Home கட்டுரைவைரமுத்துவின் திகைத்தனைப் போலும் செய்கை

வைரமுத்துவின் திகைத்தனைப் போலும் செய்கை

by Iyappan Krishnan
1 comment

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிரைய மோதிரங்கள் வேண்டும்-அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று..

— அவ்வையார

இப்படியாகத்தான் வைரமுத்து  பேசியதைச் சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கும் சிலரை நான் காண்கிறேன். காரணம், ஆண்டாள் நாச்சியார் குறித்து அவர் ஏற்கனவே உருவாக்கிய சர்ச்சை போதாதென்று தற்போதைய சர்ச்சையை  கம்பனின்  இராமனை வைத்து தொடங்கி இருக்கிறார். அப்போதில் இருந்தே அவர் பேசுவது சரியோ தவறோ அதை ஆராய்வதெல்லாம் இல்லை. ஆங்… வைரமுத்து எவ்ளோ பெரிய ஆள், எவ்ளோ பெரிய கவிஞர் எல்லாம் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அதுவும் கடவுளர்களைக் குறித்து என்றால் கேள்வி கேட்காமல் நம்பலாம் என்று சிலர் ஒத்தூதுகிறார்கள். அத்தகைய மூடத்தனத்தில் இருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எதையும் நன்கு பகுத்தறிந்து ஆராய்ந்து உண்மை நிலைக் கண்டறிந்து ஏற்பதோ விடுப்பதோ மட்டுமே சரியான செயலாக இருக்கும். நாம் அதைச் செய்யலாம் வாருங்கள்.

வைரமுத்து பண்டைத் தமிழிலக்கியங்கள் படிக்காதவர் என்றோ அவர் கம்பனின் இராமாயணத்தை ஏதோ அரசல் புரசலாக படித்துவிட்டு இதைச் சொல்லி இருக்கிறார் என்றோ எளிதில் கடந்துவிட இயலாது.  காரணம் அவர் கம்பராமாயணப் பாடல்களை உள்வாங்கி எழுதிய பாடல்களுக்குப் பல  உதாரணங்களை சொல்ல முடியும்.  எளிதாகப்  புரிந்துக் கொள்ள ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். 

கொலை உரு அமைந்து எனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள், கணவன் புல்குவாள்
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள்.

என்ன ஒரு கற்பனை கம்பனிடம் இருந்து பாருங்கள். ஒருவரை ஒருவர் தழுவும் போது முகம் தானாக அடுத்தவரின் முதுகுப் பக்கம் போகும் தானே.. அதை கம்பர் எப்படி வர்ணிக்கிறார் என்றால்.. தலைவி தன் கணவனை இறுக அணைக்கிறாள். தன் மார்பகங்களின் கூர்மை அவன் உடலை ஊடுருவி முதுகு பக்கம் வந்துவிட்டதோ என்று எட்டிப் பார்க்கிறாளாம்.

இதை அப்படியே வைரமுத்து எடுத்து கையாண்ட பாடல் வரி ஒன்றுண்டு,

குறுக்குச் சிறுத்தவளே என்ற பாடலில் வரும் வரி தான் அது.

” உன் முதுக தொளைச்சு வெளியேற
இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே “

இதெல்லாத்தையும் விட கம்பனை அவர் எவ்வாறு உள்வாங்கி பல வருடங்களுக்கு முன்பே பேசி இருக்கிறார் என்பதைக் கீழுள்ள இந்தச் சுட்டியில் என்று பாருங்கள். அதே நேரத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று.

இன்று சொன்ன இதே வார்த்தைகளை அவர் 2016ம் ஆண்டே சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் பேசியது கம்பன் திருநாள் என்ற கம்பன் கழக மேடையில் தான். அப்போது பெரியதாக எதிர்ப்பு எழுப்பாதது கம்பன் கழகத்தார் இன்றும் கூட அசிங்கப்படவேண்டிய ஆச்சரியம் தான்

ஆக கம்பனை படிக்காமல் எல்லாம் வைரமுத்து பேசிவிடவில்லை. அவரின் கருத்துக்குள் போவதற்கு முன்பு கீழ்கண்ட இந்த காட்சியை சற்று கவனித்துவிடுங்கள் பின்பு வைரமுத்துவின் பேச்சுக்கு வருவோம்.

சூர்ப்பனகை இராமனை விரும்பி வருகிறாள், இராமன் தவிர்க்கிறான், இலக்குவனைக் கைக் காட்டி அங்கு அனுப்புகிறான். இலக்குவனும் அவளைத் தவிர்க்க அவள் மீண்டும் இராமனிடம் வர அவன் மீண்டும் மறுக்கிறான். அப்போது அவளுக்கு கோபம் வந்து ” இந்தச் சீதை இருப்பதால் தானே இராமன் நம்மைத் தவிர்க்கிறான். அவளையே கொன்றுவிட்டால் என்ன என்று அவளைத் தொட்டுத் தூக்க முயலும் போது இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கை அரிந்துவிடுகிறான். அவள் அலறி அடித்துக் கொண்டு கர தூஷணர்களிடம் ஓடுகிறாள். அங்கு இராவண் தன் நேரில் இருப்பது போன்ற பாவனையில் பேசுகிறாள்.

“ அண்ணா இராவணா, நீ நடக்கும் போது காலடியில் நெருப்புப் பறக்குமே, எட்டு திக்கு யானைகளின் கொம்பு உடையும் படி அவற்றுடன் போர் புரிந்தவனே, இவர்கள் மன்மதர்களைப் போல இருந்தாலும் வெறும் மானுடப் பதர்கள் தானே? அவர்கள் உன் செருப்பின் கீழிருக்கும் பொடிக்கும் ஒப்பாக மாட்டார்களே, அவர்களை கோபிக்க நீ வர மாட்டியா? “

உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய, தோள் நிமிர்த்த வலியோனே

இங்கே இராம இலக்குவர்கள் இராவணனின் கால் துகளைப் போன்றவர்கள் என்று கம்பன் சொல்லிவிட்டான் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

அதெப்படி இராம இலக்குவர்களை நீங்க செருப்பின் அடியில் இருக்கும் பொடியைப் போல எனக் குறிப்பிடலாம் கம்பன்? என்று பிற்காலத்தில் சில பக்தர்கள் வைரமுத்துவைப் போல் புரிந்துக் கொண்டு ஆட்சேபம் தெரிவிக்க, அதுக்கு நாத முனிகள் கொடுத்த விளக்கத்தையும் இங்கே நாம் பார்த்துவிடலாம்.

“ இது முதலில் இராமனைப் பற்றி கம்பனின் வார்த்தை இல்லை. கம்பன் எழுதினாலும் இது அடிப்பட்டு துடிக்கும் அரக்கியின் வார்த்தை. அவ வெறுப்பில் இருக்கிறாள், அதனால் அப்படித்தான் பேசுவாள்.

என்ற விளக்கத்தை சொன்னதாக குறிப்புகள் உண்டு

அது மட்டும் இல்லாமல் இதை வேறு மாதிரியும் அர்த்தம் கொள்ளலாம். அதாவது, செரு படி அப்படின்னா அது போர்க்களம், அங்கே சிறு துகளுக்கும் ஒப்பாகாத இந்த மானுடர்களைன்னு சொன்னதாகவும் கொள்ளலாம். அது கவியின் திறனே இல்லாமல் இராமனை இலக்குவனை கம்பன் இழிவாகப் பேசினான் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது “

ஈடாக கவிக்காளமேகத்தின் ஒரு பாட்டை இதற்கு நாம ஒப்புமையா எடுத்துக்கொண்டால் நாதமுனிகள் சொன்னதன் அர்த்தம் விளங்கும். ஒரு புலவர் கவிக் காளமேகத்திடம் “ முருகனைப் பத்திப் பாடவேண்டும், ஆனால் செருப்பில் தொடங்கி விளக்குமாறு என பாட்டு முடியனும், அப்படி ஒரு பாட்டு எழுத முடியுமா” என்று கேக்க அவர் எழுதியப் பாட்டு

செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல்
வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே

போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றிக் கொண்ட வேலவனை தழுவ மனம் துடிக்கிறது, அவன் இருக்கும் இடத்தை தாமரை மீது விற்றிருக்கும் வண்டே விளக்குவாயா என்று கேட்பதாக எழுதினார்.

இங்கே இது முருகனுக்கு இழுக்கு என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

இப்போது வைரமுத்து சொன்ன இடத்தைச் சுட்டி அவர் சொன்ன பாடலின் பொருள் என்ன என்றும் பார்த்துவிடலாம்.

இராமன், வாலி மீது அம்பெய்துவிடுகிறான். அம்பெய்தது இராமன் என்று தெரிந்ததும் வாலி திகைக்கிறான். இராமனா? இராமனா இச்செய்கையைச் செய்தது? தம்பிக்காக அரசைத் துறந்து இல்லறம் துறந்து வந்த இராமன் தன் வில்லறத்தையும் துறந்துட்டானா ? என்று தனக்குள்ளே மருகிறான். இராமன் இப்படி செஞ்சுட்டானே என்ற நாணத்தால் தன் தலையை சாய்த்தான், நாணத்தினால் ஏற்பட்ட உணர்வினால் வெடித்துச் சிரித்தான், மீண்டும் உள்ளத்தில் நினைத்துப் பார்த்தான். இப்படிச் செய்த இந்தச் செயல் இதுவெல்லாம் ஓர் அறமாகுமா ? என்று சேறு நிறைந்த பெருங்குழியில் வீழ்ந்து அகப்பட்ட யானை எப்படி உழல்கின்றதோ அது போல அந்த அம்பைப் பற்றிக் கொண்டு வாலி அந்த எண்ணத்தில் உழல்கின்றான். இது உளவியல்.

தலைவனாகிய இராமனே முறை தவறிவிட்டான் என்றால் கீழ்நிலையில் இருக்கும் இழிந்துளோர்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்கள் அநீதி அதிகரிக்குமே, அதுவும் போயும் போயும் என் பொருட்டு இந்த அறமற்ற காரியத்தை இராமன் செய்துவிட்டானே என்று அந்த வருத்தத்தில் ஆழ்ந்தான் வாலி. பின்பு அங்கே வந்த இராமனுக்கும் வாலிக்கும் வாக்குவாதம் உண்டாகிறது. இராமா நீ அறம் தவறாதவனாயிற்றே, நீ தம்பிக்கால உன் அரசை தியாகம் செய்தவனல்லவா நீ இப்படி செய்யலாமா? ஒரு வேளை நீ மனைவியைப் பிரிந்த காரணத்தால் மனம் திகைத்து என்ன செய்கிறோம் என்பதை மறந்து செய்துவிட்டாயா ?

கோ இயல் தருமம், உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! - உடைமை அன்றோ?
ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த
தேவியை, பிரிந்த பின்னை, திகைத்தனை போலும், செய்கை

என்று வாலி கேட்கிறான்

அதாவது ” இராமா, உன் குலத்தில் உதித்தோர் அனைவருக்கும் அரசதர்மங்கள் எல்லாம் வழி வழியாக வந்த உடைமை இல்லையா, உன் ஆவி போன்ற சீதையை, ஜனகனின் மகளை, அமிழ்தில் தோன்றிய திருமகளைப் போன்றவளை நீ பிரிந்ததால் ஒருவேளை உன் மனம் திகைத்து உன் நிலை இழந்து என் மீது அம்பெய்தது போலல்லவா இருக்கிறது உன் செய்கை” என்கிறான்.

இதைத் தான், இராமன் மன நோயில் இருக்கிறான். ஆகவே அவன் கொலை செய்தது எந்த சட்டத்தாலும் தண்டிக்க இயலாதச் செயல் என்கிறார் வைரமுத்து. ஒருவனின் ஆழ்ந்த வருத்தத்தால் வந்த சொல்லை அப்படியே அது தான் உண்மை என்று எடுத்துக் கொள்வது எத்தனை கயமைத் தனம்?

“சரி ஐயா, வைரமுத்து சொன்னதில் உண்மை இல்லையா? சீதை இல்லை என்ற உடன் உலகத்தையே அழிப்பேன் என்று இராமன் எழுந்து நின்றது பைத்தியக்காரத் தனம் இல்லையா ? ஏற்கனவே இதை சடாயு சுட்டிக் காட்டி உள்ளான் இல்லையா?

“வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைகக்,
கொம்பு இழை மானின் பின் போய்க் குலப்பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ? "

இராமா, உன் அப்பா யானை என நினைத்து மனிதன் மீது அம்பெய்துவிட்டான். நீ பொய்மானென்று அறியாது பின்தொடர்ந்து போனதால் உன் அப்பனைப் போல நீயும் பழியைச் சேர்த்துக் கொண்டாய். உன் மீது பிழை வைத்துக் கொண்டு எப்படி நீ உலகை அழிப்பேன் என்பதில் என்ன நியாயம் என சடாயு ஏற்கனவே சொல்லி இருக்கிறான் இல்லையா? “

என்று சிலர் கேட்கக் கூடும். ஒன்று கவனியுங்கள், அவனுக்கு அந்தச் சீற்றம் ஏன் வந்தது? வானக தேவர்களே வையத்து மாந்தர்களே, கயவன் ஒருவன் அபலைப் பெண்ணை அவள் இயலாமல் அழுதுக் கலங்கிக் கதறும் வகையில் கடத்திச் சென்றிருக்கிறான். ஆனால் நீங்க யாரும் அதற்கு எதிராக என்ன செய்தீர்கள்? தடுத்து நிறுத்த ஏன் நீங்கள் முயலவில்லை? என்று எழுந்த சினத்தில் உலகத்தையே அழிக்கிறேன் என்று நின்றான். அந்த நேரத்தில் யாருக்கும் வரும் கோவம் தான் இல்லையா அது ? கம்பனுக்கு உளவியலும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுவரை நாம் பேசிக்கொண்டு இருக்கும் இந்த இராமாயணக் காட்சிகளை இத்தனை நுணுக்கமாக உளவியல் சார்ந்து நமக்கு எடுத்துச் சொல்லி இருக்க முடியாது.

மேலும் இந்த ” திகைத்தனைப் போலும் செய்கை ” சொன்னது வாலியின் கூற்று. அது கம்பன் இராமனின் மீது வைத்தக் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதற்கு இலக்கியம் எந்த வகையில் இடமளிக்கிறது?.

சீதை பிரிந்த பின் இராமன் மனம் கலங்கி இருந்தான், வாழ்வின் மீதான பற்றையே ஒரு கட்டத்தில் விட்டும் விடுகிறான். கபந்தன் இராம இலக்குவரைப் பிடித்து விழுங்க முற்படும் போது இராமன் இலக்குவனிடம் நான் இவனுக்கு இரையாகிறேன் நீ தப்பித்துக் கொள் என்று. இதெல்லாம் வருத்தத்தில் உண்டாகும் செயல்கள். இங்கே இராமன் கடவுளாக இல்லை. மனிதனாக இருக்கிறான். மனிதனுக்கு இருக்க வேண்டிய அத்தனைக் கல்யாண குணங்களையும் உளவியல் சாராம்சங்களையும் கொண்ட சராசரி மனிதன். ஆனால் நாம் ஏன் இராமனைக் கொண்டாடுகிறோம் என்றால், அதற்கும் கம்பனின் இராமனே பதில் சொல்லி இருக்கிறான். ஒருவன் மனதில் நன்மையும் தீமையும் சதா சண்டையிட்டுக் கொண்டே இருக்கும். அதில் உயர்ந்து விளங்குகிறதோ அதுவே ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் என்கிறான் இராமன்.

உளவியலாளர்கள் கூற்றின் படி நம் அனைவருக்குமே மனநோய் உண்டு. ஆனால் அதன் சதவிகிதம் எவ்வளவு என்பதைப் பொறுத்து தான் ஒருவன் சராசரியா இல்லை மனநிலைப் பிறழ்ந்தவனா என்று சமூகம் முடிவு செய்கிறது. இங்கே இராமன் சீதையைப் பிரிந்ததில் இருந்து வாலிவதை வரைக்குமான நிகழ்வில் மனம் சோர்ந்திருந்தான் ஆனால் மன நிலைப் பிறழ்ந்திருக்கவில்லை என்பதை கம்பனின் பாடல்களைக் கொண்டே உறுதியாகச் சொல்லலாம்.

உதாரணமாகச் சொல்வதென்றால் கபந்தனிடம் விடுபட்டப் பின் அவர்கள் சுக்ரீவனை சந்திக்க வருகிறார்கள். அப்போது அனுமன் அவர்கள் யாரென உளவுப் பார்க்க “மாணவ வடிவம்” தாங்கி வருகிறான். கம்பனின் அனுமன் மிகச்சிறந்த அறிவாளி, சொல்லின் செல்வன். அவன் இராமனைக் கண்டதுமே இராமனின் நிலையை தெள்ளத் தெளிவாக அறிந்துவிடுகிறான். இராம இலக்குவர்கள், பொக்கிஷமென ஒன்றைத் தொலைத்து விட்டு அதைத் தேடி வருகிறார்கள். அவர்கள் மாவீரர்கள், அரசர்கள், மிகுந்த அறிவாளிகள் என்றெல்லாம் பார்த்ததுமே உணர்ந்துவிடுகிறான்.

எல்லாம் சரி. இப்போது அனுமன் அதே மாணவ வடிவில் இராமன் முன் வந்ததும் சட்டென இராமன் அனுமனை எடைப் போட்டுவிடுகிறான். இவன் சாதாரண ஆள் இல்லை. பிரம்மனோ அல்லது சிவனோ மாற்றுருவில் வந்திருக்கிறார்கள். அத்தனை அறிவு அவனிடத்தில் உண்டு என கண நேரத்த்தில் உணர்ந்து இலக்குவனிடம் உரைக்கிறான் இராமன். அவன் அறிவு அத்தனை சோகத்திலும் சுடர்விட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

அதனால் தான் சொல்லின் செல்வனாகிய அறிவிற் சிறந்த அனுமன் சுக்ரீவனிடம் இப்படிச் சொல்கிறான்

தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா.

இவனே தேவர்களுக்கு எல்லாம் தேவன். மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் ஆற்றைத் தரித்த உருத்திரன் முதலான எல்லா தேவர்களையும், இதோ, இந்த மானுடம் வென்றுவிட்டது என்று சுக்ரீவனிடம் சொல்கிறான். ஒரு மனநிலைப் பிறழ்ந்தவனுக்கு இப்படி யாரும் புகழுரை தருவார்களா என்ன என்பதை வைரமுத்து தான் விளக்க வேண்டும்.

ஆக ஒருவன் அதாவது வாலி , கோபத்தில், இராமன் மீது உள்ள அதீத மரியாதையாலும் அது அவன் கண்ணெதிரே உடைபடுவதாலும் உண்டான வருத்தத்தில் சொன்ன “திகைத்தனைப் போலும் செய்கை ” என்ற வார்த்தைக்கு அப்படியே யாரும் பொருள் கொள்வது என்பது ஒன்று தமிழ் அறியாத்தனம், இல்லை தமிழ் நன்று கற்றவர் என்று சொல்வீர்களே ஆனால் தெரிந்தும் அப்படிச் சொல்வது கயமைத் தனம். கம்பனை ஆழ்ந்து வாசித்தோர் நினைக்கவும் கூசும் நீசத்தனம்.

இங்கே வைரமுத்து செய்தது அறியாத்தனமா இல்லை கயமைத் தனமா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

Author

You may also like

1 comment

Pavalamani Pragasam August 28, 2025 - 8:50 am

அருமை!

Reply

Leave a Reply to Pavalamani Pragasam Cancel Reply