[பறத்தலின் மொழி]
1.
புழுதியில் ஒரு இறகு
புரட்டுகிறது காற்று.
தரையில் வானம்.
2.
கரையும் மாலைக்காகம்
இறக்கைகளுக்குள் மடங்கும் பகல்
பதிலளிக்கும் மெளனம்.
3.
சிறகுக்கு வழிவிடும் பனி
நகர்கிறது காலை
காற்றின் பாதையில்.
4.
மேலெழும் தேநீர் ஆவி
கடை உத்திரத்தில் குருவி
கோப்பையின்றி வெதுவெதுப்பு.
5.
அமைதியான நீர்
ஒற்றைக் காலில் கொக்கு
மங்கும் மாலை.
6.
காரிருள்
இரு ஒளிப்புள்ளிகள்
ஆந்தையின் கண்கள்.
7.
வெள்ளி மேகங்கள்
மழையில் நனைந்த புறாக்கள்
சொட்டச் சொட்டத் தெருக்கள்.
8.
சாம்பல் வானம்
பச்சைக்கிளியின் கீச்சு
மறுக்கிறது புயலோடு கரைய.
9.
ஒலிகளோடு விடியல்
விவாதத்தில் பறவைகள்
எவர் பக்கமும் இல்லை சூரியன்.
10.
பறவை சென்ற பின்னும்
ஆடுகிறது கிளை
தீண்டலின் நினைவில்.
*
-ராமலக்ஷ்மி
-
ராமலக்ஷ்மி :
எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.
இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.