Home கவிதை நல்லாச்சி

நல்லாச்சி

அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள்
நல்லாச்சி வீட்டு தோப்பில்
வகைவகையாய்
மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய்
கனியக்காத்திருந்தவற்றில்
குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள்
நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய

தரம் பிரித்தபின் அரைக்காய்களை
பழுக்க வைக்க முனைகிறாள் நல்லாச்சி
பலாக்காயின் தண்டில் வேப்பங்குச்சி செருகுகிறாள்
மாங்காய்களை வைக்கோல் மூடிப்பொதிகிறாள்
வாழைத்தாரைக் குழியில் ஊற்றம் போடுகிறாள்
கனல் தூவி
அத்தனைக்கும் அருகிருந்து உதவிய பேத்தி
ஆச்சரியம் அகலாமல் கேட்கிறாள்
புளிப்பும் துவர்ப்புமானவை
எப்படி இன்சுவை கொள்கிறதென

சூழும் நெருக்கடிகளும்
கடந்து செல்லும் சோதனைகளுமாய்
கிடைக்கும் அனுபவங்களனைத்தும்
பக்குவப்படுத்திப் புடம்போடும்போது
கனியத்தானே வேண்டுமென்கிறாள் நல்லாச்சி
முதிர்தலின் சுவை இனிது
தேனூறும் இப்பழங்களைப் போல் என்கிறாள்

எனில்
மனிதர்களும் கனிவதுண்டா என்கிறாள் பேத்தி
ஆம்
மனம் முதிர்ந்தால் மனிதர் கனிவர்
அனுபவத்தின் சாற்றுடன் அன்பைக் கலந்து
புத்தியைக் குழைக்க பக்குவம் வரும்
பக்குவமடைந்து கனிந்தோர் அனைவரின் விருப்பமாவர்
அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளாதோர்
என்றுமே கனிவதில்லை
பேத்தியின் தலைகோதியபடி
நல்லாச்சி உரைத்த மொழிகளெலாம்
ஊற்றத்தின் புகையென
அவளை
பழுக்க வைக்கத்தொடங்கின
நல்லாச்சி செய்ததெலாம்
சாம்பல் மூடிக்கிடந்த கனலை
சற்றே விசிறி விட்டதுதான்.

Author

Leave a Comment