நகரச் சந்தையில்
நகர மறுத்து
அடம்பிடிக்கும்
மகளைச் சுற்றி
பறக்கின்றன
நாலு திசையிலும் பலூன்கள்.
ஏதோ ஒரு திசையை நோக்கி
பறக்கத் துவங்கினேன்
வளர்ப்பு நாயைவிட
தொட்டிச் செடியின் பூவை விட
வண்ண மீன் குஞ்சுகளை விட
வாசலில் வரவேற்கும்
செம்பருத்தியை விட
கதவுக்குள் ஒளிந்தபடி
கண்ணாமூச்சி காட்ட
அவ்வப்போது வரும்
எதிர் வீட்டுப் பூனையைவிட
பெரிதாகிப் போனது
என்றோ வாங்கித் தந்த
மரப்பாச்சி பொம்மை
எனதருமை மகளுக்கு.
Author
-
கி. சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். பிறப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் அய்யம்பாளையம். இருப்பு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் நரசிங்காபுரம். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, புன்னகை, ஏழைதாசன், தமிழ்ப் பல்லவி, தினத்தந்தி, தினபூமி, மனித நேயம், புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை, வானவில்,பொற்றாமரை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு இணைய இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் விமர்சனக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1.மின்மினிகள்(1999)2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)4.அன்பு மொழி(2024)5.மீன் சுமக்கும் கடல் (2025)என ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.கோவை மேன்மதி மன்றம் இவருக்கு "தாய்த் தமிழ் காவலர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களில் கலந்துகொண்டு கவி பாடியுள்ளார். உடுமலை இலக்கியக் களம் என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிகிறார்