Home தொடர்மருத்துவர் பக்கம் -11: பேலியோவும் அதிகப்புரதமும்.

மருத்துவர் பக்கம் -11: பேலியோவும் அதிகப்புரதமும்.

by Farooq Abdullah
0 comments

பேலியோவில் அதிக புரதம் பரிந்துரைக்கப்படுகிறதா??

அதிகப் புரதம் எடுத்தால் நமது சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுமா??

விடை இந்த கட்டுரை.

“மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ்”களான,

மாவுச்சத்து ( carbohydrates)
புரதச்சத்து ( protein)
கொழுப்புச்சத்து (fat)

இவற்றுள் மனிதனுக்கு மிக முக்கியமானது எது? எனக் கேட்டால், மருத்துவர்கள்/ உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை நிபுணர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெல்வது “புரதச்சத்து”தான். புரதம்தான் நம் உடலின் ஒவ்வொரு செல்களையும் கட்டமைக்கிறது, ஜீன்களைக் கூட மாற்றியமைக்கும் வித்தை புரதச்சத்துக்கு உண்டு.

இந்தப் புரதம், மாமிசம் மூலம் வருகிறதா? மரக்கறி மூலம் வருகிறதா? என்பதைப் பொறுத்து Protein from animal origin / plant origin எனப் பிரிக்கப்படுகிறது. முட்டை /மாமிசம் /மீன் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் புரதம் – மிருகப்புரதம். பயறுகள் /கடலைகள் / காய்கறிகள் போன்ற தாவர வகையில் இருக்கும் புரதம் – மரக்கறிப்புரதம்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒருவர் தினமும் குறைந்தபட்சம் அவரது எடைக்கு நிகராக 0.8 கிராம் அளவு புரதம் கட்டாயம் எடுக்க வேண்டும் என்கிறது. அதாவது ஒருவரது எடை 80 கிலோ என்றால் அவரது எடைக்குத் தேவையான தினசரிப் புரதம் – 80 * 0.8 = 64 கிராம். இந்த 64 கிராமை அவர் தனது தினசரி உணவில் எப்பாடுபட்டாவது சேர்த்தாக வேண்டும்.

அவ்வாறு சேர்க்கவில்லையெனில் என்ன நடக்கும்?

நாளடைவில் அவரது தசைகளில் இருந்தும், எலும்புகளில் இருந்தும் தேவைக்கேற்ப புரதம் திருடப்பட்டு உடல் அதை உபயோகிக்கும். சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளில் மக்கள் பஞ்சத்தில் தவிக்கின்றனர் என்று படிக்கிறோமே.. அவர்களுக்குத் தினசரி புரதம் சரியாகக் கிடைப்பதில்லை என்பதே அவர்கள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம். ஒரு வளர்ந்த நாடு என்பது, உணவுக்கொள்கையின்படி தனது அனைத்து குடிமக்களுக்கும் இந்தத் தேவையான புரதச்சத்தை தினமும் வழங்குகிறதா? என்பதைப் பொறுத்துக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆகவே, தினசரி கட்டாயப் புரதச்சத்து தேவை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதிகபட்சம் எவ்வளவு புரதம் எடுக்கலாம்? என்பதில்தான் இவ்வளவு கட்டுக்கதைகளும் ஆரம்பமாகின்றன. இதற்கு புரதச்சத்தை நம் உடல் எப்படி செரிமானம் செய்கிறது? என அறிய வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள புரதச்சத்து, நம் உடலால் அமினோ அமிலங்களாக உடைக்கப்பட்டு நமது உடலின் கட்டுமானம், தினசரி நடவடிக்கைகள், ஜீன்கள் புனரமைப்பு போன்ற பல வேலைகளுக்குப் பயன்பட்டு, கடைசியாக இருக்கும் குப்பைக் கழிவு தான் இரத்த யூரியா நைட்ரஜன். இதைத் தான் BUN என்கிறோம் blood urea nitrogen. அதிகப் புரதம் உண்டால், அதிக யூரியா, நைட்ரஜன் வெளியாகும். இதனால் அதை வெளியேற்றும் கிட்னிகள் சிரமத்துக்குள்ளாகும் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம்.

ஆனால் , ஒன்றை மறக்க கூடாது. நமது கிட்னிகள் ஒன்றும் வீட்டில் நாம் கட்டி வைத்துள்ள செப்டிக் டேங்குகள் கிடையாது. நமது வீட்டில் அன்றாடம் மூன்று முதல் ஐந்து பேர் கழிவறையை உபயோகிக்கிறோம். செப்டிக் டேங்க் நிரம்ப வாய்ப்பில்லை. ஆனால் அதுவே ஐநூறு பேர் உபயோகப்படுத்தினால் நிரம்பி விடும் அல்லவா. இந்தப் பார்வையுடன்தான் நமது கிட்னிகளையும் அணுகுகின்றனர் எதிர்ப்பாளர்கள். இது தவறான அணுகுமுறை.

சொல்லப்போனால்.. சில ஆய்வுகள் புரதச்சத்தை அதிகமாக உண்பவருக்கு, அதைக் குறைவாக உண்பவரை விட கிட்னிகள் சிறப்பாக இயங்குகின்றன என்று நிரூபிக்கின்றன.
(https://authoritynutrition.com/how-much-protein-per-day/) இத்தனைக்கும் உலக சுகாதார நிறுவனம் அதிக உடலுழைப்பு இல்லாத ஒருவருக்கு, தினமும் 1 முதல் 1.5 வரை ( சில ஆய்வுகள் 2 கிராம் வரை) புரதம் எடுக்கலாம் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறது. இதன்படி ஒரு 80 கிலோ உடலுழைப்பு அதிகம் இல்லாத பேலியோ உணவு எடுப்பவர் தினசரி 80* 1.5 = 120 கிராம் வரை புரதம் எடுக்கலாம். மேலும் 20-30 கிராம் கூட எடுத்தாலும் பாதிப்பு இல்லை.

சிறுநீரகங்கள் இந்தப் புரத உணவு முறைக்கு, தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன. தங்களின் ரத்த வடிகட்டும் திறனை ( glomerular filtration rate) அதிகப்படுத்துகின்றன. வடிகட்டும் செல்களான க்ளோமெருலை(glomeruli) பெரிதாகின்றது. கிட்னிகளுக்குத் தேவையான ரத்த ஓட்டம் அதிகப்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் புரதச்சத்தை சரியாக எடுத்தால் ரத்தக் கொதிப்பை சரியான அளவில் வைக்க உதவும், கிட்னியால் செயல்படுத்தப்படும் ரெனின்- ஆன்ஜியோடென்சின்- சிஸ்டம் பக்காவாக வேலை செய்து ரத்த அழுத்தம் குறைகிறது.

யார் புரதங்களைக் குறைத்து உண்ண வேண்டும்?

ஏற்கனவே நாள்பட்ட நீரிழிவு (diabetes) மற்றும் ரத்த கொதிப்பு இருந்தவர்களுக்கு, அவர்களது முந்தைய நோய்கள் காரணமாகச் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். நீரிழிவினால் பாதிக்கப்பட்டால் அதை diabetic nephropathy என்கிறோம். ரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்டால் அதை hypertensive nephropathy என்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்குக் கிட்னிகளின் வடிகட்டும் திறன் குறைவாக இருக்கும். இவர்களுக்குத்தான் நாம் புரதச்சத்தைக் குறைத்துக் கொடுக்க வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு 56 கிராமிற்குக் கீழ் கொடுக்கக்கூடாது.

எவ்வளவு முற்றிய கிட்னி நோயாக இருந்தாலும்.. இந்த குறைந்தபட்சப் புரதச்சத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. டயாலசிஸில் இருக்கும் சிறுநீரக நோயாளிக்கு கட்டாயம் 1.2 கிராம் புரதம் கொடுக்க வேண்டும் . காரணம் அவர்களுக்கு உடலில் உள்ள தசைகள் வலு குறைந்து புரத இழப்பு ஏற்படும். அதை ஈடுகட்ட வேண்டும். நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு எக்காரணம் கொண்டும் புரதச்சத்தைக் குறைக்க வேண்டிய அவசியமே இல்லை.

இருப்பினும் தமிழ் பேலியோவில், நாம் ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது எடையைக் கணக்கிட்டு அதற்கேற்பப் புரதச்சத்தை இன்றைய அறிவியலின் வழிகாட்டுதலின்படி, அளவில் குறைத்துதான் கொடுக்கிறோம். மருத்துவர் அட்கின்ஸ் கண்டுபிடித்த அட்கின்ஸ் டயட் என்பதில் தாராளமாக 200 கிராம் புரதம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கே சிறுநீரகத்தில் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. அப்படி அதிகப் புரதம் எடுத்தால் கிட்னி நோய் வரும் என்று கூறும் பெரும்பான்மை ஆராய்ச்சிகளில், மக்கள் புரதம் அதிகமாக எடுப்பதுடன் மாவுச்சத்தையும் அதிகம் எடுத்திருக்கிறார்கள்.கூடவே ஆல்கஹால் மற்றும் ஸ்மோக்கிங் இருக்கும். ரீபைண்டு சுகர் இருக்கும் . டயாபடிஸ்/ ப்ரஷர் போன்றவை கண்ட்ரோல் இல்லாமல் இருக்கும்.

தமிழ் பேலியோவில் நாம் நிர்ணயிக்கும் அதிகபட்சப் புரத அளவுகள் 120 -150 கிராம். ஆகவே பேலியோவைப் பின்பற்றுபவர்களுக்கு கிட்னி சார்ந்த பிரச்சனைகள் குறைவதைக் காண்கிறோம். கூடிய விரைவில் அதை மருத்துவ ஆராய்ச்சியாக வெளியிடவும் இருக்கிறோம். மேலும் குறை மாவு, நிறை கொழுப்பு மித புரத உணவு எடுப்பவர்களுக்குச் சிறுநீரகங்கள் நன்றாகச் செயல்படுவதாக இந்த ஆய்வு விளக்குகிறது.

(https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/23690533/?i=9&from=Atkins%20diet%20renal%20disease)

புரதம் நம் சிறுநீரகங்களுக்கு நண்பன். அதிகமான குளுக்கோஸ் நம் கிட்னிகளுக்கு எதிரி. அதிகமான ரத்த அழுத்தம் நம் கிட்னிகளுக்கு எதிரி. எதிரிகளை விட்டுவிட்டுப் புரதச்சத்தின்மீது பழி போட்டுக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சிக்கன் பிரியாணி எடுப்பது வேறு, அதில் உள்ள சிக்கனை மட்டும் உண்பது வேறு. சிக்கன் பிரியாணி = மாவுச்சத்து + புரதச்சத்து, சிக்கன் = புரதச்சத்து மட்டும்.

பேலியோவில் சிக்கன் மட்டுமே உண்டு, சிக்கன் பிரியாணி கிடையாது.

குழப்பிக்கொள்ள வேண்டாம்..

Author

You may also like

Leave a Comment