குரலால் உலகை அரவணைத்தவள் – அஞ்சலி

ண்பத்தெட்டு ஆண்டுகால மூச்சு
இருபது மொழிகளின் வழியே
தன் குரலை
உலகுக்கு வாரி வழங்கிய வாழ்வு

அவர் வாழ்ந்த ஆண்டுகளைவிட
அவரது குரல் தங்கிய இடங்கள் அதிகம்—
வானொலிகளில் கிராமபோன் தட்டுகளில்
ஒலிநாடாக்களில் குறுந்தகடுகளில்
இணையத்தின் இசைப்பட்டியல்களில்
தொலைக்காட்சி மாலைகளில்
கல்யாண மண்டபங்களில்
கோயில் தெருக்களில்
தனிமையான மருத்துவமனை அறைகளில்
அவரது முகவரியே தெரியாத
எண்ணற்ற இதயங்களில்

அவர் எந்த வகுப்பறையிலும்
நின்று பாடம் நடத்தவில்லை
ஆயின் இலட்சக்கணக்கான பாடகர்கள்
கற்றுக் கொண்டார்கள்
எங்கு நிறுத்த வேண்டும்
எங்கு நடுங்க வேண்டும்
ஒரே ஓர் சுரத்தில்
வாழ்க்கை முழுவதன் பாரத்தை
எப்படிச் சுமக்க வேண்டும் என்று

வருகைப் பதிவேடு ஏதுமின்றி
அவர்களது ஆசிரியை ஆனார்
ஒரே கூரையின் கீழ்
சீடர்களைச் சேர்க்கவில்லை
ஆயின் தொலைவில் இருந்தபடியே
கேட்டுக் கற்றவர்கள் எண்ணற்றவர்கள்
வரலாறே கணக்கிட முடியாத ஏகலைவன்கள்
எந்தக் கட்டைவிரலையும் அவர் கேட்டதில்லை
அன்பை மட்டுமே பெற்றுக் கொண்டு
அதைப் பாடலாகவே திருப்பிக் கொடுத்தவர்

துயரம் வந்த ஒவ்வொரு வீட்டுக்கும்
அவர் நேரில் சென்றதில்லை
அழையாமல் துக்கம் வந்த போதெல்லாம்
யாரோ ஒருவர் அவரது குரலைத் தேடினார்கள்
அழுகையை நிறுத்தச் சொல்லாமல்
கண்ணீருக்குப் பக்கத்தில் ஆறுதலாக
அமரத் தெரிந்திருந்தது அக்குரலுக்கு

ஒவ்வொரு தலைமுறையும்
தன் சொந்த வாழ்க்கையை நினைவுகூர
அவரது ஏதோவொரு பாடலை
கடன் வாங்கியது
முதல் காதல் இன்றும்
அவரது பல்லவியைச் சுமக்கிறது
ஒரு தாய் இன்றும்
அவரது தாலாட்டை முணுமுணுக்கிறாள்
இனி இல்லாத ஒரு தந்தை
ஒரு குறிப்பிட்ட மெட்டு
தொடங்கும் போதெல்லாம் திரும்பி வருகிறார்

ஒரு நாள்—
பாடலற்ற மெளனம்
அவரைத் தன்னுள் இழுத்துக் கொண்டது
அவரைச் சுற்றி
மாபெரும் இசையமைப்பாளர்களும்
புகழ்பெற்ற பாடகர்களும் மட்டுமல்ல
தாங்களே அறியாமல்
அவரால் ஈர்க்கப்பட்ட
எண்ணற்ற குரல்களும் நின்றிருந்தன
நன்றியறிதலுடன் கரங்களைக் கூப்பி

உரைகள் இல்லை
ஆரவாரப் பிரகடனங்கள் இல்லை
பாடல்கள் மட்டுமே—
தங்கள் ஆசிரியை
தங்களுக்கு அளித்த
ஒரே மொழியாலேயே
அவர்கள் விடை பெற்றார்கள்

அவர்களில் ஒரு இளங்குரல்
தணல் அடங்கிய தருணத்தில்
அமைதியாக அனைவரும்
கலைந்து சென்ற வேளையில்
சாம்பலின் முன் நெருங்கி நின்றாள்
ஒரு பாடல், இன்னொரு பாடல்
மீண்டும் இன்னொன்று—
சாம்பலை எழுப்புவதற்காக அல்ல
தாங்க முடியாத மெளனத்திற்கு
ஒரு துணை தேவைப்பட்டதால்.
அவளது மெட்டு மெதுமெதுவாக
உயர்ந்து ஒலித்த கணத்தில்
நெருப்பு ஒரு வாழ்க்கையை
முடிக்கவில்லை என்றே தோன்றியது.
அது உடலின் சுமையிலிருந்து
ஒரு குரலை மட்டுமே விடுவித்திருந்தது—
காலத்திற்கே அழிக்க முடியாத குரலை.


— எஸ். ஜானகி அம்மாவுக்கு கவிதாஞ்சலி

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 3

விசுவநாதபுரி – 2

நல்லாச்சி – 39