3. கச்சிக்கச்சியமா – சத்தமிடும் மலை.
முன்னொரு காலத்தில், ஒரு ஜப்பானிய கிராமத்தில் ஒரு விவசாயியும் அவருடைய மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவர்களுடன் ஒரு முயல் நட்பாகப் பழகியது. அவர்களும் முயலுடன் நட்பாக இருந்தனர். அந்த முயலை, விவசாயியும் அவர் மனைவியும் தங்கள் மகளைப் போலப் பார்த்துக்கொண்டனர்.
அந்தப் பகுதியில் ‘ராக்கூன்’ என அழைக்கப்படும் ஓர் அணில் கரடி இருந்தது. அணில் கரடி கீரிப்பிள்ளையைப் போன்ற முகமும் கரடியைப் போன்ற உடலும் கொண்ட விலங்கு. அது கரடியைப் போல் பெரியதாக இல்லாமலும், கீரிப்பிள்ளையைப் போல் சிறியதாக இல்லாமலும் இடைப்பட்ட அளவில் இருக்கும்.
ராக்கூன் என்னும் அணில் கரடி விவசாயிக்கு மிகவும் தொல்லை கொடுத்தது. விவசாயியின் செடிகளை அழித்தது, பயிர்களை நாசம் செய்தது. மேலும் விவசாயியின் மனைவியையும் தாக்கிக் கொன்றுவிட்டது. விவசாயியால் அணில் கரடியை எதிர்த்துச் சண்டைபோட முடியவில்லை. இதைப் பார்த்த முயல் மனம் வருந்தியது. அணில் கரடிக்கு சரியான தண்டனை கொடுக்கவேண்டும் என நினைத்தது.
ஒருநாள் முயல் அழகிய மாறுவேடம் அணிந்துகொண்டு அணில் கரடி வருகின்ற வழியில் நின்றது. மாறுவேடத்தில் அழகாக நிற்கும் முயலைப் பார்த்து அணில் கரடி நின்றது.
“ராக்கூனே, இந்த விறகுக்கட்டைகளை என்னால் சுமக்க முடியவில்லை. நீ எனக்காக இதைச் சுமந்து வருவாயா” எனக் கேட்டது.
“ஆஹா, உனக்காகச் சுமந்து வருகிறேன்” என்று சொல்லிய அணில் கரடியின் முதுகில் முயல் விறகுக்கட்டைகளை ஏற்றிக் கட்டியது.
அணில் கரடியை முன்னால் நடக்கவிட்டு முயல் பின்னால் நடந்து சென்றது. பின்னால் நடந்த முயல் தன்னிடம் இருந்த தீப்பற்ற வைக்கும் சிக்கிமுக்கிக் கற்களை எடுத்து உரசியது. அந்தச் சத்தம் கேட்டு அணில் கரடியால் திரும்பிப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அதன் முதுகில் விறகுச் சுமை இருந்தது.
“அழகியே! அங்கே என்ன ஏதோ உராயும் சத்தம்?” என்றது.
அதற்கு முயல், “ஒன்றுமில்லை ஏதோ பறவை, ‘கர்.. கர்’ எனக் கத்தியது” என்றது.
மீண்டும் முயல் சிக்கிமுக்கிக் கல்லை உரசி அணில் கரடியின் முதுகில் இருந்த விறகில் தீப்பற்ற வைத்தது. தன் முதுகில் இருந்த விறகில் மெதுவாகத் தீப்பற்றி இருப்பதை அறியாத அணில் கரடி மீண்டும் முயலிடம் கேள்வி கேட்டது.
“அழகியே! இப்போது ஏதோ உராய்ந்து எரியும் சத்தம் கேட்கிறதே?” என்றது.
அதற்கு முயல், “ஒன்றுமில்லை, பக்கத்திலிருக்கும் சிக்கிமுக்கி மலையிலிருந்து அந்தச் சத்தம் வருகிறது” என்றது.
அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அணில் கரடியின் முதுகில் இருந்த விறகு தீப்பிடித்து எரிந்து அதன் முதுகைச் சுட்டது. விறகு நன்றாக முதுகில் கட்டப்பட்டு இருந்ததால் அதனால் தீப்பற்றி எரியும் விறகைத் தள்ளிவிட முடியவில்லை. முதுகில் தீக்காயங்களோடு அலறியடித்து ஓடியது.
அடுத்த நாள் முயல் மருத்துவரைப் போல மாறுவேடம் அணிந்தது. மிளகாய்த்தூளை அரைத்துக் களிம்பு போல் கொண்டுவந்தது. அணில் கரடியின் முதுகில் உண்டான தீக்காயங்களுக்கு மருந்து பூசுவதாகச் சொல்லி, மிளகாய்த்தூளைப் பூசியது. அணில் கரடிக்கு முதுகில் எரிச்சல் அதிகமாகி தரையில் விழுந்து புரண்டது. எங்கெங்கோ ஓடியது.
சில நாள்கள் கழித்து ஒன்றும் தெரியாதது போல முயல் அணில் கரடியிடம் வந்து, “நாம் மீன் பிடிக்கப் போகலாமா?” என்றது. அணில் கரடி ஒப்புக்கொண்டது.
“நான் சிறிய முயல், எனக்கு சிறிய மரப்படகு போதும்.. அதை நான் செய்கிறேன். நீ பெரிய ராக்கூன் உனக்குப் பெரிய படகு வேண்டும், அதனால் நீ களிமண்ணால் உறுதியான படகைச் செய்துகொள்” என முயல் அணில் கரடியிடம் சொன்னது. அதுவும் ஒப்புக்கொண்டது.
மரப்படகில் முயலும், களிமண் படகில் அணில் கரடியும் ஏறி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றன. ஆற்று நீரில் கொஞ்சம் கொஞ்சமாகக் களிமண் படகு கரையத் தொடங்கியது. நடு ஆற்றில் களிமண் படகு முழுவதுமாகக் கரைந்து அணில் கரடி ஆற்றில் மூழ்கியது.
“விவசாயியின் மனைவியைக் கொன்றதற்கு இதுதான் தண்டனை” எனச் சொல்லிவிட்டு முயல் தன் மரப் படகில் கரைக்கு வந்தது.