டாக்டர் விளையாட்டு –  நூரா அமீன் (எகிப்து)

தமிழில் எம். ரிஷான் ஷெரீப்

நாவலாசிரியை, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகை என பன்முகம் கொண்ட நூரா அமீன் எகிப்தைச் சேர்ந்தவர். எகிப்தில் 1970 ஆம் ஆண்டு பிறந்த இவர் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். கய்ரோ பல்கலைக்கழகத்தில் ஃப்ரெஞ்ச் மொழியில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த இவர் பின்னர் மொழிகள் மற்றும் மொழிபெயர்ப்புக்கான திணைக்களத்தில் பணியாற்றியிருக்கிறார். ஆங்கிலம் மற்றும் ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து அரபு மொழிக்குப் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கும் இவர் தொடர்ச்சியாக நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி வருகிறார். சிறந்த சிறுகதைகளுக்கான எகிப்து சாகித்ய விருது 1996 ஆம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கலை மற்றும் கலாசாரத்துக்கான அந்தலூசியா அறக்கட்டளையின் 1999 ஆம் ஆண்டிற்குரிய சிறந்த நாவலுக்கான விருது இவரது நாவலுக்குக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் இவர் பேராசிரியராகப் பணிபுரிந்து வருவதோடு, திரைப்படம், நாடகம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனாய்வுக் கட்டுரைகளைப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார்.

நாங்கள் டாக்டர் விளையாட்டை விளையாடுவோம்.”

ஆல்யாவும், அவளுடைய தங்கையும், அயல்வீட்டாரின் மகளும் என்னோடு சேர்ந்து விளையாடும் அந்தக் கோடையின் நாட்களில் ஆல்யா அப்படித்தான் கத்துவாள்.

அந்தக் குழுவின் தலைவியாக ஆல்யாவே இருந்தாள். நாங்கள் எப்போது விளையாட வேண்டும், எப்போது சாப்பிடப் போக வேண்டும், எப்போது தூங்கப் போக வேண்டும், எப்போது எமது குடியிருப்பின் வாயிலில் நாங்கள் சந்திக்க வேண்டும் என அனைத்தையும் அவள்தான் தீர்மானித்தாள். அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுத்தான் இந்த ‘டாக்டர் விளையாட்டு.’

“நாங்கள் எல்லோருமே உடம்பில் பொட்டுத் துணியில்லாமல் முழுமையாக அம்மணமாக இருக்க வேண்டும். உம்னியாதான் டாக்டர். சரியா?” என்று அவள் அன்றாடம் தனது உத்தரவுகளை இடுவதில் ஒருபோதும் சோர்ந்து போனதேயில்லை. நோயாளிகளாக அபிநயிக்கும் தனது சினேகிதிகளினதும், சின்னத் தங்கையினதும் நிர்வாண உடல்களைப் பார்ப்பதில் அவள் ஒருபோதும் சலிப்படையவுமில்லை.

எனக்கோர் உதவியாக, அவள் எனக்கு மாத்திரம் எப்போதும் எனது ஆடைகளை அணிந்து கொண்டிருக்க அனுமதித்தாள். ஒருவேளை கவனத்தோடும், நிதானத்தோடும், தீவிரத்தோடும் விளையாட வேண்டிய அந்த மருத்துவரின் பாத்திரத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்று அவள் கருதியிருக்கலாம். இல்லாவிட்டால் எனது தாய் திடீரென்று எங்களைத் தேடிக் கொண்டு வந்து எனதறையின் கதவைத் திறக்கும் போது என்னால் தைரியமாக அவரை எதிர்கொள்ள முடியும் என்ற காரணமாகவும் இருக்கலாம்.

‘முழுமையாக அம்மணமாக இருக்கவில்லையென்றால், நீ முழுமையாக விளையாடவில்லை என்றுதான் அர்த்தம்’ என்றுதான் ஆல்யா எப்போதும் சொல்வாள்.

பக்கத்து வீட்டாரின் புதல்வியான ஹனாவோ தனது உள்ளாடையை எப்போதும் அணிந்திருந்தாள். எமது குழுவிலிருந்து தான் நீக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக விளையாட்டின் விதிகளுக்கு மௌனமாக இணங்கி வேறெந்த விதி மீறல்களையும் மேற்கொள்ளாமல் குழுத் தலைவியின் கட்டளைக்கு அமைதியாகக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டாள் அவள். என்றாலும் உடலில் உள்ளாடை மாத்திரமாவது எப்போதும் இருக்க வேண்டும் என்ற தனது தாயின் கண்டிப்பான கட்டளையை எடுத்துக் கூறி அம்மணமாவதை மாத்திரம் செய்ய மறுத்தாள்.

அவள் ஒரு நாள் தனது உடலில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல் வீடு திரும்பியதைக் கண்டதன் பிறகு இனிமேல் உள்ளாடையாவது உடம்பில் இருக்கவே வேண்டும் என்று அவளது தாய் கட்டளையிட்டிருந்தாள். அன்று அவள் தனது தாயாரால் அடித்துத் துவைக்கப்பட்டாள். அன்று முழுவதும் தோல்வாரினால் வாங்கிய அடி தாளாமல்தான் அவள் இறுதியில் தனது உள்ளாடை எனது அறையில் இருக்கிறதென்று கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்திருந்தாள். ஆனால் அப்போது அது எங்கே இருக்கிறது என்று கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

தனது தந்தை கோபமாகக் கத்துவதை நடித்துக் காட்டுவது ஆல்யாவுக்குக் குதூகலம் தரும் ஒன்றாக இருந்தது. அவளது தந்தையின் அந்தக் குரலைக் கேட்டு ஒட்டுமொத்த வீடுமே அதிர்ச்சியில் உறைந்து போகுமாம். ஆகவே அவரைப் பிரதிபலித்து நடித்துக் காட்டுவது என்பது அவரது மகளால் மாத்திரமே செய்யக் கூடிய ஒன்றாக இருந்தது.

“வாயை மூடு! உன்னையும், அவளையும் தொலைச்சிடுவேன்!”

ஒவ்வொரு நாள் இரவிலும் அவரிடமிருந்து அவள் கேட்கும் வார்த்தைகளை, ஒவ்வொரு நாள் காலையிலும் அவள் எம்மிடம் அவரைப் போலவே அபிநயத்து நடித்துக் காட்டும்போது எங்கள் மூவருக்கும் ஒரே சிரிப்பாக இருக்கும். அவளது தங்கையைப் பொறுத்தவரையில், தமது தந்தையின் குரலைப் போல ஆல்யாவின் தொனி உயரும் போதெல்லாம், அவள் தனது ஆடைகளை இயந்திரத்தனமாக வேக வேகமாகக் களைவாள்.

சில நேரங்களில் அந்தக் குட்டிப் பெண்ணும் அந்த விளையாட்டு நேரம் முழுவதும் அம்மணமாகவே விளையாடிக் கொண்டிருக்கும். குளிர் தாக்குமென்றோ, காய்ச்சல் பிடிக்கும் என்றோ எந்தப் பயமுமில்லாமல் நாங்கள் உடல் பரிசோதனை செய்து  பரிசோதித்து விளையாடி முடிக்கும் வரையில் அவளும் அப்படியே இருப்பாள்.

ஆல்யாவின் தலைமையில் அந்த டாக்டர் விளையாட்டு முடிந்த உடனேயே அவர்கள் தமது வீட்டுக்குப் போய் விடுவார்கள். தொடர்ந்து, அவளுடைய அபிநயமோ, சிரிப்போ இல்லாமலே அவளது தந்தையின் குரல் அவர்களது வீட்டுக்குள் சத்தமாக எதிரொலித்துக் கொண்டிருப்பது வெகுநேரத்துக்குக் கேட்கும்.

உண்மையில், அவரது குரல் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக, அந்தப் பெண்குழந்தைகளில் மூத்தவளும், தைரியசாலியுமான ஆல்யா தனது தந்தையைப் போல நடித்துக் காட்டுவதை படிப்படியாக  நிறுத்தினாள்.

போகப் போக எங்கள் சிறிய குழுவும் கலைந்து பிரிந்தது. ஹனா தனது பெற்றோருடன் சவூதி அரேபியாவுக்குச் சென்றாள். எப்போதாவது கோடை விடுமுறையில் அவள் இங்கு வந்துபோகும்போது முகத்தை மறைத்து பர்தா அணிந்திருப்பாள். அவள் பருவ வயதை அடைந்தவுடனேயே அவளுக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது அது. படிக்கட்டுகளிலோ அல்லது கட்டிடத்தின் நுழைவாயிலில் வைத்தோ எங்களை நேருக்கு நேர் சந்தித்தாலும் கூட அவள் எம்மை ஏறெடுத்தும் பார்க்காமல் வேகமாக நகர்ந்து விடுவாள்.

ஆல்யாவின் தங்கையும் கூட தனது வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. அப்படி அவளுக்கு என்னதான் நடந்தது என்பது  எனக்குத் தெரியாது.

ஆல்யாவைப் பொறுத்தவரையில், அவள் ஒவ்வொரு நாளும் காலைவேளையில் விடாமுயற்சியுடன் பாடகி லத்தீஃபாவின் பிரபலமான பாடல்களை அற்புதமாகப் பாடத் தொடங்கியிருந்தாள். அந்தப் பாடல் பயிற்சியானது, வழக்கமாக அவளது தந்தை வேலைக்குச் சென்ற பிறகும், அவர் வழக்கம் போல பலத்த குரலில் கத்துவதற்காகவே வீடு திரும்புவதற்கு முன்பும் நடந்தேறியது.

ஆல்யாவுடைய அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை  அவளது தந்தையின் காலையிலும், மாலையிலுமான கூச்சல்கள் மற்றும் லத்தீஃபாவின் இசைக்கேற்ப பாடல்களைச் சொந்தமாக இட்டுக் கட்டிப் பாடும் அவளது குரல் ஆகியவற்றைக் கொண்டு என்னால் அவதானிக்க முடிந்தது. அவள் லத்தீஃபாவின் இசையை நிறுத்திவிட்டு, மிகுந்த ஆர்வத்துடன் தனது சொந்தப் பாடல்களை மெட்டுக்கட்டிப் பாடத் தொடங்கியபோதுதான் அவள் முதன்முதலாகக் காதலில் விழுந்திருப்பாள் என்பதாக நான் கருதினேன்.

நிலைமை இவ்வாறிருக்கும்போதுதான் ஒரு நாள் மாலை நேரம் அவர்களது வீடு தலைகீழாகப் புரண்டது போல ஒரு பயங்கரமான சத்தத்தை நாங்கள் கேட்டோம். அதுவரை நாங்கள் கேட்டிராத ஒரு பெருங்குரல் அங்கிருந்து எழுந்தது.

கடுமையான பலத்த குரலில் திட்டியவாறே ஆல்யாவின் தந்தை வீட்டுப் பொருட்களையெல்லாம் அவளின் தலையை நோக்கி எறிந்து கொண்டிருந்தார். அவள் மீது மட்டுமல்லாமல், அவளை ஒழுங்காக வளர்க்கவில்லையென்று அவளது தாய் மீதும் பல விதமான சாபங்களையும், அவதூறுகளையும் அவர் சுமத்தினார்.

ஆனால் இந்தத் தடவை பாதிக்கப்பட்ட ஆல்யாவின் குரலானது தன்னிச்சையாக, தனது குரல் திறமையைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவது போல தைரியமாக வெளிப்பட்டு  எல்லோருக்கும் கேட்கக் கூடியதாக ஓங்கி ஒலித்தது. 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு நாங்கள் எவரும் பயன்படுத்தாதிருந்த சிதிலமடைந்த அந்தக் கட்டடத்தின் மூலைமுடுக்குகளைக் கூட அவளது அந்தக் குரல் உலுக்கியது.

தொடர்ந்து, உடைந்த தளபாடத் துண்டுகளால் ஆல்யாவின் தேகம் தாக்கப்படும் பலத்த ஓசையை நாங்கள் கேட்டோம். இறுதியாக டாக்டர் விளையாட்டை விளையாடிய காலத்திற்குப் பிறகு அவளது பிஞ்சு தேகம் அவ்வளவாக வளர்ந்திருக்கவுமில்லை. பின்னர் எரிவாயு சிலிண்டர், இரவு விளக்கின் தாங்கி, காலணி அடுக்ககம் என்பவற்றாலும் அவள் தாக்கப்பட்டாள்.

ஆல்யா தனது தாயிடமும், தங்கைகளிடமும் உதவி கோரிக் கதறியவாறே வீட்டின் தலைவாசலை நோக்கி ஓடினாள். வாசலருகே வைத்து தந்தையின் தாக்குதலை முறியடிக்கும்விதமாக அவர்கள் அவளைச் சூழ்ந்துகொண்டு ஓர் அரண் போல நின்றார்கள். ஏதோ அந்தக் காட்சியைக் காணச் சகிக்காமல் அந்தக் காட்சியின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிக்க விரும்புவது போலவும், தனக்குப் பின்னால் கூடியிருக்கும் அயல்வாசிகளின் கனத்தாலும் அந்தத் தலைவாசல் கதவு நடுங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த இரண்டரை மணி நேரத்தில், அங்கிருந்த ஒவ்வொருவரும் பேசிக் கொண்டவற்றின் மூலமாக என்ன நடந்திருக்கிறது என்பதைத் தாமாகவே கண்டுபிடித்து விட்டிருந்தோம். பல்கலைக்கழகத்தில் அவள் தனது சக மாணவனைக் காதலிப்பதாகவும், தனது தந்தை மதிய நேர உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது அவள் அவரை ஏமாற்றி விட்டு அவனோடு நைல் நதிக்கரையோரமாக நடந்து வரப் போனதாகவும் ஒரு கதை அடிபட்டது. அவள் முதலாமாண்டு இறுதித் தேர்வில் தோற்று விட்டதாக மற்றுமொரு கதை அடிபட்டது. எது எப்படியிருந்தாலும் அவள் தனது குடும்பத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டாள் என்றுதான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

இனிமேல் ஆல்யா தனது வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்தால் ஒன்றோ அவளைக் கொன்று விடுவதாகவும், இல்லாவிட்டால் அவளது தாயை விவாகரத்து செய்து விடுவதாகவும் அவளது தந்தை சபதம் எடுத்திருப்பதை நாங்கள் இரண்டு நாட்களின் பின்னர்தான் அறிந்து கொண்டோம். அவளுக்கு பல்கலைக்கழகத்துக்குப் போகவும், கல்வியைப் பூர்த்தி செய்யவும் கூட அவர் தடை விதித்திருந்தார்.

அன்றுதான் கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக ஆல்யா எங்கள் வீட்டு அழைப்பு மணியை அடித்தாள்.

அவளது முகம் மோசமாக நீலம் பாரித்துச் சிதைந்திருந்தது, முதுகு வளைந்திருந்தது, கண்கள் வீங்கிப் போயிருந்தன. முகத்தில் காணப்பட்ட வீக்கங்களாலும், நிறமாற்றத்தாலும் அவளது முக அமைப்பே மாறிப் போயிருந்தது. அத்தோடு அவளது வலது கையைச் சுற்றிக் கட்டுப் போடப்பட்டிருந்தது.

நான் அவளைக் கட்டியணைத்து ஆதரவாக அரவணைத்துக் கொள்ள விரும்பினேன். எனது அறையோ எமது குழந்தைப் பிராயத்தில் இருந்தது போலவே இப்போதும் அப்படியேதான் இருந்தது.

அவளை எனது அறைக்குள் அழைத்தேன். என்றாலும் அவளுக்கு என்ன ஆறுதல்  சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.  “வா, நாங்கள் டாக்டர் விளையாட்டை விளையாடுவோம்” என்று ஆல்யா அறை வாசலைக் கடக்கும்போது கவலையாகவும், சோர்வாகவும் கூறினாள். நான் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டு சிரித்தேன்.

Author

  • எம். ரிஷான் ஷெரீப் (M. Rishan Sheriff) இலங்கையைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க நவீன தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இலங்கையின் கேகாலை மாவட்டம், மாவனல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஊடகத்துறையிலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பங்களிப்பு செய்து வருகிறார். 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் கட்டுரை எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். குறிப்பாக, பாலஸ்தீன மற்றும் உலகச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது இலக்கியப் பணிகளுக்காக இலங்கை அரச சாகித்திய விருது, கனடா இயல் விருது, இந்தியாவின் வம்சி மற்றும் வாசகசாலை விருதுகள் எனப் பல சர்வதேச மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பிடத்தக்க நூல்கள்: அம்மா (நாவல்) அப்பா (உலகச் சிறுகதைத் தொகுப்பு) ஆகம் (சிங்கள நாவல் மொழிபெயர்ப்பு) மருத்துவக் குறிப்புகள் அல்லாதவை

Related posts

சமன்பாடில்லா சமவெளிப் பயணம் -12 (இறுதிப் பகுதி)

வலைப்பூ – 4

ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்