கோபக் கனலும் நாணத்தின் கூச்சமும் மிகுந்து, அறுபட்ட மூக்கின் வலி தாங்க முடியாமல், பஞ்சவடியை விட்டு வேகமாகப் பின்வாங்கி, கோதாவரியின் கரையோரம் நடந்தாள்.
தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்தின் சூரிய ஒளியில் இன்னும் தகதகத்தது. கோதாவரி நதி, சூர்ப்பனகையின் செந்நிற இரத்தத்தால் கலங்கிய பின், மெல்ல அமைதியடைந்து, கதிரவனின் ஒளியில் மீண்டும் வெள்ளியின் மின்னலுடன் பார்ப்போரின் கண்களில் பிரதிபலித்துப் பாய்ந்தது.
மூங்கில் மரங்கள், அவள் கதறலின் அதிர்வுகளால் நடுங்கிய பின், காற்றில் மெல்ல அசைந்து, காட்டின் மௌனத்தை மீட்டெடுத்தன. பறவைகள், பயத்தில் பறந்தோடிய பின், மெதுவாக திரும்பி, தங்கள் கீச்சிடலை மீண்டும் தொடங்கின.
ஆனால், இந்த அமைதியின் மத்தியில், சூர்ப்பனகையின் இதயம் கோபத்தாலும், பழியென்னும் தீயாலும் எரிந்தது. அவள் மூக்கில் இருந்து கொட்டிய இரத்தம், காட்டின் நிலத்தை சிவப்பாக்கியது, ஆனால் அவள் கண்கள், ஒரு பயங்கரமான உறுதியுடன் மின்னின.
அவள் கோபம், ஒவ்வொரு அடியிலும் தரையை உலுக்கியதில் தெரிந்தது, அவள் மனதில் சட்டென்று நாணம் தோன்றியது. “நான், ஒரு தானவனின் ராணி, என் கணவன் வித்யுத்ஜிவாவையும் மகன் சம்புகனையும் பறிகொடுத்தவள், ஆனால் நான் இராமனின் அழகில் மயங்கிவிட்டேனா?”
என்று அவள் மனம் தன்னையே கேள்வி கேட்டது. முன் விழுந்த அவள் கூந்தல், இரத்தத்தால் நனைந்து, காற்றில் அலைந்து காய்ந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டன, ஆனால் அவள் மனதில் இராமனின் புன்னகையும், அவனது தேன் போன்ற குரலும் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.
“என் பழியை மறந்து மன உறுதியை மறந்து, அவனை மணக்க நினைத்தேனே! இது என் இதயத்தின் பலவீனமா?” என்று அவள் தன்னைத்தானே நொந்து, கோதாவரியின் கரையில் ஒரு கணம் நின்று, தன் முகத்தை அந்த நதியில் பார்த்தாள். அவள் மூக்கு அறுபட்டு, விகாரமாக மாறிய முகம், அவளது அவமானத்தை நினைவூட்டியது. அவளின் மனம் சீற்றத்தில் நிறைந்தது.
“இல்லை, இது மயக்கம் அல்ல. கண நேரச் சலனம், இது முடிவல்ல. இதுவே என் சூழ்ச்சியின் முதல் படி!” என்று அவள் தன்னைத் தேற்றிக்கொண்டாள்.
அவள் மனம், சீதையின் அழகை நினைத்து வியந்தது. குடிலின் முன், மலர்களைப் பறித்துச் சூடியதால் சூரிய ஒளியில் ஒளிர்ந்த சீதையின் தோற்றம், ஒரு தேவலோக மங்கையைப் போல அவள் மனதில் பதிந்திருந்தது.
“இவளது அழகு, இராவணனின் காமத்தைத் தூண்டும். இவளைப் பறித்தால், இராமனின் இதயம் உடையும்! கூடவே இலக்குவனும்.. ” என்று நினைத்த அவள் மனதில் ஒரு சதி ஒன்று தீப்பொறி என மின்னியது.
மேலும், இலக்குவனின் வாள் வீச்சின் வேகம் அவளை பிரமிக்க வைத்தது.
“ஒரு மனிதனாக இருந்தும், இவன் வாள் மின்னலைப் போல வேகமாக இருக்கிறதே! இவனது வீரம், இராவணனுக்குச் சவாலாக இருக்கும்!”
என்று அவள் மனதில் உறுதி பூண்டாள். இராமனின், இலக்குவனின் வீரமும், சீதையின் அழகும் ஒரு இராவணனுடன் பெரும் மோதலை உருவாக்கும் என்று அவள் உணர்ந்தாள்.
“இவர்கள் தான் இராவணனை அழிக்க சரியானவர்கள். ஆனால், முதலில் இவர்களின் ஆற்றலை முழுமையாக அறிய வேண்டும்,” என்று அவள் முடிவு செய்தாள்.
சூர்ப்பனகை, தன் கோபத்தையும் அவமானத்தையும் ஒரு ஆயுதமாக்கி, தண்டகாரண்யத்தின் மறு பகுதியில் முகாமிட்டிருந்த கரன் மற்றும் தூஷணனை நோக்கி விரைந்தாள். காட்டின் பகல் நேர ஒளி, அவள் இரத்தம் தோய்ந்த முகத்தில் மின்னியது, அவள் கண்கள் வெறியுடன் எரிந்தன.
கர தூஷணர்கள், இராவணனின் பிரதிநிதிகளாக, பதினான்கு ஆயிரம் அசுரப் படைகளுடன், தங்கள் தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும் இராவணனின் ஆணைக்காக எப்போதும் தயாராக வைத்திருந்தனர்.
சூர்ப்பனகை, அவர்கள் முன் நின்று, தன் அறுபட்ட மூக்கைக் காட்டி, கதறினாள்.
“கரனே, தூஷணனே! என் சகோதரர்களே, பாருங்கள், என் அவமானத்தை! பஞ்சவடியில் இருக்கும் இராமனும் இலக்குவனும் என் மூக்கை வெட்டினார்கள்! ஒரு அரக்க இனத்தின், ஈடிணை இல்லாத சக்கரவர்த்தியான இராவணனின் தங்கைக்கு ஏற்பட்ட இந்த கதியைப் பாருங்கள்.
யாருமில்லாத அநாதையாக என்னை மாற்றி நீங்கள் இங்கே அமைதியாக இருக்கிறீர்கள். அண்ணன் இராவணனோ என்னை விட்டு வெகுதூரம் போய்விட்டான். எனக்கென்று யார் இருக்கிறார்கள் இனி.. இது உன்னுடைய வனமில்லையா? இங்கு எனக்கு ஏன் பாதுகாப்பில்லை? இங்கே எனக்கு நேர்ந்த அவமானம் எல்லாம் எனக்கானது மட்டும் என்றா நினைக்கிறாய்?
இல்லை, இது நம் அரக்கர் குலத்துக்கே மாபெரும் இழுக்கு. இராவணனுக்கு உண்டான பேரவமானம். அதுவும் உன் இடத்தில் இந்த அவமானம் என்றால்… யோசித்துப் பார் இராவணன் உன்னை என்ன செய்யப்ப் போகிறான் என்று “
என்று மெல்ல மெல்ல பகையூட்டும் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசினாள். கர தூஷனர்களொடு மொத்தக் கூட்டமும் அழிப்போம் அவர்களை என்று முழக்கமிட்டனர். சூர்ப்பனகைத் தொடர்ந்தாள்.
” இவர்கள் மனிதர்கள் என்று நினைத்து ஏமாறாதீர்கள். இவர்களது வீரம், நம் அசுர குலத்துக்குச் சவால்! இவர்களை அழித்து, என் அவமானத்துக்குப் பழி வாங்குங்கள்!”
என்று அவள் கூறினாள். அவள் அழுது கொண்டே கதறியது அந்த இடத்தையே அதிரச் செய்தது. அவள் இதயத்தில், வஞ்சக எண்ணம் பலமாக வேறூன்றிக் கிடந்தது.
“இராமனும் இலக்குவனும் இந்தப் படைகளை எதிர்கொண்டால், அவர்களால் இவர்களை அழிக்க முடியுமானால். அவர்களது ஆற்றலை முழுமையாக என்னால் அறிய முடியும். அவர்கள் வெற்றி பெற்றால், இராவணனுக்கு எதிராக அவர்களை மோதவிடுவேன்!” என்று அவள் மனதில் திட்டமிட்டாள்.
கரனும் தூஷணனும், சூர்ப்பனகையின் கதறலைக் கேட்டு, கோபத்தில் கொந்தளித்தனர்.
“இந்த மனிதர்கள் யார், நம் இளவரசியை அவமானப்படுத்த? வாருங்கள் அவர்களை அழிப்போம்!” என்று முழங்கி, தங்கள் பதினான்கு ஆயிரம் படைகளுடன் பஞ்சவடியை நோக்கிப் புறப்பட்டனர்.
காடு, அவர்களின் படையின் முழக்கங்களால் அதிர்ந்தது. பதினாயிரம் குதிரைகளின் குளம்பொலி, ஆயிரம் யானைகளின் முழக்கம், மற்றும் நூற்றுக்கணக்கான தேர்களின் உருளல் ஒலி, கோதாவரியின் அலைகளை உலுக்கியது. பெரிய பெரிய மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தன,
சூர்ப்பனகை, தொலைவில் ஒரு மரத்தின் மேலிருந்து இந்த மோதலைக் கவனிக்கத் தயாரானாள், அவள் கண்கள் இராம இலக்குவர்களின் ஆற்றலை அளக்க தயாராகின.
அதே நேரம் பஞ்சவடியில் இலக்குவனுக்கு ஏதோ மாபெரும் அழிவொன்று நாடிவருகிறது என்ற உள்ளுணர்வு மேலும் வலுப்பட்டது. தன் கண்களை மூடி தன்னைச் சுற்றி நடப்பவற்றை ஓசைகளினால் அறியும் அறிவைக் கொண்டு , படையின் வருகையை அதன் பேரொளி அதிர்வை உள்வாங்கி உணர்ந்து சொன்னான்,
“அண்ணா, அரக்கப் படைகள் நெருங்குகின்றன! இது சாதாரணத் தாக்குதல் அல்ல! இது மாபெரும் கூட்டம். நம்மை நோக்கித்தான் வருகிறார்கள். கட்டாயம் இது அந்தப் பெண்ணின் தூண்டுதலாகத்தான் இருக்கும். இதோ அவர்களை நான் சென்று அழித்துவிடுகிறேன் ” என்று வெகுண்டு எழுந்தான்.
இராமன், அமைதியாக, “தம்பி, சீதையை குடிலில் பாதுகாப்பாக வை. நீ அவளுக்குக் காவலாக இரு. நான் தனித்து இந்த அரக்கர்களை எதிர்கொள்வேன், சீதைக்குப் பாதுகாப்புத் தேவை” என்று உறுதியாகக் கூறினான்.
இலக்குவன் தன் அண்ணனின் ஆணையை ஏற்று, சீதைக்குக் காவலாகக் குடிலின் வாயிலில் வாளுடன் நின்றான்.
போர், ஒரு கோரத் தாண்டவமாக மூண்டது. கர-தூஷணர்களின் அசுரப் படைகள், ஈட்டிகள், சூலங்கள், மற்றும் வாள்களை இராமனை நோக்கி மழையெனப் பொழிந்தன. ஆயுதங்களின் ஒலி, இடிமுழக்கத்தை விட பயங்கரமாக இருந்தது. ஆனால், இராமனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள், வானெங்கும் நிறைந்து, ஆயிரக்கணக்கான அசுரர்களை வீழ்த்தின.
நிலத்தில் இரத்தம் கோதாவரியின் நீரோட்டத்துடன் கலந்து, நதியைச் செந்நிறமாக மாற்றியது. ஆயிரக்கணக்கான அசுரர்களின் உடல்கள் ஒரு சிறு மலையாகக் குவிந்தன. வனத்தின் மரங்கள், இரத்தத்தால் நனைந்து சிவந்தன. இறுதியாக, இராமனின் அம்புகள் கரன் மற்றும் தூஷணனைத் தாக்கின. அவர்களின் தேர்களும் கவசங்களும் இராமனின் அம்புகளுக்கு முன் பயனற்றுப் போயின.
கரனும் தூஷணனும், தங்கள் மரணப் பிடியிலிருந்து தப்ப முடியாமல், மண்ணில் மடிந்தனர். மின்னலின் வேகத்தில் முடிந்தது போர். ஒரு முகூர்த்த நேரத்தில், கர-தூஷணர்களின் பதினான்கு ஆயிரம் அசுரப் படைகளும் வேரோடு பிடுங்கப்பட்ட மரங்களாய் அழிந்தனர். காடு, போரின் ஓசை அடங்கிய பின் இரவு நேர மயானம் போல அமைதியடைந்தது…
தனியொருவனாய் இராமன் நெடிது நின்று அத்தனைப் படைகளையும் அழித்தான். தப்பிப் பிழைத்து ஓட நினைத்தவர்களையும் அவன் அம்பு விடவில்லை. ஒட்டுமொத்த கர தூஷன படைகள் நிர்மூலமாகின.
சூர்ப்பனகை மகிழ்ந்தாள். சூர்ப்பனகை, தொலைவில் நின்று, இந்த பேரழிவைக் கண்டு, மகிழ்ச்சியில் உடல் சிலிர்த்தது.
“ஆஹா! இராமன் தனி ஒருவனாகவே இவ்வளவு வலிமையானவனா? ஒரு முகூர்த்தத்தில் பதினான்கு ஆயிரம் படைகளை அழித்தானே! இவன் தான் இராவணனின் ஆணவத்தை உடைக்க முடியும்! இவனால் இராவணனுக்கு அழிவு நிச்சயம். இலக்குவனும் சேர்ந்தால் மொத்த இலங்கையும் அழியும் ” என்று அவள் மனதில் உறுதி பூண்டாள்.
கர-தூஷணர்களின் மரணம், அவளுக்கு துக்கத்தை அளிக்கவில்லை; மாறாக, அவள் சூழ்ச்சியின் அடுத்த படிக்கு அடித்தளமாக அமைந்தது.
இவர்கள் இருவரையும் எப்படி மோத விடுவது என்று அவள் மீண்டும் ஆழ்ந்து யோசித்தாள். இராவணனின் காமமொன்றே அதற்கான களம் அமைக்கும் என்பதை அவள் உணர்ந்தாள். ஒரு பெண் தன் பழிவாங்கும் சதிக்கு பகடைக்காய் ஆவதும். அதனால் சீதைக்கு உண்டாக இருக்கும் சோதனைகளும், துயரங்களும் அவள் மனக்கண்ணில் ஓடின.
“இராமனின் வீரமும், சீதையின் அழகும் இவை இரண்டும் இராவணனை மோதலுக்கு இழுக்கும். சீதையைக் கண்டால் இராவணன் விடமாட்டான். இவர்களை மோதவிட்டால் மட்டுமே என் கணவனைக் கொன்றவன் அழிவான்!” என்று அவள் மனதில் திட்டமிட்டாள்.
அவள் கண்கள், வெறிகொண்டு தீயைப் போல் எரிந்தன. சூர்ப்பனகை, தன் அறுபட்ட மூக்கில் கொட்டும் இரத்தத்தைத் துடைக்காமல், அதே விகார உருவத்துடன், அவள் இலங்கையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினாள்.
பஞ்சவடியை நோக்கி ஒருமுறைத் திரும்பி நின்று சொன்னாள்.
“என்னை மன்னித்துவிடு சீதை”