கல்யாணம் ஆகாத கொசு
தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்
ஒரு ஊரில் ஒரு கொசு இருந்தது. அதற்கு ஒருநாள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதோடு நல்லவனாகப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள்வோம் என்று புறப்பட்டது. கொசு சென்றுகொண்டிருக்கையில் வழியில் ஒரு யானை குறுக்கிட்டது.
“கொசுவே… கொசுவே… எங்க போய்ட்டிருக்க?” என்று கேட்டது.
கொசு வெட்கத்தில் வளைந்து நெளிந்துகொண்டே, “நல்ல பையனா பார்த்துப் கல்யாணம் பண்றதுக்குத் தேடிப் போயிட்ருக்கேன்” என்றது.
அப்போது அந்த யானை, “நான் கூட கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்கேன், இந்த உலகத்துல என்னைவிடப் பலசாலி யாரும் கிடையாதுன்னு உனக்குத் தெரியும் தானே… என்னைப் பாரு… உனக்கு என்ன வேணும்னாலும் சரி, அப்படிச் சொன்னதும் இப்படிக் கொண்டு வந்திருவேன். என்ன சம்மதமா?” என்று கேட்டது.
அதைக் கேட்டுக் கொசு வானத்துக்கும் பூமிக்கும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, “என்னது… உன்னையா… சொளவு மாதிரிக் காதுங்க, பாம்பு மாதிரி ஏழு முழத்துக்குப் பெரிய வாலு, ஆயிரம் கிலோல எடைனு இருக்க. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா? எப்பயாச்சும் கண்ணாடில உன் முகரையப் பாத்திருக்கியா?” என்றது. அந்த வார்த்தைகளைக் கேட்டு அசிங்கப்பட்டு யானை அங்கிருந்து சென்றது.
கொசு மீண்டும் புறப்பட்டது. அப்படிச் சென்றுகொண்டிருந்தபோது ஓர் இடத்தில் குதிரை ஒன்று எதிரில் வந்தது.
“கொசுவே… கொசுவே… எங்க போய்ட்டு இருக்க?” என்று கேட்டது.
கொசு வெட்கத்தில் வளைந்து நெளிந்துகொண்டே, “நல்ல பையனா பார்த்துப் கல்யாணம் பண்றதுக்குத் தேடிப் போயிட்ருக்கேன்” என்றது.
அப்போது குதிரை, “நான் கூட கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்கேன். இந்த உலகத்துல என்னைவிட வேகமா ஓடுறவங்க யாரும் கிடையாதுனு உனக்குத் தெரியும் தானே… என்னைப் பாரு… தினமும் என் மேல உட்கார வச்சி எங்க கூட்டிட்டுப் போகணும்னாலும் அங்க டான் டான்னு கூட்டிட்டுப் போவேன்… என்ன சம்மதமா?” என்று கேட்டது.
அதைக் கேட்டுக் கொசு வானத்துக்கும் பூமிக்கும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, “என்னது… உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவா… தெத்துப் பல்லோட, ஒல்லிக் குச்சி வாலை வச்சிக்கினு சும்மா சுத்திக்கினு வார, உனக்கும் எனக்கும் கல்யாணமா? எப்பயாச்சும் உன் கோணை மூஞ்சியக் கண்ணாடில பாத்திருக்கியா?” என்றது. அதைக் கேட்டு அசிங்கப்பட்டுக் குதிரை அங்கிருந்துச் சென்றது.
கொசு மீண்டும் புறப்பட்டது. அப்படிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த முறை ஒரு காக்கா எதிரில் வந்தது.
“கொசுவே… கொசுவே… எங்க போய்ட்டு இருக்க?” என்று கேட்டது. கொசு வெட்கத்தில் வளைந்து நெளிந்துகொண்டே, “நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்றதுக்குத் தேடிப் போயிட்ருக்கேன்” என்றது.
அப்போது அந்தக் காகம், “நான் கூட கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருக்கேன்… என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ.. உன்னை ரெக்கையில உட்கார வச்சி வானம் முழுக்க டான் டான்னு சுத்திக் காட்டுறேன். தினமும் எங்கிருந்தாச்சும் திங்கிறதுக்குப் பண்டங்கள எல்லாம் எடுத்துட்டு வந்து வயிறு நிறையப் போடுறேன்… என்ன சம்மதமா?” என்று கேட்டது.
அதைக் கேட்டுக் கொசு வானத்துக்கும் பூமிக்கும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, “என்னது… உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவா… கரி மாதிரிக் கருப்பா, ஒத்த கண்ணை வச்சிக்கினு கா கா-னு கத்திக்கினு திரியுற உனக்கு என்கூட கல்யாணமா? எப்பயாச்சும் உன் தீஞ்ச முகரையக் கண்ணாடில பாத்திருக்கியா?” என்றது. அதைக் கேட்டு அசிங்கப்பட்டுக் காகம் அங்கிருந்துச் சென்றது.
கொசு மீண்டும் புறப்பட்டது. அப்படிச் சென்றுகொண்டிருக்கும்போது ஓரிடத்தில் ஒரு சிங்கமுகக் குரங்கு ஒன்றைக் கண்டது. அது அந்தக் கிளையில் இருந்து இந்தக் கிளைக்கு… இந்தக் கிளையில் இருந்து அந்தக் கிளைக்கு என்று கிளைக்குக் கிளை பறந்து பறந்து தாவிக்கொண்டு… கிச்சுகிச்சு என்று சிரித்துக்கொண்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. கொசுவுக்கு மிகவும் பிடித்துப்போனது.
கையோடு, “குரங்கு மாமா… குரங்கு மாமா… நல்ல ஒரு புருஷன் வேணும்னு உலகம் முழுக்கத் தேடிட்டு இருக்கேன். உன் அழகான சிங்க முகம், நீளமான வாலு, கிச்சுகிச்சுன்ற சிரிப்பு சத்தம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டது.
அதைக் கேட்டுக் குரங்கு வானத்துக்கும் பூமிக்கும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, “என்னது… உன்னைக் கல்யாணம் பண்ணிக்கவா… எப்பயும் சாக்கடைக்குள்ள சுத்திக்கினு, ஒருத்தர்ட்ட இருந்து ஒருத்தருக்கு நோயைப் பரப்பிக்கினு எப்ப யாரு கைல அடிவாங்கிச் சாவனு தெரியாது. உனக்கும் எனக்கும் கல்யாணமா? எப்பயாச்சும் உன் கோணை மூஞ்சக் கண்ணாடில பாத்திருக்கியா?” என்றது. அதைக் கேட்டு கொசு அசிங்கத்தில் தலையைக் குனிந்துகொண்டே,
“ஏழு முழம் யானையை வேணாம்னேன்
தெத்துப் பல்லுக் குதிரையை வேணாம்னேன்
ஒத்த கண்ணுக் காக்காவை வேணாம்னேன்
கேட்ட எல்லாரையும் வேணாம்னேன்
இப்ப எனக்குப் பிடிச்சவன் என்னை வேணான்ட்றானே”
என்று அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றது.