எனக்காக வருந்தாதீர்கள்.
நான் திறமையான,
திருப்தியான மனிதன்.
மற்றவர்களுக்காக வருந்துங்கள்
அமைதியின்றி நெளிபவர்கள்,
குறை சொல்பவர்கள்
தங்கள் வாழ்க்கையை
மேசை நாற்காலிகளை அடிக்கடி
இடம் மாற்றுவதைப் போல
மறுசீரமைத்தபடி இருப்பவர்கள்.
துணைகளை மாற்றி
மனோபாவத்தை மாற்றி
வித்தை காட்டுகிறவர்கள்.
அவர்களது
குழப்பம்
நிலையானது
அது அவர்களோடு
பழகும் எவரையும்
தொட்டுவிடும்.
அவர்களிடம்
எச்சரிக்கையாக இருங்கள்:
அவர்களது முக்கியமான
வார்த்தைகளில் ஒன்று
‘அன்பு’.
மேலும்,
தங்கள் கடவுளிடமிருந்து மட்டுமே
கட்டளைகளைப் பெறுபவர்களிடமும்
எச்சரிக்கையாக இருங்கள்.
ஏனெனில் அவர்கள்
தங்களது சொந்த வாழ்க்கையை
வாழ்வதில்
முற்றிலும் தோற்றுவிட்டவர்கள்.
நான் தனிமையில் இருக்கிறேன்
என்பதற்காக
என்னை நினைத்து வருந்தாதீர்கள்.
ஏனெனில் மிகக் கொடூரமான
தருணங்களில் கூட
நகைச்சுவை
எனக்குத் துணையாக இருக்கிறது.
நான் பின்னோக்கி நடக்கும்
ஒரு நாய்.
நான் உடைந்தபோன
ஒரு பாஞ்சோ.
நான் ஓஹாயோவின்
டொலிடோவில்
நீட்டிக் கட்டப்பட்ட
ஒரு தொலைபேசிக் கம்பி.
நான்
செப்டம்பர் மாதத்தின்
இந்த இரவில்
உணவருந்திக் கொண்டிருக்கும்
ஒரு மனிதன்.
உங்கள் அனுதாபத்தை
ஒதுக்கி வையுங்கள்.
கிறிஸ்துவை தண்ணீர்
தாங்கியதாகச் சொல்கிறார்கள்:
ஆனால் அதைக் கடந்து வர
நீங்களும் ஏறத்தாழ
அவ்வளவு அதிர்ஷ்டசாலியாக
இருக்க வேண்டும்.
**
மூலம்: For The Foxes By Charles Bukowski
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
**
(பாஞ்சோ = இசைக்கருவி
ஓஹாயோ = அமெரிக்காலுள்ள ஒரு மாநிலம்
டொலிடோ = ஓஹாயோவிலுள்ள ஒரு நகரம்)
**
சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994):
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகியன யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.