Home நாவல்நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 1

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 1

0 comments

ஹாய்..

நான் சைந்தவி.

முதலில் என் கண்களில் தெரிவது என்ன?

ஒரு விஸ்தாரமான டேபிள்.. அதன் ஒரு மூலையில் ஒதுங்கிக்கிடக்கும் லேப் டாப்.. அருகில் பவர் பேங்க்கில் போடப்பட்டிருக்கும் செல்ஃபோன்.

நல்ல அகல நீளமான அந்த மேஜையின் நடுப்புறம் நான்கு ரைஃபிள்கள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன. ரைஃபிளின் ஸ்டாக் என்றழைக்கப்படும் அடிப்பகுதி, ஆக்‌ஷன் எனப்படும் நடுப்பகுதி, பேரல் எனப்படும் மேற்பகுதி.

பின் குட்டிக் குட்டி பாட்டில்களில் சொலுயூஷன், ரைஃபிள்களை சுத்தம் செய்வதற்காக.

ஒரு கையில் ரைபிளின் பாரல் பகுதியைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் அதைச் சுத்தம் செய்யும் பிரஷ். நாம் காலையில் உபயோகப்படுத்துவோமே டூத் ப்ரஷ்.. அதுதான் வித் ஒரு சின்ன சேஞ்ச். அந்த டூத்ப்ரஷின் அடிப்பகுதியில் குட்டி பிரஷ்..

அதை பாரலின் நீள் முனையில் உட்செலுத்தியவண்ணம் பேசிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசப் பெருமாள்.

என்ன பேசிக்கொண்டிருந்தார்?

”போர்க்களம்.. ராவணன் வீழ்ந்து கிடக்கிறான்.. அவன் உடல்முழுவதும் ராமனால் எய்யப்பட்ட அம்புகள்..

விஷயம் கேள்விப் பட்டு வருகிறாள் மண்டோதரி. கண்களில் முழுக்க நீர் நிறைந்திருக்க, தலைவிரிகோலத்துடன் ஆடைகள் கலைந்து, நெற்றிப் பொட்டும் தீற்றலாய் வழிந்தபடி எதையும் பொருட் படுத்தாமல் தன் கணவன் இறந்த இடத்திற்கு வந்து ஒவ்வொரு அம்பாக எடுக்கிறாள்.. பிரமோத் இந்தா.. இதை வை,அந்த ஆக்‌ஷன் பார்ட்டை எடு”

ப்ரமோத் என்னைப் போன்றே வேடிக்கை பார்த்துக் கொண்டு, விசுவாசமாகக் கேட்டுக் கொண்டிருந்த கான்ஸ்டபிள். பயபக்தியுடன் அவர் கையில் இருந்து பேரலை வாங்கி, மேஜையில் வைத்துவிட்டு ஆக்‌ஷன் எனப்படும் நடுப்பகுதியை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கித் தொடர்ந்தார் ஸ்ரீனிவாசப் பெருமாள்.

ஹச்சோ.. சொல்ல மறந்துவிட்டேன். நாங்கள் இருந்த இடம் கொக்குப் பாக்கம் போலீஸ் ஸ்டேஷன். அதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசப் பெருமாளின் உள்ளறை.

விஸ்தாரமான அறைதான். பெரிய டேபிள், அதன் முன் இருவர் அமர நாற்காலிகள். டேபிளின் அந்தப் பக்கம் சுழல் நாற்காலி. பின் சுவற்றில் சென்னையின் பெரிய்ய்ய வரைபடம். வலது பக்க மூலையில் அடுக்கி வைக்கப்பட்ட ஃபைல்களைச் சுமந்த கண்ணாடி பீரோ. இடது பக்கம் இன்னொரு பீரோ. ஆனால், முழுவதும் இரும்பாலான காட்ரெஜ் பீரோ. மேலே நீங்கள் திரைப்படங்களில் போலீஸ் ஸ்டேஷனில் பார்த்திருக்கும் காந்தி, நேரு, இந்திராகாந்தி புகைப்படங்கள்.

நான் கொக்குப்பாக்கம் ஸ்டேஷனின் சப் இன்ஸ்பெக்டர். ப்ரமோத்தின் அப்பா செளகார்பேட்டையில் ஃபினான்ஸ் கடை நடத்துபவர். பையன் ப்ரமோத்துக்கு ஏதோஆசை வந்துவிட, இந்த வேலைக்கு முறைப்படி அப்ளை பண்ணவைத்து, முறைப்படி செய்ய வேண்டியதைச் செய்து கான்ஸ்டபிள் ஆக்கிவிட்டார். இங்கு சேர்ந்து நான்கு மாதங்கள்.

ப்ரமோத் என்னை விட ஓரிரு வயது சிறியவன். என் வயது என்னவா? சரி.. அவன் வயதை விட ஓரிரு வயது பெரியவள். ஓகேயா? வேண்டாமா? வயதைச் சொல்லத்தான் வேண்டுமா? சரி.. இருபத்து நான்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை வருடங்களாக? எனக் கேட்கப்படாது.

ஆனால் ப்ரமோத்திற்குக் கல்யாணம் ஆகிவிட்டது, இங்கு வேலைக்குச் சேருவதற்கு முன்னாலேயே. அழகிய இளம் மனைவி மோனிக்கா. என்னைவிடக் கொஞ்சம் சுமாராய்த்தான் இருப்பாள்.

ஸ்ரீனிவாசப் பெருமாள் சொல்லிக்கொண்டிருந்தார்..

”புலம்பிண்டிருக்கா மண்டோதரி. என்னவனே.. ஓ மை டியர் ராவணா. அந்த ராமன் உன்னைக் கொல்ல அம்பு விட்டானா? அல்லது அவன் மிஸ்ஸஸ் ஜானகி மீது நீ கொண்ட காதலைக் கொல்ல அம்பு விட்டானா? கள் ததும்பும்.. அதாவது தேன் நிரம்பப் பெற்ற மலர்களைச் சூடிய ஜானகி மீது உன் மனதில் காதல் வந்ததே! அது எங்கே இருக்கிறது? என்று இந்த அம்புகள் துளைத்தனவோ என்று புலம்பறா. சைந்தவி, அந்த இன்னொரு பேரல் எடு.. இதை வை”

எடுத்துக் கொடுக்க பெருமாள் தொடர்ந்தார்..
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி”

புத்தகம், கிண்டில் என ஒன்றையும் ரெஃபர் எல்லாம் பண்ணவில்லை, சரளமாக வந்துகொண்டிருந்தன அவரிடமிருந்து வார்த்தைகள். கண், பேரல் பார்த்து உள்ளிருக்கும் அழுக்கைச் சுத்தம் செய்தவண்ணம் இருந்தது.

”ஓ ராவணா.. அந்தக் காதலை இந்த அம்புகள் கொல்லாமல், உன் உயிரைக் குடித்து விட்டனவோ! இல்லை ஓ நோ.. முதல்ல உன்னோட லவ்வத்தான்.. அதாவது சீதா பேர்ல நீ கொண்ட லவ்வத்தான் அந்த அம்பு கொன்றிருக்கணும். அப்புறம் தான் நீ செத்துப் போயிருப்ப. ஓ.. ஓ.. தப்புப் பண்ணிட்டேன்னு நினச்சு, அப்படித்தானா மைடியர் கணவனே?ன்னு புலம்பறா.

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும் இடன் நாடிழைத்தவாறே’

அப்படிங்கறார் கம்பர். அவன் உன்னைக் கொல்ல நினைக்கலை, என்னைத்தான் கொன்னுட்டான் கணவா. அவன் மனைவிய நீ பிரிச்ச.. அதனால், என்னை அவன் பிரிச்சுட்டான். நீ மேல இருந்து என் சோகத்தப் பார்ப்பேதானே? பார்த்துத் துடிப்பதானே? அப்படிங்கறா.

என முடித்து கடைசி ரைஃபிளின் ஸ்டாக் பகுதியையும் வைத்து, “அங்க ராமனுக்கு அம்புகள், இங்கே நமக்குக் குண்டுகள், தீமையை அழிக்க.. ம்ம்.. எப்படி சைந்தவி?” எனக் கேட்டார்.

“சூப்பர் சார்” என்றேன் நான். ப்ரமோத்திற்கு அவ்வளவு தமிழ் புரியாவிட்டாலும், “வெரி குட் சார்” என்றான்.

“என்ன வெரிகுட்?”

விறைப்பாய் நின்று சல்யூட் அடித்தான். ”ஸாரி சார்.. எனக்கு அவ்வளவா புரியலை” எனச் சொல்லிக் கொண்டிருந்தபோது சிணுங்கியது செல்ஃபோன். அவனுடையது.

எடுத்தான்.. “யெஸ்.. ம்.. ஓகே, மே ட்ரை கரூங்கா” என்னவோ ஹிந்தியில் பேசினான். ஃபோனை வைத்தான்.

“ஸார்”

“என்ன?”

“என் அப்பா அழைத்தார் சார். இன்னிக்கு சண்டே இல்லியா? என்னுடைய மனைவியின் தந்தை வந்திருக்கிறாராம். நாளைக் காலை ஃப்ளைட்டாம், எனில் இப்போது வந்து பார்க்க முடியுமா எனக் கேட்கிறார்”

“ம்.. ப்ரமோத். உனக்கே தெரியும், இருந்த கான்ஸ்டபிள்கள் நால்வரில் இருவரை அனுப்பியாகிவிட்டது. நீ, சைந்தவி, ஆறுமுகம் மட்டும்தான். சரி, போ.. போய்விட்டு வா. பைக்தானே?”

“ஆமாம் சார்”

“ஓகே, நான் வேறு சைந்தவியைக் கொண்டுவிட்டுத் திரும்ப வேண்டும். மணி இப்போதே எட்டரை, சைந்து.. ஒன்பதுக்குக் கிளம்புவோமா?”

“ஓ கே சார்..”

அவன் சல்யூட் அடித்து வெளியில் சென்று பைக்கில் கிளம்பிய சில நிமிடங்களில், ஒரு ஆட்டோ வந்து நின்றது.

தலை முழுக்க வெளுத்திருந்த ஒரு பெரியவர், கண்களில் தடிமனான கறுப்பு ஃப்ரேமிட்ட கண்ணாடி. கூட ஒரு பெரியம்மா, அவர் மனைவியாக இருக்க வேண்டும்.

எங்களுக்கு அந்தக் குரல்கள் கேட்டன.

இன்ஸ்பெக்டரைப் பார்க்கவேண்டும்.

“நீங்கள்?”

“என் பெயர் ஷண்முக நாதன். இவள் பெயர் பத்மாவதி. ஒரு கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வேண்டும்”

அந்த முதியவளின் கண்களில் கண்ணீர்.

“ஒக்காருங்க பெரியம்மா” என்றார் ஆறுமுகம். ” சார் உள்ள இருக்கார், கூப்பிடறேன். பெரியவரே.. நீங்களும்தான்”

நாங்கள் வெளியில் வரலாம் என நினைத்தபோதில் செல்ஃபோன் கூப்பிட்டது. ஸ்ரீனிவாசப் பெருமாளின் ஃபோன்.. பவர்பேங்க்குடன் டேபிளில் இருந்த ஃபோன்.

வயரை விலக்கி ஃபோனை எடுத்தார் ஸ்ரீனிவாசப் பெருமாள்.

ஒரு ஆணின் குரல். ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் எனக்கும் கேட்டது.

“இஸ் இட் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனி?” – குரலில் ஒருவித கம்பீரம்.

“யெஸ்…”

“ஓ.. தேங்க் காட்”. சரளமான ஆங்கிலம் வந்தது வார்த்தைகளில். “நான் யாரென்று இவனுக்குத் தெரிந்துவிட்டது, எனில், என்னைக் கொல்லாமல் விடமாட்டான்”

“நீங்கள் யார்?”

“நான்.. நான்..” எனப் பெயர் சொல்லி முடிப்பதற்குள், ” நீ இங்கேயா இருக்க?” என இன்னொரு குரல். அத்துடன் ‘டம்ம்ம்’ எனச் சத்தம்.

இன்ஸ்பெக்டர், “ஹலோ.. ஹலோ.. ஹலோ” எனக்கத்தினாலும் மறுமுனையில் மெளனம்தான் வந்தது.

மறுபடி அந்த நம்பருக்குப் போன் பண்ண.. மறுமுனை சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

(தொடரும்)

Author

You may also like

Leave a Comment