தாளை மடித்து உருவம் செய்ய
கற்றுக் கொண்டாள் மீனா – அவள்
தனக்குப் பிடித்த கொக்கு ஒன்றை
அழகாகச் செய்தாள்
கூர்மையான மூக்கு
நீளமான கால்கள்
உயரமான உருவம்
வெண்மையான கொக்கு!
படிக்கும் மேசை மீது
நிற்க வைத்தாள் அதனை
மெல்ல தடவிக் கொடுத்தாள்
பார்த்துப் பார்த்து ரசித்தாள்!
நடு இரவில் பேப்பர் கொக்கு
மெல்ல வளர்ந்தது – அது
படுத்திருந்த மீனாவை
எழுப்பி விட்டது !
கொக்கின் முதுகில் ஏறி அமர்ந்தாள்
குட்டிப் பொண்ணு மீனா- அவளை
கூட்டிக் கொண்டு கொக்கு மெல்ல
வெளியில் பறந்தது!
அழகான நிலவு ஒளியில்
ஊரைச் சுற்றிப் பார்த்தனர்
அல்லி பூத்த குளக்கரையில்
இறங்கி நடந்து மகிழ்ந்தனர்!
விடியும் முன்னே வீட்டுக்கு
வந்து சேர்ந்தது கொக்கு
படுக்கையிலே மீனாவை
உறங்க வைத்தது!
எழுந்தவுடன் விரைந்து சென்று
மேசை மீது பார்த்தாள்- அங்கே
அசைவு ஏதும் இல்லாமல்
நின்றிருந்தது கொக்கு !
இரவுப் பயணம் எல்லாமே
கனவா நனவா?
ஏதொன்றும் புரியாமலே
வியந்து நின்றாள் மீனா!