சாம்பன் 

ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்?

கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமர்ந்தார் வாணாதித்தர்.. அவரது நெற்றியில் கங்கைகொண்ட சோழீஸ்வர ஆலயத்தின் பிரகதீஸ்வரரின் பிரசாதமான திருநீறு மின்னியது.. நீண்ட நேரம் அலைந்ததால் கொஞ்சம் வியர்வைத்துளி பின்னங்கழுத்தில் துளிர்த்தது.

வலதுகால் மடக்கி இடக்காலை நீட்டிச் சிந்தனையில் ஆழ்ந்தார் அவர்.. மார்பில் இருந்த ஸ்வர்ணப் புலிநகம் வெயிலில் பளபளத்திருக்க, கை கால்களில் இருந்த கங்கணங்களிலும் அந்தப் பிரகாசம் தென்பட்டது..

கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து காஞ்சியில் இருக்கும் தனது ஊரான பெருங்குளத்தூருக்கு முதல் நாள்தான் வந்திருந்தார் வாணாதித்தர்.. அழகான அந்த ஊரில்தான் அவரது மகள் ராதையையும் மனைவி யசோதையையும் விட்டிருந்தார்..

Iவாணாதித்தர் பேரரசர் ராஜேந்திர சோழ தேவரின் படைப்பிரிவில் ஒரு சிறு உப தளபதி.. வேலையெல்லாம் கங்கைகொண்ட சோழபுரம்தான்.. எப்போதாவது சில நாட்கள் விடுப்பு எடுத்து இந்த கிராமத்துக்கு வருவார்.. அப்படியே நேற்றும் வந்தவர் கேள்விப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கோபமும் பட்டார்.

விஷயம் சொன்னது யசோதாதான்..

“ராதை ஒரு வாலிபனை விரும்புகிறாளாம்..”

ராதை கொஞ்சம் பின்னறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். விழிகளில் சற்றே கேள்விக்குறி இருந்ததே தவிர பயமேதும் இல்லை.

“உண்மையா ராதா.. எந்த ஊர்?..”

”அருகில் உள்ள பெருவளநல்லூர்“

“அங்கு நமது வலங்கைக்காரர்கள் இருப்பதாகத் தெரியவில்லையே.. யார் மகன்?..”

“நச்சினார்க்கினியர் மகன்.. பெயர் கண்ணபிரான்..”

“நச்சினார்க்கினியர்…. மருத்துவன்.. இடங்கைக்காரன்.. போயும்போயும் அவன் மகனா?!.. என்ன செய்கிறான்?..”

.”காஞ்சியில் கோட்டை உப தலைவனாக இருக்கிறார்..”

எதுவும் சொல்லாமல் எழுந்தார் வாணாதித்தர்..

“தந்தையே.. நான் விருப்பப்படவில்லை.. அவர்தான் என்னிடம் சொல்லி உங்களிடம் கூறச் சொன்னார்..”

“அவர்ர்ர்…..” வெறுப்புச்சிரிப்புச் சிரித்தார் வாணாதித்தர்…

“ம்ம். ராதை நான் பார்த்துக் கொள்கிறேன்.. ஒன்று தெளிவாய்த் தெரிகிறது. உனக்குத் திருமணப் பருவம் வந்துவிட்டதென்று.. கங்கைகொண்ட சோழபுரத்தில் முக்கிய உபதலைவனான எனக்குச் சாதாரண இடங்கைக்காரனிடம் உடன்பாடில்லை ராதை… வலங்கைக்காரர்களுக்கு வீரம் ஜாஸ்தி என்று உனக்குத் தெரியாதா?..”

“வீரத்தில் வலம் இடம் என்று உண்டா தந்தையே.?.”

“மன்னித்துவிடு ராதை.. நான் உறங்கி எழுகிறேன்.. காலை பேசலாம்..”

உரையாடலை அப்போதே முடித்து உறங்கி எழுந்து காலையில் குளித்து அவருடைய ஊரான பெருங்குளச் சிவன் ஆலயம் சென்று வந்தால் வாசலிலேயே யசோதை மற்றும் ராதை.. ராதையின் கண்களில் கண்ணீர்..

”தந்தையே.. சாம்பனைக் காணவில்லை.. தேடிப்பார்த்தேன்.. கிடைக்கவில்லை..” என்றாள் ராதை.

சாம்பன் ராதை ஆசையுடன் சிறுவயது முதல் வளர்த்த அலங்கு இன நாய்.. உடல் முழுவதும் சாம்பல் வண்ணமாய்க் குட்டியாய் வந்த அதற்குப் பெயரிட்டு வளர்த்து, பெருங்குளத்தூரில் நாய்களுக்குப் பயிற்சி கொடுக்கும் ராம தேவரிடம் பயிற்சி கொடுத்து, ஆடுகளை மேய்க்கும் அளவிற்குச் செய்திருந்தாள் ராதை..

அதுவும் ராதை என்றால் உயிராக இருக்கும். அவள் சொன்னதைச் செய்யும் அறிவுள்ளது.. இவர் எப்போது வந்தாலும் இவரை ஒரு கம்பீரப் பார்வை பார்த்து வாலாட்டும். அது கொஞ்சுவது என்றால் ராதையிடம் மட்டும்தான்.. உண்பது கூட ராதை வைத்தால் தான் உண்ணும்..

“இதற்கெதற்குக் கண்ணீர் ராதை?.. இங்குதான் எங்காவது சென்றிருப்பான் வந்துவிடுவான்..” சாம்பனை அது இது என்றால் ராதைக்கு ஏகக் கோபம் வரும்..

வெளியே வந்தார் வாணாதித்தர்.. “முதலில் சாம்பனைக் கண்டுபிடித்து ராதையை மகிழ்விக்கலாம்.. பின் வேறு நல்ல இடமாகப் பார்க்கிறேன் என்று சொல்லலாம்“ என நினைத்தபடி வர, எதிர் வீட்டுக்காரர் நல்லசிவம் எதிர்ப்பட்டார்..

“எப்போது வந்தீர் வாணாதித்தரே.. விஷயம் தெரியுமா உமக்கு?”

நல்லசிவம் கொஞ்சம் வயதானவர்.. வெண்ணிறத் தாடி.. நிலபுலன்கள் பல வைத்து விவசாயம் செய்பவர்.. ஊர்வம்பும் மிக அதிகம்..

“என்ன விஷயம்?..”

“வாணா.. ஒரு புலி பக்கத்துக் காட்டில் வந்திருக்கிறதாம்.. வெறுங்கையோடு போகாதீரும்.. ஈட்டி எடுத்துக்கொள்ளும்.. நம்மூருக்குள் நுழைந்தால்.. நல்லவேளை.. சோழப்படைப் புலி நீர் இருக்கிறீர்.. மடக்கிவிடுவீர்..”

சிரித்து வீடு நுழைந்து ஈட்டியையும் கையில் வைத்து, வெயில் மிக அடித்தால் தலையில் போடுவதற்காகப் பச்சை நிறத்துவாலை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்தார் வாணாதித்தர்..

ஆயிற்று, எங்கு தேடியும் சாம்பன் இல்லை…. காட்டிற்குள் புகுந்தார்.

மேட்டுப்பகுதியிலிருந்து சரேலென இறங்கியதும் காட்டுப்பகுதி தென்பட்டது.. வரிசையாய்ப் புன்னை, வேப்ப மரங்கள்.. நன்கு வளர்ந்திருந்த கருவேலம்புதர்கள்.. உள்ளே செல்வதற்காக ஊர் ஆட்கள் ஏற்படுத்தியிருந்த ஒற்றையடிப்பாதை..

வாணாதித்தர் நடக்க ஆரம்பிக்க, உள்ளே நெடிதுயர்ந்த மரங்களினால் ஏற்பட்ட நிழல்கள் சற்றே வெளிச்சத்தைக் குறைத்திருந்தன.. கிட்டத்தட்ட அரை ஜாமம் நடந்த பிறகு அந்த ஒலி கேட்டது..

லொள்ள்ள்…

இது சாம்பன் குரலாயிற்றே.. அருகில் தான் இருப்பான் போல…. இன்னும் கால் நாழிகை நடந்தவர் அந்தக் காட்சியைக் கண்டார்..

ஒரு திறந்த வெளி, அதில் ஒரு புதரைப் பார்த்துச் சாம்பன் காதுகள் மடக்கி, வாலை மடக்கி முழு வீச்சில் குரைத்துக் கொண்டிருக்க, பதிலாய் இன்னொரு ஒலியும் கேட்டது..

வாணாதித்தர் திகைத்தார்.. இது புலி உறுமல் போலிருக்கிறதே..

ர்ர் ர்ர் ர்ர்..

புதரில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட, அந்தப் பழுப்பு வண்ண ஆறடி நீளப்புலி சாம்பன் மேல் வேகமாய்ப் பாய்ந்தது.. சாம்பன் வலப்புறம் போக, அவன் பக்கம் அது வெறியுடன் திரும்ப, வாணாதித்தர் ஈட்டியை எறிந்தார்..

அதற்குள் புலி தன் மீது பாய்ந்த சாம்பனை ஒரே அடி அடிக்க, சாம்பன் பறந்து விழுந்தான்.. அப்போது புலியின் பின்பாகத்தில் இவரது ஈட்டி பட, புலி இவர் பக்கம் திரும்பியது.. வெறி குறையாமல் இவர் மேல் பாயப் பார்க்கையில்தான் அது நிகழ்ந்தது..

இன்னொரு ஈட்டி சரியாகப் புலியின் மார்பைத் துளைத்துவிட, புலி வேகமாய்க் கூச்சலிட்டுக் கீழே விழுந்து கை காலை உதைத்துக் கொண்டு எழ முயற்சித்தது..

வாணாதித்தர் திரும்பி ஈட்டி எறிந்தது யார் எனப் பார்க்கையில், அந்த வாலிபன் கையில் இன்னொரு குறுவாளை எடுத்திருந்தான்.. விழுந்திருந்த புலியின் மீது பாய்ந்து அதன் கழுத்தில் பாய்ச்ச முற்பட, புலி தன் முன்கால்களால் அவனைப் பிடிக்கப் பார்த்துத் தோள்களில் கீறப் பார்க்க, அவன் தாமதிக்காமல் குறுவாளை மூன்று முறை பாய்ச்சி எடுத்து விலகினான்.. புலி மெல்ல உடல் உதறி அடங்கியும் போனது..

எழுந்து நின்ற வீரனை வியப்புடன் பார்த்தார் வாணாதித்தர்.. வீரன் அவர் அளவுக்குப் புஷ்டியாக உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் உடலைக் கொள்ளவில்லைதான்..

கொஞ்சம் ஒல்லியாகத்தான் இருந்தான்.. அவரைப்போலவே குடுமி.. கழுத்தில் புலிநகம்.. நெற்றியில் திருநீறு, இடையாடை இறுக்கி அணிந்திருந்தான்..

வீழ்ந்திருந்த புலியிடம் சென்று அதன் மார்பில் பதிந்திருந்த ஈட்டியை உருவினான்; பின் அவரிடம் சொன்னான்..

”நான் யாரென்பது முக்கியமில்லை ஐயா.. நீங்கள் இங்கேயே இருங்கள்.. அதோ அடிபட்ட அந்த நாயை மிருக வைத்தியரிடம் விட்டுவிட்டு, ஊர்க்காவலரிடம் புலியை எடுத்துச் செல்லச் சொல்கிறேன்.” என்ற அந்த வாலிபன் தனது ஈட்டியை இடுப்பில் நெட்டுவாக்கில் கட்டிக்கொண்டான்.. பின் சற்றுத் தள்ளி அடிபட்டு வீழ்ந்திருந்த சாம்பனைக் கையில் அள்ளினான்.

“வந்து விடுகிறேன் ஐயா” எனச் சொல்லி கிடுகிடென்று மறைந்தும் போனான்..

வாணாதித்தருக்கு மனமெல்லாம் பூரித்திருந்தது.. தனது வீட்டின் பின்புற வழியாக வந்து கொண்டிருந்தார் அவர்..

அரை ஜாமம் இறந்த புலியைப் பார்த்தவண்ணம் காத்திருந்ததும், பின் நல்லசிவனாருடன் ஊர்க்காவலர்கள் மற்றும் ஊர்மக்கள் பத்துப்பேர் வந்ததும் ஒரு கனவாய்த்தான் இருந்தது.

வந்தவர்கள் இவரைக் கண்டதும் கோஷமிட்டார்கள்.. “மிருகப்புலியைக் கொன்ற சோழப்புலி வாழ்க”.. என..

வாணாதித்தர் திடுக்கிட்டார்.. “இது ..”

“புரிகிறது ஐயா.. சாம்பனைத் தேடி வந்தீர்.. அவன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான் புலியுடன்.. நீர் புலியை வீழ்த்தினீர்.. எல்லாம் அந்த வாலிபன் சொன்னான். சரியான சமயத்தில் நம்மூருக்கு வந்தீர் ஐயா..” என்றார் நல்லசிவம்..

அவர்களுடனேயே திரும்பினார் அவர்..

அந்த இளைஞனைப் பற்றியே எண்ணியது அவர் மனம்.. ”என்ன ஒரு வீரம்.. ஏன் நான் புலியைக் கொன்றேன் எனச் சொல்லி வெற்றியை அவன் தியாகம் செய்ய வேண்டும்..?” என நினைத்தவரைக் கலைத்தது ஒரு குரல்.. அவர் வீட்டுக்கொல்லைப்புறத்திலிருந்து வந்தது..

“நீங்கள் பாடுபட்டு வீழ்த்திய புலியை என் தந்தை கொன்றார் எனச் சொல்ல வேண்டுமா என்ன?” ராதையின் குரல்.

மெல்லிய கம்பீரமான ஆண்மகனின் சிரிப்பு தொடர்ந்தது.. “ராதை.. இது உன்னை அடைவதற்கு உன் தந்தைக்கு நான் கொடுத்த சீர் என வைத்துக்கொள்ளேன்.. என்ன, சாம்பனை வைத்து உன் தந்தையிடம் அறிமுகப்படுத்திக்கொள் என்றாய்.. ஆனால் நம் நல்ல நேரம்.. புலியால் உன் தந்தையிடம் என் வீரத்தால் அறிமுகம் செய்துகொள்ள முடிந்தது..”

”ஓ.. இதுதான் கண்ணபிரானோ! ம்ம், ராதையின் நாடகம்தானா சாம்பன் காணவில்லை எனச் சொன்னது?”

“இருந்தாலும் உங்கள் வீரம்.. இதோ பாருங்கள், உங்கள் தோள்களில் புலிநகக் கீறல்கள்..” என ராதையின் விம்மல்..

ஒரு நிமிடம் உள் சென்று அவர்களிடம் பேசலாம் என நினைத்த வாணாதித்தர், அதைவிட நல்லூர் சென்று நச்சினார்க்கினியரிடம் இவர்களைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என வீடு செல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

Author

Related posts

கொரோனா

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை

மருத்துவர் பக்கம் – 28: எபோலாவும் சிகிச்சையும்