கரிய நிறப் போர்வையில் வெள்ளிப் பூச்சித்திரங்கள் வைத்தாற் போன்ற, நட்சத்திரங்களுடன் இருந்த இருட்டைப் பார்த்துப் பார்த்து என் வெறுமை கூடியிருந்தது – நேற்றுவரை என்ன வாழ்க்கை இது?! ஏன் இப்படி எனக்கு வாய்த்திருக்கிறது என்று எண்ணி எண்ணி மிக நொந்து இருந்தபோதுதான், நேற்று ஒரு விடிவெள்ளி வந்தாற்போல அந்தச் சம்பவம். ஆஹா.. உதட்டை மடித்து நாவால் வருடினேன். ரத்தம்.. சுவை நன்றாக இருக்கிறதே. ம்..!
****
‘வந்து விடுகிறேன் உன்னிடமே’ என்று சொல்வது போல் பூமி, அதில் இருந்த புற்கள் எல்லாவற்றையும் அணைத்த வண்ணம், ஒரு கை நீண்டு ஒரு கை வளைந்த வண்ணம் குப்புறக் கிடந்திருந்தான் அவன். இல்லை.. அவனாக இருந்து மாறிய அது.
‘வந்துவிட்டாயாடா’ என ஆனந்தக் கண்ணீரா? சோகமா? எனச் சொல்ல இயலாவண்ணம் பூமி சொல்வதுபோல், காலையில் பெய்திருந்த மழையால் அவனைச் சுற்றிலும் ஈரம், சற்றே ஒரு மினி குளம் போல் காட்சியளித்தது.
சி. ஐ. ஸ்ரீனிவாசப் பெருமாள் தன் கையில் தொப்பியை இறுக்கிப் பிடித்தவண்ணம் அந்த உடலையே உற்றுப் பார்த்தார். நீல ஜீன்ஸ் பேண்ட், கொஞ்சம் கருநீல முழுக்கைச் சட்டை ஈரத்தில் முழுக்கருப்பாகவே ஆகி இருந்தது. பின் மண்டையில் சிற்சில வெள்ளி முடிகள் படிந்திருந்தன. கழுத்துதான் சிகப்பாக அசாத்தியத் திருப்பல் போல இருந்தது. சில கை விரல் படிமங்கள் மெலிதாய்த் தெரிந்தன. காலில் அடிடாஸ் ஷூ. மற்றவர்கள் வந்தவுடன் திருப்பிப் பார்க்கச் சொல்லவேண்டும்.
நிமிர்ந்து பார்த்தால் அவர் நின்றிருந்த தென்னந்தோப்பு இருந்த அந்த இடத்துக்கும் பண்ணையின் வாயிலுக்கும் கிட்டத்தட்ட 900 மீட்டர் தூரம், அங்கே நிறுத்திய ஜீப், அங்கே இப்போது பல்ஸரை நிறுத்தும் சைந்தவி, அவருடைய உதவி சப் இன்ஸ்பெக்டர்.
இவர் தொலைவில் நிற்பதைப் பார்த்தும் விட்டாள். அவர் வந்தபோது ஈரமாக இருந்ததால் அவரது ஷூவால் ஏற்பட்ட கால்தடங்களின் மேலேயே மெல்ல மெல்ல தன் பாதங்களை வைத்து நடந்து வந்துகொண்டிருந்தாள் அவள்.
ஸ்ரீநி நிமிர்ந்து தன்னை அழைத்து வந்தவனைப் பார்த்தார். கருநிற கட்டம் போட்ட லுங்கி, மேலே பிங்க் கலர் சட்டை போட்டிருந்த இளைஞன். ஏறுமாறாக இருந்த தலை, ட்ரிம் செய்யப்படாத தாடி, சிவந்த கண்கள். “சொல்லுங்க கதிரேசன்.. நீங்கதான் கேர் டேகரா? இந்தப் பண்ணை யாருக்குச் சொந்தம்?” எனக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த போது சைந்தவி அவர் முன்னால் வந்து நின்றாள். யூனிஃபார்ம் அவள் மூச்சிரைப்பால் எழுந்து தாழ, சற்றே மரியாதை நிமித்தம் விறைத்து பின் இயல்புக்கு மாறி, “என்னாச்சு சார்?” என்றாள்
”வழக்கமா எல்லா மலையாளப் படங்கள், வெப்சீரீஸ்ல ஆரம்பத்துல காட்டப்படற காட்சிதான் சைந்தவி. யாரோ கொலை செய்யப்பட்டிருக்காங்க. இவன் கேர்டேக்கராம். மத்த கான்ஸ்டபிள்ஸும் வர்றாங்கதானே? ஃபாரன்ஸிக்குக்குப் ஃபோன் பண்ணனும்”
“வர்றச்சயே ஃபோன் பண்ணிட்டேன் சார். இந்த அட்ரஸையும் லொகேஷன் அனுப்பிச்சுட்டேன். ஆனாலும் கொக்குப்பாக்கத்துலருந்து இவ்ளோ தூரத்துல பண்ணையா! அன்பிலீவபிள்” என்றாள் சைந்தவி.
கேர்டேக்கரைப் பார்க்க, அவன் படபடத்தான். “சார்.. இந்தப் பண்ணையோட பேர் பத்மவாசன் பண்ணை. பத்மவாசன் சார் துபாய்ல இருக்காங்க. நானும் இன்னும் பத்து பேரும் இங்க வேலைக்கு இருக்கோம். நான்தான் சூப்பர்வைஸர். வழக்கம் போல காலைல எட்டுமணிக்கெல்லாம் வரமுடியல, ஒரே மழை.. அதான் ஒன்பது மணிக்கு வந்தேன். வந்ததும் வழக்கமா எல்லா மரங்களையும் ஒரு பார்வை பார்க்க சுத்துவேன். ஆரம்பத்திலேயே தென்னந்தோப்புதான். உள்ளுக்குள் நுழைந்ததுமே இதைப் பார்த்தேன். உங்களுக்குத் தகவல் அனுப்பி வரச் சொன்னேன்”
“அவர்கிட்டயும் சொல்லிட்டயா?”
“ம்.. ஃபோட்டோ எடுத்தே அனுப்பிச்சுட்டேன் சார். பத்மவாசன் சார் துபாய்ல இருக்கார். பார்த்துட்டு உங்களுக்கு அனுப்பச் சொன்னார். பேசறதுன்னா பேசுங்க” என ஃசெல்ஃபோனை நீட்டினான்.
”இப்ப வேணாம்ப்பா. இதென்ன குட்டியா வீடு!! மாடில மட்டும் தான் பெட்ரூமா? கீழ குட்டியா இருக்கே, பின்னால என்ன பாத்ரூமா?”
“கீழே கொஞ்சம் ஸ்பேஸ் விட்ருக்கோம்.. பின்னால பாத்ரூம். அந்த பம்ப்செட் வாட்டரை உள்ள கொண்டு வந்து ஷவருக்குத் திருப்பி இருக்கோம். செமய்யா தண்ணீர் வரும். மேலே பெட்ரூம் எப்பனாச்சி மதிய நேரத்துல படுத்துக்குவோம்”
“வோம் நா?” எனக் கேட்டபடி குட்டிப் படிகள் இருந்த அந்த வீட்டின் மாடிப்படியில் ஸ்ரீநியும் சைந்தவியும் ஏற பின்னால் கதிரேசன் சென்றார். சற்றே முன்சென்று பூட்டைத் திறக்க டபக்கெனத் திறந்து கொண்டது
” நானும் என் அஸிஸ்டெண்ட்ஸ்ம் சார்”.
சைந்தவி பூட்டைக் கையுறையால் பற்றி எடுத்துத் திறந்து உள்ளே விழிகளை ஓட்டினாள். நீட்டாகத்தான் இருந்தது அந்தச் சிறு அறை. சின்ன பெட்ரூம் எனலாம். ஒரு சிங்கிள் பெட் போடப்பட்டிருக்க, அந்தப்பக்கம் சில புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. ஒரு தண்ணீர் பாட்டில் ஸ்டாண்டில் தலைகீழாக நின்றிருக்க கீழே குழாய் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு கதவு. ‘அது.. ?’ எனக் கேள்வியுடன் பார்க்க, “பாத்ரூம் சார்” எனச் சொல்லி திறந்து விட்டான். ம்ஹூம்.. முழு பாத்ரூம் இல்லை. மொட்டை மாடி. சைடில் இரண்டு கதவுகளிட்ட அறைகள். இண்டோ வெஸ்டர்ன். திறந்தாலும் ஒன்றும் இல்லை, நீட்டாக பினாயில் வாசனையுடன் இருந்தது.
“அப்புறம் என்ன கதிரேசா, இங்கு ஏதாவது வேல்யுவபிள்ஸ்?”
“ம்ஹூம் வைப்பதில்லை சார். முன்னால பத்மா சார் வச்சுருந்தாராம். ஒரு தடவை கொள்ளை போயிடுத்தாம். நல்ல வேளை நாம இருக்கறச்சே வரலைன்னு எடுத்து வச்சுட்டாராம்“
“எதுல வைப்பாரு?”
“அதோ அந்தப் பக்கம் சுவத்துல காலண்டர் தொங்குது பாருங்க. அதுக்குப் பின்னாடி இருக்கற லாக்கர்ல. ஆனா மூடி இருக்கும், உள்ள ஒண்ணும் இருக்காது”
“அட” எனச் சொல்லி அந்தக் காலண்டரைத் திருப்ப அந்த லாக்கர் தெரிந்தது.. ஆனால் காலண்டரைத் திருப்பியதும் டொப்பென லாக்கர் கதவும் திறக்க உள்ளே ஒன்றும் இல்லை.. மீன்ஸ் துடைத்து வைத்தாற்போல் இருக்க, “என்னய்யா?” என்றார்.
“தெரியலை சார்.. ஒண்ணும் வைக்கலைன்னு திறந்தே வைத்திருப்பார் போல. எனக்குத் தெரியாது, சாவி அவர்கிட்டக்கதான் இருக்கும்” என்றான் அதிர்ந்த கதிரேசன்.
மெளனமாய் வெளியில் வரும்போது சைந்தவி ”ஃபாரன்ஸிக் பாலகணேஷ், கான்ஸ்டபிள்ஸ், டாக்டர்லாம் வந்துட்டாங்க சார். ஆம்புலன்ஸ் கூட வந்துடுத்து”.
தலையில் ஆரஞ்ச் கலர் தொப்பி, வெள்ளைப் பூப்போட்ட சட்டை, ப்ரெளன் பேண்ட்டுடன் இருந்த ஃபாரன்ஸிக் பாலகணேஷ் “ஹாய் சி ஐ சார்.. குட்மார்னிங். என்ன?.. நம்ம ஊர்ல எல்லாம் கொலை நடக்குது! ஆமா, உங்களை மாதிரி நானும் தொப்பியைக் கழட்டணுமா?”.
“பால்கி சார். அதெல்லாம் வேணாம். ஏன் லேட்?”
“அதை ஏன் கேக்கறீங்க. என்னோட ரிலேஷன் சுரேஷ்ன்னு ஒருத்தர், கோயம்புத்தூர்ல இருந்து வந்துட்டார். “நீதான் ஃபாரன்ஸிக் எக்ஸ்பர்ட்டாச்சே.. கை ரேகை பார்ப்பியே, ரேகை பாரு”ன்னு ஒரே படுத்தல்!.. ஓடி வந்துட்டேன்”.
உடன் வந்திருந்த டாக்டர் குனிந்து சகதியில் இருந்த உடலை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கான்ஸ்டபிள் ஒருவரை ஸ்ரீனி கண்காட்ட அவர் மெல்ல அந்த உடலைப் புரட்ட, முகத்தைப் பார்த்த கதிரேசன், “ இந்தாளா சார்?!” என்றான்
***
”ஆக்சுவலா நீ என்ன பண்றே? உன் கம்ப்யூட்டரை எனிடெஸ்க்ல போடு. எனக்குப் பாஸ்வர்ட் கொடு. நீ என்ன செஞ்சுருக்கேன்னு பார்க்கறேன்” என மாதவ் சொல்லிக் கொண்டிருந்த போது காலிங்க் பெல்லின் மெல்லிய ர்ர்ர்ர்.
“உன்னை மறுபடி கூப்பிடறேன் ஷீல்” சொல்லிவிட்டு செல்ஃபோனை அணைத்து, அந்தப்புறம் ஸோஃபாவில் ராபணா என இருந்த ஜட்டி பனியனை பக்கத்தில் கீழே தள்ளி, தாவி ஹாலில் நீந்தி பீப் ஹோலில் பார்த்துக் கதவைத் திறந்தால்.. மாதவி. கண்களில் மெல்லிய சிகப்பு. சிகப்புச் சுடிதார், கலைந்த சுருள் சுருளான தலை முடி, குட்டிப் பொட்டு கொஞ்சம் விலகி இருக்க, “மாதவ்..” என அழுகையுடன் அவனை அணைத்துக் கொண்டாள்.
“ச்.. என்ன இது. குழந்தையாட்டமா? ட்ரெய்ன் ஜர்னி எப்படி இருந்தது? உள்ளே வா” சொன்னவாறே அவளது சூட்கேஸை வாங்கிக் கொண்டு சென்று சோஃபாவின் மேல் வைத்தான் மாதவ்.
மாதவியும் உள்நகர்ந்து கதவைச் சார்த்தி விட்டு மாதவனை ஹக்கினாள். “அம்மா.. அம்மா..” என மறுபடியும் அரற்ற ஆதரவாய் சோஃபாவில் அமர வைத்து அருகில் அமர்ந்து கொண்டான்.
“ எல்லா காரியமும் நல்லா முடிஞ்சதா? உன் அண்ணன் இன்னும் நாகர்கோவிலிலேயேதான் இருக்கானா?”.
“ம்.. இன்னும் ஆறு நாள் இருக்கே. பத்து அண்ட் பதின் மூன்று. ஆஃபீஸ்ல லீவ் கேக்கணும். அதெப்படி மாதவ் மரணம் இவ்ளோ சுலபமா வர்றது?! காஃபி சாப்பிட்டுட்டு திண்ணைல உட்கார்ந்துருக்கா, கொஞ்சம் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டு இருக்கா, அம்புட்டுதான். மாமா கொல்லைப்பக்கத்துலருந்து வந்து பார்த்தப்ப இல்லை!”.
“ நான்தான் வந்தேனே மாத்வி”.
“ம்க்கும்,. எல்லாம் முடிச்சுட்டு ஒரே நாள்ல கிளம்பி வந்துட்டீங்க. சே.. நாம டின்க்கா (DiNK – டபுள் இன்கம் வித் நோ கிட்ஸ்) இருக்கலாம்னு நினைச்சுருக்கக் கூடாது. அம்மா நம்ம பொண்ணையோ பிள்ளையையோ பார்த்துருப்பாங்கள்ள”
“அதை ஏன் நினைக்கற இப்போ? இரு.. நான் போய் காஃபி போட்டுக் கொண்டு வர்றேன்” என மாதவ் சென்று காபியுடன் திரும்பிய போது பெட்ரூமில் இருந்தாள். முகம் அலம்பி உடை மாற்றி ஷார்ட்ஸ் டீ ஷர்ட்டில் இருந்தாள்.
மாதவ் டபராவில் கொஞ்சங்கொஞ்சமாக விட்டுத் தர, காஃபியைச் சுவைத்து அருந்தியபடி குறுகுறுவென்று பார்த்தாள்.
“என்ன மாத்வி. ஒருமாதிரி பார்க்கறே?”.
“இளைச்சுப் போய்ட்டடா. குளிச்சியோ?” எனச் சொல்லி இறுக அணைக்க, “என்ன மாதவி! நான் குளிச்சுட்டேன். என்ன இது!.. பட்டப் பகல்ல “ என மாதவ் நெருக்க்க்க்க்கமாக, படாலென விலகினாள்.
“என்னது இது மாத்வி?”
“தெரிலை. நீதான் விட்டுட்டே” எனக் குழப்பமான மாதவி, “சரி.. நான் குளிச்சுட்டு வர்றேன். ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடலாம். எனக்கு நாளைக்குத்தான் வொர்க் ஃப்ரம் ஹோம்” எனச் சொன்னபோது ர்..ர் என்றது மாதவனின் செல் ஃபோன்.
“யெஸ்.. சரி.. இன்னும் ஒன் ஹவரா.. பார்க்கலாமா? பார்ட்டியும் இருக்காரா? சரி, நான் வர்றேன்” என்றவன், ”கொஞ்ச நேரத்துல லேண்ட் பார்க்கப் போறேன் மாதவி, நீயும் வர்றியா?” என்று பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டிருந்த மாதவியைக் கேட்க அவள் சரி சொல்லிக் கதவைச் சார்த்தி, குளித்து முடித்தாள். ட்ரெய்னின் அழுக்கெல்லாம் ஷாம்பூவினால் போனதினால் தலைமுடியை நன்றாக துண்டால் அழுத்தித் துடைத்தாள். வலப்புறம் இருந்த பெரிய கண்ணாடியில் வென்னீரால் உண்டான ஆவியினால் முழு பிம்பமே லேசாகத் தெரிய துண்டால் துடைக்கலாம் என எடுத்தபோது,
கிடுகிடுவென கண்ணாடியில் எழுத்துகள் உருவாயின . போ.. கா… தே..
தொடரும்..