சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்குச் சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே, பாட்டி வந்திருப்பது காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத்தான் என்பது எனக்குத் தெரிந்து விட்டது. ஆம்… வலது கால் பாதத்தில் பெரிய புண்; அதில் முழுவதும் ஊர்ந்தும் நெளிந்தும் சில புழுக்கள் தென்பட்டன. புழுக்கள் தசைத் திசுக்களைத் தின்று மிச்சமுள்ள கழிவுகளில் இருந்து வரும் அந்த துர்நாற்றம் என்பது இதற்குச் சிகிச்சை செய்த அனைத்து மருத்துவர்களுக்கும் பரிச்சயமான ஒன்றாகவே இருக்கும்.
நீரிழிவு நோயர்களுக்கு, அதிலும் முதியோர்களுக்குக் கணுக்காலுக்குக் கீழே வரும் புண்கள் “அவசர நிலை” (எமர்ஜென்சி) ஆகும். காலம் தாழ்த்தத் தாழ்த்த முதலில் விரல், பிறகு கணுக்கால் வரை, பிறகு முழங்கால் மூட்டு வரை, பிறகு மொத்தக் காலும் என்று பறிபோகும் உறுப்பின் சதவிகிதம் கூடிக்கொண்டே சென்று, இறுதியில் தொற்று ரத்தத்தில் கலந்து சிறுநீரகம், கல்லீரல், கணையம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளைப் பாதிப்புக்குள்ளாக்கி, ‘செப்சிஸ்’ எனும் அபாய நிலையை அடைந்து மரணம் வரை இட்டுச் செல்லும்.
இத்தகையதோர் நிலைக்கு ஆரம்பம்தான் என்ன? “என்ன பாட்டி.. இத்தனை வருஷமா இது மாதிரி புண் வந்ததில்லையே? எப்படி பாட்டி?” என்று கேட்டதற்கு, “சாமி… எப்படியாவது சரி பண்ணி விட்டுருங்க சாமி. எனக்குப் புண்ணு வந்ததே தெரியலைய்யா. இல்லைனா ஓடி வந்துருப்பேன்” என்றார். “அது சரி பாட்டி.. இத்தனை வருஷம் இப்படி ஒரு புண்ணு வரலையே, இப்ப எப்படி வந்தது?” எனக் கேட்டபோது, அவரை அழைத்து வந்த மகன், “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி செருப்பு வாரு அந்து போச்சாம் சார். செருப்பை மாத்தாம மிச்சம் பண்றேன்னு வீட்டுக்கு வெளியே, அப்புறம் கொல்லைக்குச் செருப்பு போடாம போயிருக்கு.. எங்கயோ முள்ளு குத்திருச்சு” என்றார். “அது சரி… பாட்டிக்குக் கால் மரமரப்பு, மதமதப்பு இருக்கிறதுனால.. முள்ளு குத்தினதும் தெரியல, புண்ணு வந்ததும் தெரியல. இப்ப புழு நெளியறதும் தெரியல. ஏன் பாட்டி.. செருப்பு போடாம வெளியே எங்கயும் போகாதீங்கன்னு உங்களுக்கு எழுதியே கொடுத்துருக்கேனே?” என்று கேட்டதற்கு, “ஆமாஞ்சாமி.. என்னை மன்னிச்சுருய்யா.. செருப்பு அந்து போச்சு.. அத்தோட முன்னாடி பழக்கவழக்கம் மாதிரியே செருப்பு இல்லாம நடந்துட்டேன்” என்றார் பாட்டி.
இதை பாட்டியின் அறியாமை என்பதா? அல்லது முன்கூட்டியே அறிவுறுத்தியும் சரியாக விழிப்புணர்வு பெறாமை என்பதா? கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயர்களுக்குக் கால் புண்கள் எளிதில் ஆறுவதில்லை. இதற்குக் காரணம் கால் பகுதி ரத்த நாளங்கள் சுருக்கத்தைச் சந்தித்திருப்பதும், கூடவே அந்தப் பகுதியில் நரம்பு மண்டல அழற்சி ஏற்படுவதுமே காரணமாகின்றன. எனவே, நான் என்னைச் சந்திக்க வரும் நீரிழிவு நோயர்களைக் கட்டாயம் செருப்பின்றி வெளியே நடக்க அனுமதிப்பதில்லை. எதையும் வருமுன் காப்பதே நல்லது.
இவையன்றி, கால் பாத வளைவு சரியாக இல்லாமல் தட்டையான கால்கள் கொண்டவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களுக்கென்று பிரத்யேக செருப்புகள் அணிந்தே தீர வேண்டும். கூடவே கால் பாதம் சார்ந்த எலும்பில் வலி ஏற்பட்டு இருப்பவர்களும் உண்டு. இவர்களுக்கு வீட்டுக்குள்ளேயே எம்.சி.ஆர். செப்பல் (MCR Chappal) போட அறிவுறுத்தப்படுகிறது.
இன்னும் செருப்பின்றி வெளியே நடப்பதால் கால் பாதம் வழியாக நுண் புழுக்கள் உள்சென்று குடலில் வாழும். குடலில் இருந்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். இதன் விளைவாக ரத்த சோகை நோய் குணமாக வழியே இராது. இதன் காரணமாகத்தான் அரசுப் பள்ளிச் சிறார், சிறுமியருக்குக் காலணிகள் வழங்கப்படுகின்றன. கூடவே வருடம் இருமுறை குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் செருப்பின்றி வெளியே பணிபுரிபவர்கள் / நடப்பவர்களுக்குக் காலில் முள் தைத்து / ஆணி தைத்து அதனால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. எனவே, சகோதர சகோதரிகள் தயவுசெய்து செருப்பு உள்ளிட்ட காலணிகளை அணிந்து வெளியே நடப்பது பல பிரச்சினைகளைத் தடுக்கும்; பல நோய்களில் இருந்து காக்கும் நடவடிக்கையாகும்.