“ஹாய்… ஆராவமுதன் ஹியர்.. என்ன குரல் நடுங்கறதுங்கறேளா? பின்ன டீக்கடைக்காரன் சொன்ன விஷயம் அப்படி! ‘அதோ அந்தக் கடைசி வீடுதான்.. ஆனாக்க அங்க ஒரு பொண்ணுகுட்டி மரிச்சுப்போயி.. நேத்து.. அதுக்கா வந்துருக்கீங்க?’ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. காலடியில் பூமி விலகுகிறது என்பார்களே, அதானா…?”
ஆட்டோவை அனுப்பிவிட்டு டீக்கடையில் இருந்த சேரில் அமர்ந்தேன். “ஒரு டீ போடப்பா.” நான் என்ன செய்யப்போகிறேன்? ‘அனந்த் – ஆயுஷி ஜோடிப் பொருத்தம் நன்றாய் இருக்கிறது’ என்றுதானே சொன்னேன்? சும்மா கிண்டலாகச் செய்துகொண்டிருந்தேனே… ஆயுஷி அல்பாயுஷியாகவா ஆக வேண்டும்? மடமடவென ஃபோனை எடுத்து அனந்த் அனுப்பியிருந்த புகைப்படத்தைப் பார்த்தேன்.
“சார் டீ!”
டீ சுவாரஸ்யமில்லாமல் உதட்டில் பட்டு ஒரு சிப் செய்து கீழே வைத்தேன். ஆயுஷி.. அழகியே.. என் மாட்டுப் பொண்ணே.. இப்படிப் போகலாகுமா? உன் குரலை நேரில் கேட்காமல் போய்விட்டேனே! ஆறில் சாகலாம் அறியாத வயசு, ரொம்ப காலம் வாழ்ந்துவிட்டுச் சாகலாம் அது நிறைய வயசு.. ரெண்டுங்கெட்டானாகச் சாகிறதே இருக்கிறதே, அது ரொம்பக் கொடுமை… சொன்னது யார் தேவிகாவா?
மனிதராய்ப் பிறந்து நின்று
மலரென மலர்ந்து காய்த்துக்
கனிகொளும் பருவ மெய்தி
களிப்புடன் இருந்து மெல்லப்
பனியென முதுமை சூழ
பக்குவ மனமும் பெற்று
தனியெனப் பயணம் செய்யும்
சக்கரம் நமது வாழ்வே..
இதுபோல பாதியில் போகலாமா? அதுகூட இல்லை, கால் பாகம்தான் ஆயுஷி.. என் மாட்டுப் பொண்ணாய் வரவேண்டியவள். என் மாட்டுப்பொண்ணே.. மாட்டுப் பொண் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா உனக்கு? வேறு இடத்தில் பிறந்து வளர்ந்து இங்கு எங்கள் வீட்டுக்கு வந்து, எங்களது சுகதுக்கங்களில் கலந்துகொண்டு, என் பையனுடன் இருந்து, எங்களன்பில் மாட்டும் பெண்ணடி நீ.. இப்படியா செல்வது?
இவனிடம் மேற்கொண்டு தகவல் கேட்கவும் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அனந்திற்குச் சொல்லிவிடலாமா? யெஸ்.. நெட்வொர்க் இருக்கிறதா? அதிசயமாய் இருக்க, “ஆயுஷி இஸ் நோ மோர்” என அனுப்பினேன். கொஞ்சம் ஸ்தம்பித்துப் போயிருந்தேன்.
“சார் டீ தணிக்கானு?”
“ஓகே” என்று ஒரே மடக்காய்க் குடித்தேன்.
“சிகரெட்..?”
பதினைந்து வருடம் முன் விட்ட வழக்கம்.. “கொடுப்பா!” இரண்டு வாங்கி மடக் மடக்கென குடித்து முடித்தேன். படபடப்பும் குறையவில்லை, சோகமும் குறையவில்லை. பல இறப்புகள் பார்த்திருக்கிறேன்.. பட்.. இது… அனந்த்திற்கு ஏற்பட்ட இழப்பு.. ஓ காட்! யாரைப் பார்த்து எப்படிக் கேட்பது? என்ன கேட்பது?
மெல்ல நடந்தேன். தனி வீடு.. கொஞ்சம் பெரிதானதுதான். காம்பவுண்ட் திறந்திருக்க உள் நுழைந்தேன். பல பேர் வருவதும் போவதுமாய் காம்பவுண்டைச் சுற்றி இருக்க, தரை ஈரமாய் இருந்தது. உள்ளே சென்றேன். பெரிய ஹால், உள் செல்லும் மாடிப்படிகள் மேலறைகளுக்கு… யார் எனச் சொல்லப் போகிறேன்?
“யாராணு?” திரும்பினேன். ஒரு வெள்ளை செட்டு முண்டு மலையாள உடை அணிந்த வயதான அம்மணி.. ஆயுஷியின் அம்மாவோ?
“நான்… ஆயுஷியின் ஆஃபீஸ் ஃபிரண்டோட ரிலேட்டிவ்..” என்றேன். ஆங்கிலம் தெரியுமா இவளுக்கு? தெரிந்தாற்போல சுவடே இல்லையே!
“இரிக்கு” என்று சொன்னவள் உள்ளே சென்றாள். ஒருவேளை ஆயுஷியின் அப்பாவை அழைப்பதற்காய் இருக்கலாம். கால்சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தால் அங்கு நின்றிருந்தது… அங்கு நின்றிருந்தது ஆயுஷி.. ஆயுஷியே தான்!
என்னை அறியாமல் கண்ணில் நீர் வந்தது. எழுந்தேன். “ஆயுஷி.. ஆயுஷி.. ஆர் யூ ஆல்ரைட்?”
ஆயுஷி கண்ணில் ஒரு சின்ன குழப்பம், பின் தெளிவு. ஓ வாட்ஸ்அப் குட்டிப் புகைப்படத்தில் அனந்த் காட்டிய சித் இவர்தானா? “அனந்த்தின் சித்தப்பா நீங்களானு?”
“யா ஆயுஷி…”
“உக்காருங்க.. ஆயா ஒரு சாய்.. சொல்லுங்க இவ்ளோ தூரம் தேடி வந்து ஏன் கண்ல கண்ணீர்?”
“ஆயுஷி.. அந்த டீக்கடை.. அந்த ஆள்.. சம்படி டைட்னு சொன்னான்..” கொஞ்சம் தடுமாறினேன்.
ஆயுஷி கொஞ்சம் சோகமானாள். “ஆம்.. என் அத்தை.. வயதானவர்தான்.. ஆனால் என் அப்பாவின் பிரியமான தங்கை.. ஓ.. நான் போய்ட்டேன்னு நினைச்சேளா?” மெலிதாகச் சிரித்தாள்.
“தெரியலை ஆயுஷி.. ஆனா பதறிட்டேன் நீயோன்னு!”
“ஓ.. ஸோ ஸ்வீட்.. ம்ம் நான் தான் இருக்கேனே. ப்ளீஸ் காம்டவுன் சித்பா!”
சாய் வர, “வேண்டாம் இப்போதுதான் சாப்பிட்டேன்..” என்றேன்.
“சித்பா.. பீ கம்ஃபோர்ட்டபிள். இவ்ளோ டிராவல் பண்ணி வந்திருக்கீங்க.. அப்பா வெளிய போயிருக்கார்.. அண்ட் யெஸ்டர்டே அத்தையோட எல்லாம் முடிஞ்சுடுத்து.. வாங்க” மேலே அழைத்துச் சென்று ஒரு ரூம் காட்டினாள். “இங்க கொஞ்சம் ஃப்ரெஷ் அப் பண்ணிக்கோங்கோ..”
“எனக்குத் டிரெயின்…”
“அதெல்லாம் அப்புறம், நாளைக்குப் போய்க்கலாம்…. என்ன என்கூட பேசாமலா போயிடுவீங்க?”
“ஆயுஷி..”
“சொல்லுங்க சித்பா”
“உனக்கு ஒண்ணுமாகலையே? இருமல்னான், வெளிறிச் சிரிச்சேன்னான், கண்ணுல சோகம்னான் ஆயுஷி.. என்னாச்சு ஏன் சடன் ட்ரிப்?”
பெட்டில் அமர்ந்தேன், அவளும் அமர்ந்தாள். “அதா சித்தப்பா.. எல்லாம் இந்த அத்தைதான்… கண் மூடறதுக்குள்ள எனக்குக் கல்யாணம் செஞ்சுடனும்னு சொல்லிண்டிருந்தா.. அதுவும் எங்க வழக்கப்படி.. பட் ஐயாம் இன் லவ் வித் அனந்த்.. என் அப்பாகிட்ட மெல்லச் சொல்லலாம்னு இருந்தேன். இன் ஃபேக்ட் நெக்ஸ்ட் வீக் மாப்பிள்ளை வீட்டுக்காரரெல்லாம் வர மாதிரி பண்ணியிருந்தார்..”
“ஓ!”
“இது எனக்கு மஸ்கட்ல தெரியாது.. பட் எனக்கு அனந்த் என்னை விட்டுட்டுப் போய்டுவாரோன்னு ஒரு பயம்.. அல்லது நான் திரும்பியே வரலைன்னா கஷ்டப்படுவாரோன்னு பயம்.. அதனால…”
“அதனால?”
“சிங்கப்பூர் மாப்பிள்ளை எக்ஸட்ரான்னு கொஞ்சம் பொய் சொன்னேன்.. ஒ மை காட், எனக்கு உடம்பு முடியலேன்னு நினைச்சுடுத்தா..”
“பின்ன லக்கேஜ் அது இதுன்னு பேசினயாமே?”
முறைத்தாள். “அதை உங்ககிட்ட சொல்லிடுத்தா? ம்ம்.. அது என்னோட சினேகிதி பேசின வார்த்தைகள் அவளோட ஃபியான்ஸ் கிட்டக்க. சடனா நினைவுக்கு வர, அனந்த் வெறுக்கணும்னு பண்ணேன்..”
“அப்ப?”
“இனிமேல்தான் அப்பாகிட்ட பேசணும்.. நீங்க பேசறீங்களா..?”
“ஹேய், அத்தை போயிருக்காங்க, இப்ப எப்படி..?”
“அவங்க ரொம்ப நாளா சிக்கா இருந்தாங்க.. நேற்று ஹார்ட் அட்டாக்.. ஆனா.. கொஞ்சம் போஸ்ட்போன் பண்ணலாம் மேரேஜை.. சரி அதை நான் பார்த்துக்கறேன். என் கலீகோட அங்கிள்னு என் அப்பாகிட்ட சொல்றேன்.. நாளைக்குப் போலாம்.. ஆமாம், அனந்த் ரொம்ப பதறிட்டானா என்ன…?”
அனந்த்.. அனந்த் அடடடா… பின் தான் எனக்கு நினைவே வந்தது. அச்சச்சோ! இவ போய்ட்டான்னு தப்பா மெசேஜ் கொடுத்துட்டேனே..
“ஆயுஷி.. ஆயுஷி.. ஏன் இங்க நெட்வொர்க் கிடைக்கலை?”
“இப்ப டிரை பண்ணுங்கோ, ஏர்டெல்லா..?”
“ம்”
கடக் கடக்கென அடித்தேன். “ஆயுஷி.. இந்தா பேசு..”
“டைரக்ட் லைன் வேண்டாம்.. உங்ககிட்ட வாட்ஸ்அப் இருக்குல்ல?”
“உன்னோட போன்ல பேசேம்மா..”
“பாவம், ஏற்கெனவே தவிச்சிருக்கும், அழுதுண்டு இருக்கும்ல…”
“ஆயுஷி, உனக்கென்ன சந்தோஷமா அதனால?..”
“இல்ல சித்பா..” அவளுக்கும் கண்ணில் நீர் துளிர்த்தது. “பாவம் அனந்த், கஷ்டப்பட்டுண்டு இருக்கும்ல… டபக்குன்னு போன் அடிச்சா பதறும்ல, கொடுங்க!”
கடகடவென வாட்ஸ்அப் ஓபன் பண்ணி வீடியோ கால் அடித்தாள். “ரிங் போகுது எடுக்கலையே?”
“எடுப்பான் ஆயுஷி..”
“இதுதான் ஆர்யா, வேணுகோபால்” என்றதும் மையமாக ஸ்மைல் செய்து உள்ளே சென்றான் அனந்த். சென்றால் செல்ஃபோன் மணி ஒலித்துக்கொண்டிருந்தது. சித்பாவாக இருக்கும்.. சித்பாதான்.. அட வீடியோ கால்…!
“சித்தப்பா என்ன ஆச்சு?” எனப் பேச ஆரம்பித்தவன் நின்றுவிட்டான். ஃபோனில் தெரிந்த ஆயுஷியின் முகம்.. அவளுக்கென்ன அழகிய முகம்…!
ஒரு நிமிஷம் மூச்சு நின்று வந்தது அவனுக்கு…
“ஆயுஷி.. ஆயுஷி.. ஆர் யூ ஆல்ரைட்…?”
அவளும் கண்ணீர்த்துளியுடன் ‘யெஸ்’ சொல்ல.. தொடர்ந்தது காதல் நாடகம்! ஆனால் தடையும் வந்தது…
(தொடரும்)