Home நாவல்நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4

0 comments

“ஹாய்.. என்ன ஆச்சு சைந்தவி? நீ வரலையேன்னு பெருமாளுக்குக் கவலை… சரி ன்னு பெருமாள் கிட்டக்க சைந்தவி வீட்டிலேயே மீட்டிங் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்றார் ஏசிபி விஸ்வம்..

கிழமை செவ்வாய்க் கிழமை.. காலம் மாலை நேரம்.. இடம் கொக்குப் பாக்கத்தில் என்னுடைய வீடு.. பெருமாளும் விஸ்வமும் என் வீட்டில் அமர்ந்திருந்தனர். நான் எழுந்து கொஞ்சம் முகம் மட்டும் அலம்பி, காஃபி குடித்துக் கொண்டிருந்தேன்.. என் அம்மா சுடச் சுட டிகாஷன் போட்டு இறக்கிய காஃபி…

”லைட்டா ஜுரம் சார்”

“லைட்டாவா… முகம்லாம் வீங்கியிருக்கு.. இட்ஸால்ரைட் சைந்தவி…, ம்.. பாரு உன்னோட பாஸை.. கொக்குப் பாக்கம் சென்னைல யாருக்கும் தெரியாம இருந்தது.. இப்ப பார்த்தா டிவிய ஆன் பண்ணா.. கொக்குப்பாக்கம் கொலைகள்னு ரைமிங்கா ஸ்க்ரோல்ல விடறாங்க.. நல்லவேளை.. வேற டாப்பிக்கல் நியூஸ் வந்ததுனால நம்ம நியூஸ் அப்படியே விட்டுட்டாங்க… அனேகமா நாளைக்கு ஃபோர்த் பேஜ் போய்டும்..”

”ம்”

”என்ன ம்..” என்றார். விஸ்வம்

“இல்லை சார்.. நேத்துக்கு ப்ரமோதோட ஃப்யூனரல் லேட் ஈவ்னிங்தான் முடிஞ்சது.. அப்புறம் வந்து தலைக்குக் குளிச்சு கொஞ்சம் காயவைக்காம படுத்துக்கிட்டேனா.. அதான் காலைல எழுந்திருக்க முடியலை.. டாப்லட் போட்டுக்கிட்டு தூங்கிட்டேன்..”

“நீ தூங்கிட்ட சமர்த்து.. பட், பெருமாள் தூங்கலையே.. ம்.. ஸ்ரீனிவாசப் பெருமாள்னாலே தூங்க மாட்டாங்க போல”

நான் மெலிதாய்ப் புன்சிரிக்க பெருமாள் கொஞ்சம் உம்மென்றே இருந்தார்..

”சொல்லுய்யா சொல்லு எங்க வந்திருக்க கேஸ்ல?”

”இதோ எழுதியிருக்கேன்… இருங்க படிக்கறேன்” எனப் படிக்க ஆரம்பித்தார்…

”கொலையுண்ட முதல் நபரின் பெயர் கருணாகர் என்ற கருணாகரன்.. தொழில் ட்ராவல்ஸ் இன் தேன் பாக்கம் .. நல்ல ரிச்சானவர்தான். அவரது கால் வந்ததினால் நானும் சைந்தவியும் சென்றோம்.. அதெல்லாம் தெரிந்த விஷயம். இரண்டாவது ப்ரமோத்.. நம் கான்ஸ்டபிள்.. எப்படி அங்கு போனான் என்பது கொஞ்சம் அதிர்ச்சி தான்.. பட் அது இயல்பான விஷயம் தான்.. என்னவென பிறகு சொல்கிறேன்.

கருணாகர் வீட்டில் சந்தித்த நபர்கள் முதலில் ட்ரைவர் முகுந்தன்… ஆ ஆஆ என அலறியவண்ணம் அதிர்ச்சியில் ஆழ்ந்தவர்.. ‘முதலாளி நல்லவர்’ எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார்.. கொஞ்சம் நாற்பதைக் கடந்தவர்.

இரண்டாவது ப்ரபாகர்.. கருணாகரனின் மூத்த தங்கை மகன்.. அவர் பார்ட்னர் ருத்ராபதி. ப்ரகதி இரண்டாவது தங்கையின் மகள்.

ப்ரபாகரிடம் விசாரித்த போது அவர் பிஸினஸ் செய்வதாகச் சொன்னார்.. மாட்டுத் தோல் பதப்படுத்தி ஏற்றுமதி வியாபாரம்.. அவரைப்பற்றி விசாரித்ததில் தெரிய வந்த விஷயம் கருணாகரனிடம் சில லட்சங்கள் கேட்டிருக்கிறார் இரு மாதங்களுக்கு முன்னால்.. ஆனால் கருணாகர் நோ சொல்லிவிட மறுபடி முயல வந்திருக்கிறார் இங்கு..

அடுத்து ப்ரகதி.. இளமையான பெண்.. இவளுக்கும் ஒரு ப்ரச்னை.. இவளது பாய்ஃப்ரண்டும் இவளும் முக நூலில்அன்னியோன்னியப் புகைப்படத்தில் இருப்பதை தங்கையிடம் சொல்லிவிட்டார் கருணாகரன். ‘இப்படியா பெண்ணை வளர்ப்ப?’ என்று சொல்லி ப்ரகதியின் அப்பாவிடமும் போட்டுக் கொடுத்துவிட்டார்.. ப்ரகதியிடம் அவள் அப்பா ‘யார் அந்தப் பையன்?’ எனக் கேட்க காதலன் எனச் சொல்ல…ஒரே ரகளை தான்… ம்.. கருணாகரன் சொன்னது சரியாப் போச்சே எனப் புலம்பல். எனில் கருணாகரனிடமே தன் காதலின் நியாயத்தைச் சொல்லலாம் என வந்திருக்கிறாள். அவளுக்கு அவர் மேல் மெலிதான கோபம் கூட.

எப்படி விசாரித்தேன்? எனக் கேட்காதீர்கள். விசாரித்த, ஃபோன் செய்த, வாஸ்ஸப் செய்த நபர்கள் கணக்கில..

ருத்ராபதி ச்சும்மா ப்ரபாகருடன் வந்திருக்கிறார்.. அவருக்கும் கருணாகரனுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் அவருடைய நண்பர் ஒருவரிடம் பிஸினஸ் லோன் கேட்பதற்காக வந்திருக்கிறார்.

இதற்கிடையில் மாடி செல்ல ப்ரமோத்தின் உடல் அங்கே. அவனுக்கு அங்கென்ன வேலை?…

சைந்தவி அழுத படி ஆம்புலன்ஸில் சென்றுவிட்டாள்.. ஆனால் நான் காத்திருந்தேன், பைரவன் வருவதற்காக.. எங்கள் நாய்.. நாய்கன் என்று கூடச் சொல்லலாம். வள்ள்ள்ள்..

அது வந்து மோப்பம் பிடித்து பிடித்து.. மாடியில் இருந்த அறைக் கட்டிலின் அடியில் நுழைய முயல, பார்த்தால் ஃபோன்.. உடைந்த செல்ஃபோன். எடுத்துப் பார்த்து ரிப்பேர் ஷாப்பில் கொடுத்ததில் தெரிந்த தகவல் என்னவென்றால் அது கருணாகரின் ஃபோன். கடைசிக்காலுக்கு முந்தைய கால் ப்ரமோத்திற்குச் சென்றிருக்கிறது…”

ஸ்ரீனிவாசப் பெருமாள் நிறுத்தி, என் அம்மா தந்திருந்த காப்பியை மேஜையில் வைத்திருந்ததை.. எடுத்துக் குடித்தார்.

”ஸோ” என்றார் விஸ்வம். “கருணாகரன் ஃபோன் பண்ணி, போயிருக்கிறானா ப்ரமோத்..?”

”ஆமாம் சார்.. அது தவிர கருணாகரனுக்குப் ப்ரமோத்தைத் தெரியும். அவன்தான் என் நம்பரையும் கொடுத்திருக்கிறான் அவருக்கு”

”ஓ எப்படி?”

”சொல்கிறேன் சார்.. முதலில் ப்ரமோத்திற்குத்தான் போன் பண்ணியிருக்கிறார்.. பைக்கில் அவன் எடுக்கவில்லை.. அதற்குள் டிஸ்கனெக்ட் பண்ணி எனக்குப் பண்ண, கொலைகாரன் வர பின் ஃபோனும் டெட்..”

”ம்ம்.. சொல்லுங்கள்”

நான் மலங்க மலங்கக் கேட்டுக்கொண்டிருந்தேன்.. மறுபடியும் தலைவலி எட்டிப்பார்ப்பது போல் இருந்தது.. சுடிதாரை இழுத்து விட்டுக் கொண்டேன்.

பெருமாள் சொன்னார். ”கருணாகரனின் மிஸ்ட்கால் பார்த்துவிட்டு அடிக்கப் பார்த்திருக்கிறான் ப்ரமோத்.. ஸ்விட்ச் ஆஃப் எனத்தெரிந்ததும் வீடு போகும் வழி என்பதால் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறான்..”

”சரி..”

”அங்கே இவர் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் வெளியே வந்து, மாடியில் தாவி ஏறுகையில் கொலைகாரனைப் பார்த்து அவனுடன் அடிதடி.. பின் கத்தி.. குத்தல், பாத்ரூமில் தள்ளிவிடுதல் நிகழ்ந்திருக்கிறது”

”ஓகே”

ஸ்ரீ நி தொடர்ந்தார். ”அதுல பார்த்தீங்கன்னாக்க” திருவிளையாடற் புராணத்தில் வரும்.

ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக்
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி இந்தச்
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க என்றான்
.” என்றார்

விஸ்வம் முழித்தார். “என்ன பெருமாள்?”

”இல்லீங்க ஒரு அந்தணப்பெண்ணின் உயிரை எடுக்கவேண்டும் எமதூதர்களுக்கு.. எனில் என்றோ மரத்தில் தைத்த அம்பை காற்றினால் அசைத்து, அந்தப் பெண்ணின் மீது எய்து கவர்ந்து விடுகிறார்கள்.. அந்த மாதிரி டைம் வந்துடுச்சு.. ப்ரமோத் உயிர் போய்டுச்சு”

“பெருமாள், உம்ம இலக்கியம் லாம் அப்புறம் வெச்சுக்குமேன்..” விஸ்வம்.

”யெஸ் ஸார்” என்ற பெருமாள் தொடர்ந்தார்.

”ப்ரமோத்தின் அப்பாவைச் சந்தித்தேன்.. செளகார் பேட்டை வட இந்தியர். நன்றாகவே நொந்து போயிருந்தார். அவரது மருமகள் மோனிக்கா கண்ணீர்க் கறையைத் துடைக்காமல் வெறித்த பார்வை..”

“இருக்காதா பின்னே?” என்றார் விஸ்வம்.

“ஆனால் ஏதோ நிம்மதியாக இருப்பது போல் பட்டது எனக்கு. விசாரித்தேன்..” என்று நிறுத்தினார் பெருமாள்.

“என்ன ஆச்சு சார்?” எனக் கேட்டேன் நான்.

”சைந்தவி.. மோனிக்காவிற்கும் ப்ரமோத்திற்கும் டிஃபரன்ஸ் ஆஃப் ஒப்பீனியன் இருந்திருக்கிறது. இருவரும் சந்தோஷமாக வாழவில்லை என்பது தெரிய வந்தது. அப்புறம்… ப்ரமோத்திற்கு கருணாகரன் எப்படிப் பழக்கம் என்றால்..”

”எப்படி…?”

”ப்ரமோத்தின் அப்பா கருணாகரன் ட்ராவல்ஸில் இருந்துதான் வாகனங்கள் சொல்வார், வெளியூர் செல்வதற்கெல்லாம். அப்புறம் ஃபினான்ஸும் பண்ணியிருக்கிறார் கருணாகரனுக்கு, வித் அவுட் காரண்ட்டி”

”வாட்…என்னய்யா குழப்பற?”

”குழப்பம்லாம் இல்லை சார். நெடு நாளைய நண்பர்களாம் அவர்கள். கருணாகரன் சமீபத்தில்தான் நார்த்திலிருந்து இங்கு வந்து பிஸினஸ் ஆரம்பித்தாராம்”

”ஓ ஓகே.. சரி, யார்தான் பண்ணியிருப்பாங்க இந்தக் கொலைகளை?”

”தெரியலை சார்.. இன்னும் விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்”

”அந்தப் பையனைக் காணோமென்ற தம்பதி…” என விஸ்வம் கேட்டுக்கொண்டிருக்கையில் கொய்ங்க்.. என மெஸேஜ் பெருமாளின் செல்ஃபோனில். எடுத்துப் பார்த்தவர், “அது பற்றித்தான் விசாரிக்கப் போகிறேன். ஆறுமுகம் அந்த ஸ்கூல் பையனின் தாத்தாவின் மைனாப்பாக்க விலாசம் கண்டுபிடித்து அனுப்பியிருக்கிறார்.. ஸாரி இன்னிக்குத் தான் சொன்னேன்.. நேற்று முழுவதும் பிஸியா இருந்ததால முடியலை”

”சரி ” என எழுந்துகொண்டார் விஸ்வம். ”கண்டின்யூ யுவர் குட் வொர்க்.. கொஞ்சம் சீக்கிரமாக் கண்டுபிடிக்கப் பாருங்க… ப்ரஸ்ஸும் மேலிடமும் என்னைக் குடையுது”

”ஷ்யூர் சார் ” என சல்யூட் அடித்த பெருமாள் சைந்தவி.. “நீயும் வா, மைனாப்பாக்கம் போகலாம் ” என்றார்.

”எல்லாம் என் அம்மா அப்பாவின் அவசரத்தால் வந்தது” என்றான் மைனாப்பாக்கம் ஷண்முகநாதனின் ஐடி வேலை பார்க்கும் மகன். மருமகள் நைட்டியில் இருந்தாள்.. எதிரில் கொஞ்சம் மருண்டபடி ஷண்முக நாதன் பத்மாவதி.

”அன்னிக்கு பையன் பக்கத்து வீட்ல விளையாடப் போறேன்னு சொல்லிட்டுதான் போயிருக்கான்.. அங்க அவன் வயது குட்டிப்பொண் ஒண்ணு உண்டு. அதோட விளையாடிட்டு, கொஞ்சம் சாப்பிட்டுட்டு அங்கேயே தூங்கிட்டான். அந்த அம்மாவும் இவங்க கிட்ட சொல்லலாம்னு வந்தா இவங்க கனகாரியமா ஆட்டோ பிடிச்சு உங்க கிட்ட வந்துட்டாங்க சார்”

”வந்தது சரி. பட், அப்புறம் ஃபோன் பண்ணியிருக்கலாமில்லை?”

”சாரி சார்.. தோணலை.. மன்னிச்சுக்குங்க.. நாங்க மறுநாள் தான் வந்தோம்.. இவங்க சொன்னதைக் கேட்டோம்.. உங்களுக்கு ஃபோன் பண்ணி இருக்கலாம்தான். ஆனா, பயம். என்ன சொல்வீங்களோன்னு. இதோ பையன் வரானே.. ஏண்டா யூனிஃபார்மோடா விளையாடணும்..?”

வந்த ஷண்முகனாதனின் பேரன், ப்ரெளன் ட்ராயர், ப்ரெளன் குட்டிக் கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தான். எங்களைக் கொஞ்சம் வித்யாசமாய்ப் பார்த்தான்.

”இவன்தான் என் சன்” என்றான் ஷண்முக நாதனின் சன்.

”சரி.. வந்து கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கிக்கிடுங்க ”எனப் பெருமாள் சொல்லிப் பின் இருவரும் வெளியில் வந்தோம்.

ஸ்கார்ப்பியோவை ரிவர்ஸ் எடுத்து நேரே வழி செய்தார் ஸ்ரீனிவாஸப் பெருமாள். கை ரேடியோவை ஆன் செய்தது…

”இரவின் மடியில் நிகழ்ச்சி வழங்குவது உங்கள் ராஜேஷ். இந்தப் படத்திலிருந்து ஒரு பாட்டு முன்னாடியே போட்டிருக்கிறோம். ஆனால், இந்தப் பாடல் வெகு அழகான பாடல். கண்ணிழந்த பெண் ஒவ்வொன்றாய்க் கேட்டு ஹீரோ சொல்வது போல. மறைந்த ஸ்ரீதேவி நன்றாகப்பண்ணியிருப்பார்… இதோ பாடல் கேளுங்கள்…”

பாடல் தொடர….

சாலையில் செல்ல ஆரம்பித்த ஸ்ரீனி ப்ரேக்கை அழுத்தி நிறுத்தினார்…

”என்ன ஆச்சு சார்.?”.

”இந்தப் படத்தோட பேர் தெரியுமா…?”

”பழைய படங்கள்லாம் பார்க்கும் வழக்கமில்லை சார்.. நேரமும் இல்லை.. ஸோ எனக்குத் தெரியாது சார்..” என்றேன் நீளமாக அவரைப் பார்த்தபடி.

பக்கவாட்டில் திரும்பி முறைத்துப் பார்வையை நேராக்கி ஸ்ரீநி “எனக்குத் தெரியும்.”

ஸோ….. எனக் கேட்டேன் நான்….

”ஸோ, இந்தக் கேஸ் இஸ் சால்வ்ட்” என்றார் பெருமாள்.

Series Navigation<< நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3

Author

You may also like

Leave a Comment