- தென்னோமலையில் தவளைகள் (天王山の蛙)
முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால், இரண்டுமே வேறு நகரைப் பார்க்க விரும்பின.
ஒசாகாவில் வசித்த தவளை கியோட்டோவைப் பார்க்க விரும்பியது. கியோட்டோவில் வசித்த தவளை ஒசாகாவைப் பார்க்க விரும்பியது. ஒசாகாவுக்கும் கியோட்டோவுக்கும் இடையே நடந்து செல்வதென்றால், தவளைகளுக்கு அது நீண்ட நடைப்பயணம். ஆனாலும், புதிய நகரைப் பார்க்க விரும்பிய தவளைகள் தங்கள் இடத்திலிருந்து நடக்க ஆரம்பித்தன.
ஒசாகாவையும் கியோட்டோவையும் இணைக்கும் பாதையில் அவை எதிர்த்திசையை நோக்கி நடந்தன. தவளைகளுக்கு அந்த நடை சிரமமாக இருந்தது, கால்கள் வலித்தன, தாகம் எடுத்தது. புதிய நகரைப் பார்க்கும் ஆர்வத்தால் தவளைகள் சிரமத்தை ஏற்றுக்கொண்டு நடந்தன. ஒரு வேலையை நாம் ஆர்வமாகச் செய்தால் அதில் இருக்கும் சிரமங்களை நாம் எளிதாக வெல்லலாம். தவளைகள் அப்படி வென்று, நடந்துகொண்டிருந்தன.
நீண்ட அந்தப் பாதையின் நடுவில் ஒரு மலை இருந்தது. அந்த மலையின் பெயர் தென்னோ மலை. ஒசாகாவிலிருந்து வந்தால் தென்னோ மலையைக் கடந்து கியோட்டோ செல்லவேண்டும். கியோட்டோவிலிருந்து வந்தாலும் தென்னோ மலையைக் கடந்து ஒசாகா செல்லவேண்டும். பாதையில் வந்த தவளைகள் மலையின் அடிவாரத்தை அடைந்தன. மலையின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நின்று யோசித்தன.
இவ்வளவு தூரம் நடந்துவிட்டோம் இந்த மலையைக் கடப்பதற்கு யோசிப்பதா என நினைத்தன. எதிர் எதிர்ப் பக்கத்திலிருந்து மலையில் ஏறின.
பாதையில் நடந்தபோது இருந்த சிரமங்களைப் போலவே தவளைகளுக்கு மலையில் ஏறுவதும் சிரமமாக இருந்தது. அதையும் தாங்கி அவை மலையுச்சிக்கு வந்தன. எதிர் எதிர்ப் பக்கத்திலிருந்து மலையுச்சிக்கு வந்த இரண்டு தவளைகளும் ஒன்றை ஒன்று ஆச்சரியமாகப் பார்த்தன.
ஒசாகா தவளை, கியோட்டோ தவளையைப் பார்த்துக் கேட்டது,
“நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கு செல்கிறாய்?”
“நான் கியோட்டோவிலிருந்து வருகிறேன். ஒசாகாவுக்குச் செல்கிறேன். நீ”
“நான் ஒசாகாவிலிருந்து வருகிறேன். கியோட்டோவுக்குச் செல்கிறேன்”
“ஏன்?”
“ஒசாகாவில் சலிப்பாக இருக்கிறது. கியோட்டோவைப் பார்க்கச் செல்கிறேன். நீ”
“எனக்கு கியோட்டோ சலிப்பாக இருக்கிறது. ஒசாகாவைப்பார்க்கச் செல்கிறேன்.”
இரண்டும் தங்கள் பயணத் திட்டத்தையும் தேவையையும் சொல்லிக்கொண்டன. மலையில் இருப்பதால் அங்கிருந்து நகரின் அழகைப் பார்க்க நினைத்தன. ஆனால், இரண்டும் தவளைகளாகவும் தரையோடு தரையாகவும் இருப்பதால் அவற்றுக்கு நகரின் அழகு தெரியவில்லை.
இரண்டும் யோசித்தன. ஏதாவது மரத்தின் மீது ஏற நினைத்தன, அவற்றால் முடியவில்லை. உயரமான கல்லின் மீது தாவி ஏற நினைத்தன முடியவில்லை. கடைசியில் பின்னங்கால்களில் நின்று கொண்டு முன்னங்கால்களை உயர்த்தி ஒன்றை ஒன்று பிடித்துக்கொண்டு நின்று கீழே பார்க்க நினைத்தன.
ஒசாகா தவளை மலையின் அந்தப்பக்கம் கியோட்டோவைப் பார்க்க நினத்தது. போலவே கியோட்டோ தவளை மலையின் அந்தப்பக்கம் ஒசாகாவைப் பார்க்க நினைத்தது. ஒவ்வொன்றும் பின்னங்காலில் நின்று மெதுவாக எழும்பின. ஒரு தவளையை மற்றொன்று பிடித்துக்கொண்டு எழும்பி நின்றன. ஒசாகா தவளை கியோட்டோவின் திசையிலும், கியோட்டோ தவளை ஒசாகாவின் திசையிலும் பார்த்தபடி நின்றன.
ஆனால், அவை இரண்டும் எழுந்து நின்றால் அவற்றின் கண்களால் பின்னால் இருப்பதைத்தான் பார்க்கமுடியும் என யோசிக்கத் தவறின.
உயர்ந்து எழுந்து நின்று ஒசாகாவைப் பார்த்தபடி நின்றாலும், கியோட்டோ தவளையின் கண்கள் பின்னோக்கி இருந்ததால், அதற்கு கியோட்டோதான் கண்களில் தெரிந்தது.
போலவே, ஒசாகா தவளை கியோட்டோவைப் பார்த்தபடி நின்றாலும், அதற்கு ஒசாகாதான் கண்களில் தெரிந்தது.
இரண்டும் ஆச்சரியப்பட்டன. உட்கார்ந்து யோசித்தன.
“என இது? ஒசாகாவும் கியோட்டோவைப் போலவே இருக்கிறது?”
“ஆம், எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. கியோட்டோவும் ஒசாகாவைப் போலவே இருக்கிறது”
தங்கள் கண்கள் பின்னால் இருந்ததால் தாங்கள் பார்த்தது தங்கள் நகரைத் தான் என்பதை அறியாமலே தவளைகள் பேசிக்கொண்டன. மலையிலிருந்து இறங்கி, சிரமப்பட்டு நடந்து, ஒன்றுபோலவே மற்றொன்று இருக்கும் நகருக்குச் செல்லவேண்டுமா என அவை யோசித்தன.
கடைசியில் வேண்டாம் என முடிவெடுத்தன. அவை தங்கள் ஊருக்கே திரும்பிச் செல்ல முடிவெடுத்தன. கியோட்டோ தவளை தன் பயணத்தைப் பாதியில் முடித்தது. மலையிலிருந்து கீழே கியோட்டோவை நோக்கி இறங்கியது. ஒசாகா தவளையும் தன் பயணத்தைப் பாதியில் முடித்தது. மலையிலிருந்து ஒசாகாவை நோக்கி இறங்கியது. முயற்சியிலும் ஆர்வத்திலும் குறைவில்லாத தவளைகள் தாங்கள் தவறான திசையில் பார்த்ததால், அவற்றால் தங்களுடைய இலக்கை அடைய முடியவில்லை.
தென்னோ மலைத் தவளைகளிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடம் என்னவென்றால் எப்போதும் சரியான திசையில் நம் நோக்கமும் பார்வையும் இருக்கவேண்டும்.