ஆசிரிய விருத்தத்தில் அரிய வகை
கீழ்வரும் பாடலைக் காணுங்கள்
மழைப்பொழிவு போலும் மனங்கனியும் எண்ணம்
… மடையுடைத்துப் பாயும்
மதிநிறைந்த சொற்கள்
கழையதனில் செல்லும் கலைமனிதர் போல
… கருத்துகளில் ஒன்றி கவிதையென ஆக்கும்
விழைவுகளைக் கொண்டு விளைவுகளைத் தேடின்
… வியப்பளிக்கும் மாற்றம் விதைப்பதுவே ஆகும்
உழைப்பினுக்குத் ஏற்ப ஒருமுகமாய் நாமும்
… உயர்தமிழின் இன்பம் உணர்ந்திடலும் நன்றே!
கருவிழிகள் பார்க்கும் கலைசிறப்புக் காட்சி
…. கவிதையிலே சொன்னால் களிப்படைய வைக்கும்.
சுருக்கமுறும் செய்தி சுவைகளையும் கூட்டும்.
.. சுதந்திரமும் கொண்டு சுகவுணர்வை நல்கும்.
பெருங்கனவும் ஆங்கே புதைந்திருக்கும் வித்து
….படிப்படியாய்ப் பூக்கும்
பரவசத்தை ஆக்கும்
உருப்படியாய் யாவும் ஒழுங்குறவே ஆயின்
..உணர்வெழுப்பும் பாவில் உவகையுற லாமே!
மேற்கண்ட பாடல் கம்பன் வீட்டுக் கடையாணியாய் இக்கணம் முயன்று அடியேன் எழுதியது.
நம் தமிழில் இது ஒரு புதுமையான பா வகை.
ஆசிரிய விருத்தம் என்பது எளிதில் புரிகிறதல்லவா?!.
ஆனால் இதன் சிறப்பு வெண்பாவுக்குரிய வெண்டளைகள் (காய்ச்சீருக்கு அடுத்து நேரசை, மாச்சீர் அடுத்து நிரையசை) மட்டும் அமைந்து வந்து வெண்டளையால் அமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தம் எனப்படுகிறது. தமிழில் இந்த இலக்கணத்திற்கு உட்பட்ட பாக்கள் மிக அரிது என்கிறார்கள். கவிப் பேரரசர் கம்பர் மட்டுமே ஆரண்யக் காண்டத்தில் ஆறு பாடல்கள் எழுதிஇருக்கிறார் என்று பெரியோர் சொல்லக் கேட்டுள்ளேன்.
இதன் பொதுவான விதிகள் விருத்தப் பா விதிகளைப் போலவே
எட்டு சீர்கள் ஓரடி ஆகும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை வர வேண்டும். (கூடுதலாக மேற்கண்ட பாடலில் வருவது போல 1, 3 சீர்களில் பொழிப்பு மோனை அமைத்தாலும் இன்னும் சிறப்பு).
ஒவ்வொரு அடியிலும் எதுகை வரவேண்டும். பாத் தொடரில் கடைசிச் சீர் ‘ஏ’காரத்தில் முடிய வேண்டும். இந்தப் பொதுவான விதிகளுடன் வெண்பாவுக்குரிய வெண்டளை பயிலுமாறு எழுதுவது தான் அறைகூவலாக அமையும். ஒரேயொரு சலுகை அடிகள் இணைப்பில் வெண்டளை நோக்க வேண்டாமாம்.
ஆனாலும் எழுதும்போது சீர்களில் சில அதீதம் போலவும் தோன்றக்கூடும். விளைவு, கவிதையின் கட்டுக்கோப்பு சற்றே குழைந்து கலகலத்து விடலாம் எனினும் பயிற்சியும் முயற்சியும் வெற்றிக்கு வழி.
அதன்படி இன்னுமொரு சான்று கீழே
எங்கள் இறையே எழிலுலக வேந்தே!
… என்றென்றும் எம்மையெல்லாம் ஏற்றெடுக்கும் கோவே!
பொங்கும் அறிவமுதப் பேறுகளைத் தந்தெம்
… புவனத்து வாழ்வும் புவியொளிரச் செய்வாய்.
மங்காப் புலன்களையும்
… மாண்புடனே காப்பாய்.
… மதிப்புடையுன் அன்பை மகத்துவமாய் ஈவாய்
தங்கத் தமிழுலகம் தன்வயமாய் வெல்லும்
… தனித்த அருள்வளத்தைத் தந்துவிடு வாயே!
(தொடர்வோம்)
1 comment