வைக்கோல் செல்வந்தர் (わらしべ 長者)
முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஓர் ஏழை இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் யோசாக்கு. அவன் நல்ல உழைப்பாளி. சொந்தமாக நிலபுலன்கள் இல்லாததால் மற்றவர்களின் நிலத்தில் கடுமையாக உழைத்து விவசாயம் செய்வான். அதில் கிடைக்கும் கூலியை மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொள்வான். அவனுக்கு உறவினர் யாரும் இல்லாததால் அந்த ஊரில் இருந்த மடாலயத்தில் உறங்குவான்.
ஒவ்வொரு நாளும் உறங்குவதற்கு முன் கருணைத்தேவதையிடம், தனக்கு உறங்குவதற்கு ஒரு வீடு வேண்டும் என வேண்டுவான். ஜப்பானிய கருணைத்தேவதையின் பெயர் கன்னொன். ஒருநாள் கன்னொன் யோசாக்குவின் கனவில் தோன்றினார்.
“யோசாக்கு! நீ மிகவும் நல்ல இளைஞன். நீ ஏழையாக இருந்தாலும் இதுவரையில் பொறுமையாகத்தான் உனக்கு வீடு வேண்டும் எனக் கேட்டாய். மற்றவர்களின் நிலத்தில் பொறுப்பாக விவசாயம் செய்கிறாய். உன்னுடைய நல்ல குணத்துக்கு ஒரு வரம் தருகிறேன். காலையில் நீ தொடுகின்ற முதல் பொருள் உனக்கு செல்வத்தைக் கொடுக்கும்!” என்று சொல்லிவிட்டுக் கனவிலிருந்து மறைந்தார்.
அடுத்த நாள் காலையில் எழுந்து வெளியே வந்ததும், கல்லில் இடறிக் கீழே விழுந்தான். விழுந்தவன் எழுந்தபோது அவன் கையில் ஒரு வைக்கோல் சிக்கியிருந்தது. இந்த வைக்கோலா எனக்கு செல்வத்தைத் தரும் என அவன் யோசித்தான்.
அப்போது அங்கு ஒரு தும்பி பறந்துவந்து வைக்கோலின் முனையில் அமர்ந்தது. அவன் அந்தத் தும்பியை வைக்கோலின் முனையில் மென்மையாகக் கட்டினான். வைக்கோலின் ஒரு முனையை யோசாக்கு பிடித்துக்கொண்டான். மறுமுனையில் இருந்த தும்பியும் விர் விர் எனச் சுற்றிப் பறந்தது. வைக்கோலும் தும்பியும் சேர்ந்து அழகிய விளையாட்டுப் பொம்மையைப் போல் இருந்தன.
அந்த வழியாக ஒரு செல்வந்தர் வீட்டுச் சிறுவன் மாட்டுவண்டியில் சென்றான். யோசாக்குவின் கையிலிருந்த வைக்கோல் தும்பியைப் பார்த்து அது எனக்கு வேண்டும் என்றான். அந்தச் சிறுவனின் பாதுகாவலர் யோசாக்குவுக்கு மூன்று ஆரஞ்சுப்பழங்களைக் கொடுத்து வைக்கோலையும் தும்பியையும் வாங்கிக்கொண்டார். வைக்கோலுக்கு மூன்று பழங்கள் கிடைத்ததில் யோசாக்கு மகிழ்ச்சியடைந்தான்.
ஆரஞ்சுப் பழங்களை எடுத்துக்கொண்டு நடக்கும் வழியில் ஒரு பாட்டியைக் கண்டான். பாட்டி மிகவும் பசியாலும் தாகத்தாலும் வாடியிருந்தார். அவரைக்கண்டு அவன் இரக்கப்பட்டுத் தன்னிடமிருந்த மூன்று ஆரஞ்சுப்பழங்களையும் அவருக்குக் கொடுத்தான். அதைச் சாப்பிட்டுத் தன் தாகத்தையும் பசியையும் ஆற்றிக்கொண்ட பாட்டி மகிழ்ந்தார். தன்னிடமிருந்த பட்டுத்துணி மூட்டையை அவனுக்கு அன்பளிப்பாகத் தந்தார்.
இந்தத் துணிமூட்டைதான் கன்னொன் கருணைத்தேவதை சொன்ன செல்வமாக இருக்கும் என அவன் நினைத்தான்.
அவன் மேலும் நடந்து சென்ற வழியில் ஒரு குதிரை படுத்திருந்தது. அதன் அருகில் இரண்டு சாமுராய் வீரர்கள் நின்று அதை எழுப்பிக்கொண்டிருந்தனர். குதிரை எழுந்திருக்கவில்லை.
அப்போது அங்கு சென்ற யோசாக்கு “குதிரைக்கு என்ன ஆயிற்று?” என சாமுராய்களிடம் வினவினான். “குதிரைக்கு உடம்பு சரியில்லை, படுத்துவிட்டது.” என அவர்கள் கூறினர். அவன் குதிரையின் மீது இரக்கப்பட்டான்.
“உடம்பு சரியில்லாத குதிரையை எனக்குக் கொடுத்துவிடுங்கள். நான் உங்களுக்கு இந்தப் பட்டுத்துணிகளை உங்களுக்குத் தருகிறேன்.” என்றான்.
உடம்பு சரியில்லாத குதிரைக்குப் பதிலாக பட்டுத்துணி மூட்டை கிடைத்ததற்கு சாமுராய்கள் மகிழ்ந்தனர். அவர்கள் துணி மூட்டையைப் பெற்றுக்கொண்டு குதிரையை அப்படியே விட்டுவிட்டுப் புறப்பட்டனர்.
யோசாக்கு குதிரையின் உடம்புக்கு என்னவென யோசித்தான். அது களைப்பாக இருக்கும் அதற்குத் தண்ணீர் கொடுக்கலாம் என அங்கும் இங்கும் நடந்து தேடி தூரத்தில் இருந்த குளத்திலிருந்து தண்ணீர் எடுத்துவந்து குதிரைக்குக் கொடுத்தான். குதிரைக்குப் புல் வெட்டிப்போட்டான். தண்ணீர் குடித்த குதிரை எழுந்து நின்று புற்களைத் தின்று ஓய்வெடுத்தது. குதிரைத் தட்டிக்கொடுத்து அதனுடன் நட்பாகப் பேசினான். குதிரை நன்றாகவும் சுறுசுறுப்பாகவும் நடந்தது.
குதிரை ஏறி பாதையைக் கடந்து ஒரு ஊருக்குச் சென்றான். அந்த ஊரிலேயே பெரிய செல்வந்தரின் வீட்டில் சிலர் பயணம் ஏற்பாடுகளில் இருந்தனர். அவன் அந்த வீட்டின் பெரியவரிடம், “ஐயா பயணம் செல்கிறீர்களே உங்களுக்கு இந்தக் குதிரை தேவைப்படுமா?” என்றான்.
“குதிரை இருந்தால் நல்லதுதான். ஆனால், எனக்கு பயணச் செலவும் இருப்பதால் குதிரைக்கு விலை கொடுக்க என்னிடம் பணம் இல்லை.” என்றார். அந்தச் செல்வந்தருக்கு இன்னொரு யோசனையும் வந்தது. “தம்பி இந்தக் குதிரைக்கு விலையாக நான் என்னுடைய நிலத்திலிருந்து சிறிய பங்கைத் தருகிறேன். சம்மதமா?” என வினவினார்.
யோசாக்கு ஒப்புக்கொண்டான்.
நிலத்தைத் தந்த செல்வந்தர் தன் குடும்பத்துடன் பயணம் சென்றார். குதிரையையும் தன்னுடன் ஓட்டிச் சென்றார்.
தனக்குக் கிடைத்த நிலத்தில் அவன் கடுமையாக உழைத்து நெற்பயிர் விளைவித்தான். அவன் உழைப்பாலும் இயற்கை வளத்தாலும் பயிர் செழிப்பாக வளர்ந்தது. அவனுடைய வயல் பார்ப்பதற்கு நிறைவாக இருந்தது.
பல மாதங்களாகப் பயணத்தில் இருந்த செல்வந்தர் ஊருக்குத் திரும்பினார். தான் விலையாகக் கொடுத்த நிலத்தில் பயிர் செழிப்பாக வளர்ந்திருப்பதைப் பார்த்தார். மிகவும் ஆச்சரியப்பட்டார். யோசாக்குவின் உழைப்பைப் பாராட்டினார். அவனுடைய திறமையை வியந்த அவர் தன்னுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள அவனுக்கு சம்மதமா எனக் கேட்டார்.
தனக்கென்று யாருமே இல்லாத அவன் சம்மதம் சொன்னான்.
செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்துகொண்டு, தன்னுடைய உழைப்பால் செல்வத்தை மெலும் பெருக்கிய யோசாக்கு வசதியாக வாழ்ந்தான். கருணைத்தேவதை சொன்ன செல்வம் இதுதான் என அறிந்துகொண்டான். வைக்கோலை வைத்து அவன் உயர்ந்ததால், ஊர் மக்கள் யோசாக்குவை ‘வைக்கோல் செல்வந்தர்’ என அன்புடன் அழைத்தனர்.