‘கஜுராரே கஜுராரே’, பண்ட்டி ஔர் பப்லி என்னும் திரைப்படத்தில் ஒலித்த பிரபலமான களியாட்டப் பாடலில் சிருங்காரமும், காதலும், சீண்டலும் வெளிப்படும் வரிகள் திடீரென ரசிகனை மீர்ஸா காலிபிடம் அழைத்துச் செல்லும். திரைப் பாடல்களை மேலோட்டமாக ரசித்துக் கடந்து செல்பவருக்குப் புரியாமலும், மீர்ஸா காலிபின் பழைய தில்லி வாழ்க்கைக் குறிப்பை அறிந்த ரசிகனுக்கு ஆழமான புரிதலையும் கொடுக்கும் விதத்தில் அவ்வரிகள் இருக்கும்.
// உன்னைப் பழைய தில்லியில் சந்திக்கவேண்டும்
சில அடையாளங்களை அங்கு விட்டு வந்திருக்கிறேன்
பல்லிமாரானில் இருந்து தரீபே வரை
உன் கதையும் என் கதையும் தில்லியில் //
பழைய தில்லியின் பல்லிமாரான் பகுதியையும் தரீபே பகுதியையும் சொல்வதாகத் தோன்றும் வரிகளில் மீர்ஸா காலிபின் வாழ்க்கை இருக்கிறது. பழைய தில்லியின் பல்லிமாரானில் உள்ள இல்லத்தில் மீர்ஸா காலிப் பத்தாண்டுகள் வாழ்ந்தார். அங்கிருந்து நடக்கும் தொலைவில் தரீபா கலன் நகைக்கடை வீதி இருக்கிறது. அது மொகலாயர் காலத்தில் அரச குடும்பத்தினர் வந்து சென்ற வீதி. வரலாற்றின் மிச்சங்களாக நிற்கும் பழைய தில்லியின் பல்லிமாரானை மீர்ஸா காலிபின் நினைவாக குல்ஸார் திரைப்பாடலில் அமைத்தார் என்பது உருது ஆர்வலர்களின் பார்வை.
பல்லிமாரானில் இருக்கும் ‘மீர்ஸாவின் மாளிகை‘ (Haveli Mirza Ghalib) அவருடைய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும். அந்த மாளிகை மீர்ஸாவின் வாசகர் ஒருவரால் அவருக்கு நன்கொடையாகத் தரப்பட்டது. நண்பர்களின் நன்கொடையிலும், மொகலாய அரசும் அவர்களுக்குப் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியும் தந்த உதவித்தொகையிலும் மீர்ஸா வாழ்ந்தார். ஆங்கிலேயர் காலத்தில் அந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு கல்கத்தா சென்றதும், அங்கு சில ஆண்டுகள் அவர் தங்கியதும் வரலாறு.
வாழும் காலத்தில் தில்லி ஹைதராபாத் ஆட்சியாளர்களுடன் நெருக்கமாகவும், கடைசி மொகலாயர் பகதூர் ஷா ஸஃபருக்கு சில காலம் கவிதைப் பயிற்சி அளித்தவராக இருப்பினும், கடைசி வரையில் காலிப் செல்வச் செழிப்பைப் பார்க்கவில்லை. இன்றைக்கு உலகில் உருது மொழி உள்ள இடங்களிலெல்லாம் கொண்டாடப்படும் ஒரு மகாகவி தன்னுடைய வாழ்நாளில் உதவித்தொகைக்கு ஆட்சியாளர்களைச் சார்ந்திருந்தது கொடுமை.
// கடனுக்குக் குடித்தேன்;
இருப்பினும் நினைத்துக்கொண்டேன்
ஆம்
இந்த ஏழ்மையின் கொண்டாட்டம்
என்றேனும் வண்ணமயமாகலாம் //
காலிபின் வறுமை அவரைத் துரத்தித் துரத்தி அலைக்கழித்தாலும், தான் சென்ற இடங்களையெல்லாம் தன் கவிதைகளால் நிறைத்தார். அரசவையோ வீதியோ காலிப் இருந்தால் அங்கே கவிதை இருந்தது.
// காதல் என்னைச் செயலற்றவனாக்கியது
இல்லையெனில் நானும் உழைக்கும் மனிதன்தான் //
காதல் இங்கு குறியீடு மட்டுமே.
சமகாலத்தில் வாழ்ந்த கவிஞர்களை அங்கீகரிப்பதும் அவர்களைத் தன் கவிதையில் பாடும் பெருந்தன்மையும் அவரிடம் இருந்தது. அரசவையில் இலக்கிய சர்ச்சைகள் இருந்தன, பதவி உயர்ந்தால் உதவித்தொகை உயரும் என்னும் நிலையில் கடைசி வரையில் அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை, அவருடைய புலமையின் மீது பலருக்குப் பொறாமை இருந்தது. அனைத்தையும் கவிதையில் எழுதினார், அதனுடன் சேர்த்து கவிஞர்களையும் புகழ்ந்து எழுதினார்.
// மொழியில் நீ மட்டும் ஆசானல்ல ‘காலிப்’
வருங்கால சந்ததியினர் சொல்வர்
மீர் என்றும் ஒருவன் இருந்தான் //
// ரேக்தா கீ தும்ஹீன் வுஸ்தாத் நஹீன்ஹோ காலிப்
கஹ்த்தேன்ஹை அக்லே ஸமானேமேன் கோயி மீர் பி தா //
உருது மொழியின் பழைய பெயர் ‘ரேக்தா’. ‘மீர்’ என்று காலிப் குறிப்பிடுவது கவிஞர் மீர் தாகி மீர் அவர்களை. தான் மட்டும் புலவனல்லன், வருங்கால சந்ததியினர் மீர் தாகி மீரையும் புலவனெனச் சொல்வார்கள் எனப் பெருந்தன்மையாகக் கவிதையில் குறிப்பிட்டார்.
பகதூர் ஷா ஸஃபரின் அரசவையின் தலைமைப் புலவர் ஸௌக் (Zauq). ஸௌக்கிற்கும் காலிபுக்கும் புலமையை முன்வைத்துப் போட்டி இருந்தது. இருவரும் அரசவையில் கவிஞர்களாக இருந்தும், ஸௌக் தலைமைப் புலவர். ஸௌக்கின் இடத்திற்குத் தான் வரவேண்டும் என்னும் கனவு காலிபுக்கு இருந்தது. தன்னுடைய வளைந்து கொடுக்காத தன்மையால் ஸௌக் பல்லக்கில் செல்லும்போது வீதியில் அவரை நையாண்டி செய்து கவிதை பாடியதாகவும், அந்தக் கவிதையை மன்னரின் அவையில் வாசிக்கச் சொல்லும்போது, சமயோசிதமாக காலிப் மன்னனின் அவையில் தான் இருப்பதைப் பெருமையாகச் சொல்வது போலக் கவிதையை மாற்றிப் பாடியதாகவும் பதிவாகியுள்ளன. இக்காட்சி மீர்ஸா காலிப் தொலைக்காட்சித் தொடரிலும் பதிவாகியுள்ளது.
ஸௌக்கின் பல்லக்குப் பரிவாரங்களைப் பார்த்த காலிப்,
// மன்னனுக்கு நெருக்கமானவன் தன்னைக் காட்சிப்படுத்தி உலவுகிறான் //
// ஹுவா ஹை ஷா கா முசாஹிப் ஃபிரேஹைன் இத்ராதா //
என ஒரு அடியைப் பாடுகிறார். அது ஸௌக்கைக் காயப்படுத்திவிடுகிறது. அரசவைக் கவியரங்க சந்திப்பில் மன்னரின் முன்னிலையில் காலிபை அந்தக் கவிதையைப் பாடச் சொல்கின்றனர். ஸௌக் காலிபின் வரிகளுக்காகக் காத்திருக்கிறார்.
// மன்னனுக்கு நெருக்கமானவன் தன்னைக் காட்சிப்படுத்தி உலவுகிறான்
இல்லையெனில் காலிபின் புகழென்று எதைச் சொல்வீர் //
// ஹுவா ஹை ஷா கா முசாஹிப் ஃபிரேஹைன் இத்ராதா
வகர்னா ஷஹர்மேன் காலிப் கி ஆப்ரூ கியாஹை //
என இரண்டாம் அடியில் தன்னை அக்கவிதையின் பாடுபொருளாக்கி, ஸௌக்கை நோக்கி வீதியில் பாடியதை மாற்றுகிறார்.
ஸௌக் அந்த கஜலைத் தொடரச் சொல்கிறார்.
// நரம்புகளில் ஓடுவதையும் திரிவதையும் நான் ஏற்பதில்லை
விழிகளில் தெறிக்காதிருப்பின் குருதியென எதைச் சொல்வீர்? //
காலிபின் கவிதை அனைவராலும் பாராட்டப்படுகிறது. ஆயினும் ஸௌக் இருக்கும் வரையில் அவர்தான் மன்னரின் ஆசானாகவும், அரசவைக் குறிப்புகள் எழுதுபவராகவும் இருந்தார். அவருடைய மறைவுக்குப் பின் காலிபுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
பலராலும் எடுத்தாளப்படும் ஒரு சூஃபிப் பாடலில் முதல் அடி காலிப் எழுதியது. பாரதியின் ‘வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா’வும், உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’யும் எடுத்தாளப்பட்டது போல் இந்த அடியும் பலராலும் பாடப்படுகிறது.
// எதுவும் இல்லாதபோதும் இறைவன் இருந்தான்
. எதுவும் நடக்காதபோதும் இறைவன் இருந்தான்
மூழ்கியது நடக்காமற் போயிருந்தால் நானும்
. என்னவாகத்தான் ஆகியிருப்பேன்? //
இரண்டாவது அடியில் கேள்வியை முன்வைக்கும் காலிபின் இக்கவிதையிலிருந்து முதல் அடி மட்டும் எடுத்துப் பாடப்படுகிறது. சாப்ரி சகோதரர்களின் கவ்வாலியிலோ, சூஃபியிசப் பாடல்களிலோ, மேடைகளில் மேற்கோள் காட்டப்படும் வரிகளிலோ,
// நா தா குச்தோ குதா தா குச் நா ஹோத்தா தோ குதா ஹோத்தா //
// எதுவும் இல்லாதபோதும் இறைவன் இருந்தான் எதுவும் நடக்காதபோதும் இறைவன் இருந்தான் //
இது ஒலித்தால், அது காலிபிடமிருந்து தொடங்கியது எனக்கொள்ளலாம்.
உருது மொழிக்கு காலிப் கவிதைகளை மட்டும் தரவில்லை, கடிதம் எழுதும் கலையும் அவரால் அனைவரையும் சென்றடைந்தது. மீண்டும் இங்கு பாரதியை நினைவுகூர்கிறோம். பண்டிதர்களுக்கென இருந்த கவிதை மொழியை அனைவருக்குமாக்கிய பாரதியைப் போல, பண்டிதர்களுக்கென இருந்த உருதுக் கடிதங்களை அனைவருக்குமாக்கிய எழுத்துப் புரட்சியைச் செய்தவர் காலிப். உருதுக் கடித மொழியை ஒரு உரையாடல் மொழியாக மாற்றியவர். ‘எழுதுகோல்களின் வழியாகப் பேசியவர்‘ என அவரை அழைக்கின்றனர்.
// ஆயிரம் காதம் அப்பாலிருந்து
எழுதுகோலின் நாவுகளால் பேசு
பிரிந்திருந்தாலும்
சந்திப்பின் மகிழ்ச்சியை எழுத்தில் கொள் //
// ஹஸார் கோஸ்ஸே பா ஸபானி கலம் பாத்தேன் கரோ
ஹிஜ்ர்மேன் வஸ்ல் கி மஸே லியா கரோ //
கடிதத்துக்கு இலக்கணம் வகுத்து காலிப் எழுதிய இக்கவிதையில் ‘எழுதுகோலின் நாவுகளால் பேசு’ எனச் சொன்னதுடன் நிற்காமல், கடிதங்கள் எழுதி இலக்கியத்தில் அதை நிலைபெறச் செய்தார். ‘Ghalib, Life and Letters’ என ஆக்ஸ்ஃபோர்டு இந்தியா 1969இல் காலிபின் கடிதங்களை மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது. ஆசிரியர்: ரால்ஃப் ரஸ்ஸல்.
இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான அவருடைய பார்வை தன்னிச்சையாக இருந்தது. மார்க்கம் காட்டிய கட்டுக்குள் இல்லாமல், மார்க்க அறிஞர்களைத் தன் கவிதையில் கேள்வி கேட்கத் தயங்காமல், மார்க்க மரபெனும் பார்வையில் ஷியா மரபின்பால் ஈர்க்கப்பட்டும் இருந்தார். தன்னுடைய மஸ்னவிகளில் மறுமை வாழ்க்கை தொடர்பான தன்னுடைய மாற்றுக் கருத்துகளைப் பகிர்ந்தார். மதுவருந்துவதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். மதுச்சாலைக்கு வரும் மதபோதகர்கள் எனக் கவிதைகளில் குறிப்பிட்டார். இப்படியாக, இஸ்லாமிய மார்க்கத்தின் பார்வையில் தன்னைக் கலகக்காரராக முன்னிறுத்தினார்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் நெருக்கடியில், மொகலாய ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்ட காலத்தில் அரசர்களும் ஆங்கிலேயரின் அதிகாரத்துக்கீழ் வாழத் தொடங்கினர்.
தன்னைச் சுற்றிலும் நடந்த பெரிய அரசியல் மாற்றத்தை, நிகழ்வுகளை, குருதி பெருகியதைக் கவிதையாக்கினார். தில்லியின் வீழ்ச்சியை, தில்லித் தெருக்கள் போராட்டத்தால் வெடித்ததை ஒரு கவிஞராக எழுத்தில் வடித்தார். தன் கண்முன்னே நடந்த கலாசார மாற்றம் தொடர்பாக வருந்தினார், கவிதை எழுதினார். ஒரு கவிஞராகத் தன்னுடைய சமகால அரசியலைப் பதிவு செய்தாரேயன்றி, விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடவில்லை.
1857இல் முதல் இந்திய விடுதலைப் போர் பகதூர் ஷா, ஜான்சி ராணி, நானா சாகிப் என வடக்கின் பல பகுதிகளில் தோன்றி அடக்கப்பட்டது. அதற்குப் பின் பிரிட்டிஷ் அரசு காலிபுக்கு அளித்து வந்த உதவித் தொகையை நிறுத்தியது. உதவித் தொகையை மீண்டும் தருமாறு கேட்க கல்கத்தா சென்றதும், அங்கேயே தங்கியதும் காலிபுக்கு இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையில் மட்டும் போராட நேரம் இருந்ததைக் காட்டுகிறது.
காலிப் எழுதிய நூல்கள் ஏறத்தாழ இருநூற்று எண்பது. காலிப் தொடர்பாக வெளிவந்திருக்கும் நூல்கள் ஆயிரம் எண்ணிக்கைக்கும் மேல்.
பெருங்கவிஞன், நூற்றுகணக்கான கஜல்களை எழுதியவன், கடித மொழியை மக்களிடம் எடுத்துச் சென்றவன், ரோஷக்காரன், கலகக்காரன், பல மொழிகள் அறிந்தவன், இந்துஸ்தானத்தை நேசித்தவன், அதன் கலாசார மாற்றங்களைக் கண்டு வருந்தியவன், தன்னுடைய கோயில் விளக்கு என்னும் நூலில் தன் வருத்தத்தைப் பதிவு செய்தவன், புலவன் தன் வாழ்நாளில் கடைசி வரையில் அடுத்தவர் உதவியில்தான் வாழ்ந்தான் என்பது வரலாற்றில் கரும்புள்ளி.
இருக்கும்போது கொண்டாடப்பட்டதை விடவும் இறப்புக்குப் பின் அதிகமாகக் கொண்டாடப்பட்டவர். கவிதைகள் மட்டுமல்ல, காலிபின் வாழ்க்கையும் அவருடைய இறப்புக்குப் பின்னர்தான் பெருமையாகப் பார்க்கப்பட்டது. தில்லியில் நிஜாமுத்தீன் அவுலியாவின் சமாதிக்கு அருகில் காலிபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
‘ஒரு மண்ணும் இல்லை’ என்னும் சொல்லாடல் தமிழில் உள்ளதைப் போல, காலிபின் கவிதை ஒன்றிலும் பயன்பாட்டில் உள்ளது. ஒரு கஜலில் ‘காக்’ சாம்பல், மண், புழுதி போன்ற பொருள்படும் சொல்லின் மூலம் தன் வாழ்கையைக் காண்கிறான். எட்டு கண்ணிகளைக் கொண்ட அந்த கஜலின் தொடக்க இரண்டடிகள்,
// மஸேன் ஜஹான்கி அப்னா நஸர்கி காக் நஹீன்
சிவா கூன்-ஏ-ஜிகர் சோ ஜிகர்மேன் காக் நஹீன் //
// உலகின் மகிழ்வென என் நோக்கில் ஒரு மண்ணும் இல்லை
இதயக்குருதியன்றி இதயத்தில் ஒரு மண்ணும் இல்லை //
கடைசியில் ‘ஒரு மண்ணும் இல்லை’யெனத் தன்னை அறிவித்த கவிஞன் பத்தாண்டுகள் வாழ்ந்த மாளிகை இப்போது அருங்காட்சியகம். கால ஓட்டத்தில் தன்னுடைய பழைய பெருமைகளை இழந்து, கூட்ட நெரிசலில் திணறும் பல்லிமாரானில் – காசிம் ஜான் தெரு என்னும் கடைவீதியில் பழைய அடையாளங்களின் மிச்சமாகத் தான் மட்டும் நின்று கவிதை ஆர்வலர்களை வரவேற்கிறது.
(தொடரும்)