Home கவிதைமெஹராஜ் பேகம் கவிதைகள்

மெஹராஜ் பேகம் கவிதைகள்

by admin
1 comment

யார் மீது கொண்ட பெருங்காதலோ
மரங்கொத்தியிடம்
பச்சைக் குத்திக் கொள்கின்றன மரங்கள்


ஒவ்வொரு நாளும்
நீ பிழைத்துக் கொண்டாய் என்கிற
நற்செய்தியோடு
கண்விழிக்கச் செய்கிறது விடியல்


உன்னை யாரோ போல
கடந்து செல்ல
எனக்கு மனம் துணியவில்லை
நீ தூரமாகவே இரு


கதைகள்
பேசிக் கொண்டிருந்த தாத்தா
சென்ற பிறகு கதைகள்
பேசிக் கொண்டிருக்கின்றன
என்னிடம்


வேண்டிய எதையுமே
விருந்தாளியைப் போலவே
கூச்சத்துடன் கேட்கிறார் அப்பா
அம்மாவின்
மறைவுக்குப் பிறகு


அத்தனை இறுமாப்பு
எல்லாம் வேண்டாம்
நம் இருப்பிற்காக
சில காலங்களுக்குப் பிறகு
யாரோ ஒருவருடைய
ஞாபகத்தில் எப்பொழுதோ
வருகின்ற நினைவுகளாக
தேய்மானம் அடைந்திருப்போம்
அவ்வளவுதான்

Author

You may also like

1 comment

adbul rahman August 19, 2025 - 9:39 pm

அனைத்தும் அருமையான, எதார்த்தமான கவிதைகள்

Reply

Leave a Reply to adbul rahman Cancel Reply