திரைப்பாடல்கள், தமிழ்த் திரைப்பட வரலாறு, அரசியல், என் எல்லைக்குட்பட்ட இலக்கியம் அனைத்தும் என் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாமல் இருப்பவை. எனக்கு மட்டுமல்ல; ‘அவனுடைய’ இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் அப்படித்தான். பெயருக்காக அவன் தமிழ் மக்களை அழைக்கவில்லை, அவர்களுடன் அவர்களாகவே அவனும் இருக்கத்தான் அப்படி அழைத்தான். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தேழிலிருந்து பாரதிராஜா தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் வாழ்க்கை வரலாற்றின் பக்கங்களில் இணைந்தவன்.
பதினாறு வயதினிலே வெளியானபோது எனக்கும் பதினாறு வயது. சென்னை மிட்லண்ட் திரையரங்கில் பதின்ம வயது நண்பர்களுடன் திரைப்படத்தைப் பார்த்தோம். படம் முடிந்து சில நிமிடங்களுக்கு இருக்கையை விட்டு எழத் தோன்றவில்லை; அழத் தோன்றியது. வழக்கமாக ‘வணக்கம்’ பார்த்ததும் கிடைக்கும் படம் முடிந்த உணர்வு அன்று கிடைக்கவில்லை. மயில் காத்திருப்பாளே, சப்பாணி நலமாகச் சிறையிலிருந்து திரும்புவானா என நினைக்கத் தோன்றியது. எதையோ திரையரங்கில் விட்டுச் செல்வது போன்ற உறுத்தல் இருந்தது.
எம்ஜியார் – சிவாஜி சகாப்தம் முடிந்து கமல் – ரஜினி சகாப்தம் தொடங்கிய காலம். எம்ஜியார் முதல்வரானார், ‘சிவாஜியின் திரையுலக சகாப்தம் முடிந்ததா?’ என வார இதழில் கட்டுரை எழுதினார்கள். அது நான் இந்தியின் பக்கம் தலைசாய்ந்த நேரமும்தான். சித் சோர், சோட்டி சி பாத் என்றெல்லாம் பாசு சட்டர்ஜியின் ‘ஃபீல் குட்’ வகையறாக்கள் சாந்தம் திரையரங்கில் சௌகார்பேட்டைவாசிகளை வைத்தும், எலீட் அல்லது எலீட் ஆக முயற்சி செய்த தமிழர்களை வைத்தும் அமைதியாகக் கல்லா கட்டின. அப்போது வீசிய பாரதிராஜாப் புயல் இந்திப்பக்கம் நான் முழுவதும் சாய்வதைத் திசை மாற்றியது.
கிழக்கே போகும் ரயிலுக்குப் பின் தேவர் ஃபிலிம்ஸின் ஒரு விழாவுக்கு பாரதிராஜாவைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். விழா எதற்கென நினைவில் இல்லை. விழா திருவல்லிக்கேணி என்.கே.டி. கலாமண்டபத்தில் நடந்தது. பாரதிராஜாவும் அவருடைய அப்போதைய கண்டுபிடிப்பான சுதாகரும் வந்திருந்தனர். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். நாங்கள் அப்போது குடியிருந்த ஜவாஹர் உசேன் தெருவிலிருந்து என்.கே.டி. கலாமண்டபம் எத்தனை மீட்டர் தூரம் எனக் கூகுளில் பாருங்கள், 350 மீட்டர் தூரத்தைக் காட்டும், அவ்வளவுதான். நானும் நண்பன் யூனுஸும் சென்றிருந்தோம். வாசலிலிருந்து பாரதிராஜாவை விழாக்குழுவினர் அழைத்துச் செல்கையில் நாங்கள் மிகவும் அருகில் இருந்தோம். கிட்டத்தட்டத் தொட்டுவிடும் தூரத்தில் அவன் எங்களைக் கடந்தான். அதுதான் பாரதிராஜாவின் குரலை மேடையில் முதலில் கேட்டது. பிறகு அது இனிய தமிழ் மக்களை அழைக்கும் குரலானது வரலாறு.
வாஹினி ஸ்டுடியோவில் ஏ.சி.திருலோகச்சந்தரின் எடிட்டர் பி.கந்தசாமியின் எடிட்டிங் அறை எண் 7. கந்தசாமியிடம் என் மாமா உதவி எடிட்டராக இருந்தார். எஸ்.எஸ்.பாரூக் – பழைய திருலோகச்சந்தர் படங்களைப் (அவன்தான் மனிதன், ராதா) பார்த்தால் அவர் பெயர் டைட்டிலில் வரும். பள்ளி மாணவனாக இருந்த நாள்களில் மாமாவைப் பார்க்க வாஹினி சென்றதுண்டு. ‘எடிட்டிங்கில் கந்தசாமி சார் ரூம் – பாய் வரச்சொன்னார்’ எனக் காவலாளியிடம் சொன்னால், உள்ளே செல்ல அனுமதிப்பார்.
வாஹினியின் இரண்டு காளைகளைக் கடந்து நேராகச் சென்று இடப்புறம் திரும்பும் தெருவில், திரும்பியதும் பெரிய ஒலிப்பதிவுக் கூடம் இருக்கும். அதைக் கடந்து தெருவில் தொடர்ந்தால் வரிசையாக எடிட்டிங் அறைகள்.
‘வாடா’ என என்னை அழைத்த பின் – கந்தசாமி சாரிடம் திரும்பி, ‘தங்கச்சி பையன் சார். பேச்சுப்போட்டியில் பிரைஸ்லாம் வாங்கிருக்கான். பிரைஸ் வாங்குன புக்ஸைக் காட்ட வந்திருக்கான்’ என்பார் மாமா.
அந்த வரிசையில் சண்டியின் எடிட்டிங் அறை முன்னாலேயே வரும், எண் 6 அல்லது 5ஆக இருக்கலாம். அறை எண் 7இல் வேலை இல்லாத நாள்களில் மாமா எடிட்டர் சண்டிக்கும் உதவியாளராக இருப்பார்.
சண்டிதான் சிகப்பு ரோஜாக்களின் எடிட்டர்.
சிகப்பு ரோஜாக்கள் எடிட்டிங் நடந்த நாள்களில் மாமா வீட்டுக்குப் போனால் பாரதிராஜா புராணம்தான். “பிச்சு உதறியிருக்கார்ரா டைரக்டர்” இதை மாமா ஐந்து முறைகளாவது சொல்லியிருப்பார். பூனையின் சத்தம், ஸ்ரீதேவி பணிபுரியும் கடையைக் காட்டும் காட்சிகளின் வெட்டி ஒட்டல் போன்ற காட்சிகள் வெட்டி ஒட்டப்பட்ட விவரங்களை எடிட்டிங் போலவே துண்டுத்துண்டாக மாமா சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சிகப்பு ரோஜாக்களுக்குப் பின், பாக்கியராஜுக்கு வசனங்களை வெள்ளைத்தாளில் நகலெடுத்து எழுதும் வேலைக்குத் தமிழ்க் கையெழுத்து நன்றாக இருக்கும் ஒரு இளைஞன் தேவைப்பட்டான். மாமா => சண்டி => பாரதிராஜா => பாக்கியராஜ் என்னும் பரிந்துரை வரிசையில் எனக்கு அந்த வேலை கிடைக்க வாய்ப்பு இருந்தது. அப்போது இயந்திரப் பட வரைவாளனாகும் கனவில் எண்ணூரிலும், கிண்டியிலும், புளியந்தோப்பிலும், அம்பத்தூரிலும் சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகளின் கதவுகளை நான் தட்டிக்கொண்டிருந்த நேரம்.
இயந்திரப் பட வரைவாளரானால் சம்பளத்துக்கு உத்தரவாதம் உண்டு. டிப்ளமோ, இன்ஜினீயரிங் என மாலை நேரத்தில் படித்து எப்படியும் பொறியாளராகி சேட்டக்கிலோ லாம்ப்ரெட்டாவிலோ வேலைக்குச் செல்லலாம். வசனத்தைப் பிரதியெடுக்கப் போனால் வருவாய்க்கும் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் இல்லையென்பதால், அன்று அழகாக இருந்த என் தமிழ்க் கையெழுத்து தலையெழுத்துக்கு உதவாமற்போனது. நாள்கள் கடந்தன.
சென்னை ஆவடி ட்யூப் ப்ராடக்ட்ஸில் வரைவாளரானதும், பேருந்துச் சீட்டு விலையேற்றத்தால் சென்ட்ரல் – ஐஸ் ஹவுஸ் நடந்து வந்து காசை மீதம் பிடிக்கும் நடுத்தரவர்க்கப் பழக்கம் என்னிடமும் இருந்தது. அப்படியொரு நாள் சென்ட்ரல் – பல்லவன் சாலை பாலத்தின் மீது நடந்து வந்தேன்.
டிக் டிக் டிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாடிகாட் முனீஸ்வரன் கோயிலையொட்டி ஏறும் அதே பாலத்தில் நடந்தது. பிற்பகல் நேரம். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அங்கென்ன மக்கள் நடமாட்டம் இருந்திருக்கும். இப்போது போல அன்றைக்கு வண்டிகள் பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் பூஜைக்கு வந்ததில்லை. அன்றைக்கு இத்தனை வண்டிகளும் சாலையில் இல்லை.
பல்லவன் சாலையில் – சென்ட்ரல் பிரிட்ஜில் மக்கள் நடமாட்டமே இருக்காது.
நான் மட்டும் தனியாகப் பேருந்துச் சீட்டுப் பணத்தை மீதம் பிடிக்க சென்ட்ரல் – ஐஸ்ஹவுஸ் நடந்து வந்துகொண்டிருந்தேன். சென்ட்ரல் பிரிட்ஜில் ஆள் நடமாட்டம் இருக்காது என நினைத்த படப்பிடிப்புக் குழுவுக்கு ஒற்றை ஆள் பொறுமையாக நடந்து வருவதால் ‘ஃபீல்டு கிளியர்’ கிடைக்கவில்லை. பரபரவெனப் படக்குழுவினர் என்னிடம் சொல்வது என்னவென எனக்கும் புரியவில்லை.
‘யோவ் சீக்கிரம் நடய்யா’ என யாரோ ட்ரக்கின் உள்ளே இருந்து கையைக் காட்டினார்.
அவர் கமல் சார் என்றால் இப்போது யாரும் ஏற்கப்போவதில்லை. அதனால், அந்த ‘யோவ் சீக்கிரம் நடய்யா’ எனச் சொன்னவர் யாரோ ஒரு உதவி இயக்குநர் எனச் சொல்லிச் செல்கிறேன். எனக்கு மாமாவின் மூலமாகவும், என் நண்பன் திரைப்பட சண்டைக் கலைஞன் ரஃபி, ஸ்டண்ட் மாஸ்டர் ஹயாத் இவர்களின் மூலமாகவும் படப்பிடிப்பில் ‘ஃபீல்டு கிளியர்’ என்னும் வார்த்தை அறிமுகமாகியிருந்தது. அந்த ‘ஃபீல்டு கிளியர்’ மூளையைத் தாக்கியதும், படப்பிடிப்பு எல்லையை விறுவிறுவெனக் கடந்தேன்.
கடந்து திரும்பிப் பார்த்தால், ஒரு ஸ்டெப்னி டயரின் பின்னே கமல் – ‘போலி’ இல்லாமல் ஓடினார். பாரதிராஜாவையும் பார்த்தேன். அது இரண்டாம் முறை நேரில் கண்டது.
அலைகள் ஓய்வதில்லை வெளியான காலகட்டத்தில் மேட்டூர் அணைக்கட்டின் கீழ் அமைந்திருக்கும் மின்சார வாரியப் பணிமனையில் வரைவாளர் பணியில் அமர்ந்து சில நாள்களே ஆகியிருந்தன. கருமலைக் கூடல் திரையரங்கில் அலைகள் ஓய்வதில்லையைக் கண்டு, ராதா ‘தேங்க்ஸ்’ சொல்லும் அறிமுகக் காட்சியில் வீழ்ந்த லட்சக்கணக்கானவர்களுடன் நானும் வரிசையில் நின்றேன்.
மேட்டூர் பழக்கப்பட்ட பின் காதல் ஓவியம் வெளியானது. காவிரிக் கரையின் ஓரத்தில் அமைந்திருந்த எம்டிசி காவேரி திரையரங்கில் அதைக் கண்டேன். என் நண்பன் குமாரும் நானும் முதன்முறை கேட்டதுமே ‘பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்’ மனப்பாடமாகியிருந்தது. இப்போதும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் ‘கனவினில் எந்த உயிரில் உறவாடி’யில் தொடங்கி ‘…நெஞ்சில் நின்று ஆடும்’ வரையில் அடிபிறழாமல் ஒப்பிக்க என்னால் இயலும்.
‘மண்வாசனை’யை சவூதி அரேபியாவில், ரியாத் நகரில், ஈடிஏ நிறுவனக் குடியிருப்பின் தொலைக்காட்சிக்கூடத்தில் பார்த்தேன். அந்த நினைவலைகளை இப்போது என்னால் குறுநாவலாக எழுத முடியும். அதில் ஒரே ஒரு பிரச்சினை, அன்றைக்கு மண்வாசனையை நுகர்ந்த அனைவரும் இப்போது அறுபத்தைந்து அகவைகளைக் கடந்த முதியவர்களாகி நிற்கிறோம். எங்களில் சிலர் அப்போது ரேவதி ரசிகர் மன்றம் வைத்தோம். எப்படிப் புனைவாகக் கதாபாத்திரங்களை எழுதினாலும், பழைய ஈடிஏ நண்பர்கள் நாவலைப் படித்தால் ஆட்களை அடையாளம் கண்டுகொள்வர். ‘ஆசாத் என்ன இதையெல்லாம் நாவலாக்கிட்டான்’ என அவர்கள் நினைக்க வாய்ப்பு உண்டு. இந்த வயதில் எனக்கு அந்தப் பிரச்சினை தேவையா? குறுநாவல் எண்ணத்தைக் கைவிடுகிறேன்.
ரியாதிலிருந்து ஜித்தாவிற்கு மாற்றலான காலகட்டத்தில் ‘கடலோரக் கவிதை’யின் ‘ஆத்தாடி இளமனசொண்ணு றெக்கை கட்டி பறக்குது’ பாடல் பத்து ரியால் சைனா வாக்மேனில் எத்தனை இரவுகளில் காதுகளில் ஒலித்தது எனக் கணக்கில்லை.
இப்படியாக பாரதிராஜா உண்டாக்கிய தாக்கங்களுடன் இந்த நாள் தொடர்கிறது.
‘என் இனிய தமிழ் மக்களே’ என அழைத்தவன் என் வாழ்க்கை வரலாற்றிலும் இருப்பான்.
அஞ்சலி..