Home இலக்கியம்தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 – மொழியாக்கம்

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 – மொழியாக்கம்

by திருவை, Thiruvai
0 comments

பயந்தாங்கொலியோடு கைகோர்க்காதே

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவருக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் புத்திசாலி. அவர்களுக்கு இரண்டு சின்னப் பிள்ளைகள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் திருவிழாவிற்காக அவர்களது அத்தை ஊருக்குப் புறப்பட்டனர். அந்தக் காலத்தில் இப்போது போல இரயிலோ பஸ்ஸோ ரோடோ எதுவும் கிடையாது இல்லையா… எங்கு வேண்டுமானாலும் நடந்தேதான் செல்ல வேண்டும். நடந்தேதான் வர வேண்டும்.

அவர்கள் அப்படிப் பிள்ளைகளுடன் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரிய காடு வந்தது. அந்தக் காட்டைக் கடந்தால்தான் அவர்கள் ஊர் வரும். அவர்கள் காட்டில் பாதிதூரம் சென்றதும் நடந்து நடந்து கால்வலி எடுத்து ஒரு மரத்தின் கீழ் சாய்ந்தனர். பிள்ளைகள் தங்கள் அப்பாவிடம் “அப்பா.. பசி குடலைப் பிடுங்குது. எதாச்சும் பழமோ, காயோ இருந்தா எடுத்திட்டு வா” என்றனர். சரியென்று அவர்கள் அப்பா பழத்திற்காகச் சுற்றிலும் பார்த்தார். ஆனால் எங்கேயும் எதுவும் கிடைக்கவில்லை. “சரி… நீங்க இங்கயே நிம்மதியா கொஞ்சநேரம் இருங்க. நான் போயி சுத்திமுத்தி எங்கயாச்சும் எதாச்சும் கிடைக்குதா என்னனு பார்த்துட்டு வறேன்” என்று சென்றார்.

அந்தக் காட்டில் ஒரு புலி இருந்தது. அது பார்க்க நன்கு உயரமாக, பருத்துப்போய்ப் பயங்கரமாக இருக்கும்; ஆனால் சுத்தப் பயந்தாங்கொலி. சின்னச் சின்ன ஜந்துக்களை வேட்டையாடுமே தவிர்த்து, பெரிய பெரிய மிருகங்ககிட்ட எல்லாம் போகவே போகாது. அன்று அதற்கு காலையிலிருந்து ஒரு ஜந்து கூட மாட்டவில்லை. பசியில் அல்லாடிப் போய் உணவிற்காகத் தேடித் திரிந்துகொண்டிருந்தபோது, மரத்தடியில் இவள் இரண்டு பிள்ளைகளோடு இருப்பதைப் பார்த்தது. அதோடு அதற்கு வாயில் எச்சில் ஊறியது. ‘அவள் எங்கயாச்சும் பக்கத்தில போனா அந்தப் பிள்ளைங்கள்ள யாரையாச்சும் ஒருத்தரத் தூக்கிட்டுப் போயி பொறுமையா திங்கலாம்ல’ என்று சந்தோஷப்பட்டது. மெதுவாகச் சத்தம் ஏதும் வராமல் அடிமேல் அடிவைத்துப் பக்கத்தில் வந்து ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு எட்டி எட்டிக் கவனிக்கத் தொடங்கியது.

இலைகள் வெறுமனே அசையவும் அவளுக்குச் சந்தேகம் வந்தது. உள்ளே ஏதோ இருக்கிறதெனத் தலையைக் குனிந்தவாறே சாய்த்து அமைதியாகக் கவனித்தாள். வேற என்ன, பெரிய புலி எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு உயிரே போனதுபோல் இருந்தது. பயத்தில் நெஞ்சு படபடனு அடித்துக்கொண்டது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது. ‘இதுக்கிட்ட இருந்து எப்பிட்ரா தப்பிக்கிறது’ என்று யோசிக்கத் தொடங்கினாள். ‘கண்ணு முன்னால இரை இருந்தும் மேல பாயாம அப்டி எட்டி எட்டிப் பாக்குதுனா இது ரொம்பவும் பயந்தாங்கொலியா இருக்கணும்’ என்று நினைத்தாள். அதோடு அவளுக்குச் சட்டென ஒரு உபாயம் தோன்றியது. உடனே சின்னப் பையனின் முதுகில் பலமாக ஒரு கிள்ளுக் கிள்ளினாள். அவ்வளவுதான்…. அவன் முதுகில் சுர்ரென்று வலி எடுக்கவும், வலி தாங்க முடியாமல் ‘ஓ’ என்று காடே அதிர்ந்துபோகிற மாதிரி பயங்கரமாக அழ ஆரம்பித்தான்.

அதைப் பார்த்து அவள் மேலே எழுந்து சத்தமாகப் புலிக்குக் கேட்கிற மாதிரி, “என்னடா.. எப்பப் பார்த்தாலும் சும்மா பசி பசினு அப்டி அழுதுட்டே இருக்க. காலையிலதான ஒரு பெரிய யானையைப் பிடிச்சி ருசியா கறி சமைச்சிப் போட்டேன். அதுக்குள்ள செரிச்சிடுச்சா… கொஞ்சம் பொறு… இந்தக்காட்டுல பெரிய புலி ஒன்னு சுத்திட்டு இருக்காம், அது கிடைச்சதும் அழகா அறுத்துப் போடுறேன்” என்றாள்.

அவ்வளவுதான், அதைக் கேட்டதும் பெரிய புலி திடுக்கிட்டுப்போனது. “அடங்கப்பா… இவள் ஒன்னும் எல்லாரையும் போல அப்டி இப்டி சாதாரணப் பொம்பள இல்லை போல இருக்கே. ஏதோ பிரம்ம ராட்சசியாவோ, இரத்த பிசாசாவோதான் இருக்கணும். இவகிட்ட மாட்டினோம் அவ்ளோதான். இன்னையோட நார் நாரா ஆயிருப்போம்” என்று திரும்பிப் பார்க்காமல் வேகமாகக் கீழேயும் மேலேயும் விழுந்து ஓடிப்போனது.

அது அப்படி ஓடிக்கொண்டிருந்தபோது வழியில் ஒரு நரி பார்த்தது. அது அதைத் தடுத்து நிறுத்தி, “என்ன மாமா… இப்டி ஓடிட்டு இருக்க. என்னாச்சு” என்றது.

“மருமகனே… இப்பச் சாவகாசமா உக்காந்து பேசுறதுக்குலாம் நேரம் இல்லை. பின்னாலயே ஒரு பெரிய ஆபத்து வந்துட்டு இருக்கு. தப்பிப் போயி அவகிட்ட மாட்டியிருந்தேன்னு வையி அவ்ளோதான், அநியாயமாச் செத்துப் போயிருப்பேன்” என்றது ஓடுவதை நிறுத்தாமல்.

நரியும் புலியைப் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டே, “அதென்ன மாமா… அப்டி சொல்லிட்ட. இந்தக்காட்டுல இருக்கிற மிருகங்களாம் உன்னை கனவுல பாத்தாலே நெஞ்சி வெடிச்சி செத்திரும். அப்படிப்பட்ட நீ பயந்து ஓடுறதா… என்ன நடந்துச்சு” என்று கேட்டது விஷயத்தைத் தெரிந்துகொள்ள. அப்போது புலி மூச்சிறைத்துக்கொண்டே நடந்தது அனைத்தையும் கூறியது.

அதைக் கேட்ட நரி, “மாமா.. நீ உன்னை என்னனு நினைச்சிட்டு இருக்க. இந்தக் காட்டுக்கே ராஜா. ஒரு உறுமு உறுமுனா போதும் ஏழேழு பதினாலு லோகமும் கிடுகிடுனு நடுங்கிப் போவும். அவள் என்னமோ உன்னை நல்லா பேசி ஏமாத்திருக்கிற மாரி தெரியுது. வா போலாம்… இந்த முறை நானும் வறேன்… அவள் கதைதான் என்னனு பாத்திருவோம்” என்றது உற்சாகத்தோடு.

அதன் வார்த்தைகளைக் கேட்டுப் புலி அப்படியே நடுங்கிக்கொண்டு, “பாரு மருமகனே நீ என்னவும் சொல்லு. தலைகீழ நின்னு தவம் பண்ணாலும் நான் வரமாட்டேன். உனக்கென்ன நீ புத்திசாலி. அங்கனா இங்க இங்கனா அங்கனு எப்படியோ தப்பிச்சுப் போயிடுவ. என்னனாலும் சொல்லுவ, எதனாலும் செய்வ. சாவப்போறது நான் தானே தவிர நீ இல்லையே” என்றது.

அதோடு நரி, “அப்றம் இப்டிப் பயந்தா எப்டி மாமா… உன்னை விட்டுட்டு நான் எங்கயும் போவ மாட்டேன். ஒன்னு பண்ணலாம். என் காலுக்கும் உன் காலுக்கும் நடுவுல பிய்யாம பலமா ஒரு கயிறு கட்டிப்போம். சாவுறதுனாலும் சரி வாழ்றதுனாலும் சரி சேர்ந்தே போவோம். … சரியா” என்றது.

அதோடு புலி கடைசியில் ‘சரி’ என்றது. நரி ஒரு கயிறு கொண்டுவந்தது. புலி அதைத் தன்னுடைய காலுக்கும் நரியுடைய காலுக்கும் எவ்வளவு இழுத்தாலும் பிய்ந்துபோகாத அளவிற்கு இறுக்கமாகக் கட்டியது. இரண்டும் சேர்ந்து மீண்டும் மெதுவாகக் காட்டிற்குள் சென்றன…

அங்கே அவள் காட்டில் ‘பழம் எடுத்துட்டு வறேன்னு போன புருஷன் எப்ப வருவாரோ… இந்த இடத்தை விட்டு எப்ப போலாம்’ என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தாள். அவள் ‘புலி ஏதும் திரும்பவும் வருமோ என்னமோ’ என்று நினைத்து மரத்தில் ஏறி அவ்வப்போது சுற்றியும் முற்றியும் கவனித்துக்கொண்டு இருந்தாள். அப்போது தூரத்தில் புலியும், நரியும் ஒன்றிற்கொன்று கயிறு கட்டிக்கொண்டு சேர்ந்து வருவதைக் கண்டாள். அவை அப்படி கயிறு கட்டிக்கொண்டு வருவதைப் பார்த்து, “ஓஹோ… இந்த நரி அதைத் திரும்பவும் கூட்டிட்டு வருது போல. வரட்டும் வரட்டும் கிட்ட வரட்டும்” என்று எண்ணினாள்.

புலியும் நரியும் மெதுவாக ஒளிந்து ஒளிந்து அந்த மரத்திற்கு அருகில் வந்தன. அவை அப்படி அருகில் வந்ததும் அவள் இந்த முறை இரண்டு பிள்ளைகள் முதுகிலும் அழுத்தி ஒரு கிள்ளுக் கிள்ளினாள். அவ்வளவுதான்… அவர்கள் ‘ஓ’ என்று அங்கு ஆறு ஊர்கள் இங்கு ஆறு ஊர்கள் நடுங்கிப்போகிற அளவுக்குச் சத்தமாக அழ ஆரம்பித்தனர். அந்த அழுகையைக் கேட்டதும் அவள் “அடேய்… எத்தன தடவை சொல்றதுடா உங்களுக்கு… ஏதோ ஒரு புலியோ சிங்கமோ மாட்டுனா அறுத்துப் போடுறேன்னு. கொஞ்ச நேரம் கம்முனு இருங்க. இங்க எங்கயோ பக்கத்துலதான் ஒரு புலியும் நரியும் இருக்குது போல இருக்கு. வாசனை கம்முனு அடிக்குது. இருங்க பிடிச்சிட்டு வறேன்” என்று மேலே எழுந்தாள், தலைமுடியை விரித்துப் போட்டுக்கொண்டும் மூச்சிறைத்துக்கொண்டும்.

அவ்வளவுதான்… அதைக் கேட்டதும் புலி, “நான் சொல்லல… இது சாதாரணப் பொம்பள இல்லனு. மனுஷ ரூபத்துல இருக்குற பிரம்ம ராட்சசினு. மாட்டுனோம்னு வையி உன்னையும் என்னையும் சேர்த்து கொன்னு அழகா உரிச்சிப் போட்ருவா” என்று சர்ரென்று பின்னால் திரும்பியது. நரி “இரு இரு… அவள் எல்லாம் பொய் சொல்லுறா. அவள் நீ நினைக்கிற மாரி ராட்சசிலாம் கிடையாது, மனுசிதான்” என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தும் எதையும் கேட்காமல் புலி கிழித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தது. அதன் கால் நரியோட காலில் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தது இல்லையா… அதோடு அதுவும் புலி பின்னாடியே கீழேயும் மேலேயும் விழுந்து ஓடியது. ஆனால் நரியால் புலியோட வேகத்துக்கு ஓட முடியாது இல்லையா… அதோடு கீழே விழுந்தது.

அப்பொழுதும் புலி ஒரு நிமிஷம் கூட நிற்கவில்லை. அப்படியே நரியை முட்களிலும், கற்பாறைகளிலும் இழுத்துக்கொண்டு ஓடியது. அதோடு அதற்கு கல்லு இறங்கி, முள்ளு குத்தி மூக்கிலும் முகத்திலும் வீங்கிப்போனது. அப்படியே அது முக்கிக்கொண்டும் முணங்கிக்கொண்டும், “யார் கூட வேணும்னா போலாம் ஆனா பயந்தாங்கொலி கூட மட்டும் சேர்ந்து போகக் கூடாது; அது கடைசியில் நமக்கே ஆபத்தில் முடிஞ்சிரும்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது உண்மைதான்” என்று நினைத்துக்கொண்டது கண்களில் நீர் வழிய…

Series Navigation<< தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம்

Author

  • திருவை, Thiruvai

    மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற 'திராவிடன் பல்கலைக் கழகம்' இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். 'ஒப்பாய்வு நோக்கில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் கீர்த்தனைகளும் பக்த இராமதாசு கீர்த்தனைகளும்' எனும் தலைப்பில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாக தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.

You may also like

Leave a Comment