காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்
கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்
வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்
வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்று
பாதகமா ஒன்றுமிலை என்ன செய்ய
பாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்
சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்
சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ
*
ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்து
தேனைக் குழைத்தே தந்துவிடும் – வீணையாய்
உள்ளத்தில் காதல் ஒலியெழுப்பி அங்கேதான்
அள்ளிவிடும் அன்பையுமே ஆம்..
*
கண்ணின் வழியே புகுந்துவிட்டே
கருத்தைக் கொள்ளும் காதலதும்
பெண்ணின் ஆணின் உள்ளத்தை
பேதமை கொள்ள வைத்திடுமோ?
வண்ண வார்த்தை பலப்பலவாய்
வாகாய் நெஞ்சில் முகிழ்த்திடுமே
எண்ணம் முழுதும் ஏற்றமென
எளிதாய் எதிர்பால் சென்றுவிடும்
*
உடலைக் கண்டா வருங்காதல்?
உளத்தில் பூத்த உவகையினால்
மடந்தை தன்னைப் பார்த்தவுடன்
மானிடன் தனக்கே வந்துவிடும்
அடமாய் அவளின் புறவழகும்
அதனில் மேலாம் அகவழகும்
தடமாய் நெஞ்சில் வைத்துவிட
தாவி அங்கே பூத்துவிடும்
*
அழகி அவளோ என்செய்வாள்
அழகன் அவனின் செய்கையெலாம்
பழகும் விதமும் பாங்கான
பண்பும் எல்லாம் பார்த்திடுவாள்
வழமை யான வெட்கமுடன்
வண்ண நினைவாய் அவளுந்தான்
கலகம் புரியும் அவனுருவம்
கண்களுக் குள்ளே பதுக்கிடுவாள்..
*
இருநெஞ்சம் ஒன்றாகிக் கூடும் வேளை
இனிமைபல கொண்டிருக்கும் இதய மெல்லாம்
வருங்காலம் எல்லாமும் பார்த்துப் பார்த்து
வக்கணையாய்ப் பேசவைக்கும் காத லன்றோ
வருடங்கள் பலவான பெரியோரெல்லாம்
வாழ்த்துகள் சொலமாட்டார் காதல் பற்றி
பருவந்தான் செய்கின்ற கோலம் என்பார்
பக்குவந்தான் நெஞ்சத்தில் கொள்ள மாட்டார்..
*
காதலிலே வெற்றியென்று எதனைச் சொல்ல
கடிமணந்தான் வேறுயெது இங்கே சொல்ல
சாதல்வரும் நாள்வரைக்கும் புரிந்து கொண்டே
சிரித்தபடி வாழ்கின்ற வாழ்க்கை தானே
நாதமெனக் காதலர்கள் விட்டுத் தந்தே
நயமுடனே வாழ்கின்ற வாழ்க்கை தானே.
ஆதலினால் காதலினைச் செய்வீ ரென்று
அருங்கவியும் சொல்லிவைத்தான் அன்றே அன்றோ..
*
சாதனை பல்புரியத் தந்துவிடும் எப்போதும்
காதலுணர்வு என்றென்றும் காண்.