8
யார் மீது கொண்ட பெருங்காதலோ
மரங்கொத்தியிடம்
பச்சைக் குத்திக் கொள்கின்றன மரங்கள்
ஒவ்வொரு நாளும்
நீ பிழைத்துக் கொண்டாய் என்கிற
நற்செய்தியோடு
கண்விழிக்கச் செய்கிறது விடியல்
உன்னை யாரோ போல
கடந்து செல்ல
எனக்கு மனம் துணியவில்லை
நீ தூரமாகவே இரு
கதைகள்
பேசிக் கொண்டிருந்த தாத்தா
சென்ற பிறகு கதைகள்
பேசிக் கொண்டிருக்கின்றன
என்னிடம்
வேண்டிய எதையுமே
விருந்தாளியைப் போலவே
கூச்சத்துடன் கேட்கிறார் அப்பா
அம்மாவின்
மறைவுக்குப் பிறகு
அத்தனை இறுமாப்பு
எல்லாம் வேண்டாம்
நம் இருப்பிற்காக
சில காலங்களுக்குப் பிறகு
யாரோ ஒருவருடைய
ஞாபகத்தில் எப்பொழுதோ
வருகின்ற நினைவுகளாக
தேய்மானம் அடைந்திருப்போம்
அவ்வளவுதான்