அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)

This entry is part 23 of 23 in the series அசுரவதம்

மதங்கமலையின் அந்திப் பொழுது, ஒரு தேர்ந்த ஓவியனின் தூரிகையில் நனைந்த பட்டாடையைப் போலச் செந்நிறமும் கார்மேகக் கருமையும் கலந்து காட்சியளித்தது. பம்பா நதியின் சலசலப்பு, ஒரு வீணையின் தந்தி மீட்டும் நாதத்தைப் போலக் காற்றில் மிதந்து வந்தது. அந்த நதியின் கரையில் இருந்த மலையின் உச்சியில், காலத்தின் சுவடுகளைத் தாங்கி நின்ற மதங்க முனிவரின் ஆசிரமம், யாகத்தின் ஓசைகள் நிறைந்து இருந்தாலும், சிரமணா எதிர்நோக்கிய அமைதியைக் காட்டி, “வா மகளே வா” என இரு கரம் கொண்டு அழைப்பது போலத் திகழ்ந்தது.

மதங்க மாமுனியின் ஆசிரமத்தை நோக்கி, வேடுவக் குலத்தின் வீரமும் ஒரு மங்கையின் மென்மையும் கொண்ட சிரமணா நடந்து கொண்டிருந்தாள். அவளது உடையும் தோற்றமும் அந்த இடத்திற்குச் சற்றும் ஒவ்வாது இருந்தன. மரவுரி தரித்து வந்திருந்தாலும், அவள் அந்த உடைக்குப் புதியவள் என்பதை அவள் அணிந்திருந்த விதம் பளிச்சென்று கட்டியம் கூறியது.

அவளது தேக்கு மர நிறத்து மேனியில் வழிந்த வியர்வைத் துளிகள், மாலை நிலவொளியில் நனைந்த முத்துக்களைப் போல மின்னின. அவளது கண்கள், அச்சம் அறியாத காட்டு மானின் கண்களைப் போலப் பெரியதாக, மிரட்சியும் அதே சமயம் ஒருவிதக் காந்த ஈர்ப்பும் கொண்டிருந்தன. அவளது புருவங்கள், மன்மதனின் வில்லைப் போல வளைந்து, நெற்றியில் வழியும் வியர்வைத் துளிகளைத் தடுத்து நிறுத்தின.

அவள் அணிந்திருந்த மரவுரி அவளது இடையழகை மட்டுமல்ல, அவளிடம் விம்மி எழுந்த முழு அழகையும் மறைக்கப் போராடித் தோற்றுப் போயிருந்தது. அவளது ஒவ்வொரு அசைவும், அந்த ஆசிரமச் சூழலின் அமைதியைக் கலைக்கும் ஒரு அழகிய கவிதை போல இருந்தது.

அவளது இடையில் கட்டப்பட்டிருந்த குறுவாள், அவளது வீரப் பின்னணியைப் பறைசாற்றியது. ஆனால், அவளது கண்களில் இருந்த தேடலோ, ஒரு ஞானியின் அமைதியை வேண்டி நின்றது. அந்தக் கண்களில் ஏக்கத்தோடு அவள் அங்கே பல ஆசிரமங்களைக் கண்டாள்.

சிரமணா ஒரு ஆசிரமத்தின் அருகே வந்தபோது, அங்கே மந்திரங்களின் ஓசை எங்கும் நிரம்பி இருக்க, யாக சாலையிலிருந்து எழுந்த அகிலுடன் சந்தனத்தின் புகையும், நெய்யின் நறுமணமும் அவளது நாசியைத் துளைத்தன. பல முனிவர்கள் அவள் வருகையைக் கண்டாலும், பொருட்படுத்தாது தங்கள் வேலைகளைத் தொடர்ந்தனர்.

ஆனால், அந்தத் தெய்வீகச் சூழலைச் சிதைப்பது போல, சில முனிகுமாரர்களின் ஏளனச் சிரிப்பு எழுந்தது.

“யாரது? இந்தத் தூய்மையான யாக பூமியில் இழிகுலத்து வேடுவச்சியா?” என்ற இளைஞனின் குரல் வெண்கல மணி போல ஒலித்தது. சிரமணா நிமிர்ந்து பார்த்தாள். எதிரே நின்றிருந்த ஒரு முனிகுமாரனின் கண்கள் அனலைக் கக்கின.

“உனது பாதங்கள் பட்டாலே இந்தத் தரை அசுத்தமாகி விடுமே! வேட்டையாடி உதிரம் சிந்தும் குலத்தில் பிறந்த உனக்கு, வேத ஒலிகள் இசைக்கும் இந்த இடத்தில் என்ன வேலை? உடனே வெளியேறு!”

அவனது சொற்கள் சபரியின் இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தன. அவளது கைகள் அநிச்சையாகத் தன் இடையில் இருந்த குறுவாளைத் தடவின. கண்களில் ஒரு விநாடி கொலைவெறி தாண்டவமாடியது. ஒரு வேடுவப் பெண்ணுக்குரிய வீரம் அவளுள் கிளர்ந்தெழுந்தாலும், அவளது ஆழ்மனம் அவளைக் கட்டுப்படுத்தியது. ‘உயிர்க்கொலையை எதிர்த்துத் தானே இங்கே வந்துள்ளோம்’ என்ற எண்ணம் உள்ளெழ, தன் செயலுக்காக நாணினாள். பின் அந்தக் குறுவாளை மெதுவாக உருவி எடுத்தாள்.

அவளின் செய்கையைக் கண்ட அந்த இளைஞன் அஞ்சினான். ஆனால், அவள் அந்தக் குறுவாளைக் கீழே வீசினாள்.

“அஞ்ச வேண்டாம் முனிபுத்திரா, நான் உயிர்களைக் கொல்லும் குல வழக்கத்தையும் என் குறுவாளையும் கீழே போட்டுவிட்டு, என் ஆன்மாவைக் காக்கும் வழியைத் தேடி வந்திருக்கிறேன். இறைவனைத் தேடும் வழி தேடி ஓடி வந்திருக்கிறேன். இறைத்தேடல் யாவர்க்கும் பொதுவல்லவா? அல்லது இன்ன குலம், இன்ன இனம் மட்டுமே இறைத்தேடலின் பாதையில் செல்லலாம் என்று ஏதும் விதி இருக்கிறதா, சொல்?” என்று சொன்னாள்.

குறுவாள் கீழே விழுந்ததைக் கண்டதும் அவனுக்கு இருந்த அச்சம் நீங்க, ஆணவம் மீண்டும் துளிர்த்தது.

“ம்ஹூம்… என்ன திமிர்! கீழ்குலத்தில் உதித்த நீ எங்கள் முன் நிற்கவும் தகுதியற்றவள். உன் காலடித் தூசும் இங்கே நிலவும் புனிதத்தை மாசுபடுத்தும். அப்படி இருக்கையில், என்னை எதிர்த்துப் பேசவும் துணிந்துவிட்டாயா?” என்றான் அவன், தன் கையில் இருந்த தர்ப்பைப் புற்கட்டை அடிப்பதைப் போல உயர்த்தியபடி.

சிரமணா அந்தக் கேள்வியால் எந்த மாற்றமும் அச்சமும் இன்றி அவன் முன்னே நின்றாள். கண்களை மூடிக்கொண்டு அவள் தன்னை, தன் உள்ளே நிகழும் மாற்றத்தை உற்று நோக்கினாள். தன்னுள் சினம் துளிர்ப்பதைக் கண்டாள். சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லும்; எண்ணத்தைச் சீரழிக்கும்; சிந்தனை ஓட்டத்தை அலைக்கழிக்கும். ‘ஆனால் எனக்குள் ஏன் சினம் வருகிறது?’ என மீண்டும் உற்று நோக்கினாள். பின் ஆழ்ந்து மூச்சிழுத்து வெளியிட்டாள். சினத்தின் தன்மையைக் கவனித்தாள். இது தன்னை, தன் குலத்தை அவமதிப்பதால் உண்டாகும் சினம். இது தேவையற்றது. தன்னை அறிய, இறையுடன் ஒன்றாகச் சினம் தவிர்க்க வேண்டும். ‘குலம் வேண்டாம் என்று ஓடி வந்தவளுக்குக் குலப்பற்று மட்டும் ஏன்?’ எனத் தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். மனமே கேள், எந்தக் குலமும் தாழ்ந்தது அன்று. சந்தன மரத்தை யாராவது ஏசி, துர்நாற்றம் வீசும் மரம் எனக் கூறினால், அது என்ன துர்நாற்றத்தையா வெளியிடும்? அதன் இயல்பிலிருந்து தவறுமா? உன் இயல்பு என எதைக் கொள்ளப் போகிறாய்? என மீண்டும் மீண்டும் அவள் தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டாள்.

யோசிக்க யோசிக்க, அவளின் சினம் மெல்ல அடங்கியது. அவள் கண்களில் சாந்தம் குடிகொண்டது. கண்களை மெல்லத் திறந்தாள். அவள் கண்களில் இருந்த அமைதியும், நிச்சலனம் இல்லாத அந்தப் பார்வையும் அந்த இளைஞனை என்னவோ செய்தது.

சிரமணா மெல்லப் புன்னகைத்தாள். அவளது அந்தப் புன்னகையில் ஏளனம் இல்லை; மாறாக, ஒரு தாயின் கனிவும், தெளிந்த நீரோடையின் ஆழமும் இருந்தன.

“நீ எப்படி வேதியனாவாய் இளைஞனே? கையில் ஏந்திய தர்ப்பைப் புல்லும், தோளில் கிடக்கும் பூணூலும், நாவில் உறவாடும் மந்திர ஓசைகளும் ஒருவனை வேதியனாக்கி விடுமா? வேதம் என்பது ஓதுவதற்கானது மட்டுமல்ல, அது உணர்வதற்கானது. ‘வேத’ என்ற சொல்லுக்கே ‘அறிதல்’ என்றுதான் பொருள். எவன் ஒருவன் தன் அகத்தில் இருக்கும் மும்மலங்களை எரிக்கிறானோ, அவனே உண்மையான யாகத்தைச் செய்கிறான். வெளியே எரியும் இந்தத் தீயில் நீ போடும் நெய்யை விட, உனது சினத்தை அதில் ஆகுதியாகப் போடு. அதுதான் உனக்கும் உன்னைச் சார்ந்தோர்க்கும் நீ செய்யும் உண்மையான கடமை.”

“நீ சொல்லும் தத்துவங்களை வகுப்பதே நாங்கள் தான்… ஆகவே, இந்த யாகபூமியை விட்டு உடனே விலகு” என்றான் இன்னொரு இளைஞன்.

“நீ சொல்லும் இந்தத் தூய்மையான யாக பூமி எங்கே இருக்கிறது இளைஞனே? நான்கு சுவர்களுக்குள்ளா? அல்லது உனது மந்திர ஓசைகளிலா? இறைவன் என்பவன் ஒரு குகைக்குள் ஒளிந்திருக்கும் சிறு தீபமல்ல. அவன் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் மகா ஒளி. எல்லைகளையும் சுவர்களையும் எழுப்புவது மனித மனம், ஆனால் அந்தச் சுவர்களைத் தகர்த்துப் பாயும் பெருவெள்ளமே கடவுள். நீ அவனை மந்திரங்களால் கட்ட நினைக்கிறாய், நானோ அவனை என் மௌனத்தால், அமைதியால் தழுவ நினைக்கிறேன். கருணையே வடிவான இறைவன் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவான், அகங்காரத்திற்கு இல்லை.”

“கீழ்ப்பிறப்பான வேட்டுவச்சியா எனக்கு இறையைக் கற்பிப்பது? எனக்கு ஆத்திரம் வந்து ஏதும் சபிக்கும் முன் இந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடு” என்று எச்சரித்தான் முதலில் பேசிய இளைஞன்.

“கீழ்ப்பிறப்பு, உதிரம் சிந்த வைக்கும் வேடுவக் குலம் என்று சொன்னாயே… ஆனால் நீ உன் சொற்களால் ஓர் உயிரின் மனதைக் காயப்படுத்த நினைக்கிறாய். எத்தனை ஆணவம் உன் குரலில்? பிறப்பினால் வந்ததோ உன் குலத்திற்கான உயர்வு? அந்த மாபெரும் தவசி மதங்கரிடம் கேட்டுப்பார், உண்மை எதுவெனச் சொல்வார். சொல்லப்போனால், நீ இங்கே நிம்மதியாக வேள்வி செய்ய அந்த வேடுவக் குலம்தான் உதவிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட்டாய் இளைஞனே. அவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கட்டுக்குள் வைத்திருப்பதால்தான் எல்லாம் ஒரு ஒழுங்குக்குள் இருக்கின்றன.

மேலும், வாழ்வு என்பது ஒரு நீண்ட பயணம். இதில் குலம், கோத்திரம், செல்வம் என்பதெல்லாம் வழியில் நாம் அணிந்துகொள்ளும் ஆடைகள் மட்டுமே. ஆற்றில் குளிக்கும்போது ஆடையைக் களைவது போல, இறைவனைக் காண விழையும்போது இந்தக் குலப்பற்று எனும் ஆடையைக் களைந்துவிட்டு நிர்வாணமான ஆத்மாவோடு நிற்க வேண்டும். நான் ஒரு வேடுவச்சி அல்ல; நீ ஒரு முனிபுத்திரனும் அல்ல. நாம் இருவருமே இந்தப் பிரபஞ்சக் கடலில் மிதக்கும் சிறு துளிகள். துளி கடலில் சேரும்போது அதன் பெயர் மறைந்து கடலாகவே மாறிவிடும். அந்த மாற்றத்தை ஏற்கும் பக்குவமே ஞானம்.”

நிதானமாகவும், மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்த சொற்களுடனும் சிரமணா சொன்ன சொல், அந்த இளைஞனைத் தலைகுனியச் செய்தது.

அந்த இளைஞன் ஆத்திரத்துடன் ஏதோ சொல்ல முற்பட்டபோது, ஆசிரமத்தின் உட்பகுதியிலிருந்து மதங்க முனிவர் வெளியே வந்தார். அவரது மேனியிலிருந்து ஒரு பொன்னிற ஒளி வீசுவது போலத் தோன்றியது. அவர் அங்கே வந்ததும், அதுவரை அதிகாரத்துடன் பேசிக்கொண்டிருந்த ரிஷிகுமாரர்கள், காற்றின் சீற்றம் அடங்கியதில் அசைவற்று நிற்கும் சருகுகள் போல ஒடுங்கி நின்றனர்.

முனிவர் சிரமணாவைப் பார்த்தார். அவரின் அந்தப் பார்வையில் ஒரு தந்தையின் வாஞ்சையும், ஒரு குருவின் ஆழமும் இருந்தது. அவளின் அத்தனைப் பேச்சையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார் என்பதை அவரின் அந்தக் கனிவு கொண்டதும் ஆச்சரியம் நிறைந்ததுமான பார்வையே பறைசாற்றியது.

இளைஞர்கள் பக்கம் திரும்பி, கண்டிப்பான குரலில் “ஏன் இந்த வீண் சலசலப்பு?” என்று அவர் அந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டபோது, அந்த இடமே ஒரு மௌனத் தடாகமானது.

“குருதேவா, இவள் ஒரு கீழ்குலத்தில் பிறந்த வேடுவப் பெண்…” என்று இழுத்தான் அந்த இளைஞன்.

மதங்க முனிவர் புன்னகைத்தார்.

“தர்மம் அதர்மம் என்பது ஒருவனது பிறப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை; அவனது இதயத்தின் ஈரத்தில் தான் இருக்கிறது. இறைத்தேடலுக்கு யார் முட்டுக்கட்டைப் போட முடியும்? இறைவன் முன்பு எப்போது குல, இன பேதம் வந்தது? இவள் இங்கே கொண்டு வந்திருப்பது வேடுவக் குலத்தின் வீரத்தையா? இல்லை, உன் பேச்சில் இருக்கும் அகங்காரத்தையா? எதைக் கண்டு அவளைத் தடுக்க முற்பட்டீர்கள்? அவள் கேட்கும் கேள்விகளில் நிறைந்து நிற்கும் வேதத்தின் சாரத்தை அறியாமல் இறைத்தேடலை எப்படித் தொடங்கப் போகிறாய் மகனே?” என அவர் கேட்ட தொனி, அனைவரையும் மீண்டும் மௌனத்திற்குத் தள்ளியது.

“அனைவரும் கேளுங்கள். இன்று முதல் இவள் என் அன்புக்குரிய மகள். இனி இவள் பெயர் சபரி” என்று பிரகடனப்படுத்தினார். மிகுந்த ஆதுரத்துடன் அவளின் தலையைத் தடவிக்கொடுத்தார். அவள் அப்படியே ஒடுங்கி, மதங்கரின் காலடியில் வீழ்ந்து வணங்கினாள். ஒரு வேடுவப் பெண் முனிவரின் மகளாக மாறிய அந்தத் தருணம், அங்கிருந்த பலரின் அகங்காரத்தைச் சுக்குநூறாக உடைத்தது.

சபரிக்கு அந்த ஆசிரமத்தில் ஒரு தனிக்குடில் ஒதுக்கப்பட்டது. காலம் சில கடந்தபோது அங்கே அவளுக்கு ஒரு உன்னதத் தோழி கிடைத்தாள். அவள் அஞ்சனை. அஞ்சனை ஒரு வானரப் பெண்மணி என்றாலும், அவளது தோற்றத்தில் ஒரு தேவமங்கைக்குரிய வசீகரம் இருந்தது. அவளது கண்கள் எப்போதும் ஒரு திசையையே காத்திருப்பது போல இருக்கும்.

ஒரு நாள், பம்பா நதிக்கரையில் அமர்ந்திருந்தபோது, சபரி அஞ்சனையின் அழகைப் பார்த்து வியந்து கேட்டாள், “தோழி, உன் உருவம் வானர உருவமாக இருந்தாலும், உன் அசைவுகளிலும் பேச்சிலும் ஒரு தேவ மங்கையின் நளினமும் அழகும் இழைந்தோடுகிறதே, இது எப்படி?”

அஞ்சனை ஒரு பெருமூச்சு விட்டாள். அவளது கண்களில் கடந்த காலத்தின் நிழலாட்டம் தெரிந்தது.

“அதற்கான பதிலை நான் சொல்லவா மகளே?” என்றபடி மதங்க முனிவர் வந்தார். “தோழிகளின் அந்தரங்கப் பேச்சில் இந்தக் கிழவன் வந்தது உங்களுக்கு இடையூறாகிவிட்டதோ?” என்றார் சிரித்தபடி.

இருவரும் பதைத்து எழுந்து நின்று அவரை வணங்கி நின்றனர். மதங்க முனிவர் தொடர்ந்தார்.

“சபரி, இவள் சாதாரணமானவள் அல்ல. தேவலோகத்தில் புஞ்சிகஸ்தலை என்ற பெயரில் இருந்த ஒரு பேரழகி. இந்திர சபையில் ஆடிக்கொண்டிருந்தபோது, அங்கே தவத்தில் இருந்த ஒரு முனிவரைத் தன் அழகால் பரிகாசம் செய்தாள். சினமடைந்த அந்த முனிவர், ‘எந்த உருவத்தைக் கண்டு நீ கர்வம் கொண்டாயோ, அந்த உருவம் மாறி நீ ஒரு வானரப் பெண்ணாகக் கடவது’ என்று சாபமிட்டார்.

புஞ்சிகஸ்தலை அழுது புரண்டு மன்னிப்புக் கேட்டாள். முனிவர் மனமிரங்கி, ‘நீ பூலோகத்தில் அஞ்சனையாகப் பிறப்பாய். வாயு தேவனின் அருளால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் இந்த உலகமே போற்றும் மகா வீரனாகத் திகழ்வான். அவனது பிறப்பால் உனது சாபம் நீங்கும்’ என்று விமோசனம் அளித்தார். அதன்படியே, அஞ்சனை பூலோகத்தில் வானரத் தலைவனான கேசரியை மணந்தாள். கேசரி ஒரு பெரும் பராக்கிரமசாலி. மகாமேரு மலையின் அடிவாரத்தில் அவர்கள் இருவரும் இன்பமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லை. அஞ்சனை ஒரு மகனை வேண்டி, இந்தக் காட்டில் வாயு தேவனை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினாள். அந்தத் தவம் பலிக்கும் நேரம் வந்துவிட்டது சபரி” என்றார் மதங்க முனி.

இருவரும் வணங்கி அந்த இடம் விட்டு நீங்கினார்கள். முனிவரின் அந்த வார்த்தைகளால் அஞ்சனைக்குச் சொல்ல இயலாத இன்பம் மனத்தில் நிரம்பியது. இதுவரைத் தொடர்ந்த தவத்தை இன்னும் தீவிரமாக்கினாள்.

அதே நேரத்தில், அயோத்தியில் சக்கரவர்த்தி தசரதன் புத்திரகாமேஷ்டி யாகத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த வேள்வித் தீயிலிருந்து ஒரு பூதம் தோன்றி, திவ்யமான பாயாசத்தைத் தசரதனிடம் வழங்கியது. தசரதன் அதைத் தன் மூன்று மனைவியருக்கும் பகிர்ந்தளித்தார். அப்போது ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது. கைகேயியின் கையில் இருந்த அந்தப் பாயாசத்தின் ஒரு பகுதியை, ஒரு பெரிய கருடன் மின்னல் வேகத்தில் தன் அலகால் கவ்விக்கொண்டு பறந்தது. அந்தக் கருடன் வானில் பறந்து வந்தபோது, வாயு தேவன் ஒரு பெரும் காற்றை உருவாக்க, அந்தக் காற்றின் வேகத்தில் கருடனின் அலகிலிருந்த பாயாசம் முழுவதும் நழுவிக் கீழே விழுந்தது.

இங்கே தவத்தில் இருந்த அஞ்சனை, தன் இரு கரங்களையும் ஏந்தி வாயு பகவானைத் துதித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பாயாசத் துளி சரியாக அவளது உள்ளங்கைகளில் வந்து விழுந்தது.

“அஞ்சனை, இது தெய்விகப் பிரசாதம். இதை அருந்து. உனக்கு ஒரு மகா வீரன் மகனாகப் பிறப்பான்” என்று அசரீரியாக வாயு தேவன் உரைத்தார். அஞ்சனை அந்தப் பாயாசத்தைப் பக்தியுடன் ஏற்றாள். கேசரியும் மிகுந்த மகிழ்வுடன் இருந்தான். தான் தலைமை வகித்த சுமேரு பகுதிகளில் இருந்த மொத்த வானரக்கூட்டமும் தலைவனின் குழந்தையின் வருகைக்காகக் காத்திருந்தது.

மாதங்கள் பல கடந்தன. ஒரு சுப முகூர்த்தத்தில், பம்பா நதிக்கரையின் ஆசிரமமே ஒரு பெரும் ஒளியில் மூழ்கியது. சபரி தன் தோழியின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்க, அங்கே ஓர் அற்புதக் குழந்தை பிறந்தான். அவன் பிறந்தபோதே ஒரு சூரியனைப் போலப் பிரகாசித்தான். அவனது தோள்கள் வைரத்தைப் போல உறுதியாக இருந்தன.

சபரி அந்தக் குழந்தையைப் பார்த்து மெய்சிலிர்த்தாள். மதங்க முனிவர் அந்தக் குழந்தையை ஆசீர்வதித்து, “இவன் வாயு புத்திரன். இவனது பெயர் அனுமன். இவன் அறிவிலும் வீரத்திலும் இவனுக்கு நிகர் இவனே!” என்று போற்றினார்.

சபரியை நோக்கி, “மகளே, நீ இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவள். வெகுகாலமாக என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் இறைதரிசனத்திற்கும் முக்திக்குமானதுமான வழி, அதை நீ தேடிப் போகப் போவதில்லை. உன்னைத் தேடி அந்த இறையே இராமன் என்னும் பெயரோடு வரும். அந்தக் காலம் வரை காத்திரு. அந்த இராமனுக்குத் தம்பியைப் போன்றவனே இந்த அனுமன்” என்றார்.

சபரியின் கண்கள் ஆனந்தத்தின் எல்லையில் நீரைக் கசியவிட்டுக் கொண்டிருந்தன. அவள் அந்த நிமிடத்திலிருந்தே இறைவனை எதிர்கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். அங்கே அனுமன் வளரத் தொடங்கினான். சபரி அந்தக் குழந்தையைப் பார்த்து நெகிழ்ந்தாள். காலம் அஞ்சனை மைந்தனை மாபெரும் இதிகாச நிகழ்வில் இணைக்கக் காத்திருந்தது.

(தொடரும்)

Series Navigation<< அசுரவதம் பாகம்: 2 (அத்தியாயம் 1: விடுதலையை நோக்கி)

Author

Related posts

அவளும் அவனும்

ஒரு டீ சொல்லட்டுமா ஸாப்!

ப்ரியன் கவிதைகள்