”வெண்ணிலவைப் போன்ற முகம் கொண்டவள் நீ லகி. உன்னழகில் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்..”
”குபேர்… பக்கத்து நாட்டு இளவரசர்… அழகாக இருக்கிறது நீங்கள் சொல்வது” என கலகலவெனச் சிரித்தாள் லகிமார்…
“ஏன் நான் சொல்வதில் என்ன அழகில்லை?”
“சுல்தான் குபேர்.. நான் ஹரேம் எனப்படும் அந்தப்புரத்தில் இருக்கும் இளவரசி.. இன்று என் தந்தையைப் பார்க்க அரண்மனை வந்தேன்.. வழியில் என்னை அழைத்து இந்த நந்தவனத்தில் தனியாகப் பேசுவதே தவறு.. அதில் என் அழகை வர்ணிக்கிறீர்கள்.. அதுவும் சாதாரணப் பெண்ணின் அழகை..”
“இல்லை லகிமார் இல்லை..” என்றான் குபேர்.. “நானும் உன் தந்தை சுல்தான் மாலிக் ஏஜாஸும் செல்லாத படையெடுப்பில்லை.. அவருக்கும் என் மீது பிரியம் உண்டு.. அவரிடம் கேட்க நினைத்திருந்தேன்.. நீ வரவும் உன்னிடம் சொன்னது தவறா என்ன?”
”எதுவும் தவறில்லை” என்றாள் லகிமார்…
”ஆனால் அன்னிய ஆடவர்கள் முன் நாங்கள் எல்லாம் கண்கள் மட்டும்தான் தெரிய வைத்து முகம் மறைத்துப் பேசுவோம்.. இல்லையா.. இப்போதும் அது போலத்தான் இருக்கிறேன்…. என் கண்களை மட்டும் பார்த்து விட்டு வெண்ணிலா முகம் என்றால் எப்படி…”
”அது வந்து ஒரு ஊகம் எனச் சொல்ல மாட்டேன் லகி.. உன் தந்தையின் அறையில் உன் உருவ ஓவியத்தைக் கண்டிருக்கிறேன்..”
”ம்.. அது இன்னும் தவறு.. நல்ல வேளை நீங்கள் பார்த்ததை தந்தை பார்த்திருக்க மாட்டார் தானே..”
”ஆம்”
”அதானே பார்த்தேன்.. சரி, வழி விடுங்கள். தொலைவில் என் தோழி சித்ராங்கதா காத்திருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்கச் செல்ல வேண்டும்…”
”எனக்கான பதில்?”
”என்ன கேள்வி கேட்டீர்கள் இளவரசே.. ஒரு வாக்கியமன்றோ சொன்னீர்…. இருந்தாலும் ஒன்று சொல்கிறேன் குபேர்.. என் மனதில் இப்போதைக்கு ஒரு எண்ணமும் இல்லை.. என் பிராயமோ வெகு சிறிது.. உங்களையும் ஓரிரு முறைதான் கண்டிருக்கிறேன்.. நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது..?”
”லகி.. லகிமார்..”
”ம்ஹூம்.. என்னைத் தீண்டவெல்லாம் படாது.. சரியா குபேர்.. காலம் வருமா எனத் தெரியவில்லை வருகிறேன்..” எனச் சிரித்து நடந்தாள் லகிமார்..
குபேர் சென்றுவிட தோழியிடம்…”சித்ராங்கதா”
”சொல்லுங்கள் தலைவி..”
“ஹேய் சித்ரா.. என் வயது உனக்கு.. எதற்குத் தலைவி என்றெல்லாம்..”
“இந்த டெல்லியிலிருந்து பஞ்சாப்பை அரசாளும் சுல்தான் மாலிக் ஏஜாஸின் ஒரே புதல்வி, தாங்கள்… ஷாஹென்ஷா கஜினி முகமதுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் உங்கள் தந்தை.. உங்களது பணிப்பெண் நான். பின் எப்படி அழைப்பது..?”
“அது சரி கொஞ்சம் விட்டால் நான் பிறந்த கதை எல்லாம் சொல்வாயடி சித்ரா நீ.. அதுவும் தெற்குப் பக்கம் ஹொய்சளத்திலிருந்து வந்தவள்.. எனக்காக என் பாஷையைக் கற்றவள் நீ.. சரி உன்னைத் திருத்த இயலாது வா தந்தை அறை வரைக்கும்…” என்றாள் லகிமார்..
சுல்தான் மாலிக் ஏஜாஸிற்கு அரண்மனையில் ஓர் அந்தரங்க அறை இருந்தது.. அங்குதான் அவ்வப்போது தங்குவான் அவன்.. அதைத் தட்டினாள் லகிமார்..
ஓலையைப் படித்துக்கொண்டிருந்த ஏஜாஸ் நிமிர்ந்தான்.. முகத்தில் மகிழ்ச்சிப் பூ பூக்க…”லகி வா வா.. என்ன விஷயம்?” என்றான் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு..
மாலிக் ஏஜாஸைப் பொறுத்தவரை படையெடுப்பு என்றால் இதயமில்லாதவன்… எல்லாவிடத்திலும் சென்று கொள்ளையடித்துக் குறிப்பாகத் தென்னாடுகளில் சென்று கோயில் செல்வங்களை எடுத்துச் சேர்த்து கஜினி முகமதுவிடம் அனுப்புவது அவன் வேலை.. ஆனால் மகளைப் பொறுத்தவரை, மன நெகிழ்ச்சியும் வெகு அன்பும் கொண்டவன்..
லகி அவனைப் பார்த்தாள்…”எப்படி இருக்கிறீர்கள் அப்பா?”
“நலமே.. நானே ஹரேமிற்கு வந்து இதைத் தரலாம் என எண்ணியிருந்தேன்.. இந்தா..”
“ஆஹ்.. வெகு அழகு அப்பா… அழகான சிவப்பு நிறம்.. மெல்லியதாக இப்படிக் கூட துணி இருக்குமா என்ன?”
“பின்னே.. இது சீனத்திலிருந்து வந்தது இவளே…”
“அப்பா இந்தத் தடவை கொண்டு வந்த செல்வங்கள் எல்லாம் கஜினி மாமாவிற்கு அனுப்பி விட்டீர்களா?”
“ஆமாம்”
“ஆனால் அந்தக்கோவில் சிலைகள்… நான் பார்க்க வேண்டுமென்று சொன்னேனே..”
“இல்லை லகி.. நீ பார்த்ததற்குப் பிறகுதான் அனுப்புவேன் அந்த விக்ரகங்களை… அவை நம் கஜானா அறையில் உள்ளன.. போய்ப் பாரம்மா..”
“நல்ல அப்பா”… என்றாள் லகி…
கஜானா அறையில் சித்ராங்கதாவுடன் நுழைந்தாள் லகி.. அறை முழுவதும் பொன்னாலான விக்ரகங்கள்.. ஒரே ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்க சற்றே மங்கலாகத் தெரிந்தன..
“சித்ரா”
“தலைவி..”
“போய் ஒரு விளக்கை எடுத்து வா..”
விளக்கை எடுத்து அங்கே அணிவகுத்திருந்த விக்ரகங்களைப் பார்த்துக் கொண்டே வருகையில் ஒரு விக்ரகத்தின் முகத்தின் மேல் நிலைத்தது லகிமாரின் கண்கள்..
“ஆகா.. என்ன அழகு! வெண்ணிலா முகம் என்று என்னைச் சொன்னானே குபேர்.. இவரின் அழகு… வாரே வாஹ்… சித்ரா.. இவர்?”
உடன் வந்த சித்ராவின் கண்கள் கலங்கியிருந்தன… சில சிலைகள் கொஞ்சம் உடைக்கப்பட்டிருந்ததால்… வந்தாள் இவள் அருகில்.
“தலைவி.. இவர் இராமப் பிரியர்… நான் இருந்த ஊரிலிருந்து உங்கள் தந்தை எடுத்து வந்திருக்கிறார்..” என்றாள்..
(தொடரும்)