ஒரு மடக்கு தேநீர்..

சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள் நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என எங்கிருந்தோ ஒரு குயில் கூவிற்று. கூவிய குயில்குரல் மெதுவாக மிதந்து வர வர சிவராமனுக்கு தேநீர் பசியெடுத்தது. பல வருட அலுவலகப்பழக்கம் அது. ரிடையர் ஆகிவிட்டாரென்பதற்காக மாற்றிக்கொண்டுவிட்டால் அது தனது தேநீர் நண்பர்களுக்குச் செய்யும் துரோகம் என இன்னும் அதைக் கைவிடாதிருப்பவர். குயில் காண்டீன் சிப்பந்தியின் சீருடையணிந்து, ஒரு கையில் கேனும் இன்னொரு கையில் பேப்பர் கப்புகளுமாக இரண்டு கால்களில் நடந்து வந்து நின்றது.. நின்றான்.

“ச்சாய் எவ்ளோப்பா?”

“பத்து ரூப்யா” என தமிழும் ஹிந்தியும் கலந்து ஹிமிழில் சொல்லிவிட்டு “கித்னா தரட்டும்?” என்றான். சிவராமன் மனைவியை நோக்கினார், அவளும் நோக்கினாள். கண் பேசிய வார்த்தைகளைப் புரிந்து கொண்டவர், “ஒண்ணு போதும்ப்பா” என்றார். “திரும்பி வரப்ப காசு வாங்கிக்கறேன் சார்” என்றபடி டீக்காரர் நீட்டிய கப்பை வாங்கிக்கொண்டு ஒரு மிடறு உறிஞ்சியவரது கண்கள் செருகின. காரமான அளவான இனிப்புடன் கொதிக்கக்கொதிக்க தேவாமிர்தம் போல் இருந்தது தேநீர். செகண்ட் ஏசி பெட்டியின் குளிருக்கு இதமாகவும் இருந்தது. ரயிலின் இரும்புச் சக்கரங்கள் தட்டச்சுப் பொறியின் ஒலியைப் போல ‘டக டக டக…’ எனத் தண்டவாளங்களின் மேல் எழுத்துக்களை அச்சிட்டுக் கொண்டு குதியாட்டம் போட்டு ஓடிக்கொண்டிருந்தது.

ஜன்னலோரச் சீட்டில் அமர்ந்திருந்த சிவராமன் தன் கையில் இருந்த காகிதக் கப்பை உதட்டுக்குக் கொண்டு சென்றார். டீயின் மேல் படர ஆரம்பித்திருந்த மெல்லிய ஆடையை ப்பூ.. என ஊதினார். அதிலிருந்து ஒரு மெல்லிய நீல நிற மேகம் வெளிப்பட்டு, ரயிலின் கூரையில் சிறிய மழை மேகமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.

“பத்து ரூபாய் குடுங்க சாப்” என்றார் திரும்பி வந்திருந்த டீக்காரர். அவர் அணிந்திருந்த சீருடையின் பொத்தான்கள் ஒவ்வொன்றும் சிறிய ரயிலின் சக்கரங்களைப் போலத் சுழன்று கொண்டிருந்தன.

“ஜிபே பண்றேன்.. உன் நம்பர் சொல்லு” என்றார் சிவராமன்.

“ஜிபேயா? அதெல்லாம் கிடையாது சார். எனக்குப் பச்சை நோட்டுதான் வேணும். இல்லன்னா குடிச்ச டீயைத் திருப்பிக் குடுத்துடுங்க,” என்றார் டீக்காரர் கறாராக.

சிவராமன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவி மீனாட்சியை நோக்கினார்.. அவளும் நோக்கினாள். “ப்ச்..” என்ற சின்ன சலிப்போடு தன் கையிலிருந்த “சித்தப்பா” சீரியல் ஓடிக்கொண்டிருந்த கண்ணாடியைக் கீழே வைத்துவிட்டு, தன் கைப்பையைத் திறந்து துழாவினார். பையின் ஆழத்தில் இருந்து ஒரு பெரிய கடிகாரத்தின் முட்கள், உறங்கிக்கொண்டிருந்த பூனைக்குட்டி, அப்புறம் ஒரு காய்ந்த எலுமிச்சம்பழம் ஆகியவை வெளியே விழுந்தனவே தவிர, நாணயம் எதுவும் வரவில்லை.

“என்கிட்ட பணமில்லீங்க… நான் வீட்டை விட்டு கிளம்பும்போதே சொன்னேன்ல, சில்லறை எடுத்து வெச்சுக்கோங்கன்னு.. கேட்டாத்தானே?” என்றபடி சீரியலைத்தொடந்தார் மீனாட்சி.

டீக்காரர் பொறுமையிழப்பது தெரிந்தது. “சாப்.. காசு கொடுத்துட்டீங்கன்னா நான் போய்டுவேன், நாலு பெட்டில யாவாரம் பார்க்கறவன்..”

வியர்வை துளிர்க்க ஆரம்பித்த நெற்றியைத் துடைத்துக் கொண்டார். “நல்லாப் பாரு மீனாட்சி, இண்டு இடுக்கு எங்கியாவது பணம் வெச்சிருப்பே” என்றார்.

மீனாட்சி சூடானாள். “ஏங்க.. வெளில வாசல்ல போறச்சே என் கையிலயும் கொஞ்சம் காசு கொடுத்து வைங்கன்னா என்னிக்காவது கேக்கறீங்களா? அதான் போன் பே இருக்கே ஜிபே இருக்கேன்னு நீங்களும் பணம் வெச்சுக்காம உசுரை வாங்கறீங்க” எனக்கொதித்தாள். சிவராமன் டீக்காரர் பக்கம் திரும்பி, “தம்பி! ஒரு யோசனை. உன்னோட வேலை செய்யற ஆளு யாராவது இருப்பாங்கள்ல? அவனைக் கூட்டிட்டு வா. நான் அவனோட ஜிபேக்குப் பணத்தை அனுப்புறேன். அவன் உனக்குக் ரொக்கமா குடுத்துடட்டும். என்ன சொல்ற?” என்றார்.

டீக்காரர் தனது இரண்டு கண்களையும் வெவ்வேறு திசையில் சுழற்றி யோசித்தார். “சரி… நகராம இங்கயே இருங்க,” என்று சொல்லிவிட்டு, போகியின் கதவைத் திறந்து சென்று, அடுத்த விநாடியே மறுபடியும் அதே கதவு வழியாக உள்ளே வந்தார். அவருடன் மற்றொருவன் வந்தான்.

வந்தவன் தலையில் ஒரு பெரிய பாக்கெட் டைரி முளைத்திருந்தது. ஏதேதோ கணக்கு வழக்குகள் தன்னைத்தானே எழுதிக்கொண்டிருந்தன. காதில் மாட்டியிருந்த புளூடூத் ஹெட்போனில் இருந்து சிறிய பறவைகள் வெளியே இசைக்கேற்ப நடனத்துடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.

“சார், இவன் என் நண்பன்.. இவன்கிட்ட ஜிபே இருக்கு,” என்றார் டீக்காரர்.

சிவராமனுக்கு வயிற்றில் ஏலக்காய் தேநீர் வார்த்தது போல் இருந்தது. “அப்பாடா! உன் ஜிபே நம்பரைச் சொல்லுப்பா. அப்படியே பத்து ரூபாயை அனுப்புறேன். நீ இவன்கிட்ட பணமாக் குடுத்துடு”

நண்பன் தன் தலையில் இருந்த டைரியைத் திறந்து, விரல்களால் பக்கங்களைத் திருப்பினான். “சார்… ஒரு சின்ன சிக்கல். என் போன்ல கூகுள் பே இல்ல. ஆனா ‘கால பே’ இருக்கு.”

“என்னது? கால பேயா? அப்படின்னா?”

“அதுல பணத்துக்கு பதிலா நேரத்தை அனுப்பலாம் சார். நீங்க எனக்கு ஒரு பத்து நிமிஷத்தை அனுப்புங்க, நான் இவனுக்கு பத்து ரூபாய் தர்றேன்,” என்றான் மிகச் சாதாரணமாக.

“யோவ்! என்னய்யா லூசுத்தனமா பேசுற? ஒழுங்கா உன் போன்பேயோ ஜிபேயோ.. அந்த நம்பரைச் சொல்!” என்று சிவராமன் படபடத்தார்.

“சரி சரி, கோபப்படாதீங்க… என் போன்பே நம்பர் சொல்றேன். ஆனா என் போன்பேல பேங்க் அக்கவுண்ட் லிங்க் ஆகல. ஏன்னா என் பேங்க் கிளை இப்போ கடலுக்கு அடியில இருக்கு,” என்றான் நண்பன்.

“என்ன உளர்றே?..”

“ஆமா சார்.. சுனாமில போயிருச்சு”

சிவராமனுக்குத் தலை சுற்றியது. சுற்றியிருந்த பயணிகள் அனைவரும் தங்களின் தலைகளைத் திருப்பிப் பார்த்தார்கள். மேலடுக்கில் படுத்திருந்த ஒரு பெரியவர், காற்றில் மிதந்தபடி இறங்கி வந்து, “என்னப்பா பிரச்சனை? பத்து ரூபாய்க்கு எதுக்கு இவ்வளவு சத்தம்? நான் வேணும்னா என் கனவுல இருக்குற கடையில் இருந்து காசு எடுத்து தரட்டுமா?” என்றார்.

“ஐயா! நீங்க மேலேயே இருங்க, எங்க நடுவுல வராதீங்க! இதை நாங்களே தீத்துக்குவோம்” என்று கடுப்பானார் சிவராமன்.

டீக்காரரின் நண்பர், “ரமேசு! இவரு சொல்ற ஜிபே கணக்கு எனக்குப் புரியல. என் தம்பி நிலாவுல இருக்கான்… அவனோட விண்வெளி கணக்குக்கு மூன்பே பண்ணச் சொல்லு. ஆனா அதுக்கு எனக்கு ஒரு டீயும், அஞ்சு சமோசாவும், கூடவே இந்த ஐயாவோட தொப்பியையும் ப்ளாட்பாரம் ஃபீஸாக் குடுக்கணும்,” என்று புது பேரம் பேசினான்.

“என்னது! என் தொப்பியா?” சிவராமன் தன் தலையைத் தொட்டுப் பார்த்தார். அங்கே தொப்பியே இல்லை, ஆசைப்பட்டு வெட்டிக்கொண்ட காளான் வெட்டுதான் (மஷ்ரூம் கட்) அப்படித் தெரிந்தது.

டீக்காரர் குறுக்கிட்டு, “சார்! இவன் சொல்றதும் சரிதான். இவன் தம்பிக்கு அனுப்புங்க” என்றார்.

“பத்து ரூபாய்க்கு இவ்ளோ அக்கப்போரா!” என்று அலுத்துக்கொண்டவரை “இல்ல. உடனே காசு தராததுக்கான அபராதம், அப்றம் அந்த ப்ளாட்பார்ம் ஃபீஸ் எல்லாம் சேர்த்து நூறு ரூபா ஆச்சு” எனக்கூறி அதிரவைத்தார்.

“சரி தொலையுது! அந்தத் தம்பியோட ஜிபே நம்பரைச் சொல்! நூறு ரூபாயை அனுப்புறேன்!” என்று சிவராமன் தனது கூகுள் பே செயலியைத் திறந்தார்.

டீக்காரரின் நண்பன் எண்களைச் சொன்னான். ஒவ்வோர் எண்ணைச் சொல்லும்போதும் போகியின் விளக்குகள் ஒருமுறை அணைந்து மின்னின. “ஏம்ப்பா.. உங்க தம்பியின் பெயர் முருகனா?” எனக்கேட்டு உறுதி செய்து கொண்டவர் ‘Pay’ என்பதைத் தட்டினார். போன் திரை வளையம் வளையமாகச் சுழன்றது… சுழன்றது…

திடீரென திரையில் “நெட்வொர்க் இல்லை” என செய்தி வந்தது.

ரயில் அப்போதுதான் ஒரு மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட முடிவுறாத நீண்ட சுரங்கப் பாதைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. வெளிச்சம் முற்றிலுமாக மறைந்தது. ஆனால், இருட்டிலும் சிவராமனின் ஸ்மார்ட்போன் திரை மட்டும் பிரகாசமாக மின்னியது.

“அடடா! டவர் போச்சே!” என்று கூச்சலிட்டார் அவர்.

இருட்டுக்குள் டீக்காரரின் குரல் ரயிலின் சக்கரங்கள் பேசுவது போல ஒலித்தது. “யோவ் பெரியவரே! என்னய்யா டவர் போச்சு, கிவர் போச்சுன்னு கதை விடுற? டீயைக் குடிச்சுட்டு எங்களை ஏமாத்தப் பாக்குறீங்களா?” சுரங்கப் பாதைக்குள் சத்தம் எதிரொலித்தது. போகியில் இருந்த மற்ற பயணிகளின் நிழல்கள் சீட்டுகளில் இருந்து எழுந்து நின்று நடனமாடத் தொடங்கின.

“தம்பி! யாராவது ஒரு நூறு ரூபாய்க்குச் சில்லறை தருவீங்களா? நான் உங்க கணக்குல ஜிபே பண்ணிடுறேன்… நெட்வொர்க் வந்ததும்!” என்று சிவராமன் இருட்டுக்குள் கையேந்தினார். ஆனால் பயணிகள் அனைவரும் மொபைல் போன்களாக மாறி, ‘டிக்… டிக்…’ என்று சத்தம் மட்டுமே எழுப்பினார்கள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ரயில் சுரங்கப் பாதையை விட்டு வெளியே வந்தது. வெளியே பகலும் இரவும் கலந்த ஒரு விசித்திரமான செவ்வானம் இருந்தது. போனில் மீண்டும் ’10G’ சிம்பல் மின்னியது.

“வந்திடுச்சு! நெட்வொர்க் வந்திடுச்சு!” என்று கத்தியவர் உடனே முருகனின் எண்ணிற்கு ரூபாயை ஜிபே செய்தார். பணப் பரிவர்த்தனை வெற்றியடைந்தது என செய்தி ஒலித்ததும் “அப்பாடா!.. அனுப்பிட்டேன் பாரு தம்பி” என்றார்.

அவன் தன் காதில் இருந்த புளூடூத் பறவையிடம் பேசினான். “டேய்! போனுக்கு ரூபாய் வந்துச்சாடா… என்னது? இன்னும் வரலையா?” போகியில் இருந்த பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களின் தலைகளைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு சிரிப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டது. சிவராமன் தலையிலேயே கை வைத்துவிட்டார். “கடவுளே! நான் எந்த உலகத்துல இருக்கேன்?”

அமைதியிழக்க ஆரம்பித்திருந்த டீக்காரர் முதுகில் இன்னும் இரண்டு கைகள் முளைத்து இப்போது நான்கு கைகளுடன் நின்றிருந்தார். அதில் ஒரு கையில் ரீல்ஸ் எடுக்கத்தயாராக மொபைல் போன் ஒளிர்ந்தது. “ஹேய் கைய்ஸ்.. ஓடும் ரயிலில் இவர் என்ன செஞ்சார் தெரியுமா?” எனப் பேச ஆரம்பித்தவர் சடாரென மொபைலை சிவராமன் பக்கம் திருப்பி, “சார், எனக்கு இதெல்லாம் தெரியாது. காசு வந்தாதான் நான் நகருவேன்” என்றார்.

நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட பக்கத்து சீட் கல்லூரி மாணவன், தன் பையிலிருந்து ஒரு பழைய மரத்தாலான நாணயத்தை எடுத்து டீக்காரரிடம் நீட்டினான். “இந்தாப்பா உனக்கு வேண்டிய டீக்கான காசு. அந்தப் பெரியவரை விட்டுடு”

டீக்காரர் அந்த நாணயத்தை வாங்கித் தன் வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டு, “இதை முதல்லயே பண்ண வேண்டியதுதானே சார்!” என்று முணுமுணுத்துக் கொண்டே சுவரோடு சுவராகக் கரைந்து மறைந்தார். அவரது நண்பன் காற்றாடியைச் சுழற்றியபடி கூரையைக்கிழித்துக் கொண்டு பறந்து போனான்.

சிவராமன் அந்த மாணவனைப் பார்த்து நெகிழ்ந்துபோனார். “தம்பி! ரொம்ப நன்றிப்பா. உன் ஜிபே நம்பரைச் சொல், நான் உனக்கு ரூபாயை அனுப்பிடறேன்”

மாணவன் புன்னகைத்தான். அவனது கண்கள் இரண்டு சிறிய நாணயங்களாகச் சுழன்றன. “பரவாயில்லை சார், அது இருக்கட்டும். ஆமா.. உங்க சட்டையின் மேல் பாக்கெட்ல ஒரு மீன் துள்ளிட்டு இருக்கே, அது என்ன சார்?” என்று சுட்டிக்காட்டினான். அவன் சுட்டிய திசையில் சட்டெனத் தன் மேல் பாக்கெட்டில் கை வைத்தார். அங்கிருந்து ஒரு தங்க நிற மீன் துள்ளிக் கொண்டு வெளியே வந்தது. அந்த மீனின் வாயில் மடிக்கப்பட்ட புத்தம் புதிய ஒரு 500 ரூபாய் நோட்டு இருந்தது!

மீனாட்சி அம்மாள் ஆச்சரியமாக, “ஏங்க! கிளம்பும்போது டாக்ஸிக்குக் கொடுக்கணும்னு உங்க சட்டைப் பாக்கெட்ல பர்ஸ்ல வச்சனே… அதை மறந்துட்டீங்களா?” என்றார். போகியில் இருந்த பயணிகள் அனைவரும் மீண்டும் தங்கள் சாதாரண மனித உருவத்திற்கு வந்து உரக்கச் சிரிக்கத் தொடங்கினர். சிவராமனின் முகம் சுருங்கி, அவமானத்தில் ஊதா நிறமாக மாறியது. “அடக் கடவுளே! பாக்கெட்ல ஐநூறு ரூபாய் வச்சுக்கிட்டா இந்த பத்து ரூபாய் டீக்காக ரயிலையே மாயாஜாலக் கூத்து மேடையாக்கினேன்?” என்று நொந்து கொண்டார்.

ரயில் அடுத்த ரயில் நிலையத்தை நோக்கி வேகத்தைக் குறைத்து நெருங்கிக்கொண்டிருந்தது.

“மீனாட்சி, அடுத்த தடவை நாம ரயிலேறினா, இந்த போன், ஜிபே எல்லாத்தையும் தூக்கி ஆத்துல வீசிட்டு, கழுத்துல ஒரு பழங்காலத்துச் சில்லறை உண்டியலையும், பாக்கெட்ல ஒரு பூட்டையும் மாட்டிட்டுதான் வரணும்!”

அவர் சொன்னதைக் கேட்டு, மீனாட்சியின் பையிலிருந்த காய்ந்த எலுமிச்சம்பழம் சிரித்தது. தங்க மீனும் சிரித்தது.. குலுங்கிக்குலுங்கி அவை சிரித்த சிரிப்பில் இரண்டும் உருண்டோடி பக்கத்து இருக்கைகளின் அடியில் போய் விழுந்தன. பக்கத்து சீட்காரர் அவற்றை எடுத்து நீட்டினார்.

“வாங்கிக்கோங்க..”

“வாங்கிக்கோங்க..”

திடுக்கிட்டு விழித்தார். எழுந்து உட்கார்ந்து கண்களை மெல்ல தேய்த்துவிட்டுக்கொண்டார். நெஞ்சில் சாய்த்திருந்த மொபைல் மெல்ல நழுவித்தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் மின்னி, மாலை மூன்று மணி எனக்காட்டியது. ஒரு குகைக்குள் நுழைந்து வெளிவந்துகொண்டிருந்த ரயிலின் நிழல் இளமஞ்சள் சாய்வு வெய்யிலில் நெளிநெளியாய் ஓடிக்கொண்டிருந்தது.

“ஏங்க.. வாங்கிக்கோங்க..” மீனாட்சி அவரை உலுக்கினாள்.

“சூடா வாழைக்காய் பஜ்ஜி வந்தது, உங்களுக்குப் பிடிக்குமேன்னு வாங்கினேன்” தட்டை நீட்டினாள்.

சிவராமனுக்குச் சூடாக ஒரு மடக்கு தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது.

Author

Related posts

தனிமைகள் பரவாயில்லை

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 13

ஞான நூல்கள் – 24 & 25