென்ற திசையை நோக்கி ஆவலுடன் பார்த்தன, ஆனால் அவள் இதயம், அச்சத்தாலும் சந்தேகத்தாலும் கலங்கியிருந்தது. ராகாவின் மரணச் சிரிப்பு, காட்டில் மெல்லிய எதிரொலியாகக் கேட்டு, அவளை நடுங்க வைத்திருந்தது. பின் வந்த இராமனின் குரல் சாயல் அவளை அடியோடு நிலைகுலையச் செய்திருந்ததால் அவள் தன் நிலை இழந்து இராமனைத் தேடி இலக்குவன் ஓடிக் கொண்டிருப்பதை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தான் சொன்ன வார்த்தைகள் இலக்குவனை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை அவள் எண்ணி வருந்தினாள்.
“மன்னித்துவிடு மகனே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. உன்னை விட அவரைக் காக்கும் சக்தி வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை” என்று மனதுக்குள் குமைந்தாள்.
அதே நேரம் வழக்கமாக மான்கள் துள்ளி ஓடும் போதும், வேறு விலங்குகள் செல்லும்போதும் அவை இன்ன இன்ன விலங்குகள் என ஓசை மூலம் சொல்லத் தெரிந்த சீதைக்கு, வெளியே அந்நியர் கால் தடங்கள் எழுப்பும் ஓசையைக் கூட அவளால் உணரமுடியவில்லை.
“தாயே, பசியுடன் வந்திருக்கிறேன். ஏதும் பிச்சையிடுங்கள்” என்று வந்த கரகரப்பான குரல் அவளை அசைத்து சுயநிலைக்குத் திருப்பியது.
வெளியே ஒரு தவசியின் கமண்டல அசைவின் ஒலியுடன், ஒரு முனிவர் உருவம் தோன்றியது. அவன் காவி உடை அணிந்து, தாடி மீசையால் முகம் மூடப்பட்டு, கையில் தண்டமும், கமண்டலமும் ஏந்தியிருந்தான். அவன் குரல், ஒரு பழைய முனிவரின் தளர்ந்த தொனியில் ஒலித்தது. சீதை, குடிலின் வாசலில் நின்று, மீண்டும் ஏறெடுத்து அந்த உருவத்தைப் பார்த்தாள்.
“தாயே! புண்ணியமே வடிவானவளே! பசியுடன் இருக்கும் இந்த ஏழைத் துறவிக்குப் பிச்சை இடுங்கள். பிச்சை கேட்பது என் தர்மம். பிச்சை இடுவது குலமகளிரின் தர்மம். உங்களின் தர்மத்தைக் காக்கவே இங்கே நான் வந்துள்ளேன்.” என்றார் அந்த முனிவர். மனம் கலங்கிய நிலையில் இருந்த சீதையால் அந்த முனிவரின் கண்களில் நிறைந்திருந்த கபடத்தை அறிய முடியவில்லை.
“தாயே, உங்களின் நிறைந்த மங்களத் தோற்றம் என்றும் நிலைத்திருக்கட்டும். எங்களைப் போன்ற தவசிகளின் ஆசி உன் கணவனின் ஆயுளைக் கூட்டும். உச்சி வேளை, பசி வாட்டுகிறது. பிச்சை இடுங்கள் அம்மா..” என்றான் அந்தக் கபட முனிவன்.
இந்த அடர்ந்த காட்டில் இராமனின் குடிலுக்கு வந்து ‘பசி’ என்று சொல்லிவிட்டு இதுவரை யாரும் வெறும் வயிற்றோடு திரும்பியவர்கள் இல்லை. மேலும் அந்தக் கடைசி வாக்கியம் சீதையைச் சற்று அசைத்துவிட்டது. பசி என வந்தோர்க்கு இல்லை என்று சொல்லாதவள், இந்த வார்த்தைகளால் மனம் நெகிழ்ந்து போனாள்.
‘ஆம்.. தருமம் என் கணவரைக் காக்கும்’ என்று மனதுக்குள் சொல்லியபடி, “சற்றுப் பொறுங்கள்” என்று துறவியிடம் கூறியபடி குடிலின் உள்ளே சென்றாள்.
அவள் திரும்பி உள்ளே சென்ற அந்த நேரம், கபட முனிவனும் பின் செல்ல முயன்றான்.
இலக்குவன் இட்ட கோட்டைக் கால்கள் தாண்ட முயன்ற போது வெடுக்கென்று தன் காலைப் பின் இழுத்தான்.
நெருப்பில் காய்ச்சப்பட்ட ஆயிரம் ஊசிகளால் குத்தியது போலவும், கொடும் நஞ்சு கொண்ட பாம்புகள் ஒரே நேரத்தில் கொத்தியது போலவும் உணர்ந்தான்.
மீண்டும் தாண்ட முயன்ற போது முன்னை விட அதிக வீரியத்துடன் அந்தக் கோடுகளில் இருந்து ஏதோ ஒன்று தன்னைத் தாக்குவதை உணர்ந்தான், சினந்தான். ‘அற்ப மானிடர்களுக்கு இவ்வளவு வலிமை எங்கிருந்து வந்தது!’ என்று சற்று அயர்ந்தான். இந்த மாயக் கோட்டை அழிக்க தனக்குக் கால அவகாசம் தேவைப்படும், அதற்குள் இராம இலக்குவர்கள் திரும்பிவிட்டால் தன் செயலின் தாமதம் அதிகரிக்கும் என்பதை அவன் மனம் உணர்த்தியது.
“அம்மா, வெயிலின் கடுமை அதிகம், இந்த வனத்தின் கொடுமை நீங்கள் அறியாதது அல்ல. ஆகவே, விரைந்து பிச்சை கொண்டு வாருங்கள்” என்றான் அந்த இராவண சந்நியாசி.
“வந்துவிட்டேன் ஐயா … இதோ வந்துவிட்டேன்.. தங்கள் பாத்திரம் நீட்டி இந்த உணவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.. தயவு செய்து” என்றபடி கோட்டுக்கு அந்தப் பக்கமாய் நின்றாள் சீதை.
ஒருவரை ஒருவர் தொடும் தூரத்திற்கு அப்பால் அவள் நின்றிருந்தாள். இலக்குவனிட்ட கோடுகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டடி தூரமாவது விலகி இருக்க இந்தக் கோட்டைத் தாண்டி சீதை வெளியே வராமல் காரியம் நடக்காது என்பதை உணர்ந்த இராவணன்
“அம்மா, அடியேன் அந்தணன். கடும் தவ விரதம் பூண்டவன். குலமகளிர் வாழும் குடிலுக்குள்ளோ அல்லது அதன் அருகிலோ வருவது தவறு. நான் இங்கேயே நிற்கிறேன். நீங்கள் இங்கு வந்து பிச்சை இடுங்கள்” என்றான்.
“மன்னிக்க வேண்டும் ஐயா, நான் அங்கு வர இயலாது.. என் மகன் இலக்குவன் இட்ட கட்டளை. பாருங்கள் மூன்று கோடுகள், அவை எனக்கான பாதுகாப்பு வளையங்கள். நீங்கள் இங்கு வருவதே சரி” என்றாள் சீதை.
இராவணன் யோசித்தான். இவள் மனதில் இயல்பான பாதுகாப்பு உணர்வும், இலக்குவனால் உருவாக்கப்பட்ட எச்சரிக்கை உணர்வும் இருப்பதால் இவள் எளிதில் இந்தக் கோடுகளைத் தாண்டி வரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டான். இவளின் இந்தச் சிந்தனையைக் கலைத்து, அவளைத் தானாகவே இந்தக் கோடுகளைத் தாண்ட வைப்பது தான் சரியான செயல் என்று, அதற்கான முறையில் வஞ்சகமாகப் பேச ஆரம்பித்தான்.
“அடடா.. அடடா.. நன்றாக இருக்கிறது உங்கள் தர்மம். ஒரு பிச்சை கேட்கும் சந்நியாசியை, உச்சி வெய்யிலில் நிறுத்தச் சொல்லி இருக்கிறானா உன் மகன்? எவ்வளவு இரக்கமற்றவன் அவன். அவனே அப்படியானால் உன் கணவனும் இரக்கமற்றவனாகத்தான் இருக்க வேண்டும்” என்றான் குரலில் கோபம் தெரியும்படி.
“மன்னிக்க வேண்டும். நீங்கள் சன்னியாசி என்பதால் என் கணவரையோ, என் மகனுக்கு நிகரான இலக்குவனையோ தவறாகப் பேசுவதை அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் வந்து பிச்சை வாங்கிச் செல்லுங்கள்.. இல்லாவிட்டால் ..” என்று சீதையும் சீற்றம் கொண்ட குரலில் பேச ஆரம்பித்தாள்.
இராவணன் மகிழ்ந்தான். அவள் மெல்ல மெல்ல பாதுகாப்பு உணர்வுகளை, அதற்கான எண்ணங்களை விட்டு, தன்மான உணர்ச்சிகளின் தாக்கத்தினுள்ளே வருகிறாள். இதையே தொடர வேண்டும் என உணர்ந்து தொடர்ந்தான்.
“கோபிக்க வேண்டாம் அம்மா. முதலில் மகன் என்றீர்கள், இப்போது மகனை ஒத்தவன் என்கிறீர்கள். தாங்கள் யார், உங்கள் கதை என்ன.. உங்களைப் பார்த்தால் இந்தப் பெருங்காட்டுக்கு சம்பந்தமில்லாத.. ஆனால் பேரரசின் இளவரசியாகத் தான் தெரிகிறது. ஒரு வேளை… உலகமே போற்றும் ஜனகரின் … இருக்காது இருக்காது.. ஜனகரின் மகளுக்கு ஏன் இந்தக் காட்டில் வாழும் நிலை வரப்போகிறது.. நீங்கள் யார் அம்மா?” என்றான் வெகு நைச்சியமாக.
தந்தையின் பெயர் கேட்டதும் சீதை உள்ளம் நெகிழ்ந்தாள்.
“ஐயா, என் தந்தைதான் ஜனக மகாராஜா, நான் தசரதச் சக்கரவர்த்தியின் மூத்த மருமகள். இலக்குவன் என் மகனைப் போன்றவன், என் கணவரின் இளைவவன். விதிவசத்தால் நாங்கள் இந்தக் காட்டில் இருக்கிறோம். இதோ பதின்மூன்று வருடங்கள் முடியப் போகின்றன. இன்னும் சில காலம்தான். விடியலின் வெளிச்சம் சற்றுத் தூரம்தான்”
இராவணன் தன் சூழ்ச்சி வேலை செய்வதைக் கண்டான். சீதை பேசிக் கொண்டே தன்னையும் அறியாது முதல் கோட்டினைத் தாண்டி இருந்ததை மகிழ்வுடன் கவனித்தான்.
“ஓ.. தசரதன் மகன் இராமன்தான் உன் கணவனா! அந்தப் பொல்லாதவன், பெண்களிடம் வீரத்தைக் காட்டுபவன் என்றல்லவா ஊரெல்லாம் பேச்சு. போயும் போயும் அவன் தம்பி இலக்குவனுக்கா இவ்வளவு பயம்?”
சீதையின் கண்கள் கோபத்தில் சிவந்தன.
“நாவடக்கம் தேவை முனிவரே.. நாவடக்கம் தேவை. என் கணவரைக் குறித்தோ, என் மகனைக் குறித்தோ ஏதும் பேசினால்… சொல்லாலே உம்மைச் சுட்டெரித்துவிடுவேன்”
அவளின் கோபம் அதிகரிக்க, அந்தக் கபட முனிவனை எச்சரிக்கும் வேகத்தில் இரண்டாம் கோட்டையும் கடந்துவிட்டிருந்தாள். அதை இராவணன் கவனித்தான். தன் வார்த்தைகளின் வலையை இன்னும் இறுக்கினான்.
“அடடா!.. கோபம் கொள்ளாதே அம்மா. ஊரில் பேசிக் கொள்வதைத்தான் நான் சொன்னேன் .. என் மீது நீ கோபம் கொண்டால் நான் என்ன செய்வேன்.. ஜனக மகாராஜா யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாத உத்தமர். தசரதச் சக்கரவர்த்தி கூட பெரும் தர்மவான் .. அவர் மட்டுமல்ல அந்த வம்சமே அப்படித்தான் எனக் கேள்விப்பட்டேன்.. ம்..ம்.. என் கெட்ட நேரம் பசி வாட்டினாலும், பிச்சை இட உங்களுக்கு மனமில்லை. இப்படியே பேசிக் கொண்டிருந்தால், அடுத்த குடிலிலும் உணவு கிடைக்காது.. நான் வருகிறேன். பசித்த வயிற்றின் சாபம், உன் கணவனைப் பீடிக்கட்டும்.. ஒரு வேளை பசியால் என் உயிர் பிரிந்தால்.. அந்தப் பாவமும் உங்கள் வம்சத்தைப் பீடிக்கட்டும்” என்று கோபமாகச் சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் இராவணன்.
தந்தையைப் பற்றி பேசியதாலும், தன் அயோத்தியின் குலத்தைப் பற்றிப் பேசியதாலும் அவள் மான உணர்ச்சிகளின் தாக்கத்தில், பாதுகாப்பு உணர்வை அறவே மறந்து போயிருந்தாள்.
“ஐயா, பிச்சை தயாராகவே இருக்கிறது. வாங்கிச் செல்லுங்கள். தவறாகப் பேசியிருந்தால் மன்னியுங்கள். எங்கள் குலம் என்றும் வறியோர்க்கு இல்லை என்றும் சொல்லாத குலமாகவே இருக்கும். என்னாலும் அந்தப் பெயர் காப்பாற்றப்படும்.. அதில் சந்தேகம் வேண்டாம்” என்றாள். இப்போது அவள் மூன்றாவது கோட்டிற்கு வெளியே நின்றிருந்தாள்.
“மகிழ்ச்சி அம்மா.. மிக்க மகிழ்ச்சி” என்றான் இராவணன், பிச்சைப் பாத்திரத்தை நீட்டியபடி.
பிச்சையிட வந்த சீதை அதிர்ந்தாள். தான் கண்ட முனிவரின் உருவம் இல்லை இப்போது.
பிச்சைப் பாத்திரத்தை நீட்டிக் கொண்டிருந்த அந்தப் பழைய முனிவரின் தளர்ந்த உருவம், ஒரு நொடியில் தன் தோலை உரித்துக் கொண்ட நாகம் போல மாறியது. காவி உடை சிதறியது; தாடி மீசையால் மறைந்திருந்த முகம் மின்னல் வேகத்தில் மாற்றமடைந்தது. நீள் இருளைத் தாங்கி வந்த ஒரு மகா சக்தியின் வெளிப்பாடு போல, அவன் தன் சுயரூபம் கொண்டான்.
முனிவனின் உடல் விரிந்து விஸ்வரூபம் கொண்டது. காவி உடை கிழிந்து, பத்து தலைகள் ஆகாயத்தை நோக்க, இருபது கரங்கள் கோரப் பிடியுடன் சுழல, அவன் தன் பெயருக்கே உரிய இராவணனாக நின்றான்.
அந்த உருவ மாற்றம் கண்ட சீதை, பிச்சை இட நீட்டிய கரம் நடுங்க, அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவளது கண்கள், கண்ட காட்சியை நம்ப முடியாமல், அந்தப் பேரழிவின் வடிவத்தைப் பார்த்தன. முனிவனின் முதிர்ந்த புன்னகை, இராவணனின் கொடூரமான நகைப்பாக மாறியிருந்தது. அந்தச் சிரிப்பின் ஓசை, மரங்களை வேரோடு சாய்ப்பது போல, தண்டகாரண்யம் முழுவதும் எதிரொலித்தது.
அந்த உருவம் அவளின் கூந்தலை ஒரு கையால் பற்றியபடி சிரித்தது.. அச்சத்தால் சீதை உறைந்து நின்றாள்.
மரத்தின் உச்சியில் மறைந்து, அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த சூர்ப்பனகை, தூரத்தில் இராமனும் இலக்குவனும் நெருங்குவதைக் கண்டாள். இராவணனின் சிரிப்புக் கேட்டு இருவரும் அதிர்ந்ததைக் கண்டாள்.. தன் சூழ்ச்சி இனி தானே நினைத்தாலும் முறியடிக்க முடியாத அளவுக்குச் சென்றதை அவள் உணர்ந்துவிட்டாள்.
வெற்றிக் களிப்பையும் மீறி அவள் நெஞ்சில் லேசான துக்கம் எழுந்தது. தன் பழி தீர்க்க, பலி என மாறும் சீதையை எண்ணி அவள் மனம் கலங்கியது. மனதுக்குள் இரண்டாம் முறையாக சீதையிடம் மன்னிப்புக் கேட்டாள்.
“மன்னித்து விடு சீதை, எனக்கு வேறு வழி தெரியவில்லை”.
1 comment